வெள்ளி, மார்ச் 22, 2013

விதி யாரை விட்டது? (2)

இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-1

தலைமை ஆசிரியர் அறையில் இப்போது நானும் குமரனும் ரவீந்திரனும் மட்டுமே  இருந்தோம். மற்றவர்கள் கிளம்பி விட்டிருந்தனர். என் முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டவரைப் போல, "என்ன, குமரனும் உங்களுடனே தங்க விரும்புகிறாராமே?" என்றார் தலைமை ஆசிரியர், அந்த விஷயத்தில் தனக்கு எந்த அக்கறையுமில்லை என்பது போல.

ரவீந்திரன் முந்திக்கொண்டு, "பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதா என்று ஏங்குவது மனித சுபாவம் தானே" என்றார். பிறகு, அவரே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தவர் போல, "எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. இவருக்கு சமைப்பதில் இன்னொரு பங்கு போல அவருக்கும் சமைத்துவிடுகிறேன்" என்றார்.


"ரொம்ப நன்றி சார்" என்று குழைந்தார் குமரன். மேற்கொண்டு என்னைப் பேச விடாமல் "மணியகாரர் ஒன்றும் சொல்லமாட்டார். கவலை வேண்டாம். எல்லாம் மூன்று மாதங்கள் வரை தானே. அப்புறம் நீங்களும் குமரனும் தான் இருப்பீர்கள். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்" என்று கிளம்பினார் நாகராஜன்.

மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தவர், என்னை அழைத்து மெல்லிய குரலில் "உங்கள் நல்லதற்குத் தான் இந்த ஏற்பாடு. நீங்கள் இளைஞர். 21 வயது தான் ஆகிறது. இந்தப் பள்ளியில் பார்த்திருப்பீர்களே, 18 வயதில் கூட மாணவிகள் இருக்கிறார்கள். ஊர் ஒரு மாதிரி. பழம் தின்று கொட்டைபோட்ட ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் புதிய ஆசிரியர்களுக்கு அதிலும்
இளைஞர்களுக்கு நல்ல பேர் வருவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தாமரை இலை தண்ணீர் மாதிரி பழகவேண்டும். போகப்போக உங்களுக்குத் தெரியும். எதற்கும் கவலை வேண்டாம். நான் இருக்கிறேன்" என்றார். "குட் நைட்".

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. என்ன கெட்டது நடந்துவிட்டது, இவர் நல்லது செய்யப் போகிறார்! தலை சுற்றியது. பசி வேறு. "சரி வாங்க சார், சீக்கிரம் சமைக்க ஆரம்பியுங்கள்" என்று ரவீந்திரன் சாரை அழைத்தேன். குமரன் சனிக்கிழமையிலிருந்து  வீட்டைக் காலி செய்வதாகவும், ஆனால் இன்று இரவு முதலே சாப்பாட்டுக்கு வந்து விடுவதாகவும் தெரிவித்தார்.
******

இரவு சாப்பிடும்போது பள்ளியைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம் என்ன என்று எங்கள் இருவரிடமும் கேட்டார் ரவீந்திரன்.

"எனக்கு இது தானே முதல் அனுபவம்! சொல்வதற்கு ஒன்றுமில்லை. மேலும் என்னுடைய சப்ஜெக்ட்டுகள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மூன்றுமே முக்கியமானவை என்பதால் மாணவர்களும் சற்று கவனமாகவே கேட்கிறார்கள். ஆனால் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டார்கள் என்பதை டெஸ்ட் பேப்பர் திருத்திய பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர்கள் மீது போதுமான
கவனம் செலுத்தப்பட்டதாகக் கருத முடியவில்லை" என்றேன்.

"என்னுடையது  ஓவியம் என்பதால், மாணவர்களும் சரி, மற்ற ஆசிரியர்களும் சரி, சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. முன்பு நானிருந்த பள்ளியிலும் இதே நிலைமை தான்" என்றார், குமரன்.

ரவீந்திரன், "நீங்க சொல்வது உண்மை தான். கிராமப்புறத்துப்  பள்ளிகளில் நிலைமையே வேறு. நகர்ப்புறத்தில் கொஞ்சம் பரவாயில்லை. இங்கு பல வீடுகளில் மின்சாரம் கிடையாது. திடீர் திடீரென்று குழந்தைகளை வயல் வேலைகளுக்கு
அழைத்துச் சென்றுவிடுவார்கள். அன்று தான் முக்கியமான
பாடங்கள் நடப்பதாக இருக்கும். உள்ளூரில் ஆஸ்பத்திரி கிடையாது.
டெஸ்ட் நடத்தினால் பலபேர் மட்டம் போட்டுவிடுவார்கள். கடைசியில் பள்ளிக்கு ரிசல்ட் குறைந்து விடக்கூடாது என்பதற்காக எல்லாருக்கும் மார்க்குகளை கொஞ்சம் கூட்டிப் போட வேண்டி வரும். ஆறாம் வகுப்பிலேயே இப்படி என்றால் அவன் ஏழாம் வகுப்பும் எட்டாம் வகுப்பும் போகும் போது அந்தக்  குறைபாட்டை எப்படி சரி செய்வது?" என்று தன்  அனுபவத்திலிருந்து பேசினார்.

"நீங்கள் இளைஞர்கள். எங்களைப் பார்த்து நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. உங்களால் நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்" என்றார்.

குமரன் சாப்பிட்டுக் கிளம்பிய பிறகு, மணியக்காரர் தயவில்
தரப்பட்டிருந்த இரண்டு கட்டில்களில் இருவரும் படுத்தோம்.  அப்போது ரவீந்திரன், "குமரனை நம்மோடு இருக்கும்படி
வரவழைத்தவன் நான் தான்" என்றார். எனக்குத் தூக்கி வாரிப்
போட்டது. அன்று இரவு குமரன் என்னிடம் சொல்லாமல் வெளியே
போனதையும் பிறகு திரும்பி வந்ததையும்,  தேவிகா-சீனியர்
ஆசிரியர் விஷயத்தையும் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். அதனால் ஏதும் புதிய பிரச்சினைகள் வருமா என்றும் எண்ண வேண்டிஇருந்தது. எனவே அவரே மேலும் சொல்லட்டும் என்று "அப்படியா?" என்று மட்டும் சொன்னேன்.

"ஆமாம், மணியக்காரர் இன்று பள்ளிக்கு வந்திருந்தார். நாகராஜன் சாரோடு அவர் பேசும்போது நானும் இருந்தேன். விஷயம் குமரன் சாரைப் பற்றியது. அவர் இப்போதுள்ள வீட்டில் சில சிக்கல்கள்
இருப்பதாகவும், உடனே அவரைக் காலி செய்ய வற்புறுத்துமாறும்
சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது  நான் தான் இந்த
யோசனையைச் சொன்னேன். சமையல் காரணமாகத் தான்
காலி செய்கிறார் என்றால் வீட்டுக்காரர் சந்தேகப்பட மாட்டார்
அல்லவா?" என்றார்.

வீட்டுக்காரர் ஏன் சந்தேகப்படவேண்டும் என்று புரியவில்லை. ஒரு வேளை மீண்டும் இரவு 12 மணிக்கு எங்காவது எழுந்துபோய்விட்டு
வந்திருப்பாரோ, குமரன்? கதவைத் திறந்து வைத்துவிட்டு? அது ஊருக்கெல்லாம் தெரிந்து விட்டிருக்குமோ? தினமும் நடக்கிறதோ?

"நீங்கள் ஊருக்குப் புதிது. உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.." என்று இழுத்தார். என்ன என்பது போல் எழுந்து உட்கார்ந்தேன்.

"பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும், இரவில் அதுவும் கூடாது என்பார்கள். எல்லாம் ஒரு பெண் விஷயம் தான்." என்றார்.

"அப்படியா? குமரன் நல்ல மாதிரி என்று தானே தெரிகிறது! நம்ம ஸ்கூல் பொண்ணு யாரும் இல்லையே?" என்றேன்.

"இல்லை" என்றார் திட்டவட்டமாக.

"அப்படியானால் அவர் ஏன் வீடு மாற வேண்டும்? "

"அதைத் தான் நானும் மணியகாரரிடம் கேட்டேன். அவர்
சொன்னார், அவள் லேசுப்பட்டவளில்லை என்று".

"அவள் என்றால் யார்?"

"யாரோ தமயந்தியாம்."

நமது சீனியர் ஆசிரியரைத் தான் உங்களுக்குத்  தெரியுமே! தமயந்தி அவரின் இரண்டாம் தாரம்.

(நாளை முடித்துவிடுவேன்).
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-3

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக