ஞாயிறு, மார்ச் 03, 2013

பழி வாங்க வந்த பவழ மோதிரம் - 1

1981-82ல் கர்நாடக மாநிலம் குல்பர்கா என்ற நகரில் பணியாற்ற வேண்டி வந்தது. சென்னை பம்பாய் ரயில் மார்க்கத்தில் வாடி என்ற ஜங்ஷன் தாண்டிய பிறகு இருட்டில் வரும் நகரம்.

கர்நாடகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்பட்ட அந்த ஊர் தான், சோளம் மற்றும் துவரம்பருப்பு விளைச்சலில் இந்தியாவிலேயே முதலிடம் வகித்ததாகும்.எங்கு பார்த்தாலும் 'கமிஷன் மண்டி' கள். காந்தி குல்லாய் போட்ட கன்னடமும் மராட்டியும் கலந்து பேசுகிற வணிக ஜாதி. நவம்பர் டிசம்பர் மாதங்கள் தான் சீசன். ஆனால் நடக்கிற வியாபாரத்தில் கால் பங்கிற்கு மேல் கணக்கில் காட்டாத வர்க்கம். இந்தியாவில் இருக்கும் அத்தனை வங்கிகளும் கிளைகளைத் திறந்து வைத்துக்கொண்டு காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், மாலையில் வியாபாரம் முடியும் பொழுது நிகர லாபம் வங்கிக்கணக்கில் வராது. இரும்புப் பெட்டிக்குள் தான் பதுங்கி விடும்.

இரவு ஏழு மணி ஆனதுமே ஊர் உறங்கத் தொடங்கி விடும். வீர சைவர்கள் என்னும் ஆவேசமான மக்கள் மிகுந்த ஊர் என்பதால் அசைவ ஓட்டல்கள் மிகவும் குறைவு. ஆனால் மதுக்கடைகள் தெருவுக்கு இரண்டு இருக்கும். எல்லாமே விலை உயர்ந்த சரக்குகள் தாம். அரசாங்கத்துக்குச் செலுத்தாத வரிப்பணம் தண்ணீராய்ச் செலவழியும் இடம்.

ஊருக்கு நடுநாயகமாக பசவண்ணர் கோவில் இருந்தது. சொல்லப்போனால், சரண பசவப்பா அப்பா என்கிற வீர சைவத்  துறவியின் மடம், அந்தக் கோவிலை அமைத்திருந்தது. மிகச் சுத்தமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதே வளாகத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியும் (ஆங்கில மீடியம்) நடத்தப் பட்டது. மடத்தின்  தலைவர் தான் பள்ளியின் மேலாளர்.

அந்தப் பள்ளிக்கு ஒருமுறை டெபாசிட் பெறுவதற்காகப் போன போது தான் திரு வாஸ் அவர்களைச் சந்தித்தேன்.

வாஸ், இளைஞர். எம் ஏ , பி.எட் படித்தவர். கர்நாடக அரசியலில் எப்போதோ பிரபலமாக இருந்தவரான (இன்னொரு) வாஸ் என்பவர் தனக்கு உறவினர் என்றும் இல்லையென்றால் இந்தப் பள்ளியில் வேலை கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னார்.

அதன் பிறகு அடிக்கடி என்னைப் பார்க்க வங்கிக்கு வருவார். எப்போதுமே, மாலை ஆறு மணிக்குப் பிறகு தான். எனக்கு வேலை முடிய ஏழு மணி ஆகிவிடும். வங்கி முதல் மாடியில். கீழே ஜனதா என்ற ஓட்டல் இருந்தது.இரண்டு பேருக்கும் ரவா  இட்லியும் காப்பியும் அவரே ஆர்டர் செய்து விட்டுத் தான் மேலே வருவார். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த ஆறுதல் தரும் விஷயம். குடும்பம் சென்னையில் இருந்த நிலையில், தமிழில் பேசிக் கொள்வதற்கு வேறு யாரும் இல்லாத போது, திரு வாஸ் அவர்களின் நட்பு மிக்க மதிப்புடையதாகப் பட்டது எனக்கு.

இலக்கியம், அரசியல், எதிர்காலம் பற்றிய கவலைகள், போன்ற பல தரப்பட்ட விஷயங்கள் பேசிக்கொண்டே நான் கதவைப் பூட்டத் தயாராகும் போது சுமார் பதினைந்தடி அகலமான ஷட்டரை மேலிருந்து இழுத்துக் கொடுக்க வாஸ் மிகவும் உதவியாக இருப்பார். ஆள் மெல்லிய தேகம் என்றாலும், உயரம் சுமார் ஆறடி.

குல்பர்காவுக்கு என்னை அனுப்பும் போதே எனது மண்டல மேலாளர் திரு வாசுதேவ நாயக் 'ஒரு வருடத்துக்கு மேல் அங்கே இருக்க வேண்டாம்' என்று வாக்குறுதி கொடுத்திருந்ததால் 1982 மே வாக்கில்  எனக்கு சென்னைக்கு மாற்றல் வந்து விட்டது. (திரு நாயக் அண்மையில் காலமாகிவிட்டார்).

எனது மாற்றலில் அதிகம் வருத்தப்பட்டவர் திரு வாஸ் தான். 'உங்களைப் போல ஒரு நண்பரை இனி எங்கு காண்பேன்' என்று உண்மையிலேயே அழுதார். 'உங்களுக்காக அருமையான ஒரு நினைவுப் பரிசு கொடுக்கப் போகிறேன். என்னிடம் சொல்லாமல் விடை பெற்று விடாதீர்கள்' என்றார்.

சொன்னபடியே நான் கிளம்புவதற்கு முதல் நாள், ஒரு அழகான மீரா பொம்மையுடன் (வீணை வாசிக்கும் கோலத்தில் உள்ளது) என்னைச்  சந்தித்தார். 'இனி உங்கள் வாழ்க்கையில் எப்போதும்
இனிமையான இசையை மீரா வாசிப்பார்'   என்று வாழ்த்தினார். நான் மீண்டும் மனைவி மக்களுடன் இணையப் போவதை
அப்படிக் குறிப்பிட்டார். அதில் மனப்பூர்வமான நேர்மை இருந்தது.

அத்துடன், தன் கையிலிருந்த ஒரு மோதிரத்தைத் திடீரென்று கழற்றி என் வலது கை மோதிர விரலில் அணிவித்தார். (அப்போது மோதிரம் அணியும் பழக்கம் இருக்கவில்லை எனக்கு). வெள்ளியால் செய்து, பவழம் பதித்த (சிகப்பு) மோதிரம் அது.

எனக்கு மெய் சிலிர்த்தது. பழகிப் பிரிதலின் வலியை முதன் முதலாக உணர்ந்தேன். நன்றி சொன்னேன்.

வாஸ் அவர்களோ, தான் ஏதோ மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திய மாதிரி திருப்தியோடு கிளம்பினார். போகும் போது பவழ மோதிரத்தை இன்னொரு முறை உற்றுப் பார்த்த மாதிரி இருந்தது.

சாதாரண மோதிரமா அது?

(தொடரும்).

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
பழி வாங்க வந்த பவழ மோதிரம்- 2

************
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக