செவ்வாய், மார்ச் 12, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 1

வேலூரிலிருந்த வேலை வாய்ப்பு அலுவலகம் இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை நான்.

1970 மே மாதம் பி.எஸ்சி. தேர்வு எழுதியவுடன், மேல்விஷாரம் 
அப்துல் ஹக்கீம் கல்லூரியிலிருந்து காண்டக்ட் சர்டிபிகேட், டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டுடன்  சென்று பதிவு செய்து கொண்டேன். ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு ஏற்கெனவே தெரிந்த சில பெரியவர்களும் அங்கு பதிந்து கொண்டிருந்தது தான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 'ரின்யுவல்' செய்ய வேண்டும், இல்லையென்றால் சீனியாரிட்டி போய் விடும் என்றார் என் சித்தப்பா போலிருந்த ஒருவர். பதினெட்டு வருஷமாக ரின்யுவல் செய்கிறாராம். மணமாகி இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதற்குள் எதாவது வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகச் சொன்னார்.

வேலை வாய்ப்பு அலுவலக குமாஸ்தா எரிந்து விழுந்தார். 'என்னய்யா அவசரம் உங்களுக்கு? இன்னும் பி.எஸ்சி மார்க் லிஸ்ட்டே வரவில்லை, அதற்குள் வந்துவிட்டீர்கள்? அதைப் பதிவு செய்ய இன்னொரு முறை வருவீர்கள்.எனக்கு இரண்டு வேலை" என்று அலுத்துக் கொண்டார். கொண்டு போயிருந்த எஸ்.எஸ்.எல்.சி. புத்தகம், பி.யு.சி. மார்க் லிஸ்ட், பி.எஸ் சி க்கான டி.சி. எல்லாவற்றின் பின்புறமும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அடித்து ('ஆஃபீஸ் ஸ்டாம்ப்')  தேதி போட்டார். 'இல்லாவிட்டால் நீங்கள் வேறொரு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் இது போல பதிவு செய்து கொண்டு விடலாமே, அதை தடுக்கத் தான்' என்றார். எத்தனை இடங்களில் பதிவு செய்தாலும், வேலை கிடைத்தால் செய்யப் போவது நான் ஒருவன் தானே என்று நினைத்துக் கொண்டேன். கனமான ஒரு அட்டையில் என் பெயர் முகவரியை அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதினர். (மொத்தம் நான்கு
ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் தாம். பரவாயில்லை). அடுத்த 'டியூ டெட்' நவம்பர் மாதம் 15ஆம் தேதி என்றார். க்யூவிலிருந்து கழன்றேன்.

ரிசல்ட் வந்து,  புரொவிஷனல் சர்டிபிகேட் வாங்கி, மார்க் லிஸ்ட்டைப் பதிவு செய்ய மீண்டும்  வேலூர் போன போது அதே சித்தப்பாவை மீண்டும் பார்த்தேன். மகள் திருமணம் நன்றாக முடிந்ததாம். என்னுடைய மார்க் லிஸ்ட்டைப் பார்த்தார். டி-பிளஸ் வாங்கி இருக்கிறீர்களே, கங்கிராட்ஸ் என்றார். அப்பாவின் பெயர் விவரம் கேட்டார். இரண்டாவது பெண் இப்போது தான் பி.காம் பைனல் என்றார். 'வெரி சார்மிங் கர்ல். அப்பாவை வந்து
பார்க்கிறேன்' என்றார்.

அடுத்த பதினைந்தாவது நாளே எனக்கு வேலைக்கு ஆர்டர் வந்துவிட்டது என்றால் அது நம்பமுடியாத விஷயம் தானே!

கல்விக்கண் கொடுத்தவர் காமராஜர் என்பார்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் மாவட்டங்கள் தோறும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் ஏராளமாகத் தொடங்கப்பட்டன. நெ.து.சுந்தர வடிவேலு என்ற கல்வி அதிகாரிக்கு அளவற்ற சுதந்திரம் கொடுத்தார் காமராஜர். மனிதர்கள்  இல்லாத ஊர்களில் கூட பள்ளிக்கூடங்கள் முளைத்தன. அதிலும் எங்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் தமிழ் நாட்டிலேயே அதிகமான உயர்நிலைப் பள்ளிகள் அமைந்தனவாம். அதன் விளைவாக, ஆசிரியர்களுக்கு பலத்த 'டிமாண்ட்'. அதிலும் என்னைப் போல கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு மிகவும் டிமாண்ட். பி.எட் படிக்காவிட்டலும் பரவாயில்லை என்று 'அன்ட்ரெயிண்டு' ஆசிரியர்களாக நியமித்து விடுவார்கள். கல்வித்துறையின் சட்டம் 10 (A )(i ) படி அந்த ஆணைகள் தரப்பட்டதால், இவர்களுக்கு டென்-ஏ -ஒன் என்றே பெயர் ஏற்பட்டது.

நான் கணிதத்தில் டி-பிளஸ் என்பதால் எனக்கு முதல் லிஸ்ட்டிலேயே டென்-ஏ-ஒன் கிடைத்து விட்டது. 'சொரகொளத்தூர்' என்ற ஊரில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனக்கு வேலை நியமனம் ஆகியிருப்பதாகவும், ஒரு வாரத்திற்குள் சேராவிட்டால், அந்த ஆணை ரத்து ஆகிவிடும் என்றும் இருந்தது.

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. சராசரிக்கும் கீழான குடும்பங்களில், முதல் பட்டதாரிக்குக் கிடைக்கும் முதல் வேலை எவ்வளவு நம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்கக்கூடியது என்று புரிந்தது.

அடுத்த காரியம், சொரகொளத்தூர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான். தபால் ஆபீசில் கேளுங்கள் என்றார் ஒருவர். திருவண்ணமலைக்கு அருகில் என்றார்கள். அடுத்த நாள், இன்னொருவர், நம்ம ஊர் ஹெட்மாஸ்டரை கேட்க  வேண்டியது தானே என்றார். சொரகொளத்தூர் என்பது, போளூருக்கும்
திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கிறது என்று தெரிந்தது. போளூர், ஆரணிக்கு அருகில் என்பதும், ஆரணி, எனது ஊரான
ராணிப்பேட்டைக்கு ஒரு மணி தொலைவில் உள்ளதும்
ஏற்கெனவே தெரிந்திருந்ததால் கொஞ்சம் நிம்மதி. அதாவது, நான் போக வேண்டிய இடம், என் ஊரிலிருந்து சுமார் இரண்டரை மணி தூரத்தில் தான் உள்ளது, அதிகமில்லை என்ற நிம்மதி.

முதலில் நீ போய் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு
அதன் பிறகு எங்கு தங்குவது என்று முடிவு  செய்யலாம்
என்றார் அம்மா. "பேரைக் கேட்டாலே கிராமம் மாதிரி இருக்கிறதே? போளூரில் தங்கி தினமும் பஸ்ஸில் போய் வர வேண்டியிருக்குமோ ?"

மேற்கொண்டு விவரங்கள் சேகரித்ததில், அந்த ஊரில் சில முதலியார்கள், அந்தணர்கள்   வீடுகள் இருப்பதாகவும், குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றும் தெரிந்ததால்
வாரம் ஒருமுறை ராணிப்பேட்டை வந்தால் போதும் என்றும் முடிவு செய்யப்பபட்டது.

சமைத்துச் சாப்பிடுவதற்கு சில பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு கெரசின் ஸ்டவ், ரெண்டு படி அரிசி, கால்படி துவரம்
பருப்பு, தாளிக்க சிறிது கடலை-உளுத்தம் பருப்புகள், உப்பு, மிளகாய், சிறிய கடுகு ஒரு பொட்டலம், கொஞ்சம் உடைத்த
எல்.ஜி.பெருங்காயம் , சீரகம், வெந்தியம், துணிகளுக்காக கொடி
கட்டும் கயிறு, ஒரு ஊறுகாய் பாட்டில், சமையலின் போது கை துடைக்க ஒரு புடவை கிழிசல், சாமான் வாங்குவதற்கு
இரண்டு சணல் பைகள், இரண்டு பார் நீல துணி சோப்பு, ஒரு
லைப்பாய், மற்றும் இவற்றை கௌரவமாக எடுத்துப்  போவதற்கு 
இரண்டு புதுப் பைகள் இவையெல்லாம் தயாராயின.

ராணிப்பேட்டையிலிருந்து சனிக்கிழமை மதியம் புறப்படுவது என்றும், மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே சொரகொளத்தூர் வந்துவிடுவதால், வீடு பார்த்து அன்று இரவே சாவி வாங்கிக்கொண்டு விடலாம் என்றும்,  ஆனால் சனிக்கிழமை புது வீட்டில் குடி போகவேண்டாம், சாமான்களைப் பக்கத்து வீட்டில் 
வைத்துவிட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் ஞாயிறு என்பதால் விசேஷமானது, புது வீட்டில் நுழையலாம் என்றும் திட்டமிடப் பட்டது.

அந்த நாளும் வந்தது. இரண்டு பெரிய பைகளில் மேற்படி சாமான்களும், புதிதாக வாங்கிய ஒரு சூட்கேஸில் எனது துணிமணிகள், சர்டிபிகேட்டுகளுமாக சொரகொளத்தூரை நோக்கி என் பயணம் தொடங்கியது.

திருவண்ணாமலை செல்லும் பஸ் கிடைத்தால் நேராக
சொரகொளத்தூருக்கே டிக்கெட் வாங்கிவிடலாம் என்று முயன்றேன். கையிலிருந்த இரண்டு மூட்டைகளையும் பார்த்த சில நடத்துனர்கள் விசில் கொடுக்காமலேயே போய் விட்டார்கள். சரி, இனி போளூர் வண்டியில் போய் அங்கிருந்து சொரகொளத்தூர் போகவேண்டியது தான் என்று அடுத்து வந்த போளூர் வண்டியில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. ஆனால் மனிதர்களைப்
பார்க்கும் போதெல்லாம் நின்று நின்று போனதால் போளூர்
சேரும் போது ஐந்து மணி ஆகிவிட்டது. கொஞ்சம் இருட்ட ஆரம்பித்துவிட்டது.

திருவண்ணாமலை வண்டியில் நல்ல கூட்டம். ஒருவழியாக ஏறி, 'சொரகொளத்தூர்' என்று  கேட்டேன். நடத்துனர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'மருத்துவாம்பாடி தானே' என்றார். இல்லீங்க, சொரகொளத்தூர்  என்றேன். முக்கால் ரூபாய் கொடுங்க என்றார்.
 
மருத்துவாம்பாடி வந்தது. நிறைய பேர் இறங்கினர். நடத்துனர் என்னைப் பார்த்து, 'இறங்குங்க' என்றார். 'இல்லை, நான் சொரகொளத்தூர்' என்றேன். 'அதான் இறங்குங்க' என்று வேகமாக விசில் கொடுத்தார். அடடா, சொரகொளத்தூருக்கு 
மருத்துவாம்பாடி என்று இன்னொரு பேர் இருக்கும் போல என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு மூட்டைகள், ஒரு சூட்கேஸ் சகிதம் மருத்துவாம்பாடியில் இறங்கிய போது மணி  ஆறு. நன்றாக இருட்டிவிட்டது. என்னைத் தவிர அங்கே ஒன்றிரண்டு பேர் தான் இருந்தார்கள். அவர்களும் பஸ் பிடிக்கும் அவசரத்தில் இருந்தார்கள். அருகில் எங்கும் ஊர் இருப்பதாகத் தெரியவில்லை. 'கலைஞர் அழைக்கிறார்' என்ற
போஸ்டரின் பாதிக்குக் கீழே மருத்துவாம்பாடி என்ற பலகை
மட்டும் நின்றது. வயிற்றில் புளி கரைத்தது. அருகில் இருந்தவரிடம்,  'ஹைஸ்கூலுக்கு வந்தேன், எந்த பக்கம்
போகணும்?' என்றேன்.

'ஹைஸ்கூலா? அதெல்லாம் இந்த ஊர்ல கிடையாதுங்களே. சின்ன கிளாஸ் பள்ளிக்கூடம் தான் இருக்குது. அதுக்கும் ஆறு மாசமா வாத்தியாரே கிடையாதுங்களே ' என்றார். 'சாரு  வாத்தியாருங்களா?'

பக்கத்தில் இருந்தவர் எனக்கு உண்மையிலேயே உதவி செய்யவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவராக இருந்தார். இருங்க யோசிச்சு சொல்றேன் என்றார். பிறகு நான் நின்றிருந்த திசைக்குப் பின் புறமாகக் கை காட்டினர். 'இப்படியே மலை மேலே ஆறு மைல் நடந்தீங்கன்னா ஒரு  ஊர்  வருங்க,  அங்க ஒரு ஹைஸ்கூலு இருக்குன்னு சொல்வாங்க' என்றார்.

முதலாமவர் வேகமாக, 'ஆமாங்க, கிருஷ்டினு ஊருங்க, ஆனா நல்ல பள்ளிக்கூடமுங்க. எல்லாம் கெணத்துப் பாசனம். நல்ல வெள்ளாமைங்க' என்றவர் மேலும் கொஞ்சம் யோசித்து, 'ஊரு சொரகொளத்தூர்னு சொல்லுவாங்க' என்றார்.

எனக்கு 'திக்' கென்றது. ஏற்கெனவே இருட்டிவிட்டது. கையில் இரண்டு மூட்டைகள்.ஒரு சூட்கேஸ். மலை மேல் ஆறு மைல் நடப்பதா? சின்ன வயதில் மூன்றாவது படிக்கும்போது அம்மூர் மலைக்கு 'எக்ஸ்கர்ஷன்' போனது தான் நான் மலையேறிய அனுபவம்.

'இங்கிருந்து சொரகொளத்தூருக்கு பஸ், கிஸ் எதுவும் கிடையாதா?' என்று பரிதாபமாகக் கேட்டேன். 'நீங்க ஒண்ணு ! வாடகை சைக்கிள் கூட கிடைக்காது' என்றார் தீர்மானமாக. மேலும் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அவருடைய பஸ் வந்து விட்டது. அடுத்தவரும்
ஏறிவிட்டார்.

ஏறும்போது  என்னைக் கடைசி முறையாக அனுதாபமாகப் பார்த்து 
'எதற்கும் கவனமா  நடங்க. மல மேல நெறைய நரிகள் இருக்கும்னு சொல்லுவாங்க' என்றார்.

(தொடரும்)

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-4


************

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக