வெள்ளி, மார்ச் 29, 2013

என்ன பாடுவது? (கவிதை)

 
என்ன பாடுவது
எதனைப் பாடுவது?
எல்லாக் கவிஞனுக்கும்
ஏற்படுமோர் குழப்பமிது

மண்ணைப் பாடுவதா,
மனிதனைப் பாடுவதா ?

இங்கே நிலவுகிற
இழிவுகளைப் பாடாமல்
கண்ணெதிரே தோன்றும்
கயமைகளைச் சாடாமல்

கற்பனயில் மனம்மூடிக்
கனவுகளைப் பாடுவதா ?

சிரிக்கும் வைகறையை,
செவ்வந்தி வானத்தை,

மீளா இரவுகளில்
மின்மினிக்கும் விண்மீனை,

கத்தும் கடலினிலே
காலோடு கைநீட்டி

மூழ்கும் கதிரவனை,
முத்தமிடும் அலைநுரையை,

மேகக் கம்பளத்தில்
போர்த்திவரும் பிறைநிலவை

சில்லென்றிதழ் விரிக்கும்
சின்ன மலரை, அதில்

கன்னம் பதித்துக்
கள்ளுறிஞ்சும் பூச்சிகளை

வெள்ளை இறகு
விரிக்கும் கொக்குகளை

பாதையெலாம் படியும்
பனியழகை, பூங்காற்றை,

புல்லின் இதழில்
புரளும் நீர்முத்தை

கல்லிடையில் பூக்கும்
கள்ளிகளை, தாய்மரத்தைத்

தாங்கும் விழுதுகளை,
தரையினிலே புதைந்திருக்கும்

பொன்னை இரும்பைப்
பொக்கிஷத்தைப் பாடுவதா ?

என்ன பாடுவது
எதனைப் பாடுவது?
எல்லாக் கவிஞனுக்கும்
ஏற்படுமோர் குழப்பமிது !

-இராய. செல்லப்பா 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


7 கருத்துகள்:

 1. "என்ன பாடுவது...? எதனைப் பாடுவது?" என்கிற சிந்தனைக்கு வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்... அருமை...

  பதிலளிநீக்கு
 2. சரியாகத்தான் கேட்டீர்கள் சுவையாகத்தான் கவிதை பாடிவிட்டீர்களே .தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 3. என்ன பாடுவது
  எதனைப் பாடுவது?

  சிந்தனைக்கு வித்திடும்
  சிறப்பான கவிதை ,,! பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. மண்ணைப் பாடுவதா,
  மனிதனைப் பாடுவதா ?
  /நிச்சயம் மனிதர்களைப்பாடுவது தான் சிறப்பு ஐயா இது என் கருத்து!! அருமை கவிதை வரிகள்.

  பதிலளிநீக்கு
 5. அத்தனை பாடல்களும் பாடப்பட்டவை எனினும் இதையம் இன்னும் இன்னும் எனத் தேடி அலைகிறதே அந்தப் பாடல் கை கூடும் வரைக்கும் கவி பாடு
  மனமே !வாழ்த்துகின்றேன் இனிய கவிதையினைக் கண்டு வணகுகிறேன்
  ஆற்று நீர் நானும் இந்தக் கடல் நீரோடு கலந்துரையாட அழைக்கின்றேன்
  தங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும் மிக்க நன்றி கவிதைப் பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 6. நல்ல கேள்வி. மனதிற்கு அப்போது எது தோன்றுகிறதோ அதைப் பாடுவோம்.
  நல்ல கவிதை ஐயா!
  நேரம் இருப்பின் படிக்கவும்.
  எது கவிதை?

  பதிலளிநீக்கு
 7. என்ன பாடுவது என்று மனம் கவரும் இயற்கை அழகை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு