வெள்ளி, ஜனவரி 10, 2014

இப்படியும் ஒரு நண்பர்!

இன்று முகநூலைச் சொடுக்கியபோது திடீரென்று ஓர் ஆச்சரியம்.. புதுதில்லியிலிருந்து எனது நண்பர் ஷாஜகான் எழுதிய நீண்ட குறிப்பு ...இதோ கீழே தருகிறேன்:

நினைவுகளின் அடிச்சுவட்டில்...

1990களின் துவக்கம். தில்லிக்குக் குடிபெயர்ந்து தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து, இளமை வேகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம். இன்று அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட பலர் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் தீவிரமாக இலக்கியவட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த காலம். சொந்தக் கலையரங்கம் இல்லாதபோதே மாதம் தவறாமல் கவியரங்குகளை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் கவிதை வாசிக்கிறேன் என்பதற்காகவே ரசிகர்கள் கரோல்பாகிலிருந்து பஸ் பிடித்து வந்து கொண்டிருந்த காலம்...

அப்போதுதான் அறிமுகமானார் ஒருவர். கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளர். கரோல்பாகில் அலுவலகம். அப்போது நானும் தில்லிக்குப் புதிதாக வருபவர்களின் விருப்பத் தேர்விடமாக இருந்த கரோல்பாகில் குடியிருந்தேன். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் காஜியாபாதில் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியாக வங்கிக் குடியிருப்பில் வாசம் செய்தார். என்னைவிட ஆறேழுவயது மூத்தவர். 

கவியரங்குகளின்மூலம் அறிமுகமாகி, எப்போது எப்படி நெருங்கிய நட்பு உருவானது என்பது தெரியவில்லை. மாலை வங்கி முடிந்ததும் என் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு அவர் குடியிருப்புக்குப் போவோம். மறுநாள் காலை வங்கிக்கு வந்தபிறகு மாலையில் அவர் என் வீட்டுக்கு வந்து தங்கிவிடுவார். இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எங்கள் உரையாடல்கள் விரியும். 

வங்கித்தொழிலில் நிபுணர் என்பதால் பங்குச் சந்தை குறித்தும் நிறையவே தெரிந்து வைத்திருந்தார். “யோவ்... நான் உமக்கு 5000 ரூபாய் லோன் வாங்கித் தாரேன். நீரும் ஸ்டாக் மார்க்கெட்ல இறங்குமய்யா... உமக்கு இருக்கிற அறிவுக்கு நல்லாவே சம்பாதிக்க முடியும்” என்று பலநாட்கள் வற்புறுத்தி வந்தார். வீட்டில் காலையில் வந்துவிடும் டைம்ஸ் ஆப் இந்தியாவை வைத்துக்கொண்டு முந்தைய நாளின் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுப்பார். மணிக்கணக்கில் பங்குச்சந்தை ஆராய்ச்சி நடக்கும். அப்போது 5000 என்பது மிகப்பெரிய தொகை. ஆனால் எனக்கு பங்குச்சந்தை என்பது எப்போதுமே சூதாட்டமாகவே பட்டதால் கடைசிவரை அதைச் செய்யவில்லை. 

பல ஆண்டுகள் தலைநகரில் வெளிவந்து கொண்டிருந்த உதயம் என்னும் கையெழுத்துப் பிரதிக்கு அவரும் கவிதைகள் எழுதுவார். திடீரென்று அவருக்கு ஓர் ஆசை வந்தது. தில்லிக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற விபரீத ஆசை. தெரிந்தவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஸ்பான்சர்களைப் பிடித்து, தலைநகரில் தமிழ்க் குயில்கள் என்ற தொகுப்பையும், அவருடைய ஒரு கவிதைத் தொகுப்பையும், ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைத் தொகுப்பையும் தானே கொண்டு வந்தார். அவற்றை தீபம் திருமலையின் உதவியால் அச்சிட்டு தமிழகத்தில் பரவச்செய்தார். தில்லிக் கவிஞர்களின் படைப்புகள் நூலாக வெளிவந்தது அதுவே முதலும் கடைசியும்.

அவரால் யாருடனும் மிக எளிதாக நட்புக்கொண்டுவிட முடியும். மனதால் இளைஞர் என்பது இன்னும் வசதியாக இருந்தது எங்கள் நட்பு வலுப்படுவதற்கு. ஆனால் எல்லா உறவுகளும் ஏதோவொரு கட்டத்தில் முடிவுக்கு வரும். இதுவும் வந்தது. பணிமாற்றல் காரணமாக தில்லியை விட்டு அகன்றார். (போகும்போது அவர் வீட்டில் இருந்த மடக்குக் கட்டில் உள்பட சில பொருட்களை நான்தான் எடுத்துக்கொண்டேன். அவை அவ்வப்போது என்னிடம் அடைக்கலமாகும் புதியவர்களுக்குப் பயன்பட்டன. அவருக்கு யாரோ ஒரு வாடிக்கையாளர் அளித்த இரண்டு புதிய கம்பளிகள் இப்போதும் என் வீட்டில் உண்டு.) 

பெங்களூர், பெல்காம் என்று ஊர் ஊராக அவர் சுற்றினாலும் நாங்கள் இந்த இருபதாண்டுகளாக விடாமல் தொடர்பில் இருந்தே வருகிறோம். அவர் எத்தனை ஊர்களில் வசித்திருந்தாலும் சரி, தில்லி அவருக்கு மற்றொரு சொந்த ஊராகவே இருந்தது. அதனாலும், அவருடைய மகளுக்கு திருமணமாகி தில்லியில் குடியமர்ந்ததாலும், வங்கி வேலைகள் காரணமாகவும் அடிக்கடி தில்லி வருவார், சந்தித்துக்கொள்வோம்.

அப்படித்தான் சுமார் 12 ஆண்டுகள் முன்பு ஒருமுறை வீட்டுக்கு வந்தார். கணக்கிலும் கம்ப்யூட்டரிலும் புலி என்றாலும், இணையத்தில் அவ்வளவு பரிச்சயமில்லை அவருக்கு. அப்போது வலைப்பூக்கள் எல்லாம் கிடையாது. ஃபோரம்ஹப் இருந்தது. யாஹூ மூலமாக வலைதளம் உருவாக்கும் வசதி இருந்த்து. அப்போது நானும் ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்திருந்தேன். “யோவ்... எனக்கு தமிழ் டைப்பிங் சொல்லிக் கொடுமய்யா... நீர் மட்டும் இவ்வளவு வேகமா அடிக்கிறீர்... வெப் பேஜ் எல்லாம் போட்டு வச்சிருக்கீர்...” என்றார். அவருக்கு டைப்பிங்கும், வெப் பேஜ் ஆரம்பிப்பது குறித்தும் சொல்லிக் கொடுத்தேன். சுமார் 4-5 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்தார்.

யோவ் இங்கு வந்து பாருமய்யா என்றார்.

பார்த்தேன். அவருடைய பெயரில் ஒரு வெப் பேஜ் உருவாக்கியிருந்தார். அதில் 3-4 பக்கத்துக்கு ஒரு கட்டுரை முதலாவதாக எழுதியிருந்தார். இப்போது முழுமையாக நினைவில்லை. அந்தக் கட்டுரை என்னைப் பற்றியது. வந்தாரை வாழவைக்கும் புதியவன், இவருடைய வீட்டுக் கதவு அடையா நெடுங்கதவு என்ற அந்தக் கட்டுரையில் இருந்தது. என்மேல் அவர் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு அது. அதைவிட முக்கியமாக, அந்த நான்கு மணிநேரத்தில் டைப்பிங் கற்று, நான்கு பக்கங்களை அடிக்கவும் முடிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.

சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூ ஜெர்சி சென்றவர், அங்கிருந்து என் வலைப்பூவைப் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள், “யோவ்... யுனிகோட், பிளாக் பத்தி சொல்லுமய்யா... நானும் பிளாக் ஆரம்பிக்கிறேன்” என்றார். அஞ்சல் மூலமாக விளக்கினேன்.

ஓராண்டுக்குள் அவர் எங்கோ உயரத்துக்குப் போய்விட்டார். மாதம் ஒரு பதிவு என்று இருந்தது, இப்போது வாரம் 3-4 பதிவுகள். அதுவும் அத்தனையும் அருமையான பதிவுகள். அவருடைய சிறுகதைத் தொகுப்பை 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்' என்ற பெயரில் அகநாழிகை வெளியிட்டுள்ளது. நேற்றுதான் நூல் கூரியரில் வந்தது. இன்னும் வாசிக்கவில்லை. முன்னுரையைப் படித்ததும் இதை எழுதவேண்டும் என்று தோன்றியது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் என்னைப்பற்றி வலையில் அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடன் !

யார் அவர் என்று கேட்கிறீர்களா... இப்போதுதான் அவரை பேஸ்புக்கில் பார்த்தேன். இன்னும் அழைப்புக்கூட விடுக்கவில்லை. கோபம். பேஸ்புக்கில் அகவுன்ட் ஓப்பன் செய்தவர் ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை என்று கோபமோ கோபம்.

நீங்களும் இவரை நட்பாக்கிக்கொள்ளலாம். அவருடைய வலைப்பூவில் எழுதும் படைப்புகளையும் படிக்கலாம். 

https://www.facebook.com/chellappa.yagyaswamy?ref=ts&fref=ts

****
நண்பர் ஷாஜகான் அவர்களே, தங்கள் நினைவுக் குறிப்புகளுக்கு நன்றி!

முகநூலில் வருவதற்கு நேரம் இல்லாததால் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. இப்போது நீங்கள் அறிவித்துவிட்டீர்கள். இனி வேறு வழியில்லை. அதற்கும் நேரம் செலவழிக்க முடிவு செய்துவிட்டேன். ('அதானே பார்த்தேன், கம்ப்யூட்டரை விட்டு வராமல் இருப்பதற்கு வழி சொல்லும் நண்பர்கள் தானே உங்களுக்கு இருக்கிறார்கள்!' என்று ஒரு குரல் சமையலறையிலிருந்து கேட்கிறது.)

நண்பர் ஷாஜகான், புதுதில்லியின் பதிப்புத்துறையில் நன்கு அறியப்பட்டவர். பல்வேறு உலகமொழிகளில் வெளியாகும் நூல்களிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அந்த நாள் பொதுவுடைமையாளர். சிறந்த எழுத்தாளர், கவிஞர். பேச்சாளர். கருத்தரங்கக் கட்டுரையாளர். (நாற்பதாண்டுகளாக உடல் பெருக்காமல் இருக்கும் வித்தை தெரிந்தவர் என்பது உபரித்தகவல்.)

இப்படியும் சில நண்பர்கள் இருப்பது பெருமை தானே!
****
 இந்த இனிய நன்னாளில் எங்கள நட்பைப் புலப்படுத்தும் அந்த நாள் படங்கள் சிலவற்றை இங்கு பதிவேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஒரு கவியரங்கில் நான்

அமர்ந்திருக்கும் கவிஞர்கள் : 1.பாரதி-200 பாலசுப்ரமணியன், 2. நான், 5. சேது ராமலிங்கம், 6. நாகவேனுகோபாலன். (மற்ற பெயர்கள் ஷாஜகானுக்குத் தெரிந்திருக்கும்)

எனது வழியனுப்பு விழாவில்( 1992)  நாவலாசிரியர் வாஸந்தி 
மேற்படி நிகழ்ச்சியில் (என்னைப் புகழ்ந்து ?) பேசும் ஷாஜகான்
நினைவுப்பரிசு வழங்கும் பேராசிரியர் திருமதி இந்திராணி மணியன்
 (சென்ற ஆண்டு அமரரானவர்) 
அதே நிகழ்ச்சியில் தில்லியின் இன்னொரு பெரிய எழுத்தாளரான
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
பாரதியின் புகழ்பரப்புதலையே நோக்கமாகக் கொண்டு 'பாரதி-200' அமைப்பை
நிறுவிய  திரு பாலசுப்ரமணியன் 
எனது ஏற்புரை

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com

செவ்வாய், ஜனவரி 07, 2014

எனது சிறுகதை தொகுப்புக்கு பேராசிரியரின் மதிப்பீடுஹரணி
(முனைவர் க அன்பழகன்)
தமிழ்ப் பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைகழகம்,
சிதம்பரம்.மானுட மதிப்பைப் புதுப்பிக்கும் கதைகள்.....
‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’

மானுட வாழ்வின் பல்வேறு இருத்தல்கள் விதிக்கப்பட்ட ஒன்றாகவே அழுத்தமுறுகின்றன. பிறப்பும் இறப்பும் எனும் இவையிரண்டுக்குமான இடைவெளிகளில் மானுடப் பிறப்பெடுத்துவிட்ட உயிர் அலைக்கழிக்கப்பட்ட சூழமைவுகளாலேயே கட்டமைக்கப்படுகின்றன. இவற்றின் சூட்சுமத்தை யுணர்ந்துகொள்ளும் மனங்கள் சிலவே அலைக்கழிப்பை அவைக்களித்த வரமாக்கிக்கொண்டு வாழ்ந்துவிடுகின்றன. உணராத பலவோ உயிரின் கடைசித் தருணத்தைச் சுகிக்கும் வேளையில் முடிந்துபோகின்றன, சொல்ல முடியாமல். இருப்பினும் வாழ்தல் என்பது மிகமிக முக்கியமானது, அது எப்படியான வடிவத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் சரி, அல்லது தக்க வைத்துக்கொண்டிருந்தாலும் சரி, அதற்காகப் போராடிக் கொண்டிருந்தாலும் சரி. ஒரு படைப்பாளியின் பிறப்பில் இவையனைத்தும் நிறைக்கப்பட்டு அவ்வக்காலத்தில் பூவிலிருந்து வாசம் இழைவதுபோல வெளிப்படுகிறது. ஆகவே படைப்பாளியாகப் பிறந்துவிட்டவன் பாக்கியவான். மனிதனாக இருந்துகொண்டே அந்த மனிதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வரத்தையல்லவா அவன் வாங்கிப் பிறந்திருக்கிறான்.

கதைகள் என்பவை மனிதனிடமிருந்துதான் உருவாகின்றன. மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றன. மனிதாபிமானத்தோடுதான் அவை உயிர்பெறுகின்றன. கடைசி வரையிலும் மனிதக் கூட்டத்தின் கடைசி மனிதன் வரைக்கும் அவை உதவவும் வாழ்ந்துகொண்டேயிருக்கின்றன, அழியாமல். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கைச் சுற்றில் ஓர் இடப்பெயர்ச்சி முக்கியமான பின்னலாக அல்லது திருப்பமாக அல்லது ஒட்டுமொத்த அவனது வாழ்வின் இணைப்பாக அமைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இதுவும் விதிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவே அழுத்தமடைகிறது. அது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தும், நிறைவேற்றும் கட்டாயத்தில் தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது.

இப்படித்தான் தமிழ் மண்ணில் பிறப்பெடுத்து அயல் மண்ணில் இருத்தலை ஊன்றுகிற மனிதர்களிடம் இடப்பெயர்வு அமைகிறது. என்றாலும் அவர்களின் வேர் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் அது தாயின் பண்புகளோடு வாசத்தோடு மணந்துகொண்டேயிருக்கிறது யுகங்களாய். இப்படித்தான் ஒரு வாசத்தை செல்லப்பாவின் கதைகளில் கண்டறியமுடிகிறது, என்னால்.இது அவரின் முதல் தொகுப்பு என்று என்னால் நம்ப முடியாமல் போகிறது. கண்களும் உள்ளமும் ஒருமித்தியங்கவேண்டும். அப்போதுதான் அங்கே ஓர் உயிர்ப்பான படைப்பைப் பிரசவிக்கமுடியும் என நம்புகிறேன். தேர்ந்துவிட்ட கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இந்தச் சிறுகதைகள் எனக்குத் தருகின்றன இயல்பாகவே. தொடர்ந்த பல்லாண்டுகள் வாசிப்பின் தைரியத்தில் இப்போதெல்லாம் கதையின் கரு பற்றிய சிந்தனையை அவ்வளவாக ஏந்திக்கொள்வதில்லை. அதற்காகப் பொருண்மையின் எந்தவொரு தளத்தையும் மனம் பதிக்காமலும் தாண்டுவதில்லை. ஆகவே புதிதாக ஒரு பொருண்மையின் தளத்தைக் கண்டுபிடித்துவிடமுடியாது என்கிற அழுத்தமான இயற்கை விதியினை உள்வாங்கிக்கொண்டுதான் நான் செல்லப்பாவின் கதைகளுக்குப் பயணிக்கத் தொடங்கினேன். சுகமான பயணம். எப்போதும் சிறுகதைகள் வாசிப்பில் சுகம் காண்பவன். 

இத்தொகுப்பின் 12 கதைகளும் பல்வேறு தருணங்களில் மனிதனின் இருப்பைப் பரிசோதிக்கின்றன. அதற்குப் பல்வேறு செயற்பாடுகளைச் சோதனையாக அறிவிப்பும் செய்கின்றன. என்றாலும் ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் சோர்வற்று மனத்தைப் புடம்போடுகின்றன. ஒரு குழந்தைக்குத் தாய்மையின் மேன்மையை உணர்த்தும் கதையில் கதை சொல்லத் தொடங்கித் தொகுப்பு இயங்க ஆரம்பிக்கிறது. எங்கிருந்தாலும் இயற்கை இயற்கையாகவே இருக்கும், அதற்கான ஆளுமைப் பண்புடன் என்பதுபோலப் பிறந்த மண்ணின் பண்பாட்டுத் தெளிவுகளுடன் வெளிநாட்டு சூழமைவுகளில் கதையை நகர்த்தும் செல்லப்பா மனத்திற்குள் உயர்ந்துபோகிறார். 

கதையெழுதுவதால் என்ன பயன்? கதைகள் என்ன சொலல வருகின்றன? அல்லது முயற்சிக்கின்றன? அவற்றின் சமூகத் தேவையென்ன? கதைகளில் என்ன விடியலைத் தருவித்துக் காட்டிவிடமுடியும்? இப்படி ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கலாம். இது எதுவும் இல்லை. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக்கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிப்பின் உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கதைகளில் காணமுடிகிறது.

பல விழுமியங்களைக் கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. தன்னுடைய ஈடு செய்யவியலாத இழப்பைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உள்ளங்காட்டும் மருத்துவர்.....அன்னையின் மேன்மையை அச்சில் வார்க்கும் ரயில் பயணத்தில் பலகாரம் விற்கும் அந்த உள்ளம்......வாழ்க்கை என்பது நம்பிக்கைகளால் ஆனது எனும் உயர்மதிப்பைச் சிதைக்கும் ஓர் உள்ளத்தின் காயத்தைக் கழுவிட மாமருந்தாய் வரும் இன்னொரு உள்ளம், ஆயிரமானாலும் தாயின் இயல்பென்பது தானீன்ற உயிர்களுக்காவே...பிரதிபலனும் மெய்வருத்தமும் பாராதது என இறந்தும் வெட்டுண்ட பழத்துண்டுகளினூடாகப் புதுப்பிக்கும் தாய்.... உள்ளத்தனையது உயர்வென்ற வள்ளுவனின் வாய்மையைப் புலப்படுத்தும் சாஸ்திரியின் வாய்மையும் ஒழுக்கமும்.... ‘முடிவற்ற தேடலி’ல் வெளிப்படும் குடும்ப அமைப்பின் முறிந்துவிடாத அச்சாணி - என இப்படியாக மனித மதிப்புக்களை மதிப்புக்குறையாமல் சேகரித்து நிற்கின்ற கதைகள் அல்ல இவை. வாழ்க்கை. திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், வாழ்வின் இருப்பை மனிதாபிமானத்தோடு தக்கவைக்கும் சிறுகதைகளை செல்லப்பா நியாயமான பொறுப்புணர்ச்சியோடு, ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்.
‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ தாத்தா நமக்களிக்கும் நலந்தரும் விழுமியங்களின் அடையாளம். அவை இந்த மானுடத் தோட்டததில் எப்போதும் எவ்விதப் பூச்சியரித்தலுக்கும் ஆளாகாமல் விளைந்திருக்கும் வெள்ளரிக்காய்கள்தாம். ஆளுக்கொரு வெள்ளரிக்காய் வேண்டாம் அங்கங்கே ஒரு சிறு துண்டு.. ஒரு விள்ளல்.. ஒரு சிறு சுவைப்பு போதும் இந்த சிறுகதைகளின் பலம் அதுதான். சிலவற்றில் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடுமோ என்கிற பதைப்பில் என்ன சொல்லவருகிறேன் என்கிற சொற்கள் நீண்டு விடுகின்றன. போகட்டும் நல்லதை சற்று நீட்டித்தால்தான் என்ன?  செல்லப்பாவின் இந்த மனிதத்தைத் தக்கவைக்கும் முயற்சி தலைமுறைகளைத் தாண்டிப்போகும் பயணத்தைத் துணிவுடன் கையெடுத்திருக்கின்றன. 

                                                               அன்புடன்
                                                                ஹரணி
  தஞ்சாவூர், டிசம்பர்  06, 2013

                 
                 
மேலுள்ள மதிப்பீட்டை வழங்கி என்னைச் சிறப்பித்த பிரபல வலைப்பதிவரும், பல சிறுகதை நூல்களைப் படைத்தவரும், பேராசிரியருமான டாக்டர் அன்பழகன் என்ற ஹரணி அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றிகள்!

 (இந்த நூல், சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை அரங்கு எண்  666-667  இல் கிடைக்கும். விலை ரூபாய் 120. அகநாழிகை புக் ஸ்டோரிலிருந்து இணையம் மூலமும் பெறலாம். )