செவ்வாய், மார்ச் 26, 2013

கடலும் மலையும் எங்கள் கூட்டம் (கவிதை)

நாலு நாள் முன்பு
நடந்த செய்தி இது:

நண்பரொருவரை நாடினேன்,
அழைப்பிதழ் கொடுத்தேன்-

"பத்துக் கவிஞர்கள்
பாடுகிறார்கள்-வருக வென்றேன்.
மகிழ்ந்தார்.

"கவிஞர்களுக்கு
என்ன கொடுப்பீர்கள்" என்றார்.
அடுத்த முறை
எனக்கும் இடம் கொடுங்கள்"
என்றார்.
****

சிலரின் கேள்வியில்,
உள்ள சிந்தனையும்
ஓடி மறையும்.
சிலரது கேள்வியில், அது
வான் வரை விரியும்.

இவரின் வினா, என்
சிந்தையை விரித்தது....

எண்ணிப் பார்க்கிறேன்-

கவிஞனுக்கு என்ன கிடைக்கும்?

-வந்து போக வாகனம் இருந்தால்
கொண்டு போகத் 'துண்டு' கிடைக்கலாம்.
(எதற்கும் அந்தஸ்து வேண்டாமா?)

-மணிவிழா நடத்தி
மலர் வெளியிட்டால்
மாலை கிடைக்கலாம்.
அதுவும்
மாலையில் நடந்தால்
மட்டுமே கிடைக்கும்.
(மாலை, மாலையிலன்றோ மலிவு?)

-அரங்கம் அமைத்து
அழைப்பிதழ் அச்சிட்டு
விழா நடத்தும் பெரியோர் தம்மை

உரிய சொற்களால்
ஓங்கிப் புகழ்ந்தால்
அடுத்த நிகழ்ச்சிக்கும்
அனுமதி கிடைக்கலாம்!

மற்றபடி,
கவிஞனுக்கு என்ன கிடைக்கும்?
*****

மரபுக் கவிதை மாண்டு போனது-
ஒரு சிலர் பேச்சு.

புதுக் கவிதை புதைந்து போனது-
இது சிலர் பேச்சு.

இரண்டும் அழிந்து -இனி
வருவதெல்லாம் உரைவீச்சு-
இன்னொருவர் பேச்சு.

எங்கிருந்தோ ஓர் குரல்:
குக்கூ...குக்கூ
அடடே,
அய்க்கூ என்கிற பொய்க்கூ..!

எது கவி என்பதே
மறந்து போனது.
எவன் கவி என்பதும்
மறந்து போனது.

விளம்பர யுகத்தில்
உரைநடைக் குளத்தில்
கவிதைப் பூக்களைக்
கண்டுகொள்வார், யார்?
அவை,
ஓரமாய்ப் போய்
ஒதுங்கி விட்டன!

அச்சுக் கோர்ப்பவர் மேல்
ஆசிரியருக்குப் பரம திருப்தி.

ஓரம் நிரப்பத்
துணுக்குகள் இல்லையேல்
உரை நடையை
உடைத்துப்போட்டுக்
கவிதை யாக்கும்
கலைஞர் அவரன்றோ?
****

'மயக்கம் எனது தாயகம்'-
இது கவிஞன் சொன்னது.
ஒரு கவிஞன் சொன்னது.

மயக்க முள்ளவன்
மகிழ்ந்து போகிறான்- 'அட,
நானும் கவிஞனே!'

மொழி மயக்கம்
தொழில் மயக்கம்
அறிவு மயக்கம்
அன்பு மயக்கம்
எல்லா மயக்கமும்
இணைந்த மயக்கமே
கவிதை மயக்கம்.

ஒவ்வொரு மனிதன்
உள்ளத் துணுக்கிலும்
ஏதோ மயக்கம்
இல்லாது போகுமா?

மயக்க முள்ளவன்
கவிஞன் ஆவதால்
கவிதை  என்பதே
மயக்க மானது.

கவிஞனும் மயக்கம்
ரசிகனும் மயக்கம்
காலம் கழிந்ததால்
மயக்கமே உறக்கம்.

கவிதை இன்று
உறங்கத் தொடங்கி
உறைக்குள் போனது.

காவியம் என்பார்,
நாடகம் என்பார்,
உரைநடையிட்ட
செய்யுள் என்பார் -

எழுதுவோரில்லை,
எழுதிய நூலைப்
படிப்போரில்லை.

காசு கொடுத்துக்
கவிதை வாங்கவோ
கை வரவில்லை.
(ஐ.எம்.எஃப்  கடன்
அடுத்த தவணை
வந்த பின்னால்
வசதி கிட்டுமோ?')
***

உறங்கிடும் மனிதனும்
ஓரிரு தடவை
தன்னை மறந்து
தானே விழித்தல் போல்,

ஓரிரு கவிஞர்,
ஓரிரு கவிதை
வந்ததல்லாமல்

உறங்கும் கவிதையை
உசுப்பி எழுப்பும்
உத்திகள் காணோம்!

எது கவிதை என்பதே
இன்றைய கேள்வி.

-சொல்வளம் இருந்தால்
சுந்தரக் கவிதை, என்றனர் சிலர்.

-கருத்து வளமே
கவிதையைக் காட்டும், என்றனர் சிலர்.

-அணி நயமின்றேல்
கவிதை யாகுமா? - வேறு சிலர்.

பக்தி சொட்டினால்
கவிதை என்றார் சிலர்.
பாதை மாறிக்

காமம் சொட்டிய
கவிதை படைத்தார், இன்னும் சிலர்.

'உள்ளத்துள்ளது கவிதை'
என்றார் ஒருவர்.
சரி, வெளியே வந்தால்
அதன் பெயரென்ன
என்றார் ஒருவர்.

கவிதை,
நேற்றும் இன்றும்
புரியாத புதிரே.

தன்னைப் புரிந்த
கவிஞனை தேடித்
தவிக்கும் கவிதையும்

தன்னின் கவிதையைத்
தனக்குள் தேடித்
தவிக்கும் கவிஞனும்

இணையும் கணமே
மொழியின் திருநாள்!

எந்தப் பாடுபொருள்,

இதய விளிம்பில்
எழுந்து துடிக்கிறதோ,
தன்னை வெளிப்படுத்தத்
தருணம் பார்க்கிறதோ,

காலம் அதனைக்
கவிதையிலே வெளியாக்கும்.

இவன்,
செய்யப் போவதெல்லாம்
சிந்தனையைப்
பிரதி யெடுத்தல்!
****

பனை மரத்தின்மேல் எனக்கு
பக்தி உண்டு.
தன்
ஓலைக் கரங்களில்
தமிழை எழுதி
உரக்கப் படித்த
புனித மரம், பனை மரம்.

அதற்கும் முன்னால்,

ஆற்று மணலில் தான்
தமிழ் வளர்ந்தது.

சூரியன் கிளம்பிச்
சூடு பரப்பாத
விடியற் பொழுதில்

ஆற்று மணலில்
விரலைத் தேய்த்துத்
தமிழ் சொல்லிவைத்தார்,
ஆசிரியர்.

அந்தப்
ப ஃறுளி ஆற்றில்
பாடல் பிறந்தது.
காவிரி மணலில்
கவிதை பிறந்தது.

அதன்
தத்துவம் என்ன?

வீடு திரும்பும்
நிலவுப் பிள்ளையும்
விழித்துக் கிளம்பும்
சூரியக்  குழந்தையும்
மேக வாகனத்தில்
மெல்ல இறங்கித்

தாமும் வந்து
தமிழ் படிக்கட்டுமே
என்பது தான்!

இன்று
ப ஃறுளி இல்லை
காவிரி இல்லை -
நம்
சிந்தனை எல்லையும்
சிறிது சுருங்கிற்று!

பெயர் நாடாமல்
புகழ் நாடாமல்
கவிதை செய்யும்
கவிஞர் பெருகிடில்
சிந்தனை விரியும்!

உறங்கிக் கிடக்கும்
கவிதையின் ஆன்மா
புரண்டு படுக்கும்-பின்
மெல்ல விழிக்கும்!
****

எதுவோ கிடைக்கும்
என்பதால் பிறப்பதா
கவிதை?

உண்மையில்,
எதுவும் கிடைக்காத போதே
பிறப்பது கவிதை!

பாரதியைப் பாருங்கள்
பாவி!
அவனுக்கு
என்ன கிடைத்தது?

தந்தை தாயின்
அன்பு கிடைத்ததா?
தடையில் லாமல்
கல்வி கிடைத்ததா?

உண்ணு வதற்குச்
சோறு கிடைத்ததா?
உறங்குவ தற்கும்
ஓரிடம் கிடைத்ததா?

அவன்
கவிதையைக் கேட்கக்
காது கிடைத்ததா?

போகட்டும்,
வாழ்ந்து பார்க்கத்தான்
வயது கிடைத்ததா?

இருந்தாலும்
என்னென்ன சாதித்தான்!

காக்கை குருவி அவன் சாதி
கடலும் மலையும் அவன் கூட்டம்
கண்டதெல்லாம் இயற்கையின்
களியாட்டம்!

ஓரிடம் இல்லாது
ஓடிக் கொண்டிருந்ததால்
எல்லா இடத்திலும் அவன்
இணைந்து போயினான்!
****

கற்பனை யூரினில்
அவன் வாசம்-ஆனால்
வாழ்க்கையோ
திக்குத் தெரியாத காடு
பசும்புல் கிட்டாத
பாலை வனம்.

கடல்,
அவனை ஈர்த்தது.

நீலத் திரைக்கடலின்
ஓரத்திலே வரும்
மங்கிய நிலவில்
மனது மயங்கினான்.

அல்லிக் குளமும்
செண்பகத் தோட்டமும்
அவன்
காதல் இசைக்குக்
களங்க ளாயின

தெற்கு மூலையில்
தீர்த்தக் கரையினில்
அவனில்
கசிந்த கனவுகள்
காதல் பாடின.

ஆற்றினிலும் சுனை
யூற்றினிலும் கவி
அருவியை அவன்
கலக்க விடுத்தான்.

கரும்புத் தோட்டம்
கசந்தது அவனுக்கு.
சர்க்கரைத் தீவின்
உப்பு வேர்வையைக்
கவிதை யாக்கினான்.

அவன்
மண்ணில் பிறந்த
விண்வெளிக் கவிஞன்.

காற்று வெளியிலும்
கவிதை பரப்பவே
காக்கை குருவிக்கும்
கவிதை பழக்கினான்..

எது கவி எனபது
புரிந்திட வில்லையேல்
இவன் கவியெடுத்து
இசைத்துப் பாருங்கள்!

சொல்புதிது-சுவை புதிது
பொருள் புதிது - வளம் புதிது
இந்த
நாலும் புதிதானால்
நவ கவிதை
"சோதி மிகும் நவகவிதை"

இதுவே கவிதையின்
இலக்கணம்.
*****

தில்லி நகரில்
செந்தமிழ் வளர்ப்பது
வேள்வி செய்யும்
வித்தை எனலாம்!

கவிஞனைத் தேடிக்
கவிதை கொணர்வதும்
கவிதையைத் தேடிக்
காது கொணர்வதும்
சிறு பணியல்ல,
திருப் பணி!

பாரதி பாலு -நம்
நன்றிக் குரியவர்!
கவிதைப்  பொறியை
நெஞ்சில் சுமந்து
காத்து வளர்ப்பவர்!
அது சுடர் பெருகிப்
பாரதி தீபமாய்ப்
பல்கிட வாழ்த்துவோம்!

தமிழ்ச் சங்கம்
கிருஷ்ணமூர்த்தி -எம்
அன்பில் நிறைந்தவர்!
எதிரெதிர் துருவமும்
இணைந்திடச் செய்யும்
காந்த மானவர் -
சாந்த மானவர்!

பாரதி இன்றேல்
தமிழ்ச் சங்கம் இல்லை- இதைப்
படிப்பினை யாக்கிய
அன்பர் இவர் வாழ்க!
****

ஆம்,
பாரதி இன்றேல்
தமிழ்ச் சங்கம் ஏது?
பாரதி தானே,
தமிழின் சங்கம்?

-கவிஞர் இராய .செல்லப்பா.
****


இது என் பழைய பனையோலையிலிருந்து ஒரு கீற்று. 1991 அக்டோபர் 2 -அன்று தில்லித் தமிழ்ச் சங்கமும், பாரதி-200 அமைப்பும் சேர்ந்து தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடத்திய மகாத்மா காந்தி - மகாகவி பாரதி விழாவில் நடந்த கவியரங்கத்தில் தலைமையேற்றுப் பாடிய கவிதை.

'பாரதி பாலு' என்று குறிப்பிடப்படுபவர், திரு பாலசுப்ரமணியன், மத்திய அரசின் கணினித் துறை நிறுவனம் ஒன்றின் உயர்
பொறுப்பில் இருந்தவர். (இப்போது சென்னைவாசி). பாரதியின் புகழ், ஒரு நூற்றாண்டோடு நின்றுவிடாது 200 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பது இந்த அமைப்பின் குறிக்கோள்.

திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ்ச் சங்கத்தின்
அப்போதைய செயலாளர்.ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரர். (இப்போதும் தில்லிவாசி).

மேற்படி கவிதை எனது 'எட்டயபுரத்து மீசைக்காரன்' தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது. நூல் இப்போது அச்சில் இல்லை).
******
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com


குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


4 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை சிந்தனை வரிகள்... சிந்திக்க வைக்கும் வரிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

    மிகவும் பிடித்த வரிகள் :

    காலம் கழிந்ததால்
    மயக்கமே உறக்கம்.

    தாமும் வந்து
    தமிழ் படிக்கட்டுமே
    என்பது தான்!

    உண்மையில்,
    எதுவும் கிடைக்காத போதே
    பிறப்பது கவிதை!

    திரு பாலசுப்ரமணியன், திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... நன்றிகள் பல...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. கவிஞனுக்கு என்ன கிடைக்கும் என்ற கவிதை என்னை கவர்ந்தது.

    ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு கவிதையை மட்டும் அறிமுகப்படுத்தவும் முடிந்த அதற்கு ஏற்ற படங்களை கூகுலில் தேடி போடவும். ஒரே பதிவில் நிறைய கவிதைகளைப் போட்டால் கவிதையை ரசிப்பவர்ளை தவிர மற்றவர்களுக்கு சலிப்பு கொடுத்துவிடும். ஆனால் அதே நேர்த்தில் ஒவ்வொன்றாக கொடுத்தால் கவிதையை அதிகம் ரசிக்காதவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி செய்தால் இந்த பதிவுலகில் உங்களால் வெற்றி பெற முடியும் என்பது எனது கருத்து

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. கவிஞனுக்கு என்ன கிடைக்கும், மனங் கவர்ந்த கவிதை. நன்றி

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
    கவியரங்கக் கவிதை என்பதால் நீளமாக இருக்கிறது. தனிக் கவிதைகள் நிச்சயம் அளவோடு தான் இருக்கும். சரியா?

    பதிலளிநீக்கு