சனி, மார்ச் 09, 2013

கில்லாடி கிருஷ்ணன் கதை - 2

தொலைபேசியில் வந்த செய்தி எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்ததை கிருஷ்ணன் கண்டு பிடித்து விட்டார். "கங்க்ராஜுலேஷன்ஸ் " என்று கை குலுக்கினார். "உங்களுக்கு மாற்றல் உத்திரவு வந்துள்ளது. சரி தானே?"

"எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" என்று வியப்புடன் கேட்டேன்.

"நான் வெளியில் போயிருந்த போது வேறொரு பேங்கரைப் பார்த்தேன். அவர் தான் சொன்னார்,  நீங்கள் சென்னைக்கு மாற்றல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் முகபாவத்தை கண்டதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன்."

இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

உணவு முடிந்து, என் வேலைகளை ஏறக் கட்டிவிட்டு, வீடு வந்து சேர்ந்தோம். கிருஷ்ணன் தமது சரித்திரத்தை வெளியிடத் தொடங்கினார்.

சென்னையில் பிரபலமானதொரு ஆங்கிலப் பத்திரிகையில் போட்டோகிராபராக வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். தன் தொழில்
திறமையால் அற்புதமான தொடர்புகளைப் பெற்றார்.
முக்கியமாக, ஆன்மீகப் பெரியவர்கள் பற்றிய செய்திகளை 'கவர்' செய்வதற்கு அவரை விட்டால் ஆள் இல்லை என்னும் அளவுக்கு, பத்திரிகையில் செல்வாக்கு வளர்ந்தது. புகழ் வந்தால் கேட்கவா வேண்டும், எதிர்ப்பும் வந்து விடும் அல்லவா? பத்திரிகையில் ஒரு குறிப்பிட்ட துணை ஆசிரியர் மாறியபோது கிருஷ்ணன் வேண்டாதவராகச் சித்தரிக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். அது மட்டுமல்ல, அவர் கொண்டு வரும் புகைப்படங்கள் எல்லாமே 'அது சரியில்லை, இது சரியில்லை' என்று நிராகரிக்கப்பட்டன. கடைசியாக ஒரு காலாண்டில் அவருடைய புகைப் படங்கள் எதுவுமே அந்தப் பத்திரிகையில் வெளிவராததால், பதவியிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அன்று முதல், சுதந்திரமான 'ஃப்ரீலேன்ச' ரானார் கிருஷ்ணன். அவரை நன்கு அறிந்திருந்த காஞ்சி மடம், ஜீயர் மடம், சிருங்கேரி மடம், மேல்மருவத்தூர், ரத்தினகிரி போன்ற பீடங்கள் அவரைத் தங்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டனர். திருமணம் ஆகிவிட்ட போதிலும், குழந்தைகள் இல்லை. மனைவி சென்னையில் இருக்கிறார். மாதம் எப்படியும் இருபது நாட்கள் வெளியூரில் தான் வேலை. அவருக்குப் பழகிவிட்டது. மனைவிக்கும் தான்.

முக்கியமாக, காஞ்சி மடத்திற்குத் தான் நிறைய வேலை செய்வதாகவும், இளைய பெரியவரின் சித்தப்பா தனக்கு முன்பே தெரியும் என்றும் சொன்னார். வருமானம் என்ன வரும் என்று கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே, "சுவாமிகள் யாரையாவது கை காட்டுவார்கள். நம் சாமர்த்தியம் போலக் கறந்து விட வேண்டியது தான். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. இப்படி நாடு முழுதும் ஓடியாட வேண்டியிருப்பது தான் கொஞ்சம் அசதியை உண்டு பண்ணுகிறது" என்றார்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டார். குளித்து உடை மாற்றிக் கொண்டு தன்னுடைய காமிராவையும் ஜோல்னாப் பையையும் மாட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குக் கிளம்பினார். "மைசூரிலிருந்து போன் செய்கிறேன். நீங்கள் எப்போது ரிலீவ் ஆகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். நான் தான் உங்களின் ரிலீவிங் ஃபங்க்ஷனைக் கவர் பண்ண வேண்டும். எனக்கு இவ்வளவு  தூரம் உதவி செய்திருக்கும் உங்களுக்கு நான் கட்டாயம் செய்தாக வேண்டிய கடமை அது" என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு நடந்தார் கிருஷ்ணன்.

*****
அடுத்த சில நாட்கள், எனக்கு வேலைப்பளு நிறைந்த நாட்களாக அமைந்தன. ஊரை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதால் அலுவலகத்தில் முடிக்க வேண்டிய கட்டாயப் பணிகள் இருந்தன.

"ஐயாவுக்கு மாற்றல் வந்து விட்டாதாமே, இனி வருபவர் உங்களைப் போல இனிமையாகப் பழகுவாரா?" என்று ஐஸ் வைக்க வருபவர்கள் இருந்தார்கள்.

 புதிய கடன் விண்ணப்பம் அளித்து, இன்னும் பரிசீலனை முடியாத நிலையில் இருந்தவர்கள், "எப்படியாவது எங்கள் கடனை மட்டுமாவது நீங்கள் போவதற்குள் ரிலீஸ் செய்து விடுங்கள்" என்று மன்றாடினார்கள்.       

நடையாய் நடந்தும், வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முன் வராத சிலர், படு யோக்கியர்களாய் ஓடோடி வந்து, "கவலைப்  படாதீர்கள். எங்களால் உங்களுக்குக் கெட்ட பெயர் வராது. எப்படியும் நீங்கள் போவதற்குள் பாதித் தொகையையாவது செலுத்தி விடுகிறோம்" என்று உறுதிமொழி கொடுத்தார்கள்.

ஓரளவுக்குப் பழக்கமாகி விட்டிருந்த வாடிக்கையாளர்கள், "சென்னை
போவதற்குள் எங்கள் வீட்டில் ஒருமுறையாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போக  வேண்டும்" என்று வேண்டினார்கள்.

இவ்வளவு களேபரத்திலும், சங்கராச்சாரியார் எப்போது வருகிறார் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ண னிடத்திலிருந்தும் ஒரு தகவலும் இல்லை. ஊரிலிருந்த ஆன்மீகப் பெரியவர்கள் சிலரைக் கேட்ட போது  ஸ்வாமிகள் வரும் தேதி உறுதிப்படவில்லை என்றும், பாத யாத்திரையாக வருவதாலும், அடிக்கடி
ஸ்வாமிகள் தனது பாதையை மாற்றிக் கொண்டு விடுவதாலும் சரியாக என்றைக்கு குல்பர்கா வந்து சேருவார் என்று கூற முடியவில்லை என்றும் பதில் வந்தது.

நல்ல வேளை, குல்பர்கா எல்லையான மஹாகாவ் என்ற ஊருக்கு ஸ்வாமிகள் வருவதற்கு முதல் நாள் எனக்குத் தகவல் வந்து, நானும் சென்று காஞ்சி மகானைத் தரிசனம்  செய்துவிட முடிந்தது என் பாக்கியமே. ஆனால் காஞ்சி மடத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகச்  சொல்லிக் கொண்டிருந்த போட்டோகிராபர் கிருஷ்ணன் மட்டும் திரும்பி வரக் காணோம்!

வேறு யாரிடமும் விசாரிப்பதற்கு வழியில்லை. சரி, தொலையட்டும், நமக்கு என்ன மாமனா, சித்தப்பாவா என்று எண்ணிக் கொண்டேன்.

*******
குல்பர்கா கிளையிலிருந்து நான் விடை பெற வேண்டிய நாளும் வந்தது.
எனக்குப் பதிலாக வர வேண்டிய மேலாளர் உடல் நலமின்றி இருந்ததால், மண்டல மேலாளரின் அனுமதி பெற்று, நான் ரிலீவ் ஆகும் நாள் முடிவு செய்யப்பட்டது.

சக ஊழியர்கள் சம்பிரதாயமான வாழ்த்துரைக்க, எஸ்.கே.சி. எனப்படும் ஸ்வீட், காரம், காப்பி வரவழைக்கப்பட்டு அனைவரது மேசையிலும் தயாராக
வைக்கப்பட்ட நிலையில், திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்தார், கிருஷ்ணன். "அ ஹ்ஹஹ்ஹா" என்று மாயா பஜார் கடோத்கஜன் மாதிரி சிரித்துக்கொண்டே, "சொன்னபடி வந்து விட்டேன் பார்த்தீர்களா?" என்றார்.

அவசரம் அவசரமாகத் தனது காமிராவை எடுத்து ஃபோகஸ் பண்ணிக் கொண்டு, "ஸ்மைல் ப்ளீஸ்" என்று தொழிலை ஆரம்பித்தார். (உள்ளூர் போட்டோகிராபர் ஒருவரை ஏற்கெனவே சக ஊழியர்கள் அழைத்திருந்தனர். கிருஷ்ணனின் கலாட்டாவுக்கு முன்னால்  அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோபமாக வெளியேறினார்).

குரூப் போட்டோ நான்கைந்து எடுத்துத் தள்ளினார். ஒவ்வொரு சக ஊழியருடனும் தனித் தனியாக வேறு எடுத்தார். வங்கியின் எல்லா முக்கிய மூலைகளிலும் என்னை நிற்கச் சொல்லி எடுத்தார். பிறகு மாடியிலிருந்து இறங்கி வந்து, ஜனதா ஓட்டல் வாசலில் நிற்க வைத்து, "இத்தனை நாளும் இங்கு தானே சாப்பிட்டீர்கள் இதை போட்டோ எடுக்க வேண்டாமா?" என்று அதையும் ஒன்று எடுத்தார். ஸ்வீட், காரம், காப்பி சாப்பிடும் காட்சியையும் படம் பிடித்தார். மொத்தம் இருபத்தைந்து படங்களாம். எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறதாம்.

எனக்கு நேரம் குறைவாகவே இருந்தது. இரவு ஏழு மணிக்குள் ரயில் நிலையம் செல்ல வேண்டும். தனி ஒருவன் தான் என்றாலும், ஏற்கெனவே முதல் வகுப்பில் முன் பதிவு செய்துவிட்டேன் என்றாலும், சாமான்களை இன்னும் சரியாக பாக்கிங் செய்ய வேண்டி இருந்தது. உடனே வீட்டுக்குச் சென்றாக வேண்டும். எனவே, கிருஷ்ணனிடம், ஆச்சாரிய  ஸ்வாமிகள் மகாகாவ் வந்த போது  நீங்கள் ஏன் அங்கு இல்லை  என்றோ, அழைப்பிதழ் கொடுக்கிறேன் என்றீர்களே என்னவாயிற்று என்றோ கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. அவரும் சொல்லவில்லை.

"ரொம்ப சந்தோஷம் சார்! உங்கள் பயணம் நல்லபடி அமையட்டும். சென்னையில் வந்து உங்கள் போட்டோக்களை நேரில் தருகிறேன். நான் நாளை ஹைதராபாத் சென்று அங்கிருந்து சென்னை வருகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் சந்திக்கிறேன்" என்று கிருஷ்ணன் விடை பெற்றார். காஞ்சி மடம் பற்றியோ, ஆச்சாரிய ஸ்வாமிகள் பற்றியோ, தான் மைசூர் போன காரியம் பற்றியோ  வாயே திறக்க வில்லை.

"டெவலப்பிங் சார்ஜ் ஐந்நூறு ரூபா ஆகும். உங்கள் அசிஸ்டண்ட் மேனேஜரிடம் வாங்கிக் கொள்ளட்டுமா?' என்றார். அவர், குப்தா, ஓடி வந்து ஐந்நூறு ரூபா கொடுத்தார்.

******
நான் சென்னை வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டன. போட்டோக்கள் வரவில்லை. மேலும் ஒரு வாரம் ஆனா பின் ஒரு நாள் கிருஷ்ணன் வந்தார். "புதிய இடத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.

எனக்குச் சற்றுக் கோபமாகவே இருந்தது. "வாழ்த்துவது இருக்கட்டும், போட்டோக்கள் எங்கே?" என்றேன்.

"போட்டோவா? இன்னுமா வரவில்லை? உங்கள் அசிஸ்டண்ட் மேனேஜரிடம் நானே போய்க் கொடுத்தேனே!" என்றார் சர்வ சாதாரணமாக.

"அதெப்படி? நீங்கள் தான் அடுத்த நாளே சென்னை வருவதாகக் கூறினீர்களே?"

" ஆனால் முடியவில்லை. மூன்றாவது நாள், சரண பசவப்பா  காலேஜில் ஆண்டு விழாவாம். நான் தான் படம் எடுக்க வேண்டும்  என்று மடாதிபதி சொல்லிவிட்டார். மறுக்க முடியவில்லை. அதனால் தான்,   தாமதம் ஆக வேண்டாமே என்று உங்கள் அசிஸ்டண்ட் மேனேஜரிடம் நானே போய்க் கொடுத்தேன்."

எனக்கு அவர் சொல்வதை எப்படி நம்பாமலிருப்பது என்று புரியவில்லை. உடனே குல்பர்கா கிளைக்கு ஒரு டிரங்கால் புக் செய்தேன். அசிஸ்டண்ட் மேனேஜர் குப்தா பத்து நாள் லீவாம். வேறு யாருக்கும் போட்டோ பற்றிய விவரம் தெரிய வில்லை.

அவ்வளவு தான் குதி குதி என்று குதித்தார் கிருஷ்ணன். "அவனைப் பார்க்கும்போதே சுறுசுறுப்பு இல்லாதவனாக  இருக்கிறானே இவனிடம் கொடுக்கிறோமே என்று எனக்குத் தோன்றியது. சரியாகப் போயிற்று. ஒரு வாரம் பொறுங்கள். வரவில்லை என்றால் நானே நேரில் போய் அவனை ஒரு பிடி பிடிக்கிறேன்" என்றார்.

குழப்பமாக இருந்தது எனக்கு. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாறுவதும், இம்மாதிரி பிரியாவிடை போட்டோக்கள் எடுத்துக் கொள்ளுவதும் வங்கி மேலாளர்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எனவே, போட்டோ தாமதமாக வருவதால் ஒன்றும் தலை முழுகி விடப் போவதில்லை. "ஆகட்டும். உங்கள் உள்ளூர் போன் நம்பர் கொடுங்கள்" என்றேன். கொடுத்தார்.

போகும் போது "அவனைச் சும்மா விடாதீர்கள். என் பெயரைக் கெடுத்து விடப் போகிறான்" என்று தீர்மானமாகச் சொல்லிக் கொண்டே போனார்.

*****
சுமார் பதினைந்து நாள் கழித்து குல்பர்காவிலிருந்து போன் வந்தது.
குப்தா தான் பேசினார். "வணக்கம் சார். செட்டிலாகி விட்டீர்களா?" என்றார்.

"நன்றி குப்தா. ஃபேர்வெல் போட்டோக்கள் அனுப்பவே இல்லையே நீங்கள்" என்றேன்.

"என்னது, போட்டோவா? நீங்கள் போய் மூன்றாவது நாள்  சரண பசவப்பா காலேஜில் அவரைப் பார்த்தேனே! அங்கும் அவர் தான் போடோகிராபர். ஆனால் என்னிடம் ஒன்றும் தரவில்லையே" என்றார். அவர் குரலில் அதிர்ச்சி இருந்தது.

எனக்கு ஏதோ நெருடியது. "தயவு செய்து கல்லூரியில் போய்  அவரைப் பற்றி விசாரியுங்கள்" என்றேன்.

******
குப்தா அடுத்த நாள் பேசினார். கல்லூரி ஆண்டு விழாவில்  கிட்டத்தட்ட இருநூறு போட்டோக்கள் எடுத்தாராம். அட்வான்சாக மூவாயிரம் ரூபாய் வங்கிக் கொண்டாராம். இன்னும் போட்டோக்கள் தரவில்லையாம். மாணவர்களும் பெற்றோர்களும் தினம் வந்து கூச்சல் போடுகிறார்களாம். கிருஷ்ணனைப் பற்றிய தகவல் ஏதும் உண்டா என்று குப்தாவுக்கு மூன்று போன்கள் வந்து விட்டதாம். போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்களாம்.

******
சில வாரங்கள் கழித்து 'தினமணி' யில் ஒரு செய்தி வந்தது.  'மடத்தின் பெயரைப் பயன்படுத்தி, யாரோ சிலர் தங்களை ஆஸ்தான போடோகிராபர்கள் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும், ஆஸ்திகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும்' காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ஒரு தகவல் இருந்தது.

******
"குல்பர்காவில் இருந்தீர்களே, கடைசி நாளில் போட்டோ எடுக்கவில்லையா?" என்று மனைவி கேட்டார். "அருமையாக வந்திருந்ததாம். மொத்த போட்டோவையும் எனக்கே அனுப்பி விட்டார்களாம். துரதிர்ஷ்டமாக அது தபாலில் எங்கோ தவறி விட்டதாம்" என்று சமாளித்தேன்.

நல்ல வேளை, தபாலில் தவறி விட்டது என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று அவள் கேட்கவில்லை.  
****** 
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக