ஞாயிறு, மார்ச் 10, 2013

மறக்க முடியாத மஞ்சு - 1


பெராமஸ் மால் மின்விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.  சனிக்கிழமை என்பதாலும், பல நாள் குளிருக்குப் பிறகு அன்று தான் சுளீரென்று வெயில் அடித்ததாலும் நியூ ஜெர்சி மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருந்தார்கள். மாலில் நல்ல கூட்டம்.

 தரைத் தளத்தில் வண்ண விளக்குகளும் மெல்லிசையுமாக  'கெரூசல்'
குழந்தைகளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. நம்ம ஊர் ரங்க ராட்டினம் தான். வட்டமான இரண்டு வரிசைகளில் தலா பத்துக் குதிரைகள். இருபது குழந்தைகள் ஒரே சமயம் அமரலாம். பெரியவர்கள் குழந்தையைப் பிடித்துக் கொண்டு நிற்கவும் வசதி இருந்தது. எல்லா நாட்டுக் குழந்தைகளையும் அங்கே பார்க்க முடிந்தது.

வினயனுக்கு கெரூசலில் சுற்றிவரும் குதிரைகளைப் பார்ப்பதை விடவும், மேற்கூரையில் இருந்த கண்ணாடியில் அதன் பிம்பம் சுற்றுவதைத் தான் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குத் தெரிந்து அப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குழந்தை, அங்கிருந்த சுமார் ஐம்பது பேரில் அவன் ஒருவனே.
 
ஆளுக்கு இரண்டு டாலர் டோக்கன். குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு 
நிற்கும் பெரியவர்களும் டோக்கன் வாங்க வேண்டுமாம். 'கார்டன் சிடி பிளாசாவுக்கே போயிருக்கலாம்' என்றாள் ரம்யா. 'அங்கே குழந்தைகளுக்கு மட்டும் தான் டோக்கன்.' அடுத்த முறை போகலாம் என்றார் ஜார்ஜ்.

டோக்கன்படி ஒரு குதிரையில் அமர்ந்தான் வினயன். விழாதபடிக்கு  'பெல்ட்டு' போடப்பட்டது. இரு பக்கத்திலும் அவனை யொத்த இரண்டு வயது நிரம்பாத குழந்தைகள் தான். ஜார்ஜ் நின்று கொண்டு அவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

 வினயன் அப்போதும் மேல் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான். கெரூசல் வேகம் பிடித்துச் சுற்ற ஆரம்பித்தது.

நாங்கள் கெரூசலுக்கு சற்றுத் தள்ளி நின்றபடி கை அசைத்து 
அவனை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தோம். மலர்ந்த முகத்தோடு 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று தன் அருகில் அப்பா தான் நிற்கிறார், அம்மா இல்லை என்று புரிந்த மாதிரி அழ ஆரம்பித்து 
விட்டான். இன்னும் மூன்று சுற்றுக்ளே இருக்கும் போது ஓவென்று அழுகை பீறிட்டது. கெரூசல் நிற்கும் வரை ஓயவில்லை.

ஓடிச் சென்று ரம்யா அவனைத் தாங்கிக் கொண்ட பிறகே நிதானமானான். இத்தனைக்கும் அவனுக்கு ஏற்கெனவே கெரூசல் பழக்கமான ஒன்று தான். ஏன் அப்படி அழுதான் என்று புரியவில்லை. Separation Anxiety என்றாள். அம்மா தன்னை விட்டுச்  சற்று நேரம் விலகி இருந்தாலும் தன்னை விட்டு விட்டுப் போய் விட்டாளோ என்று குழந்தை பயப்ப்படுமாம். 'இரண்டு வயதுக் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கலாம்' என்ற புத்தகத்தில் படித்ததாகச் சொன்னாள்.

வழக்கமான முயற்சிகளுக்குப் பிறகு அவனைச் சமாதானப் படுத்தி அருகிலிருந்த பல கடைகளில் நுழைந்தோம். எல்லாம் வெறும் 'பார்வை ஷாப்பிங்' தான். கடைசியாக ஒரு விளையாட்டு பொம்மைகள் கடையில் அவனுக்கு மிகவும் பிடித்த மஞ்சள் நிற 'ஸ்கூல் பஸ்' சை எடுத்துக் கொண்டான். பஸ்சை விடவும் அதன் நான்கு சக்கரங்கள் தான் அவனுக்கு அதிகம் பிடித்தது. அவற்றைத்  தன் வாயருகே வைத்து ஆனந்தமாகக் கூச்சலிட  ஆரம்பித்தான்.

Wheels on the Bus go Round and Round 
All through the Town 

என்ற நர்சரி ரைம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதை டி.வி.டி.யிலும் லேப்டாப்பிலும் நாள் முழுதும் கேட்டாலும் அவனுக்குத் திகட்டாது. அதில் வரும் ஸ்கூல் பஸ் தான் இப்போது அவன் கையில் இருப்பது. ஆகவே அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம்.

அதிலும் Wheels on the Bus go Round and Round, All through the.." என்று ராகமாகப் பாடி நிறுத்தினால் உடனே அவன் பெருத்த குரலில் " Town" என்று முடிப்பான். இன்று புதிதாக வாங்கிய பஸ் வேறு கையில் இருந்ததால், நாங்கள் எத்தனை முறை இந்த உத்தியைக் கடைப்பிடித்தாலும் அயராமல் "Town" என்று திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
 
நேரமாகிவிட்ட படியால், அங்கிருந்த 'பஞ்செராஸ்' என்ற மெக்சிக்கன் 
ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடலாம் என்று நுழைந்தோம். கூட்டம் இல்லை. 
ரம்யாவும் ஜார்ஜும் ஆளுக்கொரு 'கசாடியா'வும், நானும் விஜியும் தலா ஒரு 'பரீட்டோ'வும் வாங்கினோம்.

'டார்ட்டியா' எனப்படும் மக்காச் சோள மாவினால் செய்த பெரிய
சப்பாத்தியின் மீது  நம்ம ஊர்  வெஜிட்டபிள்  பிரியாணியையும், ராஜ்மா 
எனப்படும் பெரிய காராமணியையும் பரப்பி, சப்பாத்தியைச் 
சுருட்டி மேலும் கீழும் மூடி, ஒரு தரம் சூடான வாணலியின் மேல் வைத்து அழுத்தி, 'சல்சா' எனப்படும் ஒரு வகைக் கார சட்டினியுடன் தரப்படுவது தான் பரீட்டோ (Burrito). மேற்படியில், சுருட்டப்படும் முன்பு சீஸ் போட்டு சப்பாத்தியை இரண்டாக மடித்து, சூடுபடுத்தி, பிறகு நான்கு கூறுகளாகத் 
தந்தால் அது கசாடியா (Quesadilla). 

(சரியான விளக்கமா என்று தெரியவில்லை).

பரீட்டோவிலிருந்த ராஜ்மாவை ஒவ்வொன்றாக வாயிலிட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான் வினயன். ஒரு வழியாக உணவை முடித்து எழுந்திருக்கும் 
போது தான் எதிர்ப் பக்கமிருந்த மேஜையில் இவனையொத்த வயதுள்ள ஒரு இந்தியக் குழந்தை (பெண்) இருப்பதைக் கவனித்தோம். உண்மையில், மாலில் நுழையும் போதே எங்களைக் கடந்து போகையில் தெரிந்த மாதிரி ஒரு புன்னகையோடு போனவர் தான் அந்தக் குழந்தையின் தாய். இளம் வயது. கணவருடன் வந்திருந்தார்.

பெங்களூரைச் சேர்ந்தவராம்.கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவில் பணியாற்றுகிறார்களாம். நியூ ஜெர்சி வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறதாம். குழந்தைக்கு வினயனை விட ஒரு மாதம் தான் அதிகமாம்.

அவள் கையில் ஒரு மென் பொம்மையை  வைத்திருந்தாள். வினயனுக்கு 
மெத்து மெத்தென்று இருக்கும் பொம்மைகள் கொஞ்சமும் பிடிக்காது.
வீட்டில் அப்படிப்பட்ட பொம்மைகள் ஏராளமாக மூலைகளில்  கிடக்கும். சீண்டவே மாட்டான். ஆனால் இன்று என்னவாயிற்றோ தெரியவில்லை, அவளிடம் இருக்கும் பொம்மை தான் வேண்டும் என்று பாய்ந்து பிடுங்கிக் கொண்டான். அதே சமயம் தன்னுடைய ஸ்கூல் பஸ்சையும் விடாமல் பிடித்துக் கொண்டான்.

அவளும் குழந்தை தானே! விடமாட்டேன் என்று பதிலுக்குப் பிடுங்கினாள். அழ ஆரம்பித்து விடுவாள் போல இருந்தது. 

ரம்யா உடனே புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தாள். அவனுடைய ஸ்கூல் பஸ்ஸைப் பிடுங்கி வேகமாக அந்தப் பெண்ணிடம் தந்தாள். அவ்வளவு தான், வினயன் அவளுடைய மென் பொம்மையை இந்தா என்று திருப்பிக் கொடுத்து விட்டுத் தன்னுடைய பஸ்ஸைப் பிடுங்கி வைத்துக் கொண்டு இழந்ததைப் பிடித்த பெருமிதத்துடன் புன்னகைத்தான். எங்கள் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

அப்போது தான் அந்தப் பெண் குழந்தையை  உற்று நோக்கினேன். வினயனைப் போல்  கம்பீரமாக  இல்லாவிடினும் உயரமாகத் தான் இருந்தாள். மெலிந்த 
தேகம். யாரோ மாதிரி இருக்கிறாளே இவள்  என்று பொறி தட்டியது. மூளையைக் கசக்கினேன்.

ஆம், இவள் மஞ்சுவைப் போலவே இருக்கிறாள்!

மஞ்சு, நான் 2006இல் பஹ்ரைன் போயிருந்த போது மனாமாவில் சந்தித்த குழந்தை. மறக்க முடியாதவள்.

(ஏன் மறக்க முடியாதவள் என்பதை நாளை சொல்கிறேன்).
*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக