அன்று காலை வழக்கம் போல் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். அரை கிலோமீட்டர் நடந்து போய் மணியக்காரர் வயலில் காலை
கடன்களைக் கழித்து விட்டு, புங்கங்குச்சியில் பல்துலக்கி,
அண்ணாமலையின் பம்ப்பு செட்டில் சுடச்சுட பொங்கிவரும்
நீர்வீழ்ச்சியில் ஆசை தீரும் வரை குளித்து விட்டு ஈர வேட்டியோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
என் வீட்டு வாசலில் ஒரு ஜீப்.சுமார் ஐம்பதுக்குமேல் மதிக்கத் தக்க ஒருவர் இறங்கினார். அவருடைய சட்டையும் வேட்டியும் முகபாவமும் பார்த்தால் ஆசிரியர் போலத் தோன்றியது. "வணக்கம், என் பேர் ரவீந்திரன்" என்றார். வணக்கம் சொன்னேன்.
கதவைத் திறந்தேன். நாற்காலியில் அமர்ந்தார். (இருந்த ஒரே). நான் ஈர வேட்டியை மாற்றிக்கொண்டு நின்றேன். டிரைவர் இரண்டு
பெட்டிகளை உள்ளே வைத்தார். "வரட்டுங்களா?" ஜீப் கிளம்பியது.
"ஹெச்.எம். சாரை பார்த்துவிட்டு தான் வருகிறேன். உங்களோடு தங்கிக் கொள்ளலாம் என்றார். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே" என்று சாதாரணமாகக் கேட்டார். எனக்குக் கோபம் வந்தது. (சில நேரங்களில் வரும்). இவர் யாரென்றே தெரியாது, இப்படி உரிமை எடுத்துக் கொண்டு பேசுகிறார்!
"நான் வந்தவாசியிலிருந்து வருகிறேன். எனக்கு சொரகொளத்தூர் பள்ளிக்கு மாற்றலாகி இருக்கிறது. இன்று நல்ல நாள். அது தான் வந்தேன். உங்களோடு தான் இருக்கப் போகிறேன். சனிக்கிழமை விடுமுறை யானால், வெள்ளி இரவே போய் திங்கள் காலை தான் வருவேன். ஒரே நாள் விடுமுறை என்றாலும் ஊருக்குப் போயாக வேண்டும். நஞ்சை ஏழு ஏக்கர். நெல் மட்டும் தான் எப்போதும். பாலாற்றுப் பாசனம். தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அரை ஏக்கரில் காய்கறிகள்" என்றார்.
வசதியான விவசாயி. அத்துடன் ஆசிரியத் தொழில் வேறு. ஏன் இந்த சொரகொளத்தூருக்கு வர வேண்டும்?
"எல்லாம் இந்த ஆட்சி மாறியதால் வந்த வினை. உள்ளூர் பள்ளியில் தான் எட்டு வருஷமாக இருந்தேன். நிலமும் நன்கு விளைகிறதா? எல்லாருக்கும் பொறாமை. கடந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக வேலை செய்தேன் என்று மொட்டைக் கடிதம் எழுதி ஒருவன் என் இடத்துக்கு வந்து விட்டான். அவனும் என் சொந்தக்காரன் தான். மந்திரி வரை போய் முயற்சித்தும் ஒன்றும் முடியவில்லை. அதான் வந்து விட்டேன். இன்னும் முயற்சியைக் கைவிடவில்லை. எப்படியும் மூன்று மாதத்தில் மீண்டும் வந்தவாசிக்கே போய்விடுவேன். அதுவரை உங்களோடு தான்" என்றவர், "என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. ஆனால் ஒரு கண்டிஷன். நான் தான் சமைப்பேன். சமையல் பத்திரங்களையும் நான் தான் கழுவுவேன் " என்று அடுப்படியை நோக்கினார்.
அதை விட வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்? நானே சமைத்து நானே சாப்பிடுவது எவ்வளவு கொடுமையான விஷயம்? வந்ததிலிருந்து சோறும் தக்காளி ரசமும் தானே சமைக்கிறேன்!கடவுளே, உனக்கு நன்றி.
"ரொம்ப நல்லதாகப் போயிற்று சார். ஆனால் நாகராஜன் சார் இதை முன்னாடியே சொல்லாதது ஏன்?"
"அவருக்கே நேற்று இரவு தானே தெரியும்! அவர் வீட்டில் தங்கிவிட்டுத் தானே வருகிறேன். அவருடைய தம்பி ஜீப் தான் அது" என்றார் ரவீந்திரன்.
பொழுது நன்றாகப் புலர்ந்துவிட்டிருந்தது. "எனக்கு பம்ப்பு செட்டில் தான் குளித்து பழக்கம்" என்றார். வழி காட்டினேன். முக்கால் மணியில் திரும்பினார், பாதி உலர்ந்தும் உலராத ஈர வேட்டி,
மேலாடையுடன். சில மந்திரங்களை உச்சரித்தார். "நாங்கள் நயினார்கள். சமணர்கள். சாமி கும்பிடாமல் காப்பி கூட தொட
மாட்டேன்" என்றார்.
அடுத்த முக்கால் மணியில் அருமையான சாப்பாடு தயார். நல்ல அனுபவசாலி.கத்தரிக்காய் குழம்பு, தக்காளி ரசம். எண்ணிவிடலாம் போல மணிமணியாக சோறு. அவரே கொண்டு வந்திருந்த எலுமிச்சை ஊறுகாய். தயிர் மட்டும் என்னுடையது.
பல நாட்களுக்குப் பிறகு வாய்க்கு ருசியாக ஒரு சாப்பாடு. மூன்று மாதத்தில் போய்விடுவேன் என்கிறாரே என்று வருத்தமாக இருந்தது.
பாதி சாப்பாட்டின்போது குமரன் சார் வந்தார். "நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்களேன்" என்றேன். "இவரும் நம்ம ஸ்கூல் தான்" என்று அறிமுகப்படுத்தினேன். "வணக்கம். வாங்க, சாப்பிடுங்க" என்றார் ரவீந்திரன். குமரனுக்கும் ஒரே ஆனந்தம். "எப்படி சார் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு சுவையாக சமைத்தீர்கள்?" என்று வியந்தார். ரவீந்திரன் தன் கதைச்சுருக்கம் சொன்னார்.
எட்டேகால் மணிக்கு மூவரும் பள்ளியை அடைந்தோம்.
ரவீந்திரன் வருகையால் எனக்கு எந்த பணிச்சுமையும்
குறையவில்லை. ஏனென்றால் அவர் பட்டதாரி ஆசிரியர் இல்லை. தலைமை ஆசிரியருக்கோ சிக்கல். ஏனெனில் ரவீந்திரன் ஒரு 'எக்ஸ்ட்ரா ஹேண்ட்.' அவருக்கு என்ன வகுப்பு கொடுப்பது என்று தெரியவில்லை. "நீங்கள் ஒரு வாரம் வைத்தி சாருக்கு உதவியாக இருங்கள். பிறகு கிளாஸ் அலோகேஷன் பண்ணலாம்" என்றார்.
வைத்தி சாரும் அதே படிப்புள்ளவர் தான். ஆனால் ரைட்டர் வேலையில் தான் எப்போதும் ஈடுபடுத்தப்படுவார். வெற்றிகரமான
விவசாயியும் கூட. ஆபீஸ் விதிகள், ஹௌஸிங்க் லோன், அரியர்ஸ் கிளெய்ம் பண்ணுவது, டி.ஈ.ஓ விசிட்டின் போது என்னென்ன ரெஜிஸ்டர்கள் தயாராக இருக்கவேண்டும் போன்ற
விஷயங்களில் வைத்தி சார் தான் அத்தாரிடி. லீவ் அப்ளிகேஷன்
அனுப்பாமல் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு 'டும்மா' போடும்
நாட்களில் திடீரென்று மேலதிகாரிகள் வந்து விட்டால் எப்படி சமாளிப்பது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். ஆகவே சொரகொளத்தூரைப் பொறுத்த வரை வைத்தி சாரை யாரும் பகைத்துக்கொள்ள முடியாது.
ஆனால், ரவீந்திரனின் துரதிர்ஷ்டம் முதல் பார்வையிலேயே
வைத்தி சாருக்கு அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. "எனக்கு யாரும் உதவியாளர் தேவையில்லை" என்று நாகராஜனிடம் தீர்மானமாகக் கூறினார். நாகராஜன் சமாதானமாக "வெறும் மூன்று மாதங்கள் தான் இருப்பார் போலத் தோன்றுகிறது. அடிக்கடி லீவு எடுப்பாராம். அதனால் சொன்னேன்" என்றார். "ஷார்ட் டைம் போஸ்டிங்கா? அப்படியானால் சரி" என்று வைத்தி பெரிய மனது பண்ணி ஒப்புக்கொண்டார். ரவீந்திரனை நோக்கி "இங்கே உட்காரலாம். ஒரு கால் கொஞ்சம் ஆடும். அதனால் தான் செங்கல் வைத்திருக்கிறது" என்று தன் அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினார்.
****
அன்று எனக்கு ஏராளமான வேலை. முந்தைய நாள் டெஸ்ட் பேப்பர் திருத்த வேண்டியிருந்தது. 9ஆம் வகுப்பு காம்போசிஷன் நோட்டுகள் வேறு. அடுத்த நாள் மூன்று வகுப்புகளில் டெஸ்ட் நடத்த வேண்டும். கேள்வித்தாள் தயாரிக்க வேண்டும். தலைமை ஆசிரியருக்கென்று குறிக்கப்பட்ட, ஆனால் அவர் எப்போதுமே
எடுக்காத, ஆங்கிலக் கவிதை பீரியட் 11 ஆம் வகுப்பிற்கு இருந்தது. அதற்கு சில குறிப்புகள் தயாரிக்க வேண்டும். நேரம் போனதே தெரியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது.
தலைமை ஆசிரியர் தவிர மற்றவர்கள் எல்லாருமே உள்ளூர் தான் என்பதால் யாரும் கடிகாரம் பார்ப்பதில்லை. மேலும், அந்த கிராமத்தில் சீக்கிரமாக வீடு போனால் வேறு பொழுதுபோக்குகள் இல்லையே! எனவே ஆறு மணிக்கு முன்பாக நாங்கள் பள்ளியை விட்டு வெளியேறியதில்லை.
அருகிலிருந்த தேநீர்க் கடையிலிருந்து சட்டையில்லாமல் ஒரு பையன் வந்தான். தேநீர் அற்புதமாக இருந்தது. அப்போது குமரன் வேகமாக வந்தார்."எனக்கும் ஒன்று " என்றார். பையன் ஓடினான். அவன் வருவதற்குள் அவசரமாக, "நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
"ரவீந்திரன் சார் நன்றாக சமைக்கிறார் இல்லையா? நானும் உங்களோடு தங்கி விடட்டுமா?" என்றார்."ஹெட்மாஸ்டரிடமும் சொல்லி விட்டேன்".
ஏதேது, இளிச்சவாயன் என்று என் முகத்தில் எழுதியிருக்கிறதோ? ஆளாளுக்கு என்பேரில் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்! என் வீட்டில் யார் தங்குவது என்று முடிவு செய்வதற்கு
ஹெட்மாஸ்டருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதை மேலும் வளரவிடக்கூடாது என்று கோபமாக நாகராஜன் அறைக்குள் நுழைந்தேன்.
(தொடரும்)
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-2
விதி யாரை விட்டது-3
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
சுவாரசியமாகச் செல்கிறது.தொடர்க!
பதிலளிநீக்குஊக்கமூட்டியமைக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்.
பதிலளிநீக்கு