நாளை என்பதை யாரறிவார்?
நன்மை என்பதை யாரறிவார்?
வாழ்க்கை என்பதை யாரறிவார்?
வாழ்ந்து பார்ப்போம், வா தோழா!
நேற்றும் முன்னும் நடந்ததெல்லாம்
நெஞ்சின் அறையில் தூங்கட்டும்!
நேரம் ஒன்றே நம்சொத்தாய்
நினைத்தே இன்று நடப்போம் வா!
ஒவ்வொரு நாளும் உன் கண்ணில்
உதிக்கும் கனவோ ஏராளம்!
இன்றதை விட்டால் நனவாக்க
இன்னொரு நாளும் கிடைத்திடுமா?
காலை விடிந்ததும் சூரியனும்
காகம் சேவல் பறவைகளும்
ஆலய மணியின் ஓசையதும்
அன்பாய் அழைப்ப(து) உனையன்றோ?
ஞாயிறு வந்தால் விடுமுறையும்
நலமிழந்தாலே விடுமுறையும்
ஊர்சுற்றிடவே விடுமுறையும்
உனக்கே எத்தனை விடுமுறைகள்!
கழனியில் இட்ட விதையாலே
கனிவரும் என்றே எதிர்பார்ப்பாய்!
உன்னை யிட்டவர் உன்னிடத்தில்
உழைப்பைக் கேட்டால் தவறாமோ?
அடுத்தவர் வகுத்த பாதையிலே
அன்றாடம்தான் நடக்கின்றோம்
நமக்கும் இளையவர் நடப்பதற்கே
நாமொரு பாதை இடுவோம், வா!
- கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com