சனி, மார்ச் 16, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 3


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2


'குமரன், குமரன்' என்று கூப்பிட முயல்கிறேன். ஆனால் என் குரல் எனக்கே கேட்க  மாட்டேனென்கிறது. கீழே பார்க்கிறேன். இதென்ன, குமரனின் பாய் காலியாக இருக்கிறது! எங்கே போனார்? அச்சத்தால் போர்வைக்குள் கால்களைக் குறுக்கிக் கொள்கிறேன்.

அந்த உருவம் மெல்ல ஓசையில்லாமல் என் தலை மாட்டில் வந்து, 'சார், நான் தான். எழுந்திருங்க' என்று சிணுங்குகிறது. நிச்சயம் மோகினிப் பேய் இல்லை. யாரோ ஒரு பெண் !

தீப்பொறியால் தாக்குண்டவன் போல்  கட்டிலில் இருந்து துள்ளிக்
குதித்தேன். வெளியே ஓடினேன். ஓடிக் கொண்டே இருந்தேன்...


தெரு நாய்கள் ஒன்றிரண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தன. மூச்சு வாங்கியபடி ஏதோ ஒரு வீட்டு வாசலில் நின்றேன். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. கதவைத் திறந்துகொண்டு வந்த ஓர் உருவம் 'யார் அது? என்ன விஷயம்?' என்று முகத்தில் டார்ச் அடித்தது. அவன், அண்ணாமலை. வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும் "அடடே, புது சாரா? என்ன சார், என்ன ஆச்சு?" என்றான்.

புது ஊர். புது வீடு. குமரன் என்ற ஆளைப் பற்றி நல்லவரா
கெட்டவரா என்று கூடத் தெரியாது. அவருடன் தங்கி, இப்படி ஒரு அனுபவம் என்றால் யாராவது நம்புவர்களா? நம்மைப்  பற்றி அவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள்? பள்ளியில் தெரிந்தால் முதல் நாளிலிருந்தே மாணவர்கள் நம்மைப்  பயந்தாங்கொள்ளி என்றல்லவா நையாண்டி செய்வார்கள்?

'சார், நான் தான். எழுந்திருங்க' - மீண்டும் அந்தப் பெண் குரல் போல்  எங்கிருந்தோ கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன் . யாருமில்லை.

'சாரி, அண்ணாமலை. அவசரமாக வெளியில் வந்தேனா, இருட்டில் நாய்கள் துரத்தி வந்து விட்டன. நல்ல வேளை நீ வந்தாய்' என்றேன்.

அண்ணாமலைக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பது இருட்டிலும் தெரிந்தது. புது வாத்தியாருக்கு இரண்டாவது முறையாக உதவும் சந்தர்ப்பம் கிடைத்ததே! 'வாங்க சார், நானே வருகிறேன் உங்கள் வீட்டு வரை' என்று கையோடு என்னைக் குமரன் வீட்டு வாசலில் விட்டு விட்டுப் போனான்.

ஐயோ, கதவைத் திறந்து போட்டுவிட்டுப் போனோமே, அந்த மர்மப் பெண் இன்னும் உள்ளேயே ஒளிந்து கொண்டிருப்பாளோ என்று பயம். கதவு மெல்லத் திறந்தே இருந்தது.  ஸ்விட்சைக் கண்டுபிடித்து மின் விளக்கைப் பொருத்தினேன். வெளிச்சம் வந்ததும்...என்ன ஆச்சரியம்! குமரன் ஏதும் நடவாதது போல்  பாயில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்!
சுற்றுமுற்றும் பார்த்தேன், வேறு யாரும் இல்லை. நிச்சயம் அந்த மோகினிப் பெண் இல்லை!

எனக்கு உறக்கம் போயே விட்டது. குமரன் எப்போது, ஏன் காணாமல் போனார்? பிறகு எப்படித் திரும்பி வந்தார்? வந்தவுடன், என்னைக் காணோமே என்று வெளியே வந்து தேடியிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?

அந்தப் பெண் யார்? ஒருவேளை இவர் அந்த மாதிரி ஆசாமியோ?  அவளுக்கும் இவருக்கும் ஏதாவது 'இது' இருக்குமோ?

ஒன்றும் தோன்றாமல், என்னை இந்த சொரகொளத்தூருக்கு
அனுப்பி வைத்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை நொந்து கொண்டே கட்டிலில் சாய்ந்தேன். எழுந்திருக்கும்போது காலை
மணி எட்டு.

'வணக்கம் சார்!' என்று மலர்ந்த முகத்தோடு குமரன் நின்றார். 'நன்றாகத் தூங்கினீர்களா? ராத்திரி திடீரென்று எழுந்து பார்த்தேன், உங்களைக் காணோமே, சிறுநீர் கழிக்கப் போனீர்களா? நாய்கள் துரத்தி இருக்குமே? ரெண்டு நாள் பழகினால் சரியாகிவிடும்" என்றார். 'சரி, பல் தேய்த்துக் கொள்ளுங்கள். காபி போடுகிறேன்'.

அடப் பாவி! காணாமல் போனது நீயா, நானா?

'ஆமாம், நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை' என்று மட்டும் சொன்னேன். வேறு ஏதும் பேசவில்லை. முன்பின் தெரியாத ஊருக்கு வந்திருக்கிறோம். எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!  முதலில் இன்று மணியகாரரைப் பார்த்து,
வீடு பேச வேண்டும். அதன் பிறகு தான் மற்றதெல்லாம் என்று எண்ணிக் கொண்டேன்.

******

மணியகாரர்  சுமார் அறுபது வயதினர். குமரன் என்னை அறிமுகம் செய்த மறு கணமே, 'என் வீடு ஒன்று காலியாகத் தான் இருக்கிறது. வாடகை இருபது ரூபாய் தான். உங்களுக்குப் பரவாயில்லையா?' என்றார். அவருடைய வீட்டை ஒட்டியிருந்த வீடு. மஞ்சம்புல் வேய்ந்த குடிசை. ஆனால் குமரனின் குடிசையை விட சற்று பெரியதாகவும் கம்பீரமாகவும்  இருந்தது.

அண்ணாமலை எங்கிருந்தோ வந்து சேர்ந்தான். 'டேய், ஓடிப் போய் புது சாருடைய பொருள்களை எல்லாம் நம்ம வீட்டில் கொண்டு வைத்து விடு' என்றார். அடுத்த சில நிமிடங்களில் எனது
 'புதுமனை புகுவிழா' நடந்தேறியது.

குமரன், மணியகாரரிடம் நேற்று இரவு நான் மருத்துவாம்பாடியில் வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த வேடிக்கையை வருணித்துக் கொண்டிருந்தார். அடடா என்று ஆதங்கப்பட்டார்,  பெரியவர். எனது நன்றியை மீண்டும் ஒருமுறை ஏற்றுக் கொண்டு
அண்ணாமலையுடன் கிளம்பினார், குமரன். அவர் போவதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

இரப்பா, இரு. உன் ரகசியத்தைக் கண்டுபிடிக்காமலா போய் விடுவேன்?

ஆனால் ஒன்று. கதவைத் தாளிடாமல் மட்டும் இனி உறங்கப் போவதில்லை. நிச்சயமாக.

(தொடரும்).

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-4


(c)Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக