புதன், ஏப்ரல் 17, 2013

பி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி

தமிழ்ப் புத்தாண்டன்று (14-4-2013) சென்னையில் காலமானார், 82 வயதான பாடகர், திரு பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள்.

திரைப்படத்துறையில் இருப்பவர்களைப் பற்றி அனைவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கும். அதிலும், தமிழ் நாட்டில் டி.எம்.எஸ்., சீர்காழி, பி.பி.எஸ் என்ற மும்மூர்த்திகளைத் தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்த் திரையிசை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டால், இந்த மூவரை விட ஆளுமை நிறைந்த பாடகர்களை நாம் காண்பது அரிது.

மற்ற இருவரும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்துப் பாடகர்களானவர்கள். ஸ்ரீனிவாசோ, தெலுங்கராகப் பிறந்து, கன்னடத்தில் புகழ் பெற்று, அதன் பின் தமிழுக்கு வந்தவர். ஆனால் சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டது மட்டுமல்ல, தமிழுக்கு நிரந்தரமான பாடல்களையும் தந்தவர்.பொதுவாகவே, 82 பிராயம் என்பது எவரையும் அசைய விடாமல் படுக்கையில் அமரவைத்துவிடும் பிராயமே. ஆனால், ஸ்ரீனிவாஸ், கடைசி சில நாட்களைத் தவிர, மற்றபடி நன்றாக நடமாடிக்கொண்டுதான் இருந்தார். சுய கட்டுப்பாடும், எதிர்பார்ப்பின்மையும் முக்கிய காரணங்கள்.

எனக்குத் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கும் கன்னடமும்  நன்கு தெரியும் என்பதாலும், ஹைதராபாதில் 3 வருடங்களும், பெங்களூர்-மங்களூரில் 12 வருடங்களும் வசித்தவன் என்பதாலும், அவருடைய தெலுங்கு, கன்னடப் பாடல்களை நன்கு உணர்ந்து ரசிக்கமுடிந்தது. என்ன தான் கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும் அவர் தமிழில் பாடிய பாடல்களுக்கு இணையில்லை என்பது என் கருத்து. தமிழ் இசையமைப்பாளர்களின் திறமையும், தமிழ் ரசிகர்களின் ரசனையும் முக்கிய  காரணங்களாக இருக்கலாம்.
ஆந்திரப்பிரதேசத்தின் காக்கினாடாவில் பிறந்தவர், ‘பிரதிவாதி பயங்கரம்’ ஸ்ரீனிவாஸ். பாடிய முதல் பாட்டு ஹிந்தியில்.(1953). ஆனால் ராஜ்குமார் நடித்த ‘பக்த கன(க்)கதாசா’ என்ற படத்தில் அவர் பாடிய ‘பாகிலனு தெரது..’   (BAGILANU THERADHU..) என்ற பாடல் தான் அவரை உலகுக்கு எடுத்துக்காட்டிய முதல் வெற்றிப் பாடல். ராஜ்குமார், தமிழ் நாட்டில் பிறந்து, பெங்களூரில் ஐக்கியமானவர். சந்தனக் கடத்தல் வீரப்பனால் தமிழ் நாடெங்கும் பிரபலமானவர். சுயவாழ்வில் ஒழுக்கமும், மனைவிக்கு அடங்கி நடத்தலும், தன் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு உணர்ந்து தன் எல்லைகளை மீறாமல் இருந்ததும் அவரைக் கன்னடத் திரை உலகில் மட்டுமல்ல, கன்னட நாட்டிலேயே செல்வாக்குள்ள மனிதராக நெடு நாட்கள் நிலைக்க வைத்தன.

பல்லாண்டுகள் ராஜ்குமார்-பி.பி.ஸ்ரீனிவாஸ் கூட்டணி நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், ராஜ்குமார் ஒரு கட்டத்தில் தானே பாடவும் ஆரம்பித்து விட்டார். அதற்குப் பெருத்த வரவேற்பும் ஏற்பட்டுவிட்டது. வேறு  வழியில்லாமல் கன்னடத்திலிருந்து ஸ்ரீனிவாஸ் விலக வேண்டியதாயிற்று. ஆனாலும், உதயகுமார், கல்யாண்குமார், விஷ்ணுவர்தன் ஆகியவர்களுக்காக அவர் தொடர்ந்து பாடியிருக்கிறார். அவர் பாடிய சுமார் மூவாயிரம் பாடல்களில் கன்னடம் தான் மிக அதிகம். தமிழில் நூற்றுக்கும் குறைவே (என்கிறார்கள்).

மலையாளத்திலும் அவர் பாடியிருக்கிறார். ஆனால் அவருக்குரிய அதே பெண்மை நிறைந்த குரல் ஜேசுதாசுக்கும் இருந்தபடியால், உள்ளூர்ப் பெண்மைக்கே அவர்கள் வரவேற்புத் தந்தார்கள். தெலுங்கில் ‘கண்டசாலா’ (GANTASAALAA)  இவருக்குப் போட்டியானார். தமிழிலும் இவருக்கு ஏ.எம்.ராஜா போட்டியாக இருந்தார். ஆனால் அவர் இசையமைப்பாளராக உயர்ந்ததும், திடீர் மரணமடைந்ததும், ஸ்ரீனிவாசுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தின. ஜெமினிகணேசனுக்கும் எஸ்.எஸ்.ஆருக்கும் அவருடைய குரல் மிகவும் பொருத்தமாக அமைந்தது. பாசமலரில் வரும் ‘யார் யார் அவள் யாரோ?’ பாடலையும், ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாவமன்னிப்பு பாடலையும் நான் ஆறாவது, ஏழாவது வகுப்புகளில் இருந்தபோது கேட்டேன். அந்த இனிமையை இன்றும் மறக்க முடியுமா?

ஜெமினிகணேசனுக்காக அவர் பாடிய பாடல்கள் தான் எண்ணிக்கையில் அதிகமானவை. காதலின் இனிமையும், தாய்மையின் பரவசமும், பிரிவின் கலக்கமும் அவர் குரலின் குழைவில் என்னமாய் வந்து நடம் புரியும்! எதை உதாரணமாகக் காட்டுவது, எதை விடுவது?

-‘நிலவே என்னிடம் நெருங்காதே’
-‘கண்ணானால் நான் இமையாவேன்’
-‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்’
-‘வளர்ந்த கலை மறந்துவிட்டாள்..’
-‘காற்று வெளியினில் கண்ணம்மா’
-‘சின்னச் சின்ன கண்ணிலே’

பாலாஜிக்காக அவர் பாடிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னுடைய பிரியமான பாடல்களில் ஒன்று.
முத்துராமனுக்காக நிறைய பாடியிருக்கிறார். (‘போகப் போகத் தெரியும்’).

வீரத்திருமகன் படத்தில் ஆனந்தனுக்காக அவர் பாடிய ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடல் தான் என் இரண்டு வயதுக் குழந்தையாயிருந்த அரவிந்த கார்த்திக்கிற்குத் தாலாட்டுப் பாடலாக இருந்தது. ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ யும் தமிழ்நாட்டில் பிரபலமான பாடல்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக அவர் பாடிய ‘பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்’ பாடலை எத்தனை முறை வேண்டுமானலும் கேட்டு ரசிக்கலாம். (படம்: ‘மணப்பந்தல்’).

எம்.ஜி.ஆருக்காகவும் சில படங்களில் அவர் பாடியிருக்கிரார். முக்கியமாக ‘பாசம்’ என்ற படம். (‘பால் வண்ணம் பருவம் கண்டு..’). இன்னொரு பிரபலமான பாடல்: ‘என்னருகே நீ இருந்தால்’ (‘திருடாதே’).
சிவாஜிகணேசனுக்காக அவர் ஏதும் பாடியிருப்பதாக நினைவில்லை. (மன்னிக்கவும், பெருமைப்படத் தக்க நினைவாற்றல் எனக்கு இருப்பதாக நம்புவதற்கில்லை).  சிவாஜியின் உதட்டு அசைவுக்கோ, உச்சரிப்புத் திறனுக்கோ சற்றும் பொருத்தமில்லாத குரலில் கண்ட்டசாலாவும், சிதம்பரம் ஜெயராமனும் அவருக்காகப் பாடியிருப்பதை இப்போது கேட்டாலும் சிரிப்பு வருகிறது. (பாவம், அந்தக் கால ரசிகர்கள்!). ஸ்ரீனிவாஸ் அவர்களை விட எவ்வளவோ மேலாகப் பாடியிருக்க முடியும். என்ன செய்வது, அதற்குள் டி.எம்.எஸ் என்ற ராட்சஸன் வந்துவிட்டாரே!

ஆனாலும், சிவாஜியும் பாலாஜியும் நடித்த ‘படித்தால் மட்டும் போதுமா’வில் டி.எம்.எஸ்.சும் இவரும் சேர்ந்து பாடிய ‘பொன் ஒன்று கண்டேன்’ பாடலை என்றாவது மறக்கமுடியுமா?

இனி, எனக்கும் திரு ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் இருந்த தொடர்பு பற்றிச் சொல்லிவிடுகிறேன்:

1988ல் சென்னை இந்திரா நகரில் கார்ப்பரேஷன் வங்கியின்  மேலாளராக இருந்தேன். அப்போது ஒரு நாள் திடீரென்று மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய்  நிறுவனம் ஒன்றிலிருந்து அதன் மக்கள் தொடர்பாளர் பேசினார். மாலை நான்கு மணிக்கு அண்ணாசாலையில் அவர்கள் அலுவலகத்தில் ‘இந்திய ஒருமைப்பாட்டு நாள்’ கொண்டாடு கிறார்களாம். அதன் தொடர்பாக ஒரு கவியரங்கம் வைக்க வேண்டுமாம். இப்போது தான் அவர்களின் தலைவர் உத்தரவிட்டாராம். ஆறு மொழிகள் சார்பாகக் கவிஞர்கள் கிடைத்து விட்டார்களாம். (எல்லாரும் அவர்கள் அலுவலகத்திலிருந்தே). தமிழுக்காக நான் வர முடியுமா என்றார். சென்னைத் தொலைக்காட்சியின் உயர் அதிகாரி ஒருவர் என்னைப் பரிந்துரைத்தாராம். சரி யென்றேன்.
வழக்கம் போல, நான் தான் முதல் ஆளாக இருந்தேன். ராஜ கம்பீரமான நீண்ட அறை. Board Room என்றால் சும்மாவா? மையமாகக்  குளிர்பதனம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் கிடைக்காத அற்புதமானதொரு மரத்தில் செய்யப்பட்டிருந்த, இருபது பேர் சுற்றி அமரத்தக்க,  முட்டை வடிவ பெரிய மேஜை. (மரத்தில் முகம் பார்க்கலாம்).  சீருடை அணிந்த சேவகர் வந்து வணக்கம் சொல்லி, மின்விளக்குகளை எரிய விட்டார். அழகிய மென்னுயரமான கண்ணாடி தம்ளர்களில் குடினீர் வைத்தார்.

சற்று நேரத்தில் அங்கே வந்தவர், நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத திரு பி.பி.எஸ். அவர்கள் தான்!
என்னை முந்திக்கொண்டு வணக்கம் சொன்னார். ‘நான் பி.பி.எஸ்.’ என்றார். அடுத்த நாற்காலியில் அமர்ந்தார். “ஒரு ரசிகனாக உங்களை எத்தனையோ வருடங்களாக அறிவேன். இப்போது தான் பக்கத்திலிருந்து பார்க்கிறேன்” என்றேன். பார்த்தேன். அவரை விட்டு என்றும் பிரியாத (பட்டினாலான) மஞ்சள் தொப்பி. அப்போதைய சென்னையின் வெப்ப நிலைக்குத் தேவையில்லாத,  மைசூர் சால்வை. பைஜாமாவும் வெண்பட்டுச் சட்டையும் அணிந்திருந்தார் என்று ஞாபகம்.

அமர்ந்தவுடன், தோளிலிருந்த  ஜோல்னாப் பையிலிருந்து ஒரு லெட்டர்பேடு எடுத்து, ஏதோ எழுத ஆரம்பித்து விட்டார். எனவே நான் ஏதும் பேசி அவரின் சிந்தனையைத் திசை திருப்பிவிட முயற்சிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து “நீங்கள் தான் கவியரங்கத் தலைவாரா?” என்று கேட்டார். இல்லை யென்றேன். அவர் தான் தலைவராக இருக்கக்கூடுமென்று நான் நினைத்திருந்தேன். வேறு யாராக இருக்கக்கூடுமென்று தெரியவில்லை.
“நீங்கள் தலைவராக இருக்கும் பட்சத்தில் உங்களைப் பற்றி ஒரு அறிமுகக் கவிதை எழுதலாமென்று தான் கேட்டேன்” என்றார். எவ்வளவு எளிமை!  எனக்குப் புற நானூறு நினைவுக்கு வந்தது. ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’. எனினும் என்னைப் பற்றித் தெரிவித்தேன். ‘அடிக்கடி இந்திரா நகர் வருவேன். அடுத்தமுறை உங்களை அலுவலகத்தில் சந்திக்கிறேன்’ என்றார். (அப்படியொரு வாய்ப்பு நேரவில்லை).

‘என்ன மொழியில் நீங்கள் கவிதை படிப்பீர்கள்?’ என்றார். ‘தமிழுக்காக என்று தான் என்னை வரச் சொன்னார்கள்’ என்றேன். ‘என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பரவாயில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலயாளம், ஆங்கிலம் என்று எந்த மொழியில் வேண்டுமானலும் என்னிடம் கவிதை தயாராயிருக்கிறது’ என்று பையிலிருந்து சிறிய ஆனால் கனமான டயரியைக் காட்டினார். ‘ஆனால், நான் எப்போதும் அந்தந்த இடத்திலேயே புதிதாக  எழுதிப் படிப்பது தான் வழக்கம்’ என்றார்.
அதற்குள், அந்த மத்திய அரசு நிறுவனத்தின் மண்டல மேலாளர் வந்துவிட்டார், துணை அதிகாரிகள் புடைசூழ. அவரே ஒரு கவிஞராம். அவர் தான் தலைமை தாங்குபவராம். ஆங்கிலத்தில் சுருக்கமாக தேசிய ஒருமைப்பட்டு நாளின் சிறப்பைக் கூறிவிட்டு, அவர் ஹிந்தியில் கவிதை படித்தார். என்னையும் ஸ்ரீனிவாஸ் அவர்களையும் தவிர்த்து மற்றவர்கள், அதே நிறுவனத்தின் இளைய அதிகாரிகள் என்பதால், தலைவரை வருணிக்கும் பாங்கில் பெரும்பகுதியும், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சிறுபகுதியும் அவர்கள் கவிதைகளில் தெரிந்தது. தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, மலையாளம் அங்கே தவழ்ந்த மொழிகள். நான் அந்த நிகழ்ச்சிக்காகவே எழுதியிருந்த கவிதையை வாசித்தேன். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூறினேன்.

ஸ்ரீனிவாஸ் எழுந்தார். தமக்கே உரிய மென் குரலில், தமிழில் ஒன்றும் மலையாளத்தில் ஒன்றுமாகக் கவிதை படித்தார். (தலைவருக்கு இவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பது பரிதாபம்). பின்னர், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம். அதன் பிறகு ஹிந்தியில் ஒரு கவிதை, அங்கேயே எழுதியது, படித்தார். இல்லை, இல்லை, பாடினார். எல்லாவற்றையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் கூறினார். அப்போது தான் தலைவருக்கு இதுபோன்ற குரலை எங்கோ கேட்ட ஞாபகம் வந்ததாம். விசாரித்தார். ‘இவ்வளவு பெரிய கவிஞர்-பாடகரை இன்று தலைமைக் கவிஞராக அல்லவா நீங்கள் போட்டிருக்கவேண்டும்? கூப்பிடு அந்த பி.ஆர்.ஓ.வை’ என்று கூச்சலிட்டார். “நீங்கள் வந்தது எங்களுக்கெல்லம் எவ்வளவு பெருமை” என்று உண்மையாகவே நெகிழ்ந்து பேசினார்.
நிலைமையை உணர்ந்துகொண்ட அதிகாரிகள், ஓடிப்போய், நல்லியிலிருந்து ஓர் உயரிய பொன்னாடையை  வாங்கிவந்து தலைவரிடம் கொடுத்தனர். அதை அவருக்குப் போர்த்திய பிறகு தன்னுடைய அறைக்கு அழைத்துக் கொண்டுபோனார். அங்கிருந்து சில பாடல்களை ஸ்ரீனிவாஸ் பாடியது கேட்டது. (எங்கள் எல்லாருக்கும் கூட  ஆளுக்கொரு சால்வை போர்த்தப்பட்டது ஒரு  இனிப்புப் பொட்டலமும்  கொடுத்தார்கள்).
**
அதே வருடம், டாக்டர் (அமரர்) கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகக் கவிஞர்கள் சங்கம், தனது World Poets Congress  மாநாட்டைக் கலைவாணர் அரங்கில் நடத்தியது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் மந்திரியாக இருந்த நேரம். குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்டராமன் தொடங்கி வைத்தார். உலகெங்கிலுமிருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். அமெரிக்கப் பெண்கவிஞர் ஒருவர், அவ்வருடத்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியிலும் திரு ஸ்ரீனிவாஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் கூட்ட மிகுதியினால் அவர்களோடு தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகும் பல மேடைகளிலும், பிரமுகர்கள் வீட்டுத் திருமணங்களிலும் அவரை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது குரலை நேரில் கேட்கும் வாய்ப்பு மீண்டும்  கிடைக்கவேயில்லை.

இனி எப்போது கிடைக்கும்?
*****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


3 கருத்துகள்:

 1. காலத்தால் அழியாத பாடல்களைத் தன் தேன் குரலில் வழங்கிய பி.பி.ஸ்ரீனிவாசனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 2. இனிமையான பல பாடல்கள் தந்தவர்... பல பாடல்களை பதிவுகளில் இணைத்ததுண்டு... அவரைப் பற்றிய பல தகவலுக்கு நன்றி...

  அவரது ஆதமா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. அரிய அனுபவப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு