சனி, மார்ச் 09, 2013

ஜெயிலுக்குப் போனதுண்டா நீங்கள்?

நான் போயிருக்கிறேன்.


1981 ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினத் திருநாளில் நான் ஜெயிலுக்குப் போனேன். (இது வரை வீட்டில் யாருக்கும் தெரியாது. சொல்லி விடாதீர்கள் ).

குல்பர்காவில் மேலாளராக இருந்த போது ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக இருந்தேன். பொருளாளர் பதவியும் சேர்ந்து கொண்டது. (சில ஆயிரங்கள் கூடப் புரளாத பதவி அது. உறுப்பினர் தொகை அதிகமில்லை).

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவ்வூரிலுள்ள மாவட்ட ஜெயிலுக்குச் சென்று கைதிகளுக்கு லட்டு வழங்குவதை ரோட்டரி கிளப் தனது ப்ராஜக்ட்டுகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது.

இரண்டு ஒலைக்கூடைகளில் சுமார் முன்னூறு லட்டுகளைக் கொண்டு போவார்களாம். கைதிகளுக்குக் கொடுத்தது போக மீதமுள்ளதை காவல் துறையினர் எடுத்துக் கொள்வார்களாம்.

கிளப்பின் செயலாளர் அல்லது துணைச் செயலாளர் இந்தக் கூடைகளைச் சுமந்து போக வேண்டும். தலைவரும் மற்ற முக்கியஸ்தர்களான உறுப்பினர்களும் சிறிது நேரம் கழித்துப் பங்கேற்பார்கள்.

என் வீடு ஜெயிலுக்கு அருகில், (அதன் எதிர்ப் புறமாக) இருந்த படியால், முதல் நாள் இரவே இரண்டு கூடை லட்டுக்கள் என் வீட்டில் அடைக்கலம் புகுந்தன. காலை எட்டு மணிக்கெல்லாம் லட்டுக்களோடு ஜெயிலில் தயாராக இருக்குமாறு எனக்குச் சொல்லப்பட்டது. டாக்டர் சாம்பிராணி என்னோடு சேர்ந்து கொள்வார் என்றும், மற்றவர்கள் எட்டரை மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள் என்றும் அதுவரை லட்டு வழங்குவதைத் தொடங்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். (டாக்டர் சாம்பிராணி அவர்கள், ஒரு 'பி.டி.ஜி', அதாவது ரோட்டரியில் ஏற்கனவே கவர்னராக இருந்தவர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். குழந்தைகள்
டாக்டர்).

அதுவரை எனக்கு ஜெயில் பற்றிய அனுபவம் கிடையாது. சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரும் போது எதிரில் கூவத்தின் கரையில் உயர்ந்த மதில் சுவரோடு ஒரு பழைய கட்டிடத்தைச் சுற்றிக் காவலர்கள் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அது தான் மத்திய சிறைச் சாலை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினி கணேசன் கடலுக்கு நடுவில் ஜெயிலில் இருப்பதாகக் காட்டுவார்கள். அத்தோடு சரி. மற்றபடி ஜெயில் வாசலை மிதித்தது கிடையாது.

கொலைக் குற்றம் செய்தவர்களெல்லாம் இருப்பார்களே, ஜெயில் அனுபவம் எப்படி இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டே தூங்கியதில் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். இன்னொரு உறுப்பினரான அடுத்த வீட்டு நண்பர் சரியாக எட்டு மணிக்கு என்னையும் லட்டுக் கூடைகளையும் ஜெயில் வாசலில் இறக்கி வைத்து விட்டு, சற்று நேரத்தில் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்.

ஜெயில் அதிகாரி ஒருவர் என்னை விடவும் லட்டுக் கூடைகளால் மிகவும் கவரப்பட்டவராக 'உள்ளே வாருங்கள்' என்று கதவைத் திறந்து அமரச் சொன்னார். பிறகு வாசல் கதவை மட்டுமின்றி நான் அமர்ந்த அறையின் கதவையும் தாளிட்டுப் பூட்டினார். எனக்கு இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டது. "ஏன் பூட்டுகிறீர்கள்? நான் ரோட்டரி கிளப்பிலிருந்து வருகிறேன்" என்றேன். "மன்னிக்க வேண்டும், இது எங்கள் நடைமுறை. உங்கள் ஆட்கள் எல்லாரும் வந்தவுடன் திறந்து விடுகிறேன். பொறுத்திருங்கள்" என்று அவர் ஜெயிலுக்குள்ளே நீண்ட தூரம் போய் விட்டார்.

ஜெயில் என்பதாலோ என்னவோ, நான் இருந்த அறைக் கதவிலும் கம்பிகள் தான் இருந்தன. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது போலத் தோன்றுமோ என்று பயம் வந்து விட்டது. டாக்டர் சாம்பிராணி சீக்கிரம் வந்துவிடுவார் என்று எதிர் பார்த்தேன். மெதுவாக லட்டுகளை எண்ணத் தொடங்கினேன்.

ரோட்டரி கிளப்பைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் டாக்டர்கள் தாம். அவர்களின் நேரம் அவர்கள் கையில் இல்லையே, நோயாளிகளின் கையில் அல்லவா! எனவே நேரம் தவறாமை என்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. அதிலும் சாம்பிராணி போன்ற பிசியான டாக்டர்கள் சற்று தாமதமாக வர நேர்ந்தால் குறை சொல்ல முடியுமா?

அதற்குள், உள்ளே சென்ற அதிகாரி ஒரு காரியம் செய்தார்: கைதிகளுக்கு தேசீயக் கொடியை வழங்கியவர், அவர்களை ஒவ்வொருவராக என் கம்பிக் கதவுக்கு வெளியே வரிசையாக நிற்க வைத்தார். "எல்லாரும் அமைதியாக இருங்கள். இன்னும் சற்று நேரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் லட்டு வழங்குவார்கள்" என்று உரக்கச் சொன்னார்.

திறந்த கூடையில் லட்டுக்கள் எதிரே இருக்கும் போது, அவர்களால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும்? எனது நண்பர்களோ வந்தபாடில்லை. "என்ன அய்யா, ஒரு இழவு லட்டுக்காக எவ்வளவு நேரம் பிச்சைக்காரன் மாதிரி இங்கே நிற்பது?" என்று கத்த ஆரம்பித்தார் ஒரு கைதி.

"அண்ணனைத் தெரியுங்களா, ஹூப்ளி கொலைக் கேசில் ஆயுள் தண்டனை பெற்றவர். மூணு பேரைக் கொன்றவர். இல்லீங்களா அண்ணே " என்றான் அடுத்தவன்.

"ஏன் மத்த இரண்டையும் விட்டு விட்டாய்? ஹாசனில் இரண்டு பேரை இல்லாமல் பண்ணினதை மறந்து விட்டாயா?" என்றான் மூன்றாமவன்.

மற்றவர்களும் காச்மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அதிகாரி ஓடி வந்து, "அய்யா, இன்றைக்குப் பார்த்து என் கொலீக்ஸ் இரண்டு பேரும் லீவு போட்டு விட்டார்கள். நான் ஒருவன் தான் இவ்வளவு பேரையும் சமாளித்தாக வேண்டும். தாமதம் செய்யாதீர்கள். அங்கிருந்தபடியே ஆளுக்கொரு லட்டு
கொடுத்தனுப்புங்கள்" என்று உத்தரவிட்டார்.

இப்படியாகத் தானே என் ஜெயில் அனுபவம் தொடங்கியது. லட்டு வாங்க வரும் ஒரு சில நபர்களைப் பார்க்கும் போது அவர் ஐந்து கொலை செய்தவர் என்றால், இவர் ஏழு செய்திருக்கக் கூடுமோ என்று பயம் தோன்றியது. வியர்த்து வழிய ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட இருநூறு லட்டுக்கள் காலியான நிலையில் என் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். "என்ன சார், கம்பி எண்ணுகிறீர்களா?" என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பினார் ஒரு டாக்டர்.

விஷயம் என்னவென்றால், என்னை உள்ளே விட்டுக் கதவைப் பூட்டிய அதிகாரி, மீண்டும் வெளியே போய்க் கதவைத் திறக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. அவர் தான் என்னைப் போலத் தனியொருவராக மாட்டிக்கொண்டு விட்டாரே! வெளியிலிருந்து ரோட்டரி உறுப்பினர்கள் எவ்வளவு கத்தியும் கதவு திறக்கப் படவே இல்லை. லட்டு வழங்க ஆரம்பித்து, ஓரளவு நிலைமை அமைதி அடைந்த பிறகு தான் அந்த அதிகாரி வாசல் கதவைத் திறந்து இவர்களை உள்ளே விட்டாராம். திடீர் வி.ஐ.பி. நோயாளி ஒருவர் வந்து விட்டதால் டாக்டர் சாம்பிராணி வர முடியவில்லையாம்.

"தனி ஒருவராகவே நிகழ்த்தி விட்டார் பாருங்கள். I have great regard for Tamilians" என்று பாராட்டியபடி அறைக் கதவைத் திறந்து எனக்கு விடுதலை அளித்தார் அதிகாரி. எல்லாரும் எனக்குக் கை கொடுத்தார்கள். மீதமிருந்த லட்டுகளைக் கூடையுடன் அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

அப்போது ஒரு ஜீப்பில் ஏழெட்டுப் பேர் மூன்று கூடை லட்டுக்களுடன் வந்து இறங்கினார்கள். லயன்ஸ் கிளப்பாம்! அவர்களுக்கும் சுதந்திர தின ப்ராஜக்ட் உண்டல்லவா? அவர்களில் ஒருவர் அதிகாரியைப் பார்த்து "இந்தக் கூடைகளைப் பத்திரமாக வையுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவர் வந்துவிடுவார். அதன் பிறகு டிஸ்ட்ரிப்யுஷன் செய்கிறோம் " என்றார்.
********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


1 கருத்து: