சனி, மார்ச் 30, 2013

கல்லில் வடித்த ஜடம் (கவிதை)

உன்னைச் சுற்றி ஓர் உலகம்
ஓயா ஓசையிடும்
ஒவ்வொரு நாளும் சோகக் கூக்குரல்
உன்செவி மீது விழும்
என்னைக் கொஞ்சம் பாராயோ என
ஏழையர் கூட்டம் வரும்
ஏதானாலும் தருவாய், ஊணோ
உடையோ என்று தினம்!
 
தீயில் வெந்தது வீடென்றே உடல்
தீய்ந்தவர் சிலபேரும்
தாயும் தந்தையும் சுனாமியாலே
தவறினர் என்பவரும்
தவற விட்டாள் எனைக் குப்பையிலென்று
தானழும் பேதையரும்
தடையில்லாமல் கல்விக்காகத்
தருவீர் என்பவரும்
 
சாலை சதுக்கம் மூலை முடுக்கம்
சந்துகள் தோறும் உனை
சந்திக்கிறார் நிந்திக்கின்றார்
ஞாபகம் வருகிறதா?
சாதாரணன் நான் என்கின்றாயா
சாதிக்க முடியாதா?
கைவிரல் பத்தும் கண்விழி இரண்டும்
மெய்யொன்றும் போதாதா?
 
ஐவர் உண்கையில் ஆறாமவர்க் கதில்
அன்னம் கிடையாதா?
அணிந்து கழற்றிய ஆடைகளேனும்
அளித்திட லாகாதா?
வறுமை கொடிது இளமையிலென்று
வாசகம் இருக்கிறதே!
வளமையில் கொஞ்சம் பங்கீடாக
வழங்குதல் கூடாதா?
 
சின்னச் சின்ன உதவிஎன்றாலும்
செய்வது நன்மை தரும்
சீக்கிரம் செய்தால் யாருக்கேனும்
நிச்சயம் வாழ்வு வரும்
காலம் உனக்கென நிற்பதில்லை அது
காற்றென கரைந்து விடும்
கண்டும் காணாமல் நிற்பாயேல் நீ
கல்லில் வடித்த ஜடம்!
 
-கவிஞர் இராய.செல்லப்பா
   
(c) Y.Chellappa
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


2 கருத்துகள்:

  1. நம்மால் இயன்றதை அடுத்தவர்க்கு அளித்தல் என்றுமே நன்மை தரும். யாரோ ஓரிருவர் நம்மை ஏமாற்றுகிறார் என்பதால் எவரையுமே நம்பாமல் இருப்பது நல்லதல்ல. நல்ல கருத்தை நயமாய்ச் சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு