வெள்ளி, மார்ச் 08, 2013

கில்லாடி கிருஷ்ணன் கதை - 1

அன்று நான் மிகவும் பிசி. அறைக்குள் நாலைந்து முக்கியமான வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோருமே நகரத்தின் முக்கிய வியாபாரிகள் மட்டுமின்றி ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களும் கூட.

திங்கட்கிழமை என்பதால் வங்கியில் நல்ல கூட்டம். ஆகவே இடையிடையே வேறு சில வாடிக்கையாளர்களும் குறைகளை முறையிட வருபவர்களும் அறைக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போலத் தொலைபேசித் தொல்லைகள் வேறு. மேலதிகாரி ஒருவரின் உறவினர் சுற்றுலா வருகிறார், சரியான ஓட்டலில் அறையொன்று போடுங்கள் என்று அன்பான உத்தரவு ஒன்று.

அந்தச்  சூழ்நிலையில் தான் உள்ளே நுழைந்தார், ஒரு பெரியவர். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். தமிழ் நாட்டுக்கே உரிய வெள்ளை வெட்டியும் முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணிந்து, வலது தோளில் ஒரு காமிராவும் ஜோல்னாப் பையும் தொங்க, வெகு வேகமாக வந்து தானாகவே ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவர் வந்த வேகத்தைப் பார்த்த மற்றவர்கள், ஏதோ என் உறவினர் அல்லது நண்பர் வந்திருப்பதாகவே கருதினார்கள். 'நாங்கள் வேண்டுமானால் மாலையில் வரட்டுமா' என்று எழுந்தார்கள்.

வந்தவரோ, "நோ, நோ! நீங்கள் இருங்கள். இந்த காமிராவும் பையும் இங்கே இருக்கட்டும். திருமதி கல்பனா அவர்களைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் " என்று எழுந்தார்.

திருமதி கல்பனா என்றதுமே அந்த வியாபாரிகள் அனைவரும் சட்டென்று எழுந்தார்கள். மாநில அமைச்சரின் சகோதரி அவர் என்பது மட்டுமின்றி, சகோதரிக்கே உரிய அரசியல் செல்வாக்கும் அவரிடம் இருந்தது. ஆகவே வந்திருப்பவர் ஏதோ முக்கியமானவர் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அதை எதிர்பார்த்தவர் போல இவரும் தன்னை வேகமாக அறிமுகப்படுத்திக்  கொண்டார்: "ஐ ஆம் கிருஷ்ணன். ப்ரொபெஷனல் போட்டோகிராபர்"

பிறகு, "காஞ்சி சங்கராச்சாரியார் இந்தவூருக்கு வருகிறார் இல்லையா, அதற்காகத் தான் வந்திருக்கிறேன். அந்த விஷயமாகத் தான் மேடத்தைச் சந்திக்க வேண்டும். முதல் அமைச்சரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும்" என்றார்.

"அப்படியா, எங்களுக்குத் தெரியாதே! " என்று வருந்தினார்கள் வியாபாரிகள். "பரவாயில்லை. ப்ரோகிராம் ஃபைனலைஸ் ஆனவுடன் நானே வந்து இன்விடேஷன் கொடுக்கிறேன். எல்லாரும் அவசியம் வந்து ஆச்சாரியரைத் தரிசிக்க வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பிரைம் மினிஸ்டரும் இங்கு வருவதாக இருக்கிறார். அதுவும் நாளை தெரிந்துவிடும்" என்றபடி அவசரமாகக் கிளம்பினார் கிருஷ்ணன்.

 செல்வாக்குள்ள ஒரு நபரைச் சந்தித்த மகிழ்ச்சி அவர்களுக்கு.
******

அன்று மாலை ஆறு மணி போலத் தான் கிருஷ்ணன் திரும்பி வந்தார்.
"எல்லாம் சக்சஸ்!  கல்பனா மேடம் நேரடியாகவே சி.எம்.மிடம் பேசினார். அவருக்கு அதே நாளில் டில்லி போக வேண்டியிருப்பதால் உள்துறை அமைச்சரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார்" என்றவர், "அடடா மறந்தே விட்டேனே, இந்தாருங்கள் காஞ்சி காமாட்சி  அம்மன் குங்குமம்" என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார்.

அதை பக்தியுடன் வாங்கிக் கொண்டேன். நான் அது வரை நேரில்
சங்கராச்சாரியாரைத் தரிசித்தது கிடையாது. எனவே ஆவலோடு அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன். நிறைய சொன்னார்.

"ஸ்வாமிகள், ஹம்பியில் ஆறு மாதங்கள் தங்கியிருந்த போது, விஜயநகர சாம்ராஜ்யத்தை உண்டாக்கியவரான வித்யாரண்யரின் பெயரால் வித்யாரண்ய வித்யாபீடம் ஒன்றை நிறுவியுள்ளார்கள்.  இந்தியாவில் எங்கெங்கு கல்வெட்டுக்கள் உள்ளனவோ அதிலும் குறிப்பாக
சமஸ்கிருதம், பிராம்மி முதலிய பழங்கால மொழிகளில் உள்ளனவோ அவற்றைப் பிரதி எடுக்கவும், அவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்யவும் தகுதியுள்ள பேராசிரியர்கள் சிலரை இந்த வித்யாபீடத்திற்கு நியமிப்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள். என் பூர்வ ஜன்ம புண்ணியம், என்னையும் இந்த முயற்சியில் பங்கேற்க அனுமதி அளித்திருக்கிறார்கள்" என்று சொன்னவர், தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு கவரைப் பிரித்து ஒரு கடிதத்தைக் காட்டினார்.

அது, காஞ்சி மடத்திலிருந்து கிருஷ்ணன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம். ஆச்சாரிய ஸ்வாமிகள் கேட்ட சில சம்ஸ்கிருத நூல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும், மைசூர், சிருங்கேரி போன்ற இடங்களில் இருந்தால் உடனே சென்று வாங்கிவந்து ஸ்வாமிகள் குல்பர்கா வரும் போது அவரிடம் கொடுக்குமாறும் அதில் இருந்தது. சில நூல்களின் பெயர்களும் இருந்தன.

"அதில், இரண்டு நூல்கள் சிருங்கேரியிலிருந்து கிடைத்து விட்டன. இன்னும் இரண்டு கிடைக்கவில்லை. ஸ்வாமிகள் இங்கு வருவதற்கு இன்னும் பத்து நாள் இருக்கிறது. அதற்குள் மைசூர் போய் வந்தாக வேண்டும். ஒரே அலைச்சல் போங்கள். ஆனாலும் ஸ்வாமிகள் காரியமாயிற்றே! விட முடியுமா?" என்றார்.

"பகல் உணவு சாப்பிட்டீர்களா? இரவு எங்கே தங்கப் போகிறீர்கள்?" என்றேன்.

"நான் பகலில் சாப்பிடுவதில்லை. காலையில் மூன்று இட்லி, இரவில் இரண்டு சப்பாத்தி, ஒரு பால். அவ்வளவு தான் என் சாப்பாடு. நாளைக் காலையில் ஆறு மணிக்கே கிளம்பி மைசூர் போகிறேன். இன்று இரவு மட்டும் தானே, உங்களுடன் தங்கிக் கொள்ளட்டுமா? நீங்கள் தனியாகத்தானே இருக்கிறீர்கள்?" என்றார்.

" நான் தனியாக இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றேன் வியப்புடன்.

"இதில் என்ன ஆச்சரியம் தம்பி! இந்தத் தண்ணி இல்லாத காட்டுக்கு எந்தப் பெண் வந்து குடும்பம் நடத்துவாள்! கிட்டத் தட்ட எல்லா பேங்க் மேனேஜர்களும் உங்களைப் போல் தான் ஒண்டிக் கட்டையாக இருக்கிறார்கள்" என்றவர், "நீங்கள் கிளம்ப நேரமாகுமா?" என்றார்.

அப்போது தான் என் இங்கிதமின்மை புரிந்தது. இவர் காலையிலிருந்து இன்னும் சாப்பிடாமல் இருக்கிறார், நாம் பேசிக்கொண்டே இருக்கிறோமே என்று. "கொஞ்ச நேரம் ஆகும். ஆனால் அதற்குள் நாம் போய் ஜனதாவில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம்" என்று கீழே இறங்கினேன்.
 அப்போது தொலைபேசி மணி அடித்தது. அதில் வந்த செய்தி..!

(தொடரும்)
***********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக