அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 20, 2014

அன்னையின் தரிசனம் ( பாடல்)


அன்னையின் தரிசனம்

குழந்தையாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
பிப்ரவரி 21 – அன்று ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களின் பிறந்தநாள். அன்று பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் சிறப்பான தியானம் நடைபெறும். அன்பர்கள் அன்று இரண்டாம் மாடியிலுள்ள அன்னையின் அறையைத் தரிசனம் செய்யமுடியும். 

அன்று அன்னை-அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஆன்ம விழிப்புணர்ச்சி மிக இயல்பாக வரும் என்றும், அன்றைய தினம் அறிவு-செல்வம்-பதவி இந்த மூன்றிலும் எந்த நிலையில் உள்ளார்களோ அதைவிடப் பல படிகள் முன்னேறுவதற்கான உழைப்பையும், ஊக்கத்தையும், உரிய சூழ்நிலைகளையும் அன்னையின் அருள் அடுத்துவரும் நாட்களில் வாரிவாரி வழங்கி வாழ்க்கையை வெற்றிகரமாக்கும்  என்றும் குருநாதர் சொன்னதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

(அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக 1994  இல் நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. படங்கள் அனைத்தும் ஆசிரமத்தின் விறபனையில் பெறப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமை ஆசிரமத்தைச் சேர்ந்ததாகும்.)

சிறுமியாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.

தூய மலர்க் கூட்டம்
தொழுது பணிந்து
சுகந்த மணம் பரப்பும்.

வார்த்தை ஒடுங்கும்
மௌனம் லயிக்கும்.

எண்ணம் அடங்கும்
இதயம் லேசாகும்.

அன்னையுடன் அரவிந்தர்
ஆழ்ந்த சமாதியிலே

அருகில் வந்தவர்க்கும்
ஆன்மா விழிப்படையும்.

காலத்தால் கட்டுண்ட
கர்மவினை அழியும்.

இளம்பெண்ணாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
கலக்கம் மறையும்
கண்கள் ஒளியேறும்.

வாழ்க்கைச் சிக்கல்கள்
வாசலிலே நின்றுவிடும்.

நெஞ்சம் இனிக்கும்
தியானம் நிலைத்துவிடும்.
**** 


அடிக்கடி உனைக்காணும் வரம் வேண்டும் – அம்மா

அழியாமல் நெஞ்சில் உன் அருள் வேண்டும்!

படிக்கொரு துணையாய் நின் பதம் வேண்டும் – உன்னைப்

பாடும் பணியே நிதம் வேண்டும்! – அம்மா! (அடிக்கடி)

மலர்போல மலர்கின்ற மனம்  வேண்டும் தாயே! -கங்கை அமரன் பாடல்
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

திசைஎல் லாம் உன் துணை வேண்டும்- நல்ல
சேதியே என்னைச் சேர வேண்டும்-அம்மா

கைகுவித்து உனை வேண்டும் மனம் வேண்டும்- திருக்
கதவம் திறந்து தரி சனம் வேண்டும்! –அம்மா!

-    இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
 2004  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது.
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
 1999  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
2000  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
 2007  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

பாடல்: © Y Chellappa

தகவல்: சென்னை - நந்தனத்திலுள்ள -   அமரர் ஆனந்தபாலா என்ற ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களால் துவங்கப்பட்டு -1986  முதல் தொடர்ந்து பக்தியோடு இயங்கிவரும் - ஸ்ரீ அன்னை தியான மையம் - நாளை - பிப்ரவரி 21 - அன்னை பிறந்தநாளை முன்னிட்டு காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் வரலாம் - சிறு குழந்தைகள் உள்பட. )

ஞாயிறு, நவம்பர் 17, 2013

அன்னை அன்னை அன்னை என்று என்றும் பாடுவோம்! (கவிதை)

(பாண்டிச்சேரியில் அமைதித்துயில் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் சமாதி தினம் இன்று (நவம்பர் -17).  தமிழ்நாட்டில் பல இடங்களில் இயங்கிவரும் அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக நான் பல ஆண்டுகள் முன்பு எழுதிக்கொடுத்த பாடல் இது. அன்னைக்கு மீண்டும் சமர்ப்பணம்.)
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

அன்னை அன்னை அன்னை என்று
என்றும் பாடுவோம்!
அன்னை பெற்ற பிள்ளைகள் நாம்
ஒன்று கூடுவோம்!

 ஆதி என்றும் அந்தம் என்றும்
அற்ற பரம்பொருள் – நம்
அறிவு ஞானம் எல்லாம் கடந்த
வேத விழுப்பொருள்
வாழ்வனைத்தும் யோகம் என்று
காட்டும் கருப்பொருள் – மனித
வடிவில் வந்து நம்மிடையில்
இருந்த பேரருள்!
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

 வங்கம் விட்டு இங்கு வந்த
தேவ தாமரை – வீட்டு
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!
பொங்கி மின்னும் அலைகள் வீசிப்
பொலியும் பாண்டியில்
புதைந்திருக்கும் மனம் கடந்த
ஞானப் பொக்கிஷம்! 
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
அன்னை என்னும் இவரை நாடத்
தடைகள் இலையே!
அன்பு நெஞ்சம் அன்றி வேறு
தகுதி இல்லையே!
பூசை என்றும் வேள்வி என்றும்
முறைகள் இல்லையே – நீ
புரியவேண்டும் சரணாகதி,
வேறு இல்லையே! 
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
கலங்கிடாத பக்தி கொண்ட
எண்ணம் போதுமே!
கருத்தினிலே சோர்வில்லாத
கடமை போதுமே!
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
ஒன்று போதுமே-
கருணைத்தேரில் அன்னை காட்சி
வந்து சேருமே!
     -கவிஞர் இராய செல்லப்பா

(c) Y. Chellappa