குல்பர்கா என்ற இருள் நகரத்தில் நான் இருந்தது ஓராண்டு மட்டுமே. ஆனால் அந்த ஓராண்டில் தான் எத்தனை இனிய அனுபவங்கள்!
கருணைத் தெய்வமாய்க் காஞ்சியில் வீற்றிருந்த (அமரர்) மகாஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை, முதன் முதலில் நேரில் தரிசிக்கும் பேறு பெற்றது அவ்வூரில் தான்.
(ஆறு வயதில், சிவப்புப் பட்டுடுத்தி, பச்சைப் பட்டு மேலாடையுடன் அவரை இராணிப்பேட்டையில் தரிசித்தேனாம். அம்மா சொல்வதுண்டு. ஆனால் ஞாபகம் வரவில்லை).
1980 ஜூன் 25ஆம் தேதி சுவாமிகள் மகராட்டிர மாநிலம் சத்தாரா அடைந்து சுமார் ஒரு வருடம் வாசம் கொண்டிருந்தார்கள். தில்லை நடராஜப் பெருமானுக்குச் சிதம்பரத்தில் உள்ளது போன்றே ஒரு திருக்கோயிலை சத்தராவில் எழுப்பிடத் திருவுள்ளம் கொண்டார்கள். அதற்குரிய ஏற்பாடுகளைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
(1981இல் தொடங்கிய பணி மூன்றாண்டுகளில் நிறைவடைந்தது).
1982 ஜனவரி 31ஆம் தேதி துல்ஜாபூர் வந்தடைந்தார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி சித்தபல் என்ற இடத்தில் குரு ஆராதனை நடந்தேறியது. 1982 மே மாதம் 18ஆம் தேதி குல்பர்கா நகர எல்லையான மகாகாவ் என்ற இடத்திற்கு வருகை தந்தார்கள். அங்கு 256 நாட்கள் தங்கி, வியாச பூஜையும் சாதுர்மாஸ பூஜையும் முடித்துக்கொண்டு 1983 ஜனவரி 28ஆம் தேதி அன்று தமிழகம் நோக்கி நடந்தார்கள்.
ஆச்சாரியர்களின் பாதயாத்திரை அணி மஹாகாவுக்குள் நுழையும் போது குல்பர்கா நகரத்தில் இருந்த சான்றோர்கள் அவர்களுக்குப் பூரணகும்ப மரியாதை சமர்ப்பித்து ஆசி பெற்றனர். அவர்களில் நானும் ஒருவன்.
ஏற்கெனவே மெலிந்த திருமேனி. 89 வயது. அதிலும் சுட்டெரிக்கும் மே மாதத்துச் சூரியனின் தாக்கம் தொடர்ந்து பட்டதால் இன்னும் வாடிப் போயிருந்தது. எனினும் தன் கனிவு சுரக்கும் திருப்பார்வையால் அனைவரையும் கை உயர்த்தி ஆசீர்வதித்தார். தனக்கென்று அமைக்கப் பட்டிருந்த சிறு ஒலைக்குடிலை நோக்கித் தன் நடைபயணத்தைத் தொடர்ந்தார்.
காஞ்சி நகரில் அரசன் முதல் ஆண்டி வரை அவரைத் தரிசிக்க வரிசையில் காத்துக்கிடக்கும் போது, அது வரை அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்தவன்பால் கருணை கொண்டு தரிசனம் கொடுப்பித்த பேரன்பை என்னென்று சொல்வேன்! கண்ணில் நீர் வழிய அவரின் அடிச்சுவட்டைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.
சுற்றி நின்ற கிராமத்து மக்கள் இவர் யார் என்பது கூடப் புரியாதவர்கள், இவ்வளவு வயதானவர், இந்த வெய்யிலில் கால் நடையாகவே ஆயிரக் கணக்கான மைல் நடந்து வந்திருக்கிறாராமே என்று பிரமித்து நின்றார்கள். அவரோடு தாங்களும் மஹாகாவ் வரை நடந்தார்கள்.
அலுவலகப் பணியால் கட்டுண்டிருந்த நான் மேற்கொண்டு தொடர முடியாமல் குல்பர்கா திரும்பினேன்.
என்னுடைய ஆறாவது வயதில் அவரைத் தரிசித்த நிகழ்ச்சியைக் கண் முன் கொண்டு வர முயன்றேன்:
ஓர் இளம் துறவி, கையில் துறவுக்கோலுடன், சுற்றிலும் பூஜைத் திரவியங்கள் சூழ்ந்திருக்க, ஞானப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கிறார். நகரத்துப் பணக்காரர்களும் முக்கியஸ்தர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு கை நிறைய பழங்கள், பட்டு வேட்டி, புடவை, அங்கவஸ்திரம்,மற்றும் தட்சிணை என வெற்றிலை தட்டில் வைத்துச் சமர்ப்பித்து ஆசி பெறுகின்றனர்.
ஆண்களுக்கான வரிசை முடிந்தவுடன், பெண்கள்.
அம்மா என்னைக் கையோடு அழைத்துச் சென்று ஆச்சாரியர்களின் முன் நிறுத்தி, 'நமஸ்காரம் பண்ணு'' என்கிறார். பட்டு வஸ்திரம் தரையில் புரளத் தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறேன். புன்சிரிப்போடு, பேர் என்ன என்கிறார். நான் சொல்வதற்குள், அம்மா முந்திக் கொண்டு 'பரசுராமன்' என்கிறார். 'இல்லை இல்லை, என் பேர் செல்லப்பா' என்கிறேன் அவசரமாக. எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர் உள்பட.
'அது பள்ளிக்கூடத்திற்கு. இது சமஸ்காரங்களுக்கு' என்கிறார். கையில் கற்கண்டுக் கட்டிகளைத் தந்து, 'நன்றாகப் படிக்கிறாயா பரசுராமன்?' என்கிறார். 'எப்போதும் நான் தான் பர்ஸ்ட்டு மார்க்கு' என்கிறேன். ஆமாம் என்பது போல் அம்மா அவரைப் பணிவாக நமஸ்கரிக்கிறார். மஞ்சள் குங்குமமும் மாங்கல்யச் சரடும் தவிர வேறு அணிகலன்கள் இல்லாததை ஆச்சாரியார் கவனிக்காமல் இருந்திருப்பாரா? 'காமாட்சி கை விட மாட்டாள்' என்கிறார். குங்குமம் தருகிறார். நிறைவோடு வெளியே வருகிறார் அம்மா. எனக்கும் இன்னதென்று தெரியாத மன நிறைவு தோன்றுகிறது.
கொண்டுவிட்டேன். ஆனால் மகாகாவில் ஏற்பட்ட மகத்தான அனுபவம் இன்றும் மனதிலேயே நிற்கிறது.
மகாஸ்வாமிகளுக்கு 1993 மே 7ஆம் தேதி, நூறாண்டு நிறைந்தது. ஆன்மீக 1994 ஜனவரி 8ஆம் தேதி மகாசமாதி அடைந்தார்கள்.
முதல் கனகாபிஷேகம் முடிந்த சில நாட்களில் மகாஸ்வாமிகளை மீண்டும் தரிசிக்கும் பேறு பெற்றேன். புது டில்லியிலிருந்து எனது சிறந்த நண்பரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன்?
(மகாஸ்வாமிகளைப் பற்றிச் சொல்லும் போது, கில்லாடி கிருஷ்ணனைப் பற்றியும் சொல்லித் தானே ஆக வேண்டும்? பொறுத்திருங்கள்).
******(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக