திங்கள், மார்ச் 04, 2013

பழி வாங்க வந்த பவழ மோதிரம் - 2


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
பழி வாங்க வந்த பவழ மோதிரம்-1

நான் சென்னைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின் ஒருநாள்.

அண்ணாசாலையில் தேவி தியேட்டர் வளாகத்தில் இருந்த வங்கியின் மண்டல அலுவலகத்தில் பணியில் இருந்தேன். என்னைப் பார்க்க வெளியூரிலிருந்து ஒருவர் வந்திருப்பதாக ஆறுமுகம் மெல்லிய குரலில் தகவல் சொன்னார். (ஆறுமுகம், வங்கியின் கடைநிலை ஊழியர்).

பயணக் களைப்பை விடவும் புன்சிரிப்பை அதிகம் சிந்தியபடி எதிரே வந்து அமர்ந்தவர், வேறு யாருமில்லை, திரு வாஸ் அவர்களே தான்!

"சொல்லாமல் வந்தீர்களே நியாயமா?" என்று கை குலுக்கினேன்.

சிறிய கைப்பெட்டி தவிர கனமான விஷயங்கள் ஏதும் இருக்க
வில்லை அவரிடம். "இவர் நமது குல்பர்கா கிளையின் முக்கியமான வடிக்கையாளர்" என்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினேன். உணவு இடைவேளையாக இருந்ததால் அவரை அழைத்துக்கொண்டு கீழிருந்த சிற்றுண்டிச் சாலைக்கு நடந்தேன்.

"திடீரென்று பாம்பே செல்ல வேண்டி வந்தது. ஆனால் திரும்பி குல்பர்கா போவதற்குள் சோலாப்பூரில் ரயில் விபத்து ஏற்பட்டு அதனால் பாம்பே - குல்பர்கா ரயில் போக்குவரத்து தடைப் பட்டு
விட்டது. அதே சமயம்  சென்னையில் பள்ளிக் கல்வித் துறையிடம் சில ஆலோசனைகள் பெற வேண்டி இருந்தது. பெரிய சாமியார் அனுமதி அளித்ததன் பேரில் விமானத்தில் இங்கு வந்தேன். மாலை நாலு மணிக்குத் தான் பேட்டி நேரம் என்பதால் உங்களைச் சந்திக்க வந்தேன். தவறில்லையே?"

வராமல் போயிருந்தால் தான் தவறு என்று சிரித்தேன். ஒரு வகையில் எதிர் பாராத மகிழ்ச்சி இது.

பேச்சு, வழக்கம் போலப்  பல திசைகளையும் தொட்டது. சட்டென்று என் வலது கையைப் பார்த்தவர்  அங்கு அவர் போட்ட பவழ மோதிரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவராகக் கேள்விக்குறியோடு என்னை நோக்கினார்.

"அந்த மோதிரம் தொலைத்து விட்டது" என்றேன்.

வேகமாக எழுந்தவர், "தொலையக் கூடாது நண்பரே, ஆபத்து வரும்" என்றார். முகம் லேசாக வியர்க்கத் தொடங்கியிருந்தது.

"சாப்பிடுங்கள், பேசலாம்" என்று பேச்சை மாற்றினேன், அக்கம் பக்கத்தில் நாங்கள் பேசுவதைக்  கவனிப்பது போலிருந்ததால்.

"சென்ற வாரம் மெரினாக் கடற்கரையில் நண்பர்களோடு காலாற நடந்து விட்டு, அலைகளோடு  உறவாடிக் கொண்டிருந்த போது எப்படியோ தவறிக் கடலில் விழுந்து விட்டது" என்றேன்.

"என்னை மன்னிக்க வேண்டும் நண்பரே. இமய மலையிலிருந்து வந்த முனிவர் ஒருவர் எனக்கு வழங்கிய மோதிரம் அது. ஆனால் அவர் சொன்ன ஒழுக்க முறைகளை என்னால் கடைப் பிடிக்க முடியாததால் மோதிரம் சாத்தானின் தூதன் ஆகிவிட்டது. எனக்கு ஏராளமான துன்பங்கள் வர ஆரம்பித்தன. உறக்கம் என்பதே இல்லாமல் போனது. பள்ளியில் கவனத்தோடு பாடம் எடுக்க முடியவில்லை.

"அந்த மோதிரத்தை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று பாத்ரூமில் கழற்றி வைத்து விட்டு நகர்ந்து விட்டேன். பாவம், என்னோடு ஆசிரியையாகப் பணி புரியும் நிர்மலா என்ற இளம்பெண் அதை எடுத்து பத்திரப் படுத்துவதைக் கண்டேன். அடுத்த வாரம் அவளுக்கு மாதம் மூன்று நாள் வரும் அவஸ்தை, பத்து நாள் வரையும் தீராமல், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதம் கழித்து எலும்புக்கூடு மாதிரி வெளியில் வந்தாள். அது மட்டுமல்ல, அவளுக்கு நிச்சயித்திருந்த திருமணமும் தள்ளிப்போய் விட்டது.

"அவளுக்குச் சந்தேகம் வந்து அந்த மோதிரத்தைக் குப்பையில் எறிந்து விட்டாள். அதன் பிறகு தான் அவள் உடல் தேறியது." என்றார் வாஸ்.

குப்பையில் எறிந்த மோதிரம் மீண்டும் வாசிடம் எப்படி வந்தது? அது தான் தலையெழுத்து என்பது.

அடுத்த நாள், கூட்டிப் பெருக்கும் வேலைக்காரப் பெண் அந்த மோதிரத்தைக் கண்டெடுத்து அதை ஏற்கெனவே வாசிடம் பார்த்திருந்த காரணத்தால் அவரிடமே கொண்டு வந்து கொடுத்தாள். அன்று மாலை தான் நான் மாற்றலாகிற விஷயம் வாசுக்குத் தெரிந்ததால், மோதிரத்தை என்னிடம் தலை முழுகி விட்டார்! இவரையா மிகவும் நல்லவர் என்று நம்பினேன்?

என் எண்ணத்தைப் புரிந்துகொண்டவர் போல வாஸ், "மன்னிக்க வேண்டும் நண்பரே! உங்களுக்கு துரதிர்ஷ்டம் வர வேண்டுமென்று அதைக்  கொடுக்கவில்லை. முனிவர் சொன்ன சில தகுதிகள் உங்களிடம் இருந்ததால், மோதிரம் உங்களிடம் வந்தால் அதனுடைய தீய குணங்கள் மாறி, எனக்கு ஏற்படாமல் போன நல்ல பலன்கள் ஒருவேளை உங்களுக்கு ஏற்படக்கூடும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கொடுத்தேன். அதைத் தொலைத்து விட்டீர்களே! இனி என்ன நடக்குமோ அச்சமாக இருக்கிறதே" என்றார்.

அவர் இப்படிச் சொன்னவுடன் எனக்கு உண்மையிலேயே கவலை ஏற்பட்டது. அந்த மோதிரம் வந்த பின்னல் என்னென்ன அசுப நிகழ்ச்சிகள் எனக்கு ஏற்பட்டிருந்தன என்று எண்ணிப் பார்த்தேன் :

- என் மனைவிக்கு வர வேண்டிய சென்னை டிரான்ஸ்பர் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இத்தனைக்கும், போதுமான சிபாரிசு மூலம் தான் முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

- எனக்குச் சரியானதொரு கிளையில் மேலாளராக நியமனம் கிடைத்த பாடில்லை. சென்னைக்கு வெளியில் போகிறாயா என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

- அண்ணாசாலையில் நான் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த போது, வெல்லிங்டன் அருகே சிக்னலுக்கு நின்ற வெளியூர்ப் 
பேருந்திலிருந்து  துள்ளிக் குதித்து இறங்கிய ஒரு பயணி, என் ஸ்கூட்டர் மீது மோதியதில் நான் தூக்கி எறியப் பட்டேன். தலைக் கவசம் (ஹெல்மட்) அணிந்திருந்ததால் உயிர் தப்பினேன்.

"இவ்வளவும் நடந்ததா? அப்படியானால் அந்த மோதிரம் கடலில் தொலைந்ததும் நல்லதற்கே. இனிமேல் அதனால் யாருக்கும் தொல்லை இல்லை" என்று சற்றே தெளிவான முகத்தோடு கூறினார் வாஸ். அதற்குள் மணி மூன்றரை ஆகிவிட்டது. "நாலு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். வரட்டுமா? எதையும் மனத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று வேகமாக இடத்தைக் காலி செய்தார்.

இப்படியும் மனிதர்களா என்று அயர்ந்து போனேன்.

அதன் பிறகு அவரைப் பற்றிக் கேள்விப்படவில்லை.

******
மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது இது:

குடும்ப ஜோதிடரிடம்  வேறொருவருக்கு ஆலோசனை கேட்கப் போன இடத்தில் என்னுடைய ஜாதகத்தையும்  காட்டியிருக்கிறார், என் மனைவி. 'அடடா, சரியான தோஷம் இருக்கிறதே. உடனடியாக, வெள்ளியில் பவழம் வைத்த மோதிரம் செய்து ஒரு செவ்வாய்க்கிழமையில் இடது கை மோதிர விரலில் அணிந்து கொள்ளட்டும். எப்போதும் கழற்றக் கூடாது" என்றார் ஜோதிடர்.

இன்னும் நான் கழற்றவில்லை!
******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக