வியாழன், மார்ச் 28, 2013

தேவை : நூலகங்களின் உருமாற்றம்

நியூஜெர்சியில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஜான்சன் நூலகம் என்ற நூலகம் உள்ளது. ஏற்கெனவே மூன்று முறை நியூஜெர்சி வந்திருந்த போதிலும் இந்த நூலகத்திற்கு மட்டும் நான் போனதில்லை. இப்போதும் போகாமலேயே இருந்திருக்கலாம். எல்லாம் தலையெழுத்து, வேறென்ன?

குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறப்போவதாக நூலகத்தின் வலைத்தளத்தில் கண்டோம். எனவே போனோம்.

தரைத் தளத்தில் சுமார் பத்தாயிரம் சதுர அடியில் இருந்தது நூலகம். பெரியவர்களுக்கான பிரிவில் விசாலமான மேஜைகள், வசதியான நாற்காலிகள், ஒவ்வொரு மேஜையிலும் இணைய இணைப்புடன் கணினி, மற்றும் பிரிண்டர்கள் இருந்தன. புத்தகங்களை அங்கேயே அமர்ந்து படிக்க மேலும் சில மேஜைகள் இருந்தன. ஆனாலும் எல்லாரும் கணினியோடு தான் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் முதல் பேரறிஞர்கள் வரை அங்கே காண முடிந்தது. குறிப்பெடுக்கத் தாள்களும், பென்சில்களும், சிறுவர்களுக்குப் படம் வரைய கலர் பென்சில்களும் கிறுக்குத் தாள்களும் கேட்டதும் கொடுக்கிறார்கள்.

வேண்டிய பகுதியை அச்சடிக்கவும், ஒளிப்பிரதி எடுக்கவும் வசதிகள் உள்ளன. எல்லாமே இலவசம் தான்.

டி.வி.டி.க்கள் நிறைய உள்ளன. நூலக அட்டை உள்ளவர்கள், ஒரே நேரத்தில் 3 டி.வி.டி.க்களும், இரண்டு நூல்களும் எடுத்துச் செல்லலாம். புதியனவா அல்லது பழையனவா என்பதைப் பொறுத்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ தவணை தரப்படும். தாமதமானால் ஒரு நாளுக்கு அரை டாலர் அபராதம் உண்டு.

முக்கியமான அம்சம், இந்த மாதம் வந்த புதிய நூல்கள் என்று எடுப்பானமுறையில் அடுக்கியிருந்த பகுதி தான்.

பத்திரிகைகள், இதழ்களுக்கான தனிப் பகுதியும் உண்டு. அனேகமாக எல்லா வெளியீடுகளும் அங்கு கிடைக்கும்.

இப்போதெல்லாம் மின்-நூல்கள் அதிகம் வருவதால், அமேசான் தயாரிப்பான கிண்டில் (Kindle) எனப்படும் மின்-படிப்பான் (E-Reader) நூலகத்தில் இருப்பு உள்ளது. இதையும் 2 வாரங்களுக்கு
இரவல் வாங்கலாம். அமெரிக்க நூலகங்களுக்கென்றே
ஒரு தனியார் நிறுவனம் ஆயிரக்கணக்கான நூல்களை மின்-படுத்தியுள்ளது. மேலும் விரிவான நூல்களின் சுருக்கமான மின்-பதிப்புகளும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பட்டியல் நூலகத்தின் இணையதளத்தில் உள்ளது. இதிலிருந்து 5 மின்-நூல்களை ஒரே நேரத்தில் கிண்டிலுடன் இரவல் வாங்கலாம். (நாங்கள் போனதின்
இரண்டாவது நோக்கம், இந்த இரவலுக்காகத் தான்!).

எந்த 5 நூல்களைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நிலவியது.

'எங்கள் பட்டியலில் இல்லாத மின்-நூல்களையும் நீங்கள் பெறலாம். ஆனால் அவை அமேசானில் 20 டாலருக்கு மேற்படாத நூல்களாக இருக்க வேண்டும். கையொப்பமிட்ட வேண்டுகோள் அளித்தால் அரைமணியில் இறக்கித் தருவோம்' என்று நூலகர்(ள்?) கூறினார். கடைசியில் கீழ்க்கண்ட நூல்களை இறக்கிக் கொண்டேன்:

1. The $ 100 Start-up : Chris Guillebeau
2. Beyond Outrage: Robert Reich
3. How to be a Woman : Caitlin Moran
4. Damaged: The Heartbreaking :Cathy Glass
5. Behind the Beautiful Forevers: Life, Death and Hope in a Mumbai Undercity:
(Katherine Boo).

14 நாட்களில் கிண்டிலைத் திருப்பித் தரவேண்டும். இல்லையேல் நாளுக்கு 2 டாலர் அபராதம். தொலைத்துவிட்டாலோ, சுமார் 140 டாலர் தரவேண்டும். ஏமாற்ற முடியாது. கோர்ட்டிலிருந்து
நோட்டீஸ் வரும். (எனவே மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகென்ன, படித்த நூல்களைப்பற்றி எழுதி உங்களை ஒருவழியாக்கி விட வேண்டியது தானே!)

குழந்தைகள் பிரிவில் அவர்களின் உயரத்திற்கேற்ற
நாற்காலிகளும், கணினிகளைக் கொண்ட மேசைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான வண்ணப் புத்தகங்களும், டி.வி.டி.க்களும், விடியோ கேம்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பெரியவர்கள் யாராவது குழந்தைகளோடு வரவேண்டும். அப்போதுதான் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

நூலகத்தின் அடித்தளத்தில் ஓவியர்கள், கலைஞர்கள் தங்கள் கண்காட்சிகளை நடத்திக்கொள்ளவும், பயிற்சி வகுப்புகள் எடுக்கவும் தரமான கணினித்திறன் கொண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் ஒருநாளாவது யாராவது அத்தகைய வகுப்புகளை நடத்திக்கொண்டே இருக்கிறர்கள். குறிப்பாக 'ஸ்பானிஷ்' கற்றுக்கொடுக்கும் வகுப்பு அடிக்கடி நடக்கிறது. நியூ ஜெர்சியில் இப்போது கொரியா நாட்டினர் அதிகம் குடியேறி வருவதால் கொரிய மொழிக்கான  நூல்களும், வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதாம்.

'மேற்படி நூலகம் ஒன்றே ஒன்று அல்ல, மொத்தம் 62 இருக்கின்றன, எங்கள் பெர்கன் தாலுக்காவில்' (Bergen County) என்றார் நூலகர்.
******
தேன்கனிக் கோட்டையில் 7,8,9 வகுப்புகள் படிக்கும் போது, மாலையில் பள்ளி விட்டவுடன், நாள் தவறாமல் நூலகம் செல்லும் பழக்கம் இருந்தது. என்னைப் பார்த்து என் நண்பன்  பே.கோவிந்தராசனும் பழக்கப்படுத்திக்கொண்டான். பரப்பளவில் மிகச் சிறியது, ஆனால் நகரின் முக்கியமான இடத்தில் இருந்ததால் எப்போதும் கூட்டம் இருக்கும்.

பொன்னியின் செல்வனை முதலில் படித்தது அங்கு தான். கலைமகள், மஞ்சரி, கண்ணன், அமுதசுரபி, (அதே சைசில்
அப்போது வந்து கொண்டிருந்த பகீரதனின்) கங்கை ... எல்லா
இதழ்களும் அங்கு எனக்கு விருந்தாகும். மிக நீளமான
சைசில் Illustrated Weekly வரும். Eves Weekly, Mirror, தெலுங்கில் 'பாரதி'
(மாத இதழ்), 'ஆந்திரப்பிரபா' (வாரப் பதிப்பு), கன்னடத்தில் 'பிரஜாம(த்)தா'  வாரப் பதிப்பு, தமிழில் சுதேசமித்திரன் வாரப் பதிப்பு - இவை நான் தவறாமல் படித்துவந்தவை. 

ஆர்.ஷண்முகசுந்தரத்தின் 'நாகம்மாள்' புது மெருகோடு என் கையில் தவழ்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

வார விடுமுறை நாட்களில் நானும் கோவிந்தராசனும் தண்ணீர்க் குடங்களுடன் ஏரிக்கரையில் அமர்ந்து அந்த வாரம் முழுதும் படித்த நூல்களைப் பற்றியும் செய்தித்தாள்களைப் பற்றியும் விவாதிப்போம். சில மணி நேரத்திற்குப்பின் குடங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வீடு திரும்புவோம். (அந்த ஊரில் ஏரி நீர் தான் குடிதண்ணீர் ஆதாரம்).

ஏரியின் அருகில் ஒரு தர்கா இருந்தது. (ஒரு முஸ்லிம் சாதுவின்
சமாதி). ஆண்டு தோறும் அதில் இரண்டு அல்லது மூன்று நாள்
'உருஸ்' நடக்கும். (சந்தனக்கூடு ?) தேர்த் திருவிழா மாதிரி கூட்டம். அந்த சாதுவின் வாரிசான ஓர் இளைஞர் தர்காவின் அருகில்
மாளிகையில் குடியிருந்தார். பரீட்சைக்கு முன்பு மாணவர்கள் தர்காவையும் அவரையும் வணங்கிவிட்டுத் தான் போகவேண்டும் என்று பெற்றோர்கள் உத்தரவு. மத பேதமே இல்லாத அமைதியான இடம்.

உருஸ் நடக்கும் நாட்களில் தர்கா அருகில் கோவிந்தராசனின்
தந்தை கடை போடுவார். பெரிய அளவில் மிட்டாய்க்கடை. (மற்ற
நாட்களில் அவர் வீட்டருகில் கடை). சர்க்கரையால் செய்த குதிரை, குருவி, ஆடு, மாடு, கிருஷ்ணன் போன்ற வண்ண பொம்மைகள் சின்னஞ்சிறிய அளவில் வட்டமான தட்டுகளில் வைத்திருப்பார். லட்டு, மைசூர்பாக்கு, கார வகைகளும் ஏராளம். நல்ல விற்பனை ஆகும். அந்த சில நாட்களில் கோவிந்தராசன் கடையிலேயே இருப்பான். ஆனால் அவனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை. கடையின் அருகில் நின்றுகொண்டு என்னோடு, தான் விரைவில்
எழுதப்போகும் துப்பறியும் கதையைப் பற்றி விவாதிப்பதிலேயே
நேரம் கழிந்துவிடும். தினத்தந்தியில் சிந்துபாத் கதை ஆரம்பித்த
நேரம் அது. அதே போன்ற மர்மக்கதையை 1500 பக்கங்களில் 'கடல் எறிந்த மர்மம்' என்ற பெயரில் எழுதப்போவதாகவும் 'அவுட்லைன்' ரெடியாகிவிட்டதகவும் சொன்னான். (எழுதினரா  இல்லையா என்று தெரியவில்லை. தொடர்பு விட்டுப்போய்விட்டது).
*****
இராணிப்பேட்டை நூலகத்தில் 1965-1974 பத்தாண்டுகளில் நான் பலமுறை பரிசு வென்றிருக்கிறேன், அதிக நூல்களைப்
படித்தமைக்காக. நூலகர் பச்சையப்பன் என்மீது அன்பு கொண்டவர். பழைய இதழ்களை ஏலம் விடும் முன்  ரீடர்ஸ் டைஜஸ்ட், இம்பிரிண்ட், அமைச்சன், மஞ்சரி, பவன்ஸ் ஜர்னல்
முதலியவற்றை எனக்குக் குறைந்த விலைக்குக் கொடுத்து விடுவார். நான் அவற்றை அருகிலிருந்த கணேஷ் பிரிண்டர்சில்
உட்கார்ந்து முக்கிய பகுதிகளைப் பிரித்தெடுத்து, அவர்களிடம்
பைண்டிங் செய்து கொண்டு போவேன். 1974ல் சென்னைக்குப் போகும் வரை அந்த பைண்டிங் நூல்கள் என்னிடம் தான் இருந்தன.

அப்போது துணை நூலகராக இருந்தவர், அல்லாபக் ஷ்   என்பவர். மிகவும் சுறுசுறுப்பானவர். வேலூரிலிருந்து வருவார். சொந்த ஊர், 'கேட்ட வரம் பாளையம்' என்பார். எழுத்தாளர் அநுத்தமா எங்க ஊர்  தான் என்று பெருமிதமாகப் பேசுவார். 'கேட்ட வரம்' நாவலை
அப்போது தான் எழுதியிருந்தார், அநுத்தமா. ஞாயிற்றுக் கிழமைகளில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை என்னிடம் தான் நூலகத்தின் சாவி இருக்கும். புதிய நூல் கட்டுக்கள் வந்திறங்கும் போது அவற்றைப் பதிவு செய்து எண் குறிக்கும் பணியை என்னுடைய பணியாகவே மகிழ்ந்து ஏற்பேன்.

நூலகத்தில் எந்த நூல் உள்ளது, எது இல்லை என்பதை பசையப்பனையும் அல்லாபக்சையும் விட என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்பவர்கள் பலருண்டு. இராணிப்பேட்டை நூலகத்தில் ஒருநாள் ஹிந்து நாளிதழில் வந்த சிறியதொரு வரி
விளம்பரத்தைப் படித்து விண்ணப்பித்ததன் விளைவே எனக்கு
சிடி யூனியன் வங்கியில் அதிகாரியாக  வேலை கிடைக்கக்
காரணமாக இருந்தது. அந்த நூலகத்திற்கு என் நன்றி.

நியூ ஜெர்சி மாதிரி நாகரிகமான அதி நவீன குளுகுளு வசதி
கொண்ட நூலகமாக இல்லாவிடினும், அறிவுப் பசிக்கு வேண்டிய அளவு அமுதம் அளித்த அமுதசுரபிகளாக இந்த இரண்டு
நூலகங்களையும் நான் என்றென்றும் மறவேன்.

ஆனால் இன்று ? தமிழ்நாட்டில் நூலகங்களின் நிலைமை எப்படி
இருக்கிறது?

(தொடரும்)

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com



குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


3 கருத்துகள்:

  1. நூலகம் இங்குள்ள மக்களுக்கு கிடைத்த மிக பெரிய வரப்பிரசாதம். எங்கள் பகுதியில் உள்ள நூலங்களில் தமிழ் ஹிந்தி தெலுங்கு வார இதழ்களும் டிவிடிகளும் கூட கிடைக்கின்றன.

    சார் முடிந்தால் உங்கள் தளத்தில் ப்ளோவர் கெட்ஜெட் சேர்க்கவும்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அங்கே அப்படி... நன்றி...

    இங்கே எப்படி...? தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. இராணிப்பேட்டை நூலகத்தில் 1965-1974 பத்தாண்டுகளில் நான் பலமுறை பரிசு வென்றிருக்கிறேன், அதிக நூல்களைப்
    படித்தமைக்காக. //

    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு