புதன், மார்ச் 06, 2013

நந்தா என்றொரு டாக்டர்

சென்னையில் என்னோடு பணியாற்றிக் கொண்டிருந்த திரு ஆனந்தன் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தவர். கனிவான மனைவி. ஒரே ஒரு குழந்தை. வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. அதாவது குழந்தை பிறக்கும் வரை.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மிக உன்னதமான உணவு என்பதை நன்கு அறிந்த சமுதாயம் அவருடையது. பெற்ற மகவைக் கையிலேந்தி மார்போடணைத்து அமுதூட்டும் போதிலன்றோ ஒரு பெண், தான் பிறவி எடுத்த பயனைப் பெறுகிறாள்!

ஆனால் இந்தக் குழந்தையோ தாய்ப் பால் என்றாலே முகம் கொடுக்க மறுத்தது. கட்டாயப் படுத்திப் புகட்டினாலோ மறு கணமே அருந்திய அமுது தயிர்க் கட்டிகளாய் வழியலாயிற்று!

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு பசும்பாலை வடிகட்டி நீர்க்கப் பண்ணி அதைப் புகட்டி பார்த்தார்கள். அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை. குடித்ததை எல்லாம் குழந்தை வாந்தி எடுக்கலானது.

இம்மாதிரி பால்-ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கென்றே தயாரிக்கப்படும் வேறு சில பால் பவுடர்களைச் சிபாரிசு செய்தனர். எல்லாம் ஒரு வேளைக்குத் தான். பிறகு பலன் நீடிக்கவில்லை. குழந்தை பசியால் அழுது அழுது மேற்கொண்டு அழவும் திராணியின்றி வாடிக் கிடந்தது.

பெற்றவளின் நிலைமை எப்படி இருந்திருக்கும்! குடிக்காத பால் கனத்து, மார்பகம் நெறி கட்டியது. கண்களில் நீர்க் கடலாய்க் கொட்டியது.

எவ்வளவு வசதிகள் இருந்தென்ன, பெற்ற குழந்தைக்குப் பாலூட்ட வழி தெரியாமல் தவித்தார் ஆனந்தன்.

நல்ல வேளையாக, ஜெர்மனியிலிருந்த அவருடைய நண்பரொருவர் குழந்தையின் கேஸ் பற்றிக் கேள்விப்பட்டு, தனது மருத்துவ நண்பர்களுடன் ஆலோசித்து இரண்டு டின்களில் ஒரு புதிய பால் பவுடரை அனுப்பி வைத்தார். அப்பாடா, குழந்தை இரண்டு வாய் குடித்தது. எல்லாமே உள்ளே போனது. வாந்தி வரவில்லை. வயிற்றுப் போக்கும் இல்லை. பெண் மருத்துவர் நன்கு பரிசோதித்து விட்டு, இனிமேல் அதே பவுடரைக் கொடுங்கள் என்று அனுமதி அளித்தார்.

ஆனால் அதில் ஒரு சங்கடம் இருந்தது. அந்தப் புதிய மருந்துப் பவுடர், இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப் படவில்லை. மேலை நாடுகளிலும் கூட, பரிட்சார்த்தமாக அனுமதித்தார்களே தவிர, பொதுவான அனுமதி இன்னும் வரவில்லை. ஆகவே, மருந்துக் கடைகளில் அது கிடைக்கும் வழியாக இல்லை.

ஆனந்தன் தனது வளமான வணிக சமூகத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாரையும்  -பல நாடுகளிலும் இருப்பவர்கள்- இடை விடாமல் தொடர்பு கொண்டு என்ன செலவானாலும் பரவாயில்லை-வாங்கி அனுப்புங்கள் என்று வேண்டிக் கொண்டே இருந்தார்.  பலன் இல்லை.

கையிருப்பில் இருந்த பவுடர் கரைந்து கொண்டே வந்தது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் புது சரக்கு வரவில்லை என்றால் குழந்தை பட்டினி கிடக்க வேண்டியது தான். லட்சாதிபதிக்குப் பிறந்த பிள்ளை!

அந்த நேரத்தில் தான் என்னை சந்திக்க வந்தார் டாக்டர் நந்தா அவர்கள்.

எங்கள் வங்கியில் கணக்குத் தொடங்குங்கள் என்று  எத்தனையோ முறை அவர் வீடேறி வேண்டியிருக்கிறேன். அவரோ அண்மையில் தான் வேறொரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்ததால் அங்கிருந்து கணக்கை நகர்த்த முடியாமல் இருந்தார். என்றாலும் அடிக்கடி தொலை பேசியில் நட்போடு பேசுவார். இளம் டாக்டர். பிராக்டிஸ் அப்போது தான் கொஞ்சம் சூடு பிடித்துக் கொண்டு வந்தது, என்றார். அது குல்பர்காவில்.

சென்னைக்கு நான் மாறி வந்த பிறகு, அவர் ஏதோவொரு மருத்துவ மாநாட்டுக்காகக்  கொழும்பு செல்வதற்காக சென்னை வந்தவர்,  மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறார். ஒரே நாள் மாநாடு. இன்று மாலை போய் நாளை மறுநாள் காலை திரும்பிவிடுவாராம்.

ஆனந்தன் என்னிடம் ஓடி வந்தார். 'சார் இவர் மூலம் எப்படியாவது அந்த பால் பவுடரை வாங்க முடிகிறதா என்று பாருங்களேன்' என்று கெஞ்சினார். கடலில் தத்தளிப்பவனுக்கு சிறு துரும்பும் பற்றுக்கோடு தானே! இருப்பு கரைவதற்குள் வாங்கியாக வேண்டுமே!

ஆனால் கொழும்புவில் இவர் இருக்கப்போகும் ஒருநாளில் மாநாட்டுப் பங்கேற்பு நீங்கலாக, வெளியில் போய் இந்த மருந்தைத்  தேட எவ்வளவு நேரம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் டாக்டர் நந்தா 'வருந்தாதீர்கள், முயற்சிக்கிறேன்' என்று மலர்ந்த முகத்தோடு ஆறுதல் சொன்னார். குழந்தையின் மருத்துவ விவரங்களை இன்னும் தெளிவாகக் கேட்டுக் கொண்டார்.

மறு நாள், ஆனந்தனுக்குப் பொழுதே போகவில்லை. 'சார், அவருக்கு போன் போட்டுக் கேளுங்கள் சார். நாளை பால் டின் வராவிட்டால் குழந்தைக்கு நான் என்ன பதில் சொல்வது சார்' என்று தேம்பி அழும் நிலைக்கு வந்து விட்டார்.

நான் என்ன செய்ய முடியும்? மருத்துவ மாநாட்டில் அமர்ந்திருக்கும் ஒருவரை எப்படித் தொந்தரவு செய்ய முடியும் ?

நல்ல வேளையாக, மாலை ஆறு மணிக்கு போன் வந்தது டாக்டர் நந்தாவிடம் இருந்து. கொழும்பில் கிடைக்க வில்லையாம், கடைசியில் தென் கொரியாவிலிருந்து ஐந்து டின்கள் வாங்கி வர ஏற்பாடு செய்திருப்பதாகவும், அந்தக் கொரிய டாக்டர் இப்போது தான் மாநாடு முடிந்து விமானம் ஏறி சியோல் செனறதாகவும், நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு விமான நிலையத்திலேயே தன்னிடம் கொடுக்கப்பட்டு விடும் என்றும், அடுத்த விமானத்தில் தான் கொண்டு வருவதாகவும் நந்தா சொன்னார். ஆனந்தனிடம் சொன்னபோது மகிழ்ச்சியால் அழுதே விடுவார் போலிருந்தது.

மறுநாள் இரவு ஏழு மணிக்குத் தான் நந்தாவின் விமானம் சென்னை வந்தடைந்தது. தான் அங்கிருந்தபடியே பெங்களூர் விமானத்தைப் பிடிக்க வேண்டியிருப்பதால் விமான நிலையத்திற்கு வந்து பால் டின்களைப் பெற்றுக் கொள்ளச் சொன்னார். ஆனந்தன் விரைந்தார்.

இது இன்னும் இந்தியாவில் அனுமதிக்கப்படாத மருந்துப் பொருள் என்பதால் கஸ்டம்சிலிருந்து வெளிவருவதற்கு ஒருமணி நேரம் ஆகிவிட்டதாம். ஐந்து டின்களையும் பெற்றுக்கொண்ட ஆனந்தன் எதிர் பாராமல் வந்து தனக்கு உதவிய டாக்டருக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியாமல் நின்றாராம். மருந்தின் விலையாக ஐந்நூறு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டாராம் நந்தா . கஸ்டம்சில் செலுத்திய அபராதத் தொகையான  ரூபாய் இரண்டாயிரத்தைப்  பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம்.

ஆனந்தன் அங்கிருந்தே எனக்கு போனில் பேசினார். குல்பர்காவில் இருந்த வெகு சில மாதங்களில், வெகு சில மணி நேரங்களே சந்தித்திருந்த ஒரு மனிதர், இக்கட்டான நிலையில் இருந்த ஒரு குழந்தைக்குத தானாகவே முன்வந்து உதவியதைப் பெரிதும் போற்றினேன். நேரில் விடை கொடுக்க முடியாமைக்கு வருந்தினேன். அபராதத் தொகையைப்  பெற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்றேன். மறுத்து விட்டார். நாளை ஊர் போய்ச் சேர்ந்த பிறகு பேசுகிறேன் என்று முடித்தார்.

******
அடுத்த நாள் அவர் வீட்டிலிருந்து போன் வந்தது. 'டாக்டர் பத்திரமாக வந்து சேர்ந்தார்' என்று அவர் மனைவி சொன்னார். நினைவூட்டும் விதமாக என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, 'குழந்தை கிருஷ்ணா நலமா?' என்றேன். அவ்வளவு தான், கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டார். சில நிமிடங்களுக்கு போனிலிருந்து அழுகை மட்டுமே கேட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஹலோ ' என்று டாக்டரே லைனில் வந்தார். 'ரொம்ப மன்னிக்க வேண்டும், அவள் ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறவள்' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?     

டாக்டர் தொடர்ந்தார்: 'நீங்கள் ஊரை விட்டுப் போன சில மாதங்களுக்குப் பிறகு நடந்தது இது. அன்று கிருஷ்ணாவுக்கு இரண்டாவது பிறந்த நாள். மாலையில் விழா, வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தோம். எல்லோரையும் வரவேற்பதில் நானும் மனைவியும் ஈடுபட்டிருந்தோம். குழந்தை புத்தாடை உடுத்தி, நகை நட்டுக்களோடு கிருஷ்ணர் மாதிரியே எல்லோரிடமும் ஓடியாடி அட்டகாசமாய் இருந்தான். வீடெங்கும் ஆனந்தம் என்றால் அவ்வளவு ஆனந்தம். அப்போது தான் அது நடந்தது' என்று நிறுத்தினார்.

எனக்கு மூச்சு ஒரு நிமிடம் நின்று விடும் போல் இருந்தது. 'என்ன ஆயிற்று டாக்டர்?' என்று கத்தியே விட்டேன். 

டாக்டர் என்றால் மனோ தத்துவம் அறிந்தவர் அல்லவா! மனைவி அருகில் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, 'கேக் வெட்டுவதற்கு குழந்தையைத் தேடிய போது தான் தெரிந்தது, அவனைக் காணவில்லை என்று! எல்லா இடமும் தேடினோம். யாரவது கடத்திக் கொண்டு பொய் விட்டார்களோ என்றும் அஞ்சினோம். ஆனால், நடந்ததை எப்படிச் சொல்லுவேன்?' என்ற போது அவருக்கே அழுகை தாங்க முடியவில்லை.  

'கன்றுக்குட்டிக்குத்  தண்ணீர் வைக்கும் தொட்டியில் தவறி விழுந்திருக்கிறான் அய்யா!' என்று கதறினார்.

' அவனுக்குக் கன்றுக்குட்டி என்றால் மிகவும் இஷ்டம். யாரும் பார்க்கவில்லை, எங்கள் கண் முன்னாலேயே தண்ணீருக்குள் பிணமாக மிதந்து கொண்டிருந்தான் அய்யா! அந்தக் கொடுமையை நான் என்னென்று சொல்வேன்! ' என்றார். அப்புறம் சில நொடிகள் மௌனம்.

அடுத்த நிமிடம், குரலைத் தெளிவு படுத்திக் கொண்டு, "உங்கள் நண்பருக்கு மேற்கொண்டு ஏதாவது உதவி தேவைப் பட்டால் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசச் சொல்லுங்கள். அந்தக் குழந்தைக்கு என்னுடைய ஆசிகள்" என்றார்.

**********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக