திங்கள், மார்ச் 11, 2013

மறக்க முடியாத மஞ்சு - 2

இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
மறக்க முடியாத மஞ்சு -1


2006 நவம்பரில் பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் நடக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்க எனது வங்கியால் அனுப்பப்பட்டேன்.

பெங்களூரிலிருந்து மாலை ஆறு  மணிக்குக் கிளம்பிய விமானம் சுமார் மூன்றரை மணி நேரப் பறத்தலுக்குப் பிறகு என்னை மனாமாவில் இறக்கியது. மாநாடு நடக்க இருந்த ஷெராட்டன் ஹோட்டலிலேயே எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அழைத்துச் செல்லவும் அவர்களின் வேன் வந்திருந்தது.

என்னோடு வேனில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த  ஒரு வங்கியாளர் வந்தார். (ஏதோவொரு சௌத்ரி). அவரும் அதே மாநாட்டுக்குத் தான் வருகிறவர். நான்கு தலைமுறைகள் முன்பு இந்தியாவிலிருந்து போனவர்களாம் அவரின் மூதாதையர்கள். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்ததேயில்லையாம். இட்லி, வடை, பூரி  என்பதையெல்லாம் ஆர்வமாகச் சுவைத்தார். எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டார். சௌத்ரிக்கு மனாமா புதிது என்பதால் என்னோடு ஒட்டிக்கொண்டார். எனக்கு அடுத்த அறை  அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

மறு நாள் காலை ஒன்பது மணிக்கு மாநாடு துவங்கவிருந்தது. மாநாட்டு அமைப்பாளர்கள் எங்களை வரவேற்று அறிமுகப் படுத்திகொண்டார்கள். அப்படி அறிமுகம் ஆனவர்களில் ஒருவர் தான், கோபால் மேனன்.

கோபால் மேனன், ஓராண்டு முன்பு வரை மும்பையில் ஒரு ஏ.டி.எம்  நிறுவும் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அந்த வகையில் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தவர். எங்கள் வங்கிக்கு சுமார் நானூறு ஏ.டி.எம்.களை அவர் நிறுவி இருந்தார். அவருடைய முதல் மார்க்கெட்டிங் வெற்றி அது. அவர் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய,  நேரில் சந்தித்ததில்லை. அவர், அதன் பிறகு வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. அதையும் விட்டு, இப்போது மனாமாவில் இந்தக் கம்பெனியில் இருக்கிறார்.

என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. 'உங்கள் வங்கி தான் எனக்குத் தொழிலில் முன்னேற்றம் கொடுத்தது' என்று புகழ்ந்தார். கட்டாயம் தன் வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்ல வேண்டும் என்று வேண்டினார். அது மட்டுமின்றி, மாநாடு முடிந்த பிறகு பஹ்ரைனைச் சுற்றிப் பார்க்க எனக்கென்று ஒரு கார் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நான் திரும்பிச் செல்லும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார். சௌதிரி தானும் காரில் வருவதாகத் தெரிவித்துக் கொண்டார்.

பொதுவாகவே, மாநாடுகள் என்றாலே நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யும் விஷயம் தானே என்றார் சௌத்ரி. அதிலும், வெளி நாடுகளில் மாநாடு ஏற்பாடு செய்பவர்கள், அதை ஒரு மக்கள்-தொடர்பு-அம்சமாகவே அன்றி, உருப்படியான முடிவுகளைத் தரும் வகையில் அமைப்பதில்லை என்றும் கருதினார். ஆகவே, நாம் இருவரும் கோபால் மேனன் அளித்த காரில்  நாட்டைச்
சுற்றிப் பார்ப்பதை முக்கிய அஜெண்டாவாகக் கொள்ள வேண்டும்
என்றார்.

அதே போல், பிற்பகல் நிகழ்ச்சிகள் நான்கு மணிக்கே முடிக்கப் பட்டன. மலையாளம் பேசும் டிரைவர் எங்களை அழைத்துக் கொண்டு காரில் புறப்பபட்டார். எங்கு பார்த்தாலும் வெள்ளை
வெளேர் என்ற தரை. கட்டிடங்கள்  எல்லாமே வெள்ளை நிறம்
தான். பிரம்மாண்டமான மசூதிகள், ஃ பார்முலா -ஒன் ஓடுபாதை, பெரியதொரு அலுமினியத் தொழிற்சாலை, அண்மையில் திறக்கப்பட்டிருந்த பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சரித்திரப் புகழ் வாய்ந்த சில இடிபாடுகள், பரந்து கிடக்கும் எண்ணெய்க் கிணறுகள், பயன்படுத்தி ஓய்ந்து போன கார்களைக் கடலில் எறிவதற்காகக்  குவித்திருந்த இடம் - என்று பல இடங்களைக் காட்டினார் டிரைவர்.

பிறகு மத்திய கிழக்கு நாடுகளிலேயே முன்மாதிரியாகக் கட்டப் பட்டிருந்த கடற்பாலத்தை நெருங்கினோம். பஹ்ரைனிலிருந்து சௌதி அரேபியாவுக்குச் செல்லும் வழியாம். பஹ்ரைனை விட்டு வெளியேறும் இடத்தில் உயரமான கோபுரம் ஒன்றும் பார்த்தோம். ஏறினோம். சௌத்ரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. 'உங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இல்லையென்றால் நான் பேசாமல் அறையிலேயே கிடப்பேன். புது இடம் என்றாலே எனக்கு அச்சம் மட்டுமின்றி தயக்கமும் கூட' என்றார்.வெறும் பாலைவனமாக இருந்த நாட்டைப்  பசுமை நிறைந்த சோலைவனமாக மாற்றி இருந்தது, எண்ணெய் வளம்.
அத்தனை செழுமைக்கும் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பார்த்தால், முகம் தெரியாதவர்களாய் மலையாளம் பேசிக் கொண்டிருந்த இந்தியர்கள் தான். மத்திய கிழக்கு நாடுகளில் அரபு மொழிக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுவது, மலையாளம் தானாம்.

எங்கும் பேரீச்சை மரங்கள்  அணியணியாக நின்றன. எங்களை வரவேற்பது போல, சில நிமிடங்கள் மழைத் தூறலும் விழுந்தது. மனாமாவின் முக்கியமான தொழிலே வங்கித்துறை என்பதால், பணத்திற்குப் பஞ்சமில்லை. உலகிலுள்ள எல்லா வங்கிகளும்
அங்கே கால் கொண்டிருந்தன.

'கோல்டு சௌக்' என்ற பெயரில், தங்கம் வைரம் விற்கும் கடைகள் பிரம்மாண்டமான ஒரே கட்டிடத்தில் இருந்தன. நூறு கடைகளுக்கு மேல் இருக்கும். எல்லாவற்றையும் நடத்துபவர்கள் அல்லது பணியாட்கள் மலையாளிகளாகவே இருந்தார்கள். தமிழர்கள் பெரும்பாலும் வங்கிப் பணியாளர்கள் அல்லது எண்ணெய்க்  கிணறுகளில் தான் இருப்பார்களாம். மருத்துவர்களும் உண்டு.

இரவு உணவுக்கு ஷெராட்டன் வந்து சேர்ந்தோம். மறுநாள்  மாநாட்டுக்குரிய விஷயங்களின் தொகுப்பான புத்தகம் ஒன்று அறையில் காத்திருந்தது. அதை ஆழ்ந்து படித்துக் கொண்டே உறங்கிப் போனேன்.

காலையில் எட்டு மணிக்கே கோபால் வந்துவிட்டார், தன்
வீட்டிற்கு அழைத்துப் போக. அதிகத் தொலைவில்லை. மிக்க பாதுகாப்பான வீடு. கோபாலும் அவரது மனைவியும்
வரவேற்றார்கள். இட்டிலியும் காப்பியும் வந்தன. அப்போது 'குட் மார்னிங்' என்று மழலைக் குரலில் கூவியபடி ஓடி வந்தாள், மஞ்சு. அவர்களின் ஒரே மகள்.

மெல்லிய தேகம். தங்கம் பூசிய மாதிரி மினுமினுப்பு. முகமெல்லாம் சிரிப்பு. காலையில் எழுந்தவுடன் அழுமூஞ்சியாக நிற்குமே சில குழந்தைகள், அது போலில்லை. தெளிவாக இருந்தது. புதிய மனிதர் என்ற வேறுபாடில்லை.

'குட் மார்னிங்' என்று நானும் அவளைப் பார்த்துச் சொன்னேன். மஞ்சு வெட்கத்துடன் அம்மா பின் சென்று ஒளிந்து கொண்டாள்.
இன்னும் இரண்டு வயது நிரம்பவில்லை. ஆனால் A,B,C,D சொல்லத் தெரிந்துகொண்டிருந்தாள். சில மலையாள
ரைம்ஸ்களும் சொன்னாள். சுமார் அரை மணி நேரமே
அங்கிருந்தேன், ஆனால் அந்தக் குழந்தையுடன் அரை நாள் இருந்த
மாதிரி நிறைவாக இருந்தது.

*****
மாலை மாநாடு முடிந்த பிறகு, சௌத்ரி, சில எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டும், இங்கு சீப்பாக இருக்குமாமே என்று கிளம்பிவிட்டார். நான் ஸ்கந்துவுக்கு ஒரு ரயில் செட்டும், சம்ப்ரித்தாவுக்குப் பிறந்த நாளுக்காக ஒரு செயினும் வாங்கினேன்.
கோபால் உடன் வந்தார்.

இரவு உணவை ஷெராட்டனில் எடுத்துக் கொள்ளலாமென்று போகவிருந்தவனை கோபால் தம்பதியினர் தடுத்தார்கள். 'இங்கு நம்ம ஊர் மலையாள ஓட்டல் ஒன்று உள்ளது. சாப்பாடு நன்றாக இருக்கும். நீங்கள் மீண்டும் எப்போது பஹ்ரைன் வரப் போகிறீர்கள்? அதனால் வாருங்கள், அங்கே போகலாம்' என்று விடாப்பிடியாக அழைத்துச் சென்றார்கள். மஞ்சு வேறு, அம்மாவின் பின்புறமிருந்து 'குட் மார்னிங்' சொல்லிக் கொண்டே இருந்தாள்.

ஓட்டலின் முதல் மாடி. ஒரு பழைய கட்டிடம் தான், ஆனால் தூய்மையாக இருந்தது. மிகுந்த கூட்டம். எல்லாமே இந்தியர்கள் தாம், அதிலும் தென்னிந்தியர்கள் மிகுதி. இடம் பிடிக்கவே சற்று நேரம் ஆனது.

கோபால் தான் ஆர்டர் செய்தார்: வெஜிடபிள்  புலாவ், மட்டர் பனீர், பைங்கன் கா பர்த்தா, ரோட்டி முதலியன. 'முதலில் சூப் கொண்டு
வாருங்கள்' என்றார். 'இங்கு மிக்சட் வெஜிடபிள் சூப் பிரமாதமாக
இருக்கும்' என்றார்.

மஞ்சுவுக்கு ஆனந்தம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இந்த ஓட்டலுக்கு வருவார்களாம். கடந்த மூன்று வாரங்களாக, வெவ்வேறு காரணங்களால் வர முடியாமல் போய் விட்டதாம். அந்த ஆனந்தம். ஆறு பேர் அமரும் மேஜை. பெற்றோர்களுக்கு
நடுவில் மஞ்சு அமர்ந்து கொண்டாள். நான் எதிர்ப்புறமாக.

வழக்கம் போலவே, சப்ளை வருவதற்கு மிகுந்த நேரம் ஆனது. மஞ்சுவின்  பொறுமை எல்லை கடந்து போய் விட்டது. இன்னும் சில நொடிகளில் உணவு வரவில்லை என்றால் ஓவென்று அழுதே விடுவாள் போல் தோன்றியது. தாய், அவளைத் தன்னால் ஆன
மட்டும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளோ, நாற்காலியிலிருந்து எழுந்து நின்று கொண்டாள். உட்கார மாட்டேனென்று அடம் பிடித்தாள்.

நல்ல வேளையாக  சூப் வந்து விட்டது. தூரத்தில் வரும் போதே அதன் வாசனை மூக்கைத் துளைத்தது. பூ வேலைப்பாடு செய்த  பீங்கான் கிண்ணங்களில் ஆவி பறக்க சூப் எங்கள்
முன்னால் அமர்ந்தது. உடனே குடித்து விடலாம் போல இருந்தது. ஆனால் சூடு ஆறியாக வேண்டுமே!

அப்போது தான் எதிர்பாராத  விதமாக அந்த அசம்பாவிதம் நடந்து
விட்டது.

ஆவலோடு உணவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த மஞ்சு,  தன்  முன்னால் இருந்த சூப் கிண்ணத்தை எட்ட முயன்று முடியாமல், தன் வாயை அதன் மீது வைத்து சூப்பைச் சற்று உறிஞ்சி விட்டாள். அடுத்த நிமிடம், உயிரே போவது போல் ஓலம். பெரியவர்களே தொட முடியாமலிருந்த சூட்டை, அந்தப் பிஞ்சுக் குழந்தையால் எப்படித் தாங்க முடியும்! நாக்கு செக்கச் செவேல் என்று சிவந்து விட்டது. ஒரு இடத்திலும் நிற்க முடியாமல் உடம்பெல்லாம் நடுக்கம். என்ன செய்வதென்றே யாருக்கும் புரியவில்லை.

கோபால், குழந்தையை எடுத்துக் கொண்டு கீழே ஓடினார். மனைவியும் பதற்றத்தோடு பின்தொடர்ந்தார். அந்த நிலையிலும் கோபால் தடங்கலுக்காக மன்னிப்பு கோரிவிட்டு, 'இங்கேயே இருங்கள், வந்து விடுகிறேன்' என்று காரோடு கிளம்பினார்.

சுற்றி நின்ற எங்கள் எல்லாருக்கும் இன்னதென்று சொல்ல முடியாத துக்கம். பக்கத்திலேயே குழந்தைகள் ஆஸ்பத்திரி இருப்பதாகவும், சரிசெய்து விடலாம் என்றும் பேசிக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழிந்த பிறகு கோபால் வந்தார். முகம் சற்று தெளிந்திருந்தது. 'நல்ல வேளை, எங்கள் ஃபேமிலி டாக்டர் இருந்தார். சரியான மருந்துகள் கொடுத்திருக்கிறார். நாளை காலை
சரியாகிவிடும் என்று உறுதியளித்திருக்கிறார்' என்றார். அப்போது தான் எல்லோருக்கும் உயிர் வந்தது எனலாம்.

மேற்கொண்டு சாப்பிடுவதற்கு எனக்கு மனமில்லை. ஆசை ஆசையாக வந்த குழந்தை சாப்பிடாமல் பெரியவர்களான நாங்கள் மட்டும் சாப்பிடுவதா என்று மனதிற்குள் ஆத்திரம் எழுந்தது. ஆனால் கோபால் விடுவதாக இல்லை. அவருக்கும் பசி மீறி விட்டது. சப்ளையர் வந்து, சார், சீக்கிரம், கடை மூடும் நேரம் ஆகிவிட்டது என்றார். ஆர்டர் செய்த உணவை பொட்டலம் கட்டிக் கொண்டு காரில் வைத்துச்  சாப்பிட்டோம்.
******
மறு நாள் பகல் இரண்டு மணிக்கு எனக்கு விமானம். பெங்களூர் திரும்புவதற்கு. ஒன்றரைக்கெல்லாம் விமான நிலையம் வந்து விட்டேன். (சௌத்ரி காலையிலேயே கிளம்பி விட்டார்). டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு எனது சக்கரம் வைத்த
பெட்டியைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்ட போது, 'குட் மார்னிங்' என்று பழகிய மழலைக்குரல் கேட்டது. மஞ்சு!

'அங்க்கிளுக்கு ஸாரி சொல்லுடா கண்ணு' என்று மஞ்சுவிடம்
என்னைக் காட்டினார், கோபாலின் மனைவி. 'நேற்று அங்க்கிள் உன்னால தான சரியா சாப்பிட முடியாமல் போச்சு' என்றாள். கோபாலும் மீண்டும் மீண்டும் ஸாரி சொன்னார்.

நான் ஓடி வந்து மஞ்சுவைத் தூக்கி முத்தமிட்டேன். 'நான் தாண்டா  கண்ணு உனக்கு ஸாரி சொல்லணும்' என்றேன். 'இவ்வளவு
சமர்த்துக் குழந்தையுடன் சாப்பிட முடியாமல் போனதற்கு' என்றேன். 'ஆ காட்டு' என்றேன். நாக்கில் தடிப்பாகச்  சிவப்பு நிறம் இருந்தது. 'வலிக்கிறதா' என்றேன். புரிந்தோ புரியாமலோ, 'நோ' என்று தலையாட்டினாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன். பிறகு, 'வரட்டுமா, பை' என்று கைகளை ஆட்டினேன்.

மஞ்சு சிரித்தாள். இரண்டு கைகளையும் மேலே தூக்கி 'பை' என்றாள்.
*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக