ஞாயிறு, மார்ச் 17, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 4 (இறுதி)

இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3


திங்கட்கிழமை காலை. பள்ளியில் எனக்கு முதல் நாள். முதல் தொழிலில் முதன்முதலாய் நுழைகிறேன். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தருகிறேன், எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பிள்ளையாரை வேண்டினேன். ஆஞ்சநேயரையும் தான்.

தலைமை ஆசிரியர் வரும் வரையில் பள்ளியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மொத்தம் ஒன்பது வகுப்பறைகள். ஆசிரியர் அறை ஒன்று. மாணவர்களின் கட்டுரை நோட்டுக்கள், திருத்தப்பட்ட, படாத விடைத்தாள்கள், புத்தகங்கள் போன்றவை
ஐந்தாறு மர அலமாரிகளில் கிடந்தன.


தொழிற்கல்விக்கூடம் ஒன்று. விளையாட்டுச் சாமான்கள் வைக்கும் அறை, மாணவர்களுக்கான கூட்டுறவுப் பண்டகசாலை என்று ஓர் அறை. கூரை சிதைந்து இன்னொரு அறை. வெளிப்புறம் சுற்றுச்சுவர் ஓரளவு நல்லநிலையில் இருந்ததால் கால்நடைகள் உள்ளே வராமல் வெளியிலேயே நின்றன.

தலைமை ஆசிரியர் நாகராஜன் போளூரில் இருந்து தனது ஜாவா மோட்டார் சைக்கிளில் வந்தார். திங்கட்கிழமை என்பதால் காலையில் 'அசெம்பிளி' உண்டு. மாணவர்கள் 'ப' வடிவத்தில் வகுப்பு வாரியாக நின்றனர். கொடிமரத்தின் அருகில்
நடுநாயகமாக நாகராஜன். அவர் பின்னால் மற்ற ஆசிரியர்கள், குமரன் உள்பட.

என்னை வரவேற்று அனைவருக்கும் அறிமுகம் செய்தார், நாகராஜன். 'இவர் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்தவர். ஆசிரியப் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் வந்திருக்கிறார். இந்தப் பள்ளிக்கு இனி நல்ல காலம்' என்றார். மாணவர்கள் கை தட்டினார்கள்.

எனக்கு 9ஆம் வகுப்புக்கு ஆங்கிலமும், 10, 11 வகுப்புகளுக்கான கணிதமும், 9,10,11 மூன்று வகுப்புகளுக்கும் அறிவியலும் என்று வரையறுக்கப்பட்டது. ஆசிரியர்களிலேயே எனக்கு தான் அதிக பணிச்சுமை என்பதாக மற்ற ஆசிரியர்கள் அனுதாபப்பட்டார்கள். ஆனால் வேறு வழியில்லை. ஏனென்றால் என்னைத் தவிர பட்டதாரி ஆசிரியர்கள் வேறு யாரும் அங்கே இல்லையே!
****
ஒன்பதாம் வகுப்பில் காலை முதல் பீரியட் எனக்கு. ஆங்கிலம் எடுக்க வேண்டும்.

வகுப்பில் நுழைந்தவுடன் "வணக்கம் ஐயா" என்று எல்லாரும்  எழுந்து நின்றனர். பதினைந்து மாணவர்கள், மூன்று மாணவிகள்.

'ஒவ்வொருவராக அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்' என்றேன்.

பெயர் சொன்னார்கள். முதல்வன், 'ஏ.அண்ணாமலை' என்றான். அடுத்தவன் 'எம்.அண்ணாமலை' என்றான். மூன்றமவன் 'கே. அண்ணாமலை' என்றான். பதினைந்து மாணவர்களில் 12 பேர், அண்ணாமலைகளாகவே இருந்தனர். திருவண்ணாமலைக்கு அருகில் இருந்ததால் வந்த வினை! (நேற்று எனக்கு அறிமுகமாகியிருந்த அண்ணாமலை, 'சி.அண்ணாமலை' யாம்!)

மாணவிகளில் ஒருத்தி அஞ்சலை. இன்னொருத்தி மணிமேகலை. மூன்றாமவள் தேவிகா.

மற்ற இருவரையும் விட தேவிகா சற்று வயதானவளாக இருந்தாள். அது மட்டுமல்ல, திருமணம் ஆகியதன் அடையாளமாக கழுத்தில் தாலி தொங்கியது. காலில் மெட்டியும் இருந்தது. மற்ற இருவரை விட அதிகம் வெட்கம்  காட்டினாள். பார்த்த உடனேயே இவளுக்குப் படிப்பில் நாட்டம் இருக்காது என்று புரிந்தது.

பள்ளி ஆசிரியராக இது தானே கன்னி அனுபவம்! முதல் முதலில் என்ன பேசி வகுப்பைத் தொடங்குவது என்று மனதில் ஒத்திகை பார்த்திருந்ததெல்லாம் மறந்து போயிற்று. "டியர் ஃப்ரண்ட்ஸ்" என்று ஆரம்பித்தேன். அதற்குள் 'ஹெட்மாஸ்டர் கூப்பிடுகிறார்' என்று கஞ்சம்மா மெல்லிய குரலில் சொல்லிவிட்டுப் போனார். (கஞ்சம்மா, கடைநிலை ஊழியர். கணவரின் மரணத்திற்குப் பின் போராடி  இந்த வேலை கிடைத்ததாம்).
***
தலைமை ஆசிரியர் நாகராஜன் சற்று கம்பீரமான  உருவம்
கொண்டவர். உயரம் ஆறடி இருக்கலாம். பருமன் சராசரியை விட
அதிகம் என்றாலும் அந்த உயரத்திற்கு அதிகமாகத் தெரிய வில்லை. நிறைய நிலபுலங்கள் உண்டாம். வசதியானவர்
என்றார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் வந்து விடுவார்
என்று சந்தோஷப்பட்டார் ஒரு ஆசிரியர். (அவருக்கு முன்னால்
இருந்தவர், மாதத்தில் நான்கு நாட்கள் தான் வந்தாராம்). பார்வைக்கு முன்கோபி மாதிரி தோன்றினாலும், உண்மையில் பின்கோபியும் கூடவாம்.

"ப்ளீஸ் ஸிட் டௌன்" என்று  நாற்காலி காட்டினார். எப்போதும்  அவரது அறையில் இரண்டு மூன்று ஆசிரியராவது
இருக்க வேண்டுமாம். இப்போது குமரனும் இருந்தார்.

என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். என்னைப் பத்திரமாக மருத்துவாம்படியில்இருந்து கொண்டுவந்து சேர்த்ததைச் சுவையாக வர்ணித்தார் குமரன். மணியக்காரர் வீட்டில் குடி வந்ததையும் சொன்னார். 'குட், அப்படியானால் நீங்கள் செட்டில் ஆகி விட்டீர்கள் என்று அர்த்தம். இனி உங்கள் முழு கவனமும் பள்ளியின்மீது தான் இருக்க வேண்டும். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்' என்றார்.

ஸிலபஸ், நோட்ஸ் ஆஃப்  லெசன்ஸ் பற்றியும் எந்த நேரத்திலும் டி.ஈ.ஒ. திடீர் விசிட் வரலாம் என்றும் தயாராக இருக்க வேண்டும் என்றும் எந்த ஐயப்பாட்டுக்கும் தன்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்றும் சொன்னார். பொருள்கள் வாங்குவதற்கு அனேகமாகப் போளூர் தான் சிறந்தது என்றும், நேரமாகி விட்டால் தன் வீட்டிலேயே தங்கி மறுநாள் போகலாம் என்றும் மனைவி நன்றாகச் சமைப்பார் என்றும் விளக்கினார். மற்றவர்கள் ஆமாம் போல் தலையசைத்தார்கள்.

பிறகு, குமரனை அழைத்து, 'அந்த விஷயம் சொல்லி விட்டீர்கள் அல்லவா?' என்றார். குமரன் 'இல்ல சார் ..' என்று அசடு வழிந்தார். இன்னொரு சீனியர் ஆசிரியர், 'அவர் கூச்சப் படுகிறார். நான் சொல்லிவிடுகிறேன்' என்றார். தலைமை ஆசிரியர், 'வேண்டாம்....... கஞ்சம்மா, கஞ்சம்மா' என்று கூப்பிட்டார்.

'கஞ்சம்மா, நம்ம செல்லப்பா சார் புதுசா வந்துருக்கார். இன்னும் கல்யாணம் ஆகலே. அதனாலே அவர் ஜாக்கிரதையா இருக்கணுமில்லையா, எல்லா விஷயமும் அவருக்கு சொல்லு. முக்கியமா...' என்று இழுத்தார் தலைமை ஆசிரியர்.

'தேவிகா விஷயம் தானுங்களே...நான் விவரமா சொல்லிடறேன், வாங்க சார்..' என்று என்னை அந்த அறையின் ஓரமாகக் கூட்டிச்சென்று கிசுகிசுத்த குரலில் கஞ்சம்மா சொல்லலானார்.
****

தேவிகா தாயில்லாத பெண். தகப்பன் விவசாயக் கூலி. குடிகாரன். பெண் நன்கு படிக்கக்கூடியவள். ஆறாவது வரை அவள் நல்ல மார்க்கு எடுத்தவள் தான். அழகாக இருப்பாள் என்பதால்
யார் கையும் பட்டு விடக் கூடாதே என்று அவளுடைய
பாட்டி யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் தாய் மாமனுக்குக் கட்டிவைத்து விட்டாள். அதிலிருந்து தான் வந்தது சோதனை.

மாடசாமி இவளை விட பத்து வயது மூத்தவன். கட்டுமஸ்தான
தேகம். இவளுக்கோ பள்ளிக்கூட வாசனை இன்னும் மாறவில்லை.
அவனுக்கோ இணங்கிப் போகத் தெரியவில்லை. இவள் வாழ மாட்டேன் என்று வந்து விட்டாள். அவன் இப்போது துபாயில் வேலை செய்கிறான்.

இதெல்லாம் ஐந்து வருடங்கள் முன்பு நடந்தது. அதன் பிறகு படிப்பில் நாட்டம் போய் விட்டது. தகப்பன் சொல்வதையும் கேட்பதில்லை. பாட்டி மட்டும் ஒவ்வொரு வருடமும் கோடை
விடுமுறைக்குப் பள்ளி மூடும் முன்பு தலைமை ஆசிரியரைப் பார்த்து எப்படியாவது அவளை இந்த வருஷம்  பாஸ் போட்டு விடுங்கள் என்று கெஞ்சுவாள். அடுத்த வருடம் இவளை பெயில் ஆக்கி விடுங்கள் என்பாள். (சீக்கிரமே எல்லா கிளாசும் பாஸ் ஆகி விட்டால் அவனோடு துபாய்க்கு போகவேண்டி வருமே என்பதால்).

ஆனால் பெண் குழந்தைகளை இரண்டு வருடத்திற்கு மேல் பெயில் ஆக்கக் கூடாது என்று விதி இருப்பதால், அவள் இப்போது ஒன்பதாவது வரை வந்திருக்கிறாள்.

'அவ கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க சார். இல்லேன்னா பேர் கெட்டுப் போயிடும்' என்றாள்.

வெளியில் வரும்போது இன்னும் மெதுவான குரலில், 'நான் சொன்னேன்னு யாருக்கும் சொல்லிடாதிங்க சார். அவளுக்கும் சில வாத்தியார்களுக்கும் தொடுப்பு உண்டு சார்.' என்றாள்.

அவள் வெளியில் போன பிறகு, அந்த சீனியர் ஆசிரியர் இன்னும் மெதுவான குரலில், 'சார், இவள் சொல்வதை முழுதும் நம்பி விடாதீர்கள். இவளுடைய பையனுக்கு தேவிகா மேல் ஆசை. அதற்குள் அவளுக்குக் கல்யாணம் செய்து விட்டார்கள். பொறாமையில் இவள் இல்லாததும் பொல்லாததும் சொல்லக்கூடும்.' என்றார்.

'பொதுவாக டிராயிங் மாஸ்டர்னாலே பொண்ணுங்களுக்கு ரொம்ப இஷ்டம். குமரன் சார் மேல தேவிகாவுக்கு ஒரு கண்' என்றார்.
*****
வகுப்புக்குப் போனேன். ஆங்கிலப் பாடம் தொடங்கினேன். ஆனால் கவனம் முழுக்க தேவிகாவின் மீதே இருந்தது. தேவையில்லாத தகவல்கள் முதல் நாளே வந்து தொலைத்ததே என்று கோபம்
கோபமாக வந்தது. அவளும் தேவையில்லாமல் அடிக்கடி மாணவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவள் அன்று முழுவதும் வாயே திறக்கவில்லை.
*****
மாலை கடைசி பீரியட் எனக்கு இல்லை. எனவே நோட்ஸ் ஆஃப் லெசன்ஸ் எழுதலாம் என்று ஆசிரியர் அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன். மற்றபடி அறையில் வெளிச்சம் இல்லை. மின் விசிறி பல நாட்களுக்கு முன்பு ஓடியிருக்கவேண்டும்.

அப்போது தான் அந்த உரையாடல் காதில் விழுந்தது.

'நீங்க ரொம்ப மோசம் சார்..' என்று ஒரு பெண் குரல்.
'உஷ் ..மெதுவா பேசு' இது ஆண் குரல்.

'பின்ன என்ன சார்? நீங்க தானே நேத்து ராத்திரி வான்னீங்க? ரொம்ப நாளா கேட்டீங்களேன்னு வந்தா.. கட்டில்ல
இருந்து பேயப் பாத்த மாதிரி ஓடிப் போய்ட்டிங்களே!'

'அடிப் பாவி! போயும் போயும் நேத்தா வந்தெ? நேத்து குமரன் சார் வீட்டு கட்டில்ல புது சாரில்ல இருந்திருக்கணும்... அய்யய்யோ, அவர் உன்னப் பாத்துட்டாரா?'

'நல்ல வேளை, நான் பின்னாடி வழியா தப்பிச்சிட்டேன்'.
*****
சீனியர் ஆசிரியருக்கும் தேவிகாவுக்கும் நான் அங்கிருந்தது தெரிந்திருக்க நியாயமில்லை.
*****
(c) Y.Chellappa.
email: chellappay@yahoo.com


குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


3 கருத்துகள்:

  1. ஆசிரியர் வாழ்வில்தான் எத்தனை சுவாரஸ்யங்கள்? அப்புறம் அந்த அண்ணாமலைகளை எப்படிக் கூப்பிட்டு சமாளித்தீர்கள் என்பதைச் சொல்லவே இல்லையே. தேவிகா விஷயம்... அழகிய ஒரு சிறுகதை! அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இன்னும் ஏராளமான கதைகள் உண்டு. படிக்க ஆளிருந்தால் எழுத நான் தயார்! பொறுத்திருங்கள்.

      நீக்கு