(சிறுகதையை உரைநடையில் தான் எழுதவேண்டுமா? கவிதையில் எழுதினால் படிக்கமாட்டீர்களா?)
ஸ்ரீ ரங்கம் திருக்கோயில் |
அம்பாள் கோவில் வாசலிலே
அழகுத் தேராய் நீயிருந்தாய்
அடுத்த வரிசையில் நானிருந்தேன்
மாலைத் தென்றல் வரவில்லை
பகலாய் வெப்பம் காற்றினிலேகூட்டம் வழிந்த கோவிலிலே
குளிராய் வந்தாய் நீ யங்கே!
காஞ்சிப் பட்டும் கண் மையும்
கன்னம் மஞ்சள் மினுமினுப்பும்காரில் இறங்கி வந்திட்டால்
கடைக்கா ரர்கள் விடுவாரோ?
அம்மா வாங்க என்றார்கள்
அக்கா என்றாள் ஒரு சிறுமிதேங்காய் பழம் பூ இந்தாங்க,
ரூபாய் இருபது என்றார்கள்
சின்னப் பெண் என அவளிடமே
சில்லறை தந்தாய், பை பெற்றாய்பின்னா லிருந்த நானும் தான்
பெற்றேன் அதுபோல் எனக்கொன்று!
அர்ச்சனை சீட்டு வரிசையிலும்
அடியேன் முன்னே நீ இருந்தாய்நுழைவுச் சீட்டு பெறுகையிலும்
பின்னால் இருந்தேன், பார்த்தாயா?
ஒரு கண்ணாலே கோவிலையும்
மறு கண்ணாலே உன்னழகும்
வரிசையி லுள்ளோர் பார்க்கின்றார்
பாவி எனக்கோ வாய்க்கவில்லை!
கோபுர தரிசனம் காண வந்தால்
கூந்தல் தரிசனம் தருகின்றாய்!மல்லிகை முல்லை சாதியுடன்
ஒற்றை ரோஜா மணக்கின்றாய்!
அர்ச்சகர் வந்தார், பெயர் கேட்டார்
அத்தனை பேரும் உனைப் பார்த்தார்
கைப்பை கொடுத்தாய், சீட்டையும் தான்,
‘கவிதா’ என்றாய் மென் குரலில்!
பூவனம் நடுவே பூத்தவளாய்
புவனம் காக்கும் அம்பாள் முன்
கவிதா என்றே பெயர் சொல்லி
மந்திரம் சொன்னார் அர்ச்சகரும்
கற்பூரத்தைக் கை ஒற்றி,
குங்குமம் ஏற்றுக் கைகூப்பி,கண்கள் ஒருகணம் மூடுகிறாய்
கடவுளிடம் நீ வேண்டுகிறாய்!
குங்குமப் பொட்டலம் பெறுவதற்குள்
கும்பல் வந்து தள்ளிவிடஎங்கோ விழுந்தேன், பிரிந்து விட்டோம்
இன்னொரு கனவாய் நீ மறைந்தாய்!
வலப்புற மாக மூன்று தரம்,
நவக்கிர கத்திற்(கு) ஒன்பது மாய்
சுற்றிச் சுற்றி வருகின்றேன்
சொல்லாமல் நீ ஏன் போனாய்?
தெப்பக் குளம் தான் போனாயோ?
தெரிந்த வரையில் நீ யில்லைசெருப்புகள் வைக்கும் இடத்தி னிலும்
தேடிப் பார்த்தேன், காணவில்லை!
‘கவி தா’ என்றே கடவு ளிடம்
கடன்கேட் கத்தான் போயி ருந்தேன்கவிதா அங்கே ஏன் வந்தாள்?
கால்கள் மிகவும் சோர்ந்து விட்டேன்
‘அண்ணா அண்ணா’ என்றபடி
அருகே வந்தாள் அச்சிறுமி.தேங்காய், பூ, பழம் விற்றாளே,
தேடி எதையோ தருகின்றாள்:
“அம்மா சில்லறை தரும்போது
அவங்க கையில் நழுவி, அதுகாசுடன் காசாய் என்பையில்
கலந்து விட்டது, இந்தாங்க”
என்றாள் சிறுமி. என் கரத்தில்
இட்டாள் அழகிய கணையாழி!‘அம்மா’ என்றது கவிதாவை!
(அசடு, அவள் யார் நான் யாரோ?)
“ஆடி மாசம் வெள்ளி யிலே
அழகு மோதிரம் இல்லேன்னாஅம்மா கோவமா யிருப்பாங்க,
பாவம், சீக்கிரம் போய்க் கொடுங்க”
என்றாள் சிறுமி. நகர்ந்து விட்டாள்
ஏதும் கேட்க வழியில்லைவியாபா ரத்தில் மூழ்கி விட்டாள்
வியந்தேன், ஏதும் புரியாமல்!
கவிதைக் கன்றோ நான் வந்தேன்
கணையா ழிக்கா நான் வந்தேன்?கவிதா என்னும் கன்னியளைக்
கண்டு பிடித்தல் எங்ஙனமோ?
கார்கள் நிறுத்தும் இடமெல்லாம்
கவிதா என்றே தேடி நின்றேன்பூக்கள், மணிகள், வளையல்கள்
புழங்கும் கடைகளில் நோட்டமிட்டேன்
இரவில் கதவு பூட்டும் வரை
இறைவன் கோவிலில் தானிருந்தேன்
மோதிரம் தேடி வருவாளோ?
மொத்த விழிகளும் கூட்டி நின்றேன்.
எங்கே போனாள் என் கவிதா?
எப்படிக் காண்பேன் இனி, அவளை?முகத்தை அறிந்தேன் இல்லையே,
முதுகை யன்றோ நானறிவேன்!
யாரைக் கேட்டால் வழி பிறக்கும்?
(இணையமும் அன்று இல்லையே!)நாள்தோறும் நான் கோவிலையே
நாற்பது தடவை சுற்றி வந்தேன்
அடிக்கடி கோவிலில் காண்பதினால்
அற நிலயத்துறை ஆளென்றேஅர்ச்சக ரெல்லாம் பணிகின்றார்,
அடியே னுக்கே முன்னு ரிமை!
கருவறை போயும் கண்ணிரண்டும்
கன்னியர் மீதே செலுத்திடுவேன்கடுத்தார் சிலபேர், ஒரு பாட்டி
‘கல்யாண மாச்சா’ எனக் கேட்டார்!
ஆடியும் போச்சு, ஆவணி போய்
பங்குனி, சித்திரை வந்தாச்சு!கவிதா, கவிதா என்பதிலே
கவிதையும் மறந்து போயாச்சு!
சின்னஞ் சிறிய மோதிரம் தான்
தினமும் என்முன் சிரிக்கிறது
இன்னொ ருத்தரின் பொருளென் றால்
என்ன மாய்த்தான் கனக்கிறது!
எங்கே உள்ளாய் கவிதா நீ?
இந்தக் கவிதையைப் படிப்பாயா?கனவென் றாலும் வந்துவிடு:
இந்தா உந்தன் கணையாழி !
*****
இந்தக் கவிதைகதை அழகோ அழகு .
பதிலளிநீக்குகவிதாவின் கணையாழி மிகவும் சங்கடமான சுமையாயிருந்தால் கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.
அருமையான கவிதை....இல்லையில்லை கதை சார்.
நன்றி பகிர்விற்கு.
எப்படி எழுதினால் என்ன...?
பதிலளிநீக்குஅசத்திட்டீங்க... போங்க... வாழ்த்துக்கள்...
"கண்ணில் வரும் காட்சியெல்லாம்
பதிலளிநீக்குகண்மணியை உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ளே இனிக்கும்"
"வராக நதிக்கரையோரம்
ஒரேயொரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சே..."
என்பது போல் ஒரு மெல்லிய உணர்வை அழகான வரிகளில் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
வாழ்த்துகள்...
நல்ல கவிதையை ரசிப்பவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க! தொடர்ந்து எழுதுவேன். ரசியுங்கள். நன்றி.
பதிலளிநீக்குகவிதையில் ஓர் ஏக்கத்தை உணர முடிகின்றது அய்யா. நன்றி
பதிலளிநீக்குஅருமை.மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்கு