மீண்டும் அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீண்டும் அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 29, 2013

மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (அமெரிக்கா) + அவரது கடைசி உரை


மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தில் உள்ள படம் 
ஆறு மாத அமெரிக்கப் பயணம் முடிவடையும் தறுவாயில், அட்லாண்ட்டாவில் மகன் வீட்டில் பன்னிரண்டு நாட்கள் செலவழிக்க முடிந்தது. அதை விட மனநிறைவளித்த நிகழ்ச்சி, 1929ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் அட்லாண்ட்டாவில் பிறந்து, 1968 ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம் நாள் கொலையாளி ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான காந்தீயப் போராளி, கறுப்பினத் தலைவர், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) வீட்டில் சில மணி நேரம் செலவழிக்க முடிந்தது தான். 

ஞாயிறு, ஜூலை 21, 2013

ஆடி வெள்ளியில் அட்லாண்ட்டாவில் மகாலட்சுமி தரிசனம்

அட்லாண்ட்டா -மகாகணபதி-(கோவில் இணையதளத்திலிருந்து)
 மகனைப் பார்ப்பதற்காக அட்லாண்ட்டா வந்தோம். சென்னை மாதிரியே வெயில். சென்னை மாதிரியே இந்தியப் பொருள்கள் எது வேண்டுமானாலும் கிடைக்கும் பெரும் கடைகள். நகரின் நடுநாயகமான இடத்தில்  இருபத்து நான்கு மாடி அடுக்கில் பதினான்காவது மாடி. எதிரில் ஹயாத் ரீஜென்சி ஓட்டல். சன்டிரஸ்ட் பாங்க். சற்று நடந்தால் குழந்தைகள் மியூசியமும், அமெரிக்காவிலேயே பெரியதான ‘அக்வேரிய’மும். 1996ல் ஒலிம்பிக் போட்டிகள் இவ்வூரில் நடந்தபோது ஏற்படுத்தப்பட்ட ‘செண்ட்டீனியல் ஒலிம்பிக் பார்க்’கும் அருகிலேயே உள்ளது.

நேற்று (19.7.2013) வெள்ளிக்கிழமை. காலை முதலே மழை தூறிக் கொண்டிருந்தது. அதே சமயம் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. ரிவர்டேல் (Riverdale) என்ற இடத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வரலாமே என்று தோன்றியது. கிளம்பிய பிறகு தான் ‘இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை’ என்பது நினைவுக்கு வந்தது. 

ஞாயிறு, ஜூலை 07, 2013

‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண்டும் அமெரிக்கா - 5)


Orchids - New York Botanical Garden – 12 March 2013


அமெரிக்கா வரும்போதெல்லாம் அதிகம் சென்று பார்ப்பது தாவரவியல் பூங்காக்களையும், வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களையும் தான். நிறைய படங்கள் சேர்ந்துவிட்டன. இவற்றைக் கோர்த்து எழுத வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
கூகுளில் எதையோ தேடும் போது திடீரென்று கிடைத்தது, கல்கி நாவல்களுக்கான “Apps”.   



புதன், ஏப்ரல் 24, 2013

மீண்டும் அமெரிக்கா-4


பால்டிமோரில் நிற்கும் பழைய கப்பல் 

இரவு பதினோரு மணிக்கு விடுதிக்குத் திரும்பி, தொலைக்காட்சிப் பெட்டியை திருகிய உடன், பாஸ்டன் (Boston)  மாரத்தானின் போது வெடிகுண்டு வைத்ததாகத் தேடப்பட்டு வந்த 19 வயது இளைஞன் ஸோக்கர் ஸர்ணயேவ் (Dzhokhar Tsarnaev) பிடிபட்டுவிட்ட செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. அவனை ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடிய படகினுள்ளிருந்து பிடித்தார்களாம். கழுத்திலும் காலிலும் குண்டுபட்டிருந்ததால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டார்களாம். 24 மணி நேரமாக ஊரடங்கு சட்டத்தின் கீழிருந்த பாஸ்டன் நகரம், குற்றவாளி பிடிபட்டுவிட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பொதுமக்கள் தெருவில் திரண்டு வந்து கொண்டாடியதைக் காட்டினார்கள்.

சனி, ஏப்ரல் 20, 2013

மீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்

 வியாழனன்று (18.4.2013) பகலில்  நியுஜெர்சியிலிருந்து நான்கு நாள் பயணமாக பால்டிமோர்/வாஷிங்டன்  வந்தோம். வசந்தகாலம் எங்களைத் தொடர்ந்து வந்தது. நியுஜெர்சியின் குளிரானது கொஞ்சம் கொஞ்சமாக விலகி, லேசான வெயிலுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. இடையில் டிலாவர்
என்ற ஊரில் சாலையோர இளைப்பாறும் விடுதியில் ஸ்டார்பக்ஸ் காப்பி சாப்பிட்டு வண்டிக்கு 'கேஸ்' நிரப்பிக்கொண்டு  பால்டிமோரை நெருங்கும்போது மழை தூற ஆரம்பித்துவிட்டது.

புதன், மார்ச் 13, 2013

மீண்டும் அமெரிக்கா - 2


ஆர்க்கிட் பூக்கள்  திருவிழா

2013 மார்ச் 12 - செவ்வாய்க்கிழமை யன்று  நியூயார்க் தாவரவியல் பூங்காவுக்குப் போக வேண்டுமென்று முதல் நாளே முடிவு செய்திருந்தோம். ஆனால் காலையிலிருந்தே மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. (சனி, ஞாயிறு, திங்கள் நல்ல வெயில் இருந்தது). கிளம்பும் போது பத்தே முக்கால் ஆகிவிட்டது. மழை நின்றபாடில்லை.

சென்னை மாதிரி, பத்து நிமிடம் மழை பெய்தாலே ஊரெங்கும் தண்ணீர், சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல் என்பதெல்லாம் இங்கு இல்லை. எவ்வளவு மழை வந்தாலும் நீர் உடனே வடிந்து விடுகிறது. எனவே காரோட்டிகளுக்குக் கவலையில்லை.

தாவரவியல் பூங்காவில் அன்று "ஆர்க்கிட் பூக்கள்" திருவிழா. பல்வேறு வகையான ஆர்க்கிட் பூக்கள், அமெரிக்கா மட்டுமின்றி வேறு நாடுகளிலிருந்தும் தருவிக்கப் பட்டிருந்தன. அழகான கண்ணாடி  மாளிகையில் கண்ணைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

(பூங்காவிலேயே ஆர்க்கிட் செடி வளர்ப்புக்கான தனி மாளிகை
இருந்தது). ஒவ்வொரு பூச்செடி அருகிலும்
அதன் பெயரும், தாவரவியல் பெயரும், அதிகம் வளரும் நாடுகளின் பெயர்களும்
சிறு அட்டையில் தரப்பட்டிருந்தன.

மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வலர்கள் நிறைந்திருந்தனர். (நிகழ்ச்சிக்கு கட்டணம் உண்டு. அமெரிக்காவில் இலவசங்கள் குறைவு!) காமிராக்களும் விடியோக்களும்  'க்ளிக்'கிக்கொண்டே இருந்தன.

அரங்கத்தினுள் வெதுவெதுப்பாக இருந்ததால், வினயனை நடக்க விட்டோம். அவ்வளவு தான், விடைபெறும் வரை அவன் எங்களை நடப்பித்துக் கொண்டே இருந்தான் நானோ, விஜியோ, ஜார்ஜோ யாராவது ஒருவரின் இடது கைப் பெருவிரலை ஓடிபோய் பற்றிக்கொண்டு ஒரு தலைவன்
போல் அவனுக்குப் பிடித்தமான இடத்திற்குக் கூட்டிச் செல்வான். பெரும்பாலான சமயங்களில் கை பிடித்தவரை இடையிலேயே கைவிட்டு விடுவான். ஏனென்றால் வேறு ஏதாவதொரு காட்சி அவனை ஈர்த்து விடும்.   ஏராளமான பூக்களும், அரங்கிலிருந்த புத்தகக் கடையின் வண்ண வண்ண நூல்களும் அவன்

கவனத்தைத் திருப்பிக் கொண்டே இருந்ததால், புகைப்படம் எடுக்க சரியானபடி  முகம் கொடுக்க வில்லை, அவன்.

(நம்ம ஊர் சங்குப்பூவும் ஆர்க்கிட் வரிசையில் அங்கே இடம் பெற்றிருந்தது!)

 (ஆர்க்கிட் பூக்களைத் தான் 'சிங்கப்பூர் ரோஜா' என்று பூக்காரி ஜமுனா விற்கிறாள் என்ற புதிய தகவல் விஜியிடமிருந்து வந்தது).
 அநேகமாக எல்லாப் பூக்களையும் பார்த்து முடித்தபோது வெளியில் மழை சிறு தூறலாகத் தணிந்திருந்தது.
  வினயனோ வர மனமில்லாமல் அங்கிருந்த நீர்த் தொட்டியில் கைவிட முயன்று முடியாமல் எம்பிக் கொண்டே இருந்தான். கருப்பு சூட்டில் இளைஞர்கள் இளைஞிகள் மாலை நடக்கவிருந்த நன்கொடையாளர்களுக்கான நன்றி விழா ஏற்பாட்டில் முனைந்திருந்தார்கள்.
தாவரவியல் பூங்கா என்பது பல நூறு ஏக்கர் பரப்புள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலான சரித்திரம் கொண்டது. நெடிதுயர்ந்த மரங்கள் நிறைய இருந்தன. எனவே ஒரு நாளில் பார்த்து முடித்துவிடும் இடமல்ல. பார்வையாளர்களுக்கான
ரயில் இருந்தது. விளக்கம் தர

வழிகாட்டிகளும் உண்டு. தாவரவியல்
படித்தவரான விஜிக்கு ஒவ்வொரு பூக்களுமே குறைந்தது அரை மணி நேர கவனிப்புக்கு உரியதாகப் பட்டது. இதைப் பார்த்தீர்களா, அதைப் பார்த்தீர்களா என்று முடுக்கிகொண்டே இருந்தார்.
 


பார்த்த அனுபவத்தை விட இன்னும் பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கம் அதிகமாக, மாலை ஆறு மணிக்கு  விடை பெற்றோம். மீண்டும் பார்த்தசாரதி யானார், ஜார்ஜ். நியூஜெர்சியை நோக்கியது பயணம்.
(c) Y.Chellappa.

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


திங்கள், மார்ச் 11, 2013

மறக்க முடியாத மஞ்சு - 2

இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
மறக்க முடியாத மஞ்சு -1


2006 நவம்பரில் பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் நடக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்க எனது வங்கியால் அனுப்பப்பட்டேன்.

பெங்களூரிலிருந்து மாலை ஆறு  மணிக்குக் கிளம்பிய விமானம் சுமார் மூன்றரை மணி நேரப் பறத்தலுக்குப் பிறகு என்னை மனாமாவில் இறக்கியது. மாநாடு நடக்க இருந்த ஷெராட்டன் ஹோட்டலிலேயே எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அழைத்துச் செல்லவும் அவர்களின் வேன் வந்திருந்தது.

என்னோடு வேனில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த  ஒரு வங்கியாளர் வந்தார். (ஏதோவொரு சௌத்ரி). அவரும் அதே மாநாட்டுக்குத் தான் வருகிறவர். நான்கு தலைமுறைகள் முன்பு இந்தியாவிலிருந்து போனவர்களாம் அவரின் மூதாதையர்கள். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்ததேயில்லையாம். இட்லி, வடை, பூரி  என்பதையெல்லாம் ஆர்வமாகச் சுவைத்தார். எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டார். சௌத்ரிக்கு மனாமா புதிது என்பதால் என்னோடு ஒட்டிக்கொண்டார். எனக்கு அடுத்த அறை  அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

மறு நாள் காலை ஒன்பது மணிக்கு மாநாடு துவங்கவிருந்தது. மாநாட்டு அமைப்பாளர்கள் எங்களை வரவேற்று அறிமுகப் படுத்திகொண்டார்கள். அப்படி அறிமுகம் ஆனவர்களில் ஒருவர் தான், கோபால் மேனன்.

கோபால் மேனன், ஓராண்டு முன்பு வரை மும்பையில் ஒரு ஏ.டி.எம்  நிறுவும் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அந்த வகையில் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தவர். எங்கள் வங்கிக்கு சுமார் நானூறு ஏ.டி.எம்.களை அவர் நிறுவி இருந்தார். அவருடைய முதல் மார்க்கெட்டிங் வெற்றி அது. அவர் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய,  நேரில் சந்தித்ததில்லை. அவர், அதன் பிறகு வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. அதையும் விட்டு, இப்போது மனாமாவில் இந்தக் கம்பெனியில் இருக்கிறார்.

என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. 'உங்கள் வங்கி தான் எனக்குத் தொழிலில் முன்னேற்றம் கொடுத்தது' என்று புகழ்ந்தார். கட்டாயம் தன் வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்ல வேண்டும் என்று வேண்டினார். அது மட்டுமின்றி, மாநாடு முடிந்த பிறகு பஹ்ரைனைச் சுற்றிப் பார்க்க எனக்கென்று ஒரு கார் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நான் திரும்பிச் செல்லும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார். சௌதிரி தானும் காரில் வருவதாகத் தெரிவித்துக் கொண்டார்.

பொதுவாகவே, மாநாடுகள் என்றாலே நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யும் விஷயம் தானே என்றார் சௌத்ரி. அதிலும், வெளி நாடுகளில் மாநாடு ஏற்பாடு செய்பவர்கள், அதை ஒரு மக்கள்-தொடர்பு-அம்சமாகவே அன்றி, உருப்படியான முடிவுகளைத் தரும் வகையில் அமைப்பதில்லை என்றும் கருதினார். ஆகவே, நாம் இருவரும் கோபால் மேனன் அளித்த காரில்  நாட்டைச்
சுற்றிப் பார்ப்பதை முக்கிய அஜெண்டாவாகக் கொள்ள வேண்டும்
என்றார்.

அதே போல், பிற்பகல் நிகழ்ச்சிகள் நான்கு மணிக்கே முடிக்கப் பட்டன. மலையாளம் பேசும் டிரைவர் எங்களை அழைத்துக் கொண்டு காரில் புறப்பபட்டார். எங்கு பார்த்தாலும் வெள்ளை
வெளேர் என்ற தரை. கட்டிடங்கள்  எல்லாமே வெள்ளை நிறம்
தான். பிரம்மாண்டமான மசூதிகள், ஃ பார்முலா -ஒன் ஓடுபாதை, பெரியதொரு அலுமினியத் தொழிற்சாலை, அண்மையில் திறக்கப்பட்டிருந்த பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சரித்திரப் புகழ் வாய்ந்த சில இடிபாடுகள், பரந்து கிடக்கும் எண்ணெய்க் கிணறுகள், பயன்படுத்தி ஓய்ந்து போன கார்களைக் கடலில் எறிவதற்காகக்  குவித்திருந்த இடம் - என்று பல இடங்களைக் காட்டினார் டிரைவர்.

பிறகு மத்திய கிழக்கு நாடுகளிலேயே முன்மாதிரியாகக் கட்டப் பட்டிருந்த கடற்பாலத்தை நெருங்கினோம். பஹ்ரைனிலிருந்து சௌதி அரேபியாவுக்குச் செல்லும் வழியாம். பஹ்ரைனை விட்டு வெளியேறும் இடத்தில் உயரமான கோபுரம் ஒன்றும் பார்த்தோம். ஏறினோம். சௌத்ரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. 'உங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இல்லையென்றால் நான் பேசாமல் அறையிலேயே கிடப்பேன். புது இடம் என்றாலே எனக்கு அச்சம் மட்டுமின்றி தயக்கமும் கூட' என்றார்.



வெறும் பாலைவனமாக இருந்த நாட்டைப்  பசுமை நிறைந்த சோலைவனமாக மாற்றி இருந்தது, எண்ணெய் வளம்.
அத்தனை செழுமைக்கும் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பார்த்தால், முகம் தெரியாதவர்களாய் மலையாளம் பேசிக் கொண்டிருந்த இந்தியர்கள் தான். மத்திய கிழக்கு நாடுகளில் அரபு மொழிக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுவது, மலையாளம் தானாம்.

எங்கும் பேரீச்சை மரங்கள்  அணியணியாக நின்றன. எங்களை வரவேற்பது போல, சில நிமிடங்கள் மழைத் தூறலும் விழுந்தது. மனாமாவின் முக்கியமான தொழிலே வங்கித்துறை என்பதால், பணத்திற்குப் பஞ்சமில்லை. உலகிலுள்ள எல்லா வங்கிகளும்
அங்கே கால் கொண்டிருந்தன.

'கோல்டு சௌக்' என்ற பெயரில், தங்கம் வைரம் விற்கும் கடைகள் பிரம்மாண்டமான ஒரே கட்டிடத்தில் இருந்தன. நூறு கடைகளுக்கு மேல் இருக்கும். எல்லாவற்றையும் நடத்துபவர்கள் அல்லது பணியாட்கள் மலையாளிகளாகவே இருந்தார்கள். தமிழர்கள் பெரும்பாலும் வங்கிப் பணியாளர்கள் அல்லது எண்ணெய்க்  கிணறுகளில் தான் இருப்பார்களாம். மருத்துவர்களும் உண்டு.

இரவு உணவுக்கு ஷெராட்டன் வந்து சேர்ந்தோம். மறுநாள்  மாநாட்டுக்குரிய விஷயங்களின் தொகுப்பான புத்தகம் ஒன்று அறையில் காத்திருந்தது. அதை ஆழ்ந்து படித்துக் கொண்டே உறங்கிப் போனேன்.

காலையில் எட்டு மணிக்கே கோபால் வந்துவிட்டார், தன்
வீட்டிற்கு அழைத்துப் போக. அதிகத் தொலைவில்லை. மிக்க பாதுகாப்பான வீடு. கோபாலும் அவரது மனைவியும்
வரவேற்றார்கள். இட்டிலியும் காப்பியும் வந்தன. அப்போது 'குட் மார்னிங்' என்று மழலைக் குரலில் கூவியபடி ஓடி வந்தாள், மஞ்சு. அவர்களின் ஒரே மகள்.

மெல்லிய தேகம். தங்கம் பூசிய மாதிரி மினுமினுப்பு. முகமெல்லாம் சிரிப்பு. காலையில் எழுந்தவுடன் அழுமூஞ்சியாக நிற்குமே சில குழந்தைகள், அது போலில்லை. தெளிவாக இருந்தது. புதிய மனிதர் என்ற வேறுபாடில்லை.

'குட் மார்னிங்' என்று நானும் அவளைப் பார்த்துச் சொன்னேன். மஞ்சு வெட்கத்துடன் அம்மா பின் சென்று ஒளிந்து கொண்டாள்.
இன்னும் இரண்டு வயது நிரம்பவில்லை. ஆனால் A,B,C,D சொல்லத் தெரிந்துகொண்டிருந்தாள். சில மலையாள
ரைம்ஸ்களும் சொன்னாள். சுமார் அரை மணி நேரமே
அங்கிருந்தேன், ஆனால் அந்தக் குழந்தையுடன் அரை நாள் இருந்த
மாதிரி நிறைவாக இருந்தது.

*****
மாலை மாநாடு முடிந்த பிறகு, சௌத்ரி, சில எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டும், இங்கு சீப்பாக இருக்குமாமே என்று கிளம்பிவிட்டார். நான் ஸ்கந்துவுக்கு ஒரு ரயில் செட்டும், சம்ப்ரித்தாவுக்குப் பிறந்த நாளுக்காக ஒரு செயினும் வாங்கினேன்.
கோபால் உடன் வந்தார்.

இரவு உணவை ஷெராட்டனில் எடுத்துக் கொள்ளலாமென்று போகவிருந்தவனை கோபால் தம்பதியினர் தடுத்தார்கள். 'இங்கு நம்ம ஊர் மலையாள ஓட்டல் ஒன்று உள்ளது. சாப்பாடு நன்றாக இருக்கும். நீங்கள் மீண்டும் எப்போது பஹ்ரைன் வரப் போகிறீர்கள்? அதனால் வாருங்கள், அங்கே போகலாம்' என்று விடாப்பிடியாக அழைத்துச் சென்றார்கள். மஞ்சு வேறு, அம்மாவின் பின்புறமிருந்து 'குட் மார்னிங்' சொல்லிக் கொண்டே இருந்தாள்.

ஓட்டலின் முதல் மாடி. ஒரு பழைய கட்டிடம் தான், ஆனால் தூய்மையாக இருந்தது. மிகுந்த கூட்டம். எல்லாமே இந்தியர்கள் தாம், அதிலும் தென்னிந்தியர்கள் மிகுதி. இடம் பிடிக்கவே சற்று நேரம் ஆனது.

கோபால் தான் ஆர்டர் செய்தார்: வெஜிடபிள்  புலாவ், மட்டர் பனீர், பைங்கன் கா பர்த்தா, ரோட்டி முதலியன. 'முதலில் சூப் கொண்டு
வாருங்கள்' என்றார். 'இங்கு மிக்சட் வெஜிடபிள் சூப் பிரமாதமாக
இருக்கும்' என்றார்.

மஞ்சுவுக்கு ஆனந்தம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இந்த ஓட்டலுக்கு வருவார்களாம். கடந்த மூன்று வாரங்களாக, வெவ்வேறு காரணங்களால் வர முடியாமல் போய் விட்டதாம். அந்த ஆனந்தம். ஆறு பேர் அமரும் மேஜை. பெற்றோர்களுக்கு
நடுவில் மஞ்சு அமர்ந்து கொண்டாள். நான் எதிர்ப்புறமாக.

வழக்கம் போலவே, சப்ளை வருவதற்கு மிகுந்த நேரம் ஆனது. மஞ்சுவின்  பொறுமை எல்லை கடந்து போய் விட்டது. இன்னும் சில நொடிகளில் உணவு வரவில்லை என்றால் ஓவென்று அழுதே விடுவாள் போல் தோன்றியது. தாய், அவளைத் தன்னால் ஆன
மட்டும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளோ, நாற்காலியிலிருந்து எழுந்து நின்று கொண்டாள். உட்கார மாட்டேனென்று அடம் பிடித்தாள்.

நல்ல வேளையாக  சூப் வந்து விட்டது. தூரத்தில் வரும் போதே அதன் வாசனை மூக்கைத் துளைத்தது. பூ வேலைப்பாடு செய்த  பீங்கான் கிண்ணங்களில் ஆவி பறக்க சூப் எங்கள்
முன்னால் அமர்ந்தது. உடனே குடித்து விடலாம் போல இருந்தது. ஆனால் சூடு ஆறியாக வேண்டுமே!

அப்போது தான் எதிர்பாராத  விதமாக அந்த அசம்பாவிதம் நடந்து
விட்டது.

ஆவலோடு உணவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த மஞ்சு,  தன்  முன்னால் இருந்த சூப் கிண்ணத்தை எட்ட முயன்று முடியாமல், தன் வாயை அதன் மீது வைத்து சூப்பைச் சற்று உறிஞ்சி விட்டாள். அடுத்த நிமிடம், உயிரே போவது போல் ஓலம். பெரியவர்களே தொட முடியாமலிருந்த சூட்டை, அந்தப் பிஞ்சுக் குழந்தையால் எப்படித் தாங்க முடியும்! நாக்கு செக்கச் செவேல் என்று சிவந்து விட்டது. ஒரு இடத்திலும் நிற்க முடியாமல் உடம்பெல்லாம் நடுக்கம். என்ன செய்வதென்றே யாருக்கும் புரியவில்லை.

கோபால், குழந்தையை எடுத்துக் கொண்டு கீழே ஓடினார். மனைவியும் பதற்றத்தோடு பின்தொடர்ந்தார். அந்த நிலையிலும் கோபால் தடங்கலுக்காக மன்னிப்பு கோரிவிட்டு, 'இங்கேயே இருங்கள், வந்து விடுகிறேன்' என்று காரோடு கிளம்பினார்.

சுற்றி நின்ற எங்கள் எல்லாருக்கும் இன்னதென்று சொல்ல முடியாத துக்கம். பக்கத்திலேயே குழந்தைகள் ஆஸ்பத்திரி இருப்பதாகவும், சரிசெய்து விடலாம் என்றும் பேசிக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழிந்த பிறகு கோபால் வந்தார். முகம் சற்று தெளிந்திருந்தது. 'நல்ல வேளை, எங்கள் ஃபேமிலி டாக்டர் இருந்தார். சரியான மருந்துகள் கொடுத்திருக்கிறார். நாளை காலை
சரியாகிவிடும் என்று உறுதியளித்திருக்கிறார்' என்றார். அப்போது தான் எல்லோருக்கும் உயிர் வந்தது எனலாம்.

மேற்கொண்டு சாப்பிடுவதற்கு எனக்கு மனமில்லை. ஆசை ஆசையாக வந்த குழந்தை சாப்பிடாமல் பெரியவர்களான நாங்கள் மட்டும் சாப்பிடுவதா என்று மனதிற்குள் ஆத்திரம் எழுந்தது. ஆனால் கோபால் விடுவதாக இல்லை. அவருக்கும் பசி மீறி விட்டது. சப்ளையர் வந்து, சார், சீக்கிரம், கடை மூடும் நேரம் ஆகிவிட்டது என்றார். ஆர்டர் செய்த உணவை பொட்டலம் கட்டிக் கொண்டு காரில் வைத்துச்  சாப்பிட்டோம்.
******
மறு நாள் பகல் இரண்டு மணிக்கு எனக்கு விமானம். பெங்களூர் திரும்புவதற்கு. ஒன்றரைக்கெல்லாம் விமான நிலையம் வந்து விட்டேன். (சௌத்ரி காலையிலேயே கிளம்பி விட்டார்). டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு எனது சக்கரம் வைத்த
பெட்டியைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்ட போது, 'குட் மார்னிங்' என்று பழகிய மழலைக்குரல் கேட்டது. மஞ்சு!

'அங்க்கிளுக்கு ஸாரி சொல்லுடா கண்ணு' என்று மஞ்சுவிடம்
என்னைக் காட்டினார், கோபாலின் மனைவி. 'நேற்று அங்க்கிள் உன்னால தான சரியா சாப்பிட முடியாமல் போச்சு' என்றாள். கோபாலும் மீண்டும் மீண்டும் ஸாரி சொன்னார்.

நான் ஓடி வந்து மஞ்சுவைத் தூக்கி முத்தமிட்டேன். 'நான் தாண்டா  கண்ணு உனக்கு ஸாரி சொல்லணும்' என்றேன். 'இவ்வளவு
சமர்த்துக் குழந்தையுடன் சாப்பிட முடியாமல் போனதற்கு' என்றேன். 'ஆ காட்டு' என்றேன். நாக்கில் தடிப்பாகச்  சிவப்பு நிறம் இருந்தது. 'வலிக்கிறதா' என்றேன். புரிந்தோ புரியாமலோ, 'நோ' என்று தலையாட்டினாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன். பிறகு, 'வரட்டுமா, பை' என்று கைகளை ஆட்டினேன்.

மஞ்சு சிரித்தாள். இரண்டு கைகளையும் மேலே தூக்கி 'பை' என்றாள்.
*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


ஞாயிறு, மார்ச் 10, 2013

மறக்க முடியாத மஞ்சு - 1


பெராமஸ் மால் மின்விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.  சனிக்கிழமை என்பதாலும், பல நாள் குளிருக்குப் பிறகு அன்று தான் சுளீரென்று வெயில் அடித்ததாலும் நியூ ஜெர்சி மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருந்தார்கள். மாலில் நல்ல கூட்டம்.

 தரைத் தளத்தில் வண்ண விளக்குகளும் மெல்லிசையுமாக  'கெரூசல்'
குழந்தைகளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. நம்ம ஊர் ரங்க ராட்டினம் தான். வட்டமான இரண்டு வரிசைகளில் தலா பத்துக் குதிரைகள். இருபது குழந்தைகள் ஒரே சமயம் அமரலாம். பெரியவர்கள் குழந்தையைப் பிடித்துக் கொண்டு நிற்கவும் வசதி இருந்தது. எல்லா நாட்டுக் குழந்தைகளையும் அங்கே பார்க்க முடிந்தது.

வினயனுக்கு கெரூசலில் சுற்றிவரும் குதிரைகளைப் பார்ப்பதை விடவும், மேற்கூரையில் இருந்த கண்ணாடியில் அதன் பிம்பம் சுற்றுவதைத் தான் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குத் தெரிந்து அப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குழந்தை, அங்கிருந்த சுமார் ஐம்பது பேரில் அவன் ஒருவனே.
 
ஆளுக்கு இரண்டு டாலர் டோக்கன். குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு 
நிற்கும் பெரியவர்களும் டோக்கன் வாங்க வேண்டுமாம். 'கார்டன் சிடி பிளாசாவுக்கே போயிருக்கலாம்' என்றாள் ரம்யா. 'அங்கே குழந்தைகளுக்கு மட்டும் தான் டோக்கன்.' அடுத்த முறை போகலாம் என்றார் ஜார்ஜ்.

டோக்கன்படி ஒரு குதிரையில் அமர்ந்தான் வினயன். விழாதபடிக்கு  'பெல்ட்டு' போடப்பட்டது. இரு பக்கத்திலும் அவனை யொத்த இரண்டு வயது நிரம்பாத குழந்தைகள் தான். ஜார்ஜ் நின்று கொண்டு அவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

 வினயன் அப்போதும் மேல் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான். கெரூசல் வேகம் பிடித்துச் சுற்ற ஆரம்பித்தது.

நாங்கள் கெரூசலுக்கு சற்றுத் தள்ளி நின்றபடி கை அசைத்து 
அவனை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தோம். மலர்ந்த முகத்தோடு 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று தன் அருகில் அப்பா தான் நிற்கிறார், அம்மா இல்லை என்று புரிந்த மாதிரி அழ ஆரம்பித்து 
விட்டான். இன்னும் மூன்று சுற்றுக்ளே இருக்கும் போது ஓவென்று அழுகை பீறிட்டது. கெரூசல் நிற்கும் வரை ஓயவில்லை.

ஓடிச் சென்று ரம்யா அவனைத் தாங்கிக் கொண்ட பிறகே நிதானமானான். இத்தனைக்கும் அவனுக்கு ஏற்கெனவே கெரூசல் பழக்கமான ஒன்று தான். ஏன் அப்படி அழுதான் என்று புரியவில்லை. Separation Anxiety என்றாள். அம்மா தன்னை விட்டுச்  சற்று நேரம் விலகி இருந்தாலும் தன்னை விட்டு விட்டுப் போய் விட்டாளோ என்று குழந்தை பயப்ப்படுமாம். 'இரண்டு வயதுக் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கலாம்' என்ற புத்தகத்தில் படித்ததாகச் சொன்னாள்.

வழக்கமான முயற்சிகளுக்குப் பிறகு அவனைச் சமாதானப் படுத்தி அருகிலிருந்த பல கடைகளில் நுழைந்தோம். எல்லாம் வெறும் 'பார்வை ஷாப்பிங்' தான். கடைசியாக ஒரு விளையாட்டு பொம்மைகள் கடையில் அவனுக்கு மிகவும் பிடித்த மஞ்சள் நிற 'ஸ்கூல் பஸ்' சை எடுத்துக் கொண்டான். பஸ்சை விடவும் அதன் நான்கு சக்கரங்கள் தான் அவனுக்கு அதிகம் பிடித்தது. அவற்றைத்  தன் வாயருகே வைத்து ஆனந்தமாகக் கூச்சலிட  ஆரம்பித்தான்.

Wheels on the Bus go Round and Round 
All through the Town 

என்ற நர்சரி ரைம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதை டி.வி.டி.யிலும் லேப்டாப்பிலும் நாள் முழுதும் கேட்டாலும் அவனுக்குத் திகட்டாது. அதில் வரும் ஸ்கூல் பஸ் தான் இப்போது அவன் கையில் இருப்பது. ஆகவே அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம்.

அதிலும் Wheels on the Bus go Round and Round, All through the.." என்று ராகமாகப் பாடி நிறுத்தினால் உடனே அவன் பெருத்த குரலில் " Town" என்று முடிப்பான். இன்று புதிதாக வாங்கிய பஸ் வேறு கையில் இருந்ததால், நாங்கள் எத்தனை முறை இந்த உத்தியைக் கடைப்பிடித்தாலும் அயராமல் "Town" என்று திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
 
நேரமாகிவிட்ட படியால், அங்கிருந்த 'பஞ்செராஸ்' என்ற மெக்சிக்கன் 
ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடலாம் என்று நுழைந்தோம். கூட்டம் இல்லை. 
ரம்யாவும் ஜார்ஜும் ஆளுக்கொரு 'கசாடியா'வும், நானும் விஜியும் தலா ஒரு 'பரீட்டோ'வும் வாங்கினோம்.

'டார்ட்டியா' எனப்படும் மக்காச் சோள மாவினால் செய்த பெரிய
சப்பாத்தியின் மீது  நம்ம ஊர்  வெஜிட்டபிள்  பிரியாணியையும், ராஜ்மா 
எனப்படும் பெரிய காராமணியையும் பரப்பி, சப்பாத்தியைச் 
சுருட்டி மேலும் கீழும் மூடி, ஒரு தரம் சூடான வாணலியின் மேல் வைத்து அழுத்தி, 'சல்சா' எனப்படும் ஒரு வகைக் கார சட்டினியுடன் தரப்படுவது தான் பரீட்டோ (Burrito). மேற்படியில், சுருட்டப்படும் முன்பு சீஸ் போட்டு சப்பாத்தியை இரண்டாக மடித்து, சூடுபடுத்தி, பிறகு நான்கு கூறுகளாகத் 
தந்தால் அது கசாடியா (Quesadilla). 

(சரியான விளக்கமா என்று தெரியவில்லை).

பரீட்டோவிலிருந்த ராஜ்மாவை ஒவ்வொன்றாக வாயிலிட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான் வினயன். ஒரு வழியாக உணவை முடித்து எழுந்திருக்கும் 
போது தான் எதிர்ப் பக்கமிருந்த மேஜையில் இவனையொத்த வயதுள்ள ஒரு இந்தியக் குழந்தை (பெண்) இருப்பதைக் கவனித்தோம். உண்மையில், மாலில் நுழையும் போதே எங்களைக் கடந்து போகையில் தெரிந்த மாதிரி ஒரு புன்னகையோடு போனவர் தான் அந்தக் குழந்தையின் தாய். இளம் வயது. கணவருடன் வந்திருந்தார்.

பெங்களூரைச் சேர்ந்தவராம்.கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவில் பணியாற்றுகிறார்களாம். நியூ ஜெர்சி வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறதாம். குழந்தைக்கு வினயனை விட ஒரு மாதம் தான் அதிகமாம்.

அவள் கையில் ஒரு மென் பொம்மையை  வைத்திருந்தாள். வினயனுக்கு 
மெத்து மெத்தென்று இருக்கும் பொம்மைகள் கொஞ்சமும் பிடிக்காது.
வீட்டில் அப்படிப்பட்ட பொம்மைகள் ஏராளமாக மூலைகளில்  கிடக்கும். சீண்டவே மாட்டான். ஆனால் இன்று என்னவாயிற்றோ தெரியவில்லை, அவளிடம் இருக்கும் பொம்மை தான் வேண்டும் என்று பாய்ந்து பிடுங்கிக் கொண்டான். அதே சமயம் தன்னுடைய ஸ்கூல் பஸ்சையும் விடாமல் பிடித்துக் கொண்டான்.

அவளும் குழந்தை தானே! விடமாட்டேன் என்று பதிலுக்குப் பிடுங்கினாள். அழ ஆரம்பித்து விடுவாள் போல இருந்தது. 

ரம்யா உடனே புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தாள். அவனுடைய ஸ்கூல் பஸ்ஸைப் பிடுங்கி வேகமாக அந்தப் பெண்ணிடம் தந்தாள். அவ்வளவு தான், வினயன் அவளுடைய மென் பொம்மையை இந்தா என்று திருப்பிக் கொடுத்து விட்டுத் தன்னுடைய பஸ்ஸைப் பிடுங்கி வைத்துக் கொண்டு இழந்ததைப் பிடித்த பெருமிதத்துடன் புன்னகைத்தான். எங்கள் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

அப்போது தான் அந்தப் பெண் குழந்தையை  உற்று நோக்கினேன். வினயனைப் போல்  கம்பீரமாக  இல்லாவிடினும் உயரமாகத் தான் இருந்தாள். மெலிந்த 
தேகம். யாரோ மாதிரி இருக்கிறாளே இவள்  என்று பொறி தட்டியது. மூளையைக் கசக்கினேன்.

ஆம், இவள் மஞ்சுவைப் போலவே இருக்கிறாள்!

மஞ்சு, நான் 2006இல் பஹ்ரைன் போயிருந்த போது மனாமாவில் சந்தித்த குழந்தை. மறக்க முடியாதவள்.

(ஏன் மறக்க முடியாதவள் என்பதை நாளை சொல்கிறேன்).
*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

செவ்வாய், மார்ச் 05, 2013

மீண்டும் அமெரிக்கா - 1






நான்காவது முறையாக அமெரிக்கா வந்து சேர்ந்த போது காலை ஏழரை மணி. 2013 பிப்ரவரி 14ம் தேதி.
குடியேற்ற விசாரிப்பு முடிந்த பின், நானும் என் மனைவியும் இரண்டு டிராலிகளில் ஆறு பெட்டிகளை இழுத்துக் கொண்டு வருகையில், பெட்டிகளின் கனம் கண்ணை உறுத்தியதால் இருக்கலாம், பெரிய மீசை வைத்த அதிகாரி ஒருவர் புருவம் உயர்த்தி 'Any food items?' என்றார்.
 
இப்படிக் கேட்கக்கூடும் என்று எதிர் பார்த்திருந்ததாலும், பெட்டிகளில் இருந்த சில பொருள்களை அவர் (தவறாக) உணவுப் பொருள்களாகக் கருதி விடும் வாய்ப்பு இருந்ததாலும், கண்களை ஒரு மாதிரி அசட்டுத்தனம் தோன்றும்படியாக 
என் மனைவியைப் பார்த்து  'ஏதும் உள்ளதா' என்பது போல் பார்த்தேன். அவளும் 'இல்லையே' என்பது போல் அசடு நெளிந்தாள். மீசைக்காரர் திருப்தி அடைந்ததாகத் 
தெரியவில்லை.  'Who packed the items?' என்றார். 'She only packed them' என்றேன். 'Ask her if she had packed any food item'.
 
அவள்  'no' என்றாள் சற்றே தைரியமாக.
 
'Normally people bring white rice kind of items...'
 
'No, nothing of that sort.'
 
மீசைக்காரர், சரி தொலையட்டும் சனியன் என்பது போல் கையை வலது பக்கம் நீட்டி வாசலைக் காட்டினார். 
விட்டால் போதுமென்று விறுவிறுவென்று டிராலியைத் தள்ளிக் கொண்டு  வெளியே வந்து சேர்ந்தோம்.
 
வித விதமான மிளகாய்ப் பொடிகளும், நார்த்தங்காய், அப்பளம், வேப்பம்பூ, சித்தரத்தை, கிராண்டு ஸ்வீட்சில் வாங்கிய முறுக்கு, ஓமப்பொடி, மிக்சர்களும் கொண்டு வராமல் போனது நல்லதாயிற்று என்று எண்ணிக் கொண்டோம்.
 
வெளியில் ஆவலோடு எங்களை வரவேற்கக் காத்திருந்த மூவரில் முக்கியமானவர் எங்கள் பேரன் திரு வினயன் அவர்கள் தான்! சுமார் இருபது மாதங்களே ஆனவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன் மாமா திருமணத்திற்காகச் சென்னை வந்த போது கைக்குழந்தையாக இருந்தவர், இப்போது தன் அப்பாவைப் போலவே நல்ல வளர்த்தி. துறுதுறு வென்று கைகளில் பிடிபடாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். தாத்தா பாட்டியை அடையாளம் புரிந்து கொண்ட மாதிரி ஒரு புன்சிரிப்பு. அத்தோடு சரி. எங்களைப் பார்ப்பதை விடவும், ஜே.எப்.கே  ஏர்போர்ட்டை அணு அணுவாகப் புரிந்து கொள்ளுதலே தலையாய கடமை என்பது போல் மூலை முடுக்கெல்லாம் ஓடத் தொடங்கி விட்டார்.
 
என் மகளும் மருமகனும் உள்ளன்போடு வரவேற்று காருக்கு அழைத்துச் சென்றனர். ஹுண்டாய் எலன்ட்ரா, 2005ல் வாங்கியது, இன்னும் நல்ல நிலைமையில் இருந்தது.அதில் தான்  800 மைலுக்கும் அதிகம் பயணித்து நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்து, டொராண்டோவில் சரவணா பவனில் அடை அவியல் சாப்பிட்டோம். பிலடெல்பியா சென்றோம். வாஷிங்டன் போய் உயரமான லிங்க்கன் சிலை பார்த்தோம். பாஸ்ட்டன் போய்  எம்.ஐ.ட்டி., ஹார்வர்டு யுனிவர்சிட்டி பார்த்தோம். 'இந்த வாரம் புதுக் கார் வாங்கப் போகிறோம். அநேகமாக ஹோண்டா ஒடிஸ்ஸி யாக இருக்கலாம்' என்றாள் ரம்யா. (எப்படியும் இந்தமுறை கலிபோர்னியா பார்த்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்).
 
ஆறு பெட்டிகளையும் காருக்கு உள்ளும் மேலுமாக ஜார்ஜ் அழகாக அடுக்கி (அடக்கி?) வைத்தார். வெளியில் உஷ்ணம் வெறும் ஐந்து டிகிரி செல்ஷியஸ் தான் என்பதால் நாங்கள் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த மேலாடைகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. காரில் அமர்ந்த பின் வேண்டிய உஷ்ணம் நிரம்பியதால் 
உடல் சற்று நிம்மதி அடைந்தது.
 
நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சி வரும் பாதைகள் கண்ணுக்குப் பழகியதாக இருந்தன. அகலமான ஆறு வழிப் பாதைகள், ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் உரிய வேகத்தில் பின் தொடர்ந்து வரும் வாகனங்கள், காவலர்கள் இல்லை என்ற போதும் சிக்னல்களில் நின்று கிளம்பும் ஒழுங்குமுறை எல்லாமும் மீண்டும் ஒருமுறை மனத்தைக் கவர்ந்தன.
 
ஹேக்கன்சாக் நகரை நெருங்க நெருங்க, கண்ணில் பட்ட விளம்பரப் பலகைகளெல்லாம் ஏற்கெனவே தெரிந்தவையாக இருந்தன. டுவான் ரீடு பார்மசி, பி.என்.சி. பேங்க், ஒரு இத்தாலியன் பிஸ்ட்ரோ, ஏதோவொரு ஏ.டி.எம்., ஹேக்கன்சாக் மெடிக்கல் யுனிவர்சிடியின் அகன்ற கட்டிடங்கள் என்று பிராஸ்பெக்ட் அவென்யூ முன்னால் விரிந்தது.
 
சென்ற முறை நாங்கள் வந்த போது  இருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிந்து விட்டதால், அதே தெருவில் இன்னொரு பதினோராம் மாடிக்குக் குடிபெயர்ந்திருந்தாள் ரம்யா.
 
அளவில் சற்றே சிறியதாக இருந்தாலும் வசதிகள் அதிகம்,  சமையலறையின் அருகிலேயே சாமான்கள் அறை  உண்டு என்று சந்தோஷப்பட்டாள்.
 
வழக்கம் போலவே ஒவ்வொரு சுவரையும்  ஓவியங்களாலும் புகைப்படங்களாலும் சுவர் விரிப்புகளாலும் நிறைத்திருந்தாள். குளிர்ப் பெட்டியின் மீது வினயனுக்காக  ஏ, பி, சி, டி, இருபத்தாறு எழுத்துக்களும் அவற்றை ஒவ்வொன்றாகப் பதித்தால் இசையோடு எழுத்தின் பேர் சொல்லும் ஒரு சிறு பொம்மையும் ஒட்டி இருந்தாள்.
 
காரிக்காக என்று வாங்கி, இப்போது வினயனுக்காக என்றே நடுநாயகமாக அமர்ந்திருந்தது, CASIO -WK 200 கீ போர்டு.
(காரி என்கிற அரவிந்த கார்த்திக் இப்போது அட்லாண்டாவில் இருக்கிறான். எங்கள் ஒரே மகன்).
 
கூடமெங்கும் வினயனின் புத்தகங்கள் இறைந்து கிடந்தன.
 
காலையில் எழுந்தவுடன் வினயன் ஓடி வந்து கீ போர்டைத் தானாகவே ஆன் செய்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வாசிக்கும் கலைஞன் மாதிரி அருகே அமர்ந்துகொண்டு, மெல்ல ஒவ்வொரு விரலாலும் ஒரு கட்டையைப் பற்றிக் கொண்டு ஏதோவொரு தாளத்திற்கேற்ப விரைந்தும் மென்மையாகவும் இசை 
எழுப்புவான்.  முகத்தை அடிக்கடி பின்னால் திருப்பி யாராவது இருக்கிறார்களா, அவர்களது முகபாவம் என்ன சொல்கிறது  என்று கவனிப்பான்.
 
எல்லாமே இரண்டு நிமிடங்கள் தான்! அப்புறம் அவனுக்கென்றே நிரந்தரமாக 'ஆனில்' இருக்கும் லேப்டாப்பிடம் ஓடி விடுவான். எந்த பட்டனை அழுத்தினால் நர்சரி ரைம்ஸ் வரும் என்பது அவனுக்கு அத்துபடி. அதை முடுக்குவான்.
 
அங்கு அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் அகன்ற திரை டி.வி.யை நோட்டம் விடுவான். அது ஆப் ஆகியிருக்கும் பட்சத்தில்  வேகமாகப் போய் ஆன் பண்ணிவிட்டு சேனல் 13 வருகிறதா என்று பார்ப்பான். அதில் PBS KIDS என்ற சேனலில் CURIOUS GEORGE என்ற குரங்கு கார்ட்டூனும், BUBBLE GUPPIES என்ற நாலைந்து முட்டைக்கண் பொம்மைகள் அட்டகாசம் செய்யும் கார்ட்டூனும் வரும். பின்னதில் SUPER DOOPER COMPUTER என்று ஒரு லேப்டாப் அடிக்கடி புதுப் புது வார்த்தைகளுக்கு SPELLING காட்டும். வினயன் அந்த எழுத்துக்களை உற்றுக்  கவனித்து, தானும் திருப்பிச் சொல்ல முயற்சிப்பான்.
 
எப்போது டி.வி. பார்த்தாலும் ஒரு ஆராய்ச்சியாளனுக்கே உரிய கவனத்தோடு அதன் மிக அருகில் நின்று கொண்டு வாயும் கண்ணும் அசைந்து அசைந்து விரிய பிரமித்து நிற்பான். யார் கூப்பிட்டாலும் நகரவே மாட்டான். (ஸ்கந்துவும்  ஸம்ப்ரித்தாவும் இருந்தார்களே அதே போலத் தான். அது இந்தியா, இது அமெரிக்கா, அவ்வளவு தான் வேறுபாடு. குழந்தைகள் எல்லா  இடத்திலும் 
குழந்தைகள் தான்).
 
உள்ளே நுழைந்து பெட்டிகளை ஒவ்வொன்றாகத் திறந்து பொருள்களை வெளியெடுக்கையில்  வினயன் வியப்போடு நின்று கொண்டிருந்தான். அவனுக்கென்று அரிச்சுவடி, ஆங்கிலம்-தமிழ், விலங்குகள், பரவிகள், பழங்கள், எண்கள் போன்ற சார்ட்டுகளும் வண்ணப் புத்தகங்களும் வெளியே எடுக்கையில் மிகுந்த ஆனந்தம் அவனுக்கு. அடுத்த நிமிடமே எல்லாவற்றையும் ஆராயத் தொடங்கி விட்டான்.  ஆனால் அவனுக்காக விசேஷமாக வாங்கி  வந்திருந்த குட்டிக்குட்டி ஸ்டிக்கர்களை மட்டும் இப்போது வேண்டாம், அடுத்த வருடம் கொடுக்கலாம் என்று உள்ளே  வைத்தாள் ரம்யா.
 
காரியும் அவன் மனைவி ஹரிணியும் மொபைலில்  நலம் விசாரித்து வரவேற்றார்கள். 
 
ஹரிணிக்கு ஒரு பிரசண்டேஷன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மாலை வருவதாகச் சொன்னாள். காரி, அட்லாண்டாவிலிருந்து மார்ச் நடுவில் வருவதாகச் சொன்னான்.
 
பசி நேரம் வந்து விட்டது. 'ஒரே நிமிடம், தயார் செய்து விடுகிறேன்' என்று ரம்யா விரைந்தாள்.

(தொடரும்).
 *******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?