![]() |
தம்பிக்கு மாலையிடும் அண்ணன் |
'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே'
என்ற பாடலை என்று கேட்டேனோ அன்று தான் எனக்குள்ளிருந்த கவிதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. இதை எழுதியவன்,
'நிரந்தரமானவன், அழிவதில்லை' என்று தமிழகமும் அன்றே பதிவு செய்தது.
'பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே'
என்று அவன் கண்டித்தபோதும்
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்'
என்று அவன் உறுதி யளித்தபோதும் தமிழ் பேசும் நல்லுலகம் அவனைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
'ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை - நான்
நாத்திகன் ஆனேன், அவன் பயப்படவில்லை'
என்று தன் வாழ்வில் நேர்ந்த அரசியல் சார்புகளை அவன் நியாயப் படுத்தியபோது உலகம் அதை ஏற்றுக் கொண்டது. எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடு அவன் தி.மு.க.விலிருந்து காங்கிரசில் இணைந்தபோது அவனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தவறிய பேதமையை ஒரு நாயகி பாவத்தோடு
'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி'
என்று காமராஜருக்குத் திரைத் தூது விட்ட நயத்தை
மாணவப் பருவத்திலிருந்த என் போன்றவர்கள் சொல்லிச் சொல்லி வியந்து போவோம். காங்கிரசுக்கு அவன் வந்ததே காமராஜர் என்ற ஒரு தன்னலமற்ற தலைவனோடு பணிபுரியத்
தானே ! அவனைப் புரிந்து கொள்வார் வேறு யாரும் அங்கில்லையே!
'வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் கோதை ஏதடி?'
என்பதன் அர்த்தம் காமராஜருக்குப் புரிந்திராமல் போகுமா?
சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரை உலகப் படத்தில் ஒரு பேரூராக மாற்றிய கவிஞர் கண்ணதாசனை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். தமிழகம் முழுதும் பல கிளைகளோடு துவக்கப்பட்ட 'வெண்புறா மன்றம்' என்ற இளைஞர் அமைப்பின் ராணிப்பேட்டை கிளையில் நான் பொறுப்பில் இருந்தவன். அவரை வைத்து இரண்டு அரசியல் கூட்டங்களும் நடத்தி யிருக்கிறேன். (மாணவப் பருவம்!)
தன் சொந்த செலவில் பிரச்சார நாடகம் ('காலத்தேவன்' என்று
ஞாபகம்) ஆற்காட்டில் அவர் நடத்தியபோது அவர் வருகைக்காக
மணிக்கணக்கில் காத்திருந்து கூட்டத்தினரின் அமைதி
காக்க மைக் பிடித்திருக்கிறேன். (சென்னையிலிருந்து வேலூர் வரை வரும் வழியில் பல இடங்களில் அதே நாடகம் நடத்தப்பட்டதாலும், ஒவ்வொன்றிலும் அவரே 'காலதேவன்' என்ற பாத்திரத்தில் நடித்து பொறிபறக்கும் வசனங்களைப் பேச
வேண்டியிருந்ததாலும், தாமதம் தவிர்க்க முடியாதிருந்தது).
பின்னொருநாள் அமெரிக்காவிலிருந்து விமானத்தில், கண்ணாடிப் பெட்டியில், கண்மூடிய மலராய் அவரின் பூதவுடல் சென்னை வந்து இறங்கிய செய்தியைக் கேட்டபொழுது கண்ணீர் விட்டு அழவும் முடியாத நிலைமை எனக்கு. ஏனெனில் அன்று தான் என்
மனைவியின் தங்கைக்குத் திருமணம்.
*****
சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட
உடனடியாகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.
சிறுகூடல்பட்டிக்குச் செல்ல வேண்டும் என்று எவ்வளவோ முறை எண்ணியும் நடக்கவில்லை. கடைசியில், இந்த (2013) ஃபிப்ரவரி 5ஆம் தேதி தான் கைகூடிற்று. அதற்குக் காரணமாக
இருந்தவர், பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர் தான்!
ஏதோ ஓர் ஆன்மிக மாத இதழில் கேதுவுக்குப் பரிகாரமாகப் பிள்ளையார்பட்டிக்குச் சென்று வரப் போட்டிருந்தது. அமெரிக்கா செல்லும் முன் அதை நிறைவேற்றி விடலாம் என்று முடிவு செய்தோம். அப்போது தான், பிள்ளையார்பட்டியிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிறுகூடல்பட்டியைக் காணும் பேறு பெற்றோம். (பிள்ளையார்பட்டி யாத்திரையைப் பின்பு எழுதுவேன்).
கோவில் தரிசனம் முடிந்து, பிள்ளையார்பட்டி பஸ் நிலையத்தில் இருந்த ஒரே ஒரு ஆட்டோவை அழைத்தபோது சிறுகூடல் பட்டிக்குப் போய்வர நூற்றி இருபது ரூபாய் கேட்டது நியாயமாகவே பட்டது.
ஆட்டோ ஓட்டுனர் அதே ஊர்க்காரர் என்பதால் நிறைய விஷயங்கள் பேசினார். அருகிலுள்ள வைரவன்பட்டிக்கும் சென்று வாருங்கள் என்று சிபாரிசு செய்தார். (நேரமில்லாமல் போயிற்று).
ஊருக்குள் நுழையும் போதே 'கண்ணதாசன் பிறந்த வீடு' என்ற வழிகாட்டிப் பலகை நம்மை வரவேற்கிறது. வலது புறம் செல்கிறோம்.

மிகப் பழையதாக இருந்த வீட்டைச் சீர்படுத்தி இருக்கிறார்கள். அதனால் அண்மையில் கட்டிய வீடு மாதிரி தோன்றுகிறது. தரைத் தளமும் மொட்டை மாடியும் தான்.
நாங்கள் போன போது வீட்டு சாவி வேறொருவரிடம் இருந்ததாம். அவர் சில நிமிடங்களுக்கு முன் தான் வெளியூர் புறப்பட்டாராம். நல்ல வேளை, ஆட்டோ நண்பருக்கு விவரம் தெரிந்திருந்ததால், தன் வண்டியில் விரைந்து போய் வாங்கி வந்து உரியவரிடம் கொடுப்பித்து, வீட்டைத் திறந்து காட்டச் செய்தார்.

கவிஞர் பாட்டெழுதிய மற்றும் ஏ எல் எஸ் தயாரித்த வெற்றிப் படங்களின் நூறாவது நாள் அல்லது வெள்ளிவிழா சமயங்களில்
தரப்பட்ட கேடயங்கள் சில மேசைகளில் இருந்தன.

![]() |
மலையரசி அம்மன் கோவில் |
நல்லறிவை உந்தனருள் தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசி நின்றேன்
நடைபயிலும் சிறுவன் ஒரு கடைவைத்த பாவனையில்
நாற்புறமும் முழக்கி வந்தேன்
கல்வியறி வந்ததொரு பிள்ளையிடம் நீ தந்த
கடலையும் விற்று விட்டேன்
கருணை மயிலே யுனது நினைவு வரக் கண்டதன்பின்
கடலையும் மீறி நின்றேன்
செல்வம் வருமாயின் ஒரு திருக்கோயில் கட்டி யுனைச்
சேவிப்பேன் வண்ண மயிலே!
சிறுகூடல்பட்டி யெனும் சிறுவூரை ஆள்கின்ற
செல்வி மலையரசி உமையே!
![]() |
உட்புற சுவற்றில் கவிஞரின் பாடல் |
சுவற்றில் இடம் பெற்ற மலையரசி அம்மன் பாடலின் இன்னொரு பகுதி இதோ:
ஆடும் மழை மேகம், நதி, ஆல் வளரும் காடுகளை
ஆசையுடன் நோக்குகின்றேன்
ஆய தமிழோசை வரப் பாடுவதில் ஆசை வர
ஆன வரை பாடுகின்றேன்
கோடுகளில் ஏறி யதில் குலவு பனிச் சாரலுடன்
கொஞ்சி விளையாடுகின்றேன்
கூவு குயில் கிள்ளை மயில் குக்குமெனும் வெண்புறாவின்
கூட்டத்தில் ஓடுகின்றேன்
கேடுசெயும் மானிடனைப் போல அவை இல்லாமல்
கேண்மை கொள வைத்த மயிலே!
கெண்டைவரை ஏறி வரும் சிறுகூடல்பட்டி வளர்
தங்க மலையரசி உமையே!
உரைநடையாலும் திரைக்கவியாலும் தமிழை வளர்த்த கவியரசருக்கு இதை விடவும் பெரிதாக நினைவில்லம் அமைய வேண்டும் என்பதே விடைபெறும்போது நம் மனதில் எழும் ஆசை.
விருந்தினர் குறிப்பேட்டில் இப்படி எழுதினேன்:
"சிறுகூடல்பட்டிச் செல்வக் கவிஞனின் வீட்டை தரிசனம் செய்யும் பாக்கியம் இன்று தான் கிடைத்தது. ஆனால், இந்த ஒரு வீடு தானா கவிஞரின் வீடு? தமிழ் பேசும் எல்லா வீடுமே கவிஞரின் புகழ் பாடும் வீடு தானே! வாழ்க கண்ணதாசன் புகழ்! - இராய செல்லப்பா "
(c) Y. Chellappa
email: chellappay@yahoo.com
துவக்கம் அருமையாக இரு்ககிறது. அதற்காக முடிவு மோசம் என்பதாகக் கருதி விடாதீர்கள்.... துவக்கம் பிடித்து இழுத்துக்கொண்டது. எழுதத் துவங்கி விட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குநன்றி, ஷாஜஹான் அவர்களே, டில்லியில் எனக்கு உற்சாகமூட்டும் இலக்கிய நண்பர்களில் நீங்கள் முக்கியமானவர். தொடர்ந்து உசுப்புங்கள். எழுதுவேன்!
நீக்குஅருமை
பதிலளிநீக்குகவியரசரின் ஊருக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டி இருக்கின்றீர்கள். மார்பளவு சிலை , பார்வையாளர் குறிப்பு ஏட்டு எழுத்து எல்லாம் உங்கள் தனித்தன்மையைக் காட்டுகின்றன. தொடக்கம் முதல் முடிப்புவரை தித்திப்புப் பயணம் தான் .. கார்டன் செய்திதிக்குரிய தலைமகன் இறவா வரம் பெற்ற கவிமகன் அல்லவா! ..... மகிழ்வான வாழ்த்துப் பூச்செண்டு ஐயா!
பதிலளிநீக்குதன்மானப்பாவலர் வெற்றிப்பேரொளி , திருக்குவளை. 9176497418.
கார்டன்×
பதிலளிநீக்குகாரணம்✓