செவ்வாய், மார்ச் 05, 2013

மீண்டும் அமெரிக்கா - 1


நான்காவது முறையாக அமெரிக்கா வந்து சேர்ந்த போது காலை ஏழரை மணி. 2013 பிப்ரவரி 14ம் தேதி.
குடியேற்ற விசாரிப்பு முடிந்த பின், நானும் என் மனைவியும் இரண்டு டிராலிகளில் ஆறு பெட்டிகளை இழுத்துக் கொண்டு வருகையில், பெட்டிகளின் கனம் கண்ணை உறுத்தியதால் இருக்கலாம், பெரிய மீசை வைத்த அதிகாரி ஒருவர் புருவம் உயர்த்தி 'Any food items?' என்றார்.
 
இப்படிக் கேட்கக்கூடும் என்று எதிர் பார்த்திருந்ததாலும், பெட்டிகளில் இருந்த சில பொருள்களை அவர் (தவறாக) உணவுப் பொருள்களாகக் கருதி விடும் வாய்ப்பு இருந்ததாலும், கண்களை ஒரு மாதிரி அசட்டுத்தனம் தோன்றும்படியாக 
என் மனைவியைப் பார்த்து  'ஏதும் உள்ளதா' என்பது போல் பார்த்தேன். அவளும் 'இல்லையே' என்பது போல் அசடு நெளிந்தாள். மீசைக்காரர் திருப்தி அடைந்ததாகத் 
தெரியவில்லை.  'Who packed the items?' என்றார். 'She only packed them' என்றேன். 'Ask her if she had packed any food item'.
 
அவள்  'no' என்றாள் சற்றே தைரியமாக.
 
'Normally people bring white rice kind of items...'
 
'No, nothing of that sort.'
 
மீசைக்காரர், சரி தொலையட்டும் சனியன் என்பது போல் கையை வலது பக்கம் நீட்டி வாசலைக் காட்டினார். 
விட்டால் போதுமென்று விறுவிறுவென்று டிராலியைத் தள்ளிக் கொண்டு  வெளியே வந்து சேர்ந்தோம்.
 
வித விதமான மிளகாய்ப் பொடிகளும், நார்த்தங்காய், அப்பளம், வேப்பம்பூ, சித்தரத்தை, கிராண்டு ஸ்வீட்சில் வாங்கிய முறுக்கு, ஓமப்பொடி, மிக்சர்களும் கொண்டு வராமல் போனது நல்லதாயிற்று என்று எண்ணிக் கொண்டோம்.
 
வெளியில் ஆவலோடு எங்களை வரவேற்கக் காத்திருந்த மூவரில் முக்கியமானவர் எங்கள் பேரன் திரு வினயன் அவர்கள் தான்! சுமார் இருபது மாதங்களே ஆனவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன் மாமா திருமணத்திற்காகச் சென்னை வந்த போது கைக்குழந்தையாக இருந்தவர், இப்போது தன் அப்பாவைப் போலவே நல்ல வளர்த்தி. துறுதுறு வென்று கைகளில் பிடிபடாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். தாத்தா பாட்டியை அடையாளம் புரிந்து கொண்ட மாதிரி ஒரு புன்சிரிப்பு. அத்தோடு சரி. எங்களைப் பார்ப்பதை விடவும், ஜே.எப்.கே  ஏர்போர்ட்டை அணு அணுவாகப் புரிந்து கொள்ளுதலே தலையாய கடமை என்பது போல் மூலை முடுக்கெல்லாம் ஓடத் தொடங்கி விட்டார்.
 
என் மகளும் மருமகனும் உள்ளன்போடு வரவேற்று காருக்கு அழைத்துச் சென்றனர். ஹுண்டாய் எலன்ட்ரா, 2005ல் வாங்கியது, இன்னும் நல்ல நிலைமையில் இருந்தது.அதில் தான்  800 மைலுக்கும் அதிகம் பயணித்து நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்து, டொராண்டோவில் சரவணா பவனில் அடை அவியல் சாப்பிட்டோம். பிலடெல்பியா சென்றோம். வாஷிங்டன் போய் உயரமான லிங்க்கன் சிலை பார்த்தோம். பாஸ்ட்டன் போய்  எம்.ஐ.ட்டி., ஹார்வர்டு யுனிவர்சிட்டி பார்த்தோம். 'இந்த வாரம் புதுக் கார் வாங்கப் போகிறோம். அநேகமாக ஹோண்டா ஒடிஸ்ஸி யாக இருக்கலாம்' என்றாள் ரம்யா. (எப்படியும் இந்தமுறை கலிபோர்னியா பார்த்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்).
 
ஆறு பெட்டிகளையும் காருக்கு உள்ளும் மேலுமாக ஜார்ஜ் அழகாக அடுக்கி (அடக்கி?) வைத்தார். வெளியில் உஷ்ணம் வெறும் ஐந்து டிகிரி செல்ஷியஸ் தான் என்பதால் நாங்கள் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த மேலாடைகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. காரில் அமர்ந்த பின் வேண்டிய உஷ்ணம் நிரம்பியதால் 
உடல் சற்று நிம்மதி அடைந்தது.
 
நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சி வரும் பாதைகள் கண்ணுக்குப் பழகியதாக இருந்தன. அகலமான ஆறு வழிப் பாதைகள், ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் உரிய வேகத்தில் பின் தொடர்ந்து வரும் வாகனங்கள், காவலர்கள் இல்லை என்ற போதும் சிக்னல்களில் நின்று கிளம்பும் ஒழுங்குமுறை எல்லாமும் மீண்டும் ஒருமுறை மனத்தைக் கவர்ந்தன.
 
ஹேக்கன்சாக் நகரை நெருங்க நெருங்க, கண்ணில் பட்ட விளம்பரப் பலகைகளெல்லாம் ஏற்கெனவே தெரிந்தவையாக இருந்தன. டுவான் ரீடு பார்மசி, பி.என்.சி. பேங்க், ஒரு இத்தாலியன் பிஸ்ட்ரோ, ஏதோவொரு ஏ.டி.எம்., ஹேக்கன்சாக் மெடிக்கல் யுனிவர்சிடியின் அகன்ற கட்டிடங்கள் என்று பிராஸ்பெக்ட் அவென்யூ முன்னால் விரிந்தது.
 
சென்ற முறை நாங்கள் வந்த போது  இருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிந்து விட்டதால், அதே தெருவில் இன்னொரு பதினோராம் மாடிக்குக் குடிபெயர்ந்திருந்தாள் ரம்யா.
 
அளவில் சற்றே சிறியதாக இருந்தாலும் வசதிகள் அதிகம்,  சமையலறையின் அருகிலேயே சாமான்கள் அறை  உண்டு என்று சந்தோஷப்பட்டாள்.
 
வழக்கம் போலவே ஒவ்வொரு சுவரையும்  ஓவியங்களாலும் புகைப்படங்களாலும் சுவர் விரிப்புகளாலும் நிறைத்திருந்தாள். குளிர்ப் பெட்டியின் மீது வினயனுக்காக  ஏ, பி, சி, டி, இருபத்தாறு எழுத்துக்களும் அவற்றை ஒவ்வொன்றாகப் பதித்தால் இசையோடு எழுத்தின் பேர் சொல்லும் ஒரு சிறு பொம்மையும் ஒட்டி இருந்தாள்.
 
காரிக்காக என்று வாங்கி, இப்போது வினயனுக்காக என்றே நடுநாயகமாக அமர்ந்திருந்தது, CASIO -WK 200 கீ போர்டு.
(காரி என்கிற அரவிந்த கார்த்திக் இப்போது அட்லாண்டாவில் இருக்கிறான். எங்கள் ஒரே மகன்).
 
கூடமெங்கும் வினயனின் புத்தகங்கள் இறைந்து கிடந்தன.
 
காலையில் எழுந்தவுடன் வினயன் ஓடி வந்து கீ போர்டைத் தானாகவே ஆன் செய்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வாசிக்கும் கலைஞன் மாதிரி அருகே அமர்ந்துகொண்டு, மெல்ல ஒவ்வொரு விரலாலும் ஒரு கட்டையைப் பற்றிக் கொண்டு ஏதோவொரு தாளத்திற்கேற்ப விரைந்தும் மென்மையாகவும் இசை 
எழுப்புவான்.  முகத்தை அடிக்கடி பின்னால் திருப்பி யாராவது இருக்கிறார்களா, அவர்களது முகபாவம் என்ன சொல்கிறது  என்று கவனிப்பான்.
 
எல்லாமே இரண்டு நிமிடங்கள் தான்! அப்புறம் அவனுக்கென்றே நிரந்தரமாக 'ஆனில்' இருக்கும் லேப்டாப்பிடம் ஓடி விடுவான். எந்த பட்டனை அழுத்தினால் நர்சரி ரைம்ஸ் வரும் என்பது அவனுக்கு அத்துபடி. அதை முடுக்குவான்.
 
அங்கு அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் அகன்ற திரை டி.வி.யை நோட்டம் விடுவான். அது ஆப் ஆகியிருக்கும் பட்சத்தில்  வேகமாகப் போய் ஆன் பண்ணிவிட்டு சேனல் 13 வருகிறதா என்று பார்ப்பான். அதில் PBS KIDS என்ற சேனலில் CURIOUS GEORGE என்ற குரங்கு கார்ட்டூனும், BUBBLE GUPPIES என்ற நாலைந்து முட்டைக்கண் பொம்மைகள் அட்டகாசம் செய்யும் கார்ட்டூனும் வரும். பின்னதில் SUPER DOOPER COMPUTER என்று ஒரு லேப்டாப் அடிக்கடி புதுப் புது வார்த்தைகளுக்கு SPELLING காட்டும். வினயன் அந்த எழுத்துக்களை உற்றுக்  கவனித்து, தானும் திருப்பிச் சொல்ல முயற்சிப்பான்.
 
எப்போது டி.வி. பார்த்தாலும் ஒரு ஆராய்ச்சியாளனுக்கே உரிய கவனத்தோடு அதன் மிக அருகில் நின்று கொண்டு வாயும் கண்ணும் அசைந்து அசைந்து விரிய பிரமித்து நிற்பான். யார் கூப்பிட்டாலும் நகரவே மாட்டான். (ஸ்கந்துவும்  ஸம்ப்ரித்தாவும் இருந்தார்களே அதே போலத் தான். அது இந்தியா, இது அமெரிக்கா, அவ்வளவு தான் வேறுபாடு. குழந்தைகள் எல்லா  இடத்திலும் 
குழந்தைகள் தான்).
 
உள்ளே நுழைந்து பெட்டிகளை ஒவ்வொன்றாகத் திறந்து பொருள்களை வெளியெடுக்கையில்  வினயன் வியப்போடு நின்று கொண்டிருந்தான். அவனுக்கென்று அரிச்சுவடி, ஆங்கிலம்-தமிழ், விலங்குகள், பரவிகள், பழங்கள், எண்கள் போன்ற சார்ட்டுகளும் வண்ணப் புத்தகங்களும் வெளியே எடுக்கையில் மிகுந்த ஆனந்தம் அவனுக்கு. அடுத்த நிமிடமே எல்லாவற்றையும் ஆராயத் தொடங்கி விட்டான்.  ஆனால் அவனுக்காக விசேஷமாக வாங்கி  வந்திருந்த குட்டிக்குட்டி ஸ்டிக்கர்களை மட்டும் இப்போது வேண்டாம், அடுத்த வருடம் கொடுக்கலாம் என்று உள்ளே  வைத்தாள் ரம்யா.
 
காரியும் அவன் மனைவி ஹரிணியும் மொபைலில்  நலம் விசாரித்து வரவேற்றார்கள். 
 
ஹரிணிக்கு ஒரு பிரசண்டேஷன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மாலை வருவதாகச் சொன்னாள். காரி, அட்லாண்டாவிலிருந்து மார்ச் நடுவில் வருவதாகச் சொன்னான்.
 
பசி நேரம் வந்து விட்டது. 'ஒரே நிமிடம், தயார் செய்து விடுகிறேன்' என்று ரம்யா விரைந்தாள்.

(தொடரும்).
 *******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக