வெள்ளி, ஜூலை 05, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)

இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)

நாயர் திரும்பி வந்து அந்த மண்டையோட்டை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வதற்குள் என் மனத்தில் தோன்றி மறைந்த அச்சமூட்டும் எண்ணங்கள் எவ்வளவென்று கணக்கிடவே முடியாது.


படிக்கட்டில்  நிற்கும் பேய் ?
ஒரு வேளை நாயர் வராமல் போய்விட்டால்? இந்த மண்டையோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்ந்துகொண்டிருந்தது. ஆற்றில் குளிப்பதற்காக எங்கள் தெருவிலிருந்து வயதானவர்கள் பலர் ஆற்றங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் யாராவது என்னைப் பார்த்துவிட்டு தாத்தாவிடம் சொல்லிவிட்டால்?

குளிக்க வருபவர்களில் எனக்கு ‘பிராத்மிக்’ கற்றுத்தரும் ஹிந்தி ஆசிரியரும் இருக்கக்கூடும். அவர் மட்டும் பார்த்துவிட்டால் ஹெட்மாஸ்டரிடம் விஷயம் போய்விடும். அதன் பிறகு என் பெயர் ‘மண்டையோடு’ என்றே ஆகிவிடும்.


இன்னொரு பயமும் சேர்ந்துகொண்டது. குடுகுடுப்பைக்காரர் தன்னுடைய மந்திர உச்சாடனத்தை முடித்துவிட்டு வந்துவிட்டால், நிச்சயம் என்னைப் பார்த்து விடுவார். அவரோ மந்திரம் தெரிந்தவர். இதுவோ ஒரு மண்டையோடு. ஒரு வேளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டால் நாயருக்கு நான் என்ன பதில் சொல்வது?

 நான் ஏற்கெனவே ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தாகி விட்டது. குளித்து முடித்து விட்டேன். ஆனால் இந்த மண்டையோட்டை இவ்வளவு நேரம் கையில் வைத்திருந்தேனே, குளிக்க வேண்டாமா? பிணத்தைத் தொட்டால் குளிக்கவேண்டும் தானே!

இது யாருடைய மண்டையோடாக இருக்கும்? குழந்தையுடையதா, பெரியவர்களுடையதா? ஆணா, பெண்ணா? உள்ளூர்க்காரர்களா, இல்லை, கேரளாவிலிருந்து நாயர் கொண்டு வந்ததா?

இப்படி மனது எண்ணிக் கொண்டே போயிற்று. நல்ல வேளை நாயர் வந்து விட்டார். சுற்று முற்றும் பார்த்தார். யாரும் அருகில் இல்லை. இரண்டு கைகளையும் பவ்வியமாக நீட்டி “கொடு” என்றார். கொடுத்தேன். அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மகிழ்ந்தேன். கரையை விட்டுக் கிளம்ப முயற்சித்தேன். குட்டிச்சாத்தான் காரியம் இன்று கைகூடாமல் போயிற்றே என்று தீராத வருத்தம் வேறு.

“பையா” என்று மெதுவாக அழைத்தார் நாயர். என்னிடம் பணிவாக ஓடிவந்தார். “உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன், செய்வாயா?” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

“மண்டையோட்டைப் பற்றின விஷயம் யாருக்கும் சொல்லிவிடாதே. என்னை இங்கு பார்த்ததையும் சொல்லிவிடாதே. செய்வாயா?”

“எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றேன். உண்மையிலேயே புரியவில்லை தான். ஏன் யாரிடமும் சொல்லக்கூடாது?

“அதையெல்லாம் நாளை சொல்கிறேன். அதுவரை யாருக்கும் சொல்வதில்லையென்று எனக்கு வாக்குக் கொடுப்பாயா?” என்று மிகவும் உருக்கமுடன் கேட்டார்.

நான் மௌனமாக இருந்தேன். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக எனக்குப் பட்டது. அப்போது ஆனந்தவிகடனில் டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா என்பவர் எழுதிய ‘தெருவிளக்கு’ என்ற மர்மத் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. அந்தப் பின்னணியில் பார்த்தபோது, நாயரிடமும் ஒரு மர்மக்கதை இருக்கும் என்று தோன்றியது. அதை எப்படியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அத்துடன் அவரிடம் ‘கேரள மேஜிக்’ புத்தகத்தைப் பார்த்தபிறகு இவருக்கும் குட்டிச்சாத்தான் பற்றி தெரிந்திருக்க முடியும் என்று மனம் சொல்லியது. எனவே எனக்கு மந்திர சக்தி கிடைக்கவும் இவர் உதவி புரியலாம் என்று தோன்றியது. ஆகவே இப்படிச் சொன்னேன்: “சரிங்க, ஆனால் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்? இது யாருடைய மண்டை ஓடோ? இவ்வளவு நேரம் என் கையில் இருந்துவிட்டதே! எனக்குப் பயமாக இருக்கிறது” என்றேன்.

அருகில் நெருங்கி வந்தார் நாயர். “பயப்படாதே. நாளை ராத்திரி நீ திண்ணையில் படுத்துக்கொள். நான் வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன். அதுவரை பேசாமல் இரு” என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் தண்ணீரை நோக்கிப் போனார்.

சற்று நேரத்திற்கெல்லாம் “ஐயோ, என்னை அடிக்காதே, அடிக்காதே! உன்னிடமே  கொடுத்து விடுகிறேன்” என்று நாயர் அலறும் குரல் கேட்டது. நான் மிகுந்த அச்சத்துடன் வீட்டை நோக்கி ஓடலானேன்.
****
மறுநாள் ராத்திரி. திண்ணையில் படுத்துக்கொண்டேன். வானம் தெளிவாக இருந்தது. வாடைக்காற்றின் வெப்பம். துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். தலை மாட்டில் ‘மலையாள மாந்திரிகம்’ புத்தகம்.

சற்று தூரத்தில் நாயர் இருமுவது போல் தெரிந்தது. எழுந்து நின்றேன். விளக்கை அணைத்துவிட்டு என்னை நோக்கி வந்தார். திண்ணையில் என் அருகில் உட்கார்ந்தார்.

“நேற்று என்ன நடந்தது?” என்றேன். அதைச் சற்றும் எதிர்பாராதவராக, “ஒன்றும் இல்லையே” என்றார்.

“இல்லை, நீங்கள் என்னிடமிருந்து மண்டையோட்டை வாங்கிச் சென்ற பிறகு ஏதோ நடந்திருக்கிறது. மறைக்காதீர்கள்” என்றேன் உறுதியுடன்.

பேய்கள் நடனமா?

“உஷ்! மெதுவாகப் பேசு! எல்லாம் அந்த குடுகுடுப்பைக்காரன் வேலை” என்றார்.

“இந்த மண்டையோடு வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப நாளாக ஆசை. என்னை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பார்த்தான். கடைசியில் அடிதடி வரை வந்து விட்டான். ஆனால் நான் நான் விடுவேனா? “ என்றார் பெருமிதமாக.

“அப்படியானால் அது இப்போது எங்கிருக்கிறது?”

“அது தன்னுடைய இடத்திற்குப் போய்விட்டது”.

“அப்படியானால்?”

“பையா, மண்டை ஓடுகள் எங்கே இருக்கும் சொல்? சுடுகாட்டில் தானே! அதனால் சுடுகாட்டில் புதைத்துவிட்டேன்” என்றார் நாயர்.

சற்று நேரம் மௌனமாக இருந்தார். எனக்குத் தேவையான விஷயம் இதல்லவே! அது யாருடையது? எப்படி இவர் கைக்கு வந்தது?

“அந்த மண்டை ஓடு என்னிடம் எப்படி வந்தது தெரியுமா? ஒரு சாமியார் இருந்தார். தொண்ணூறு வயசிருக்கும். அவருக்கு மந்திர தந்திரங்கள் எல்லாம் தெரியுமாம். சாவதற்கு சில வாரங்கள் முன்னால் என் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பஜனை கோவிலில் வந்து தங்கினார். அப்போது நான் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன்....” என்றார் நாயர்.

“அவருக்கு நான் தான்  சாப்பாடு கொண்டுபோய்க் கொடுப்பேன். வாளியில் தண்ணீர் கொண்டுபோய்க் குளிப்பாட்டுவேன். அவரிடம் சரியான துணிமணிகள் இல்லை. என் அப்பாவிடமிருந்து இரண்டு வேட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். அப்படித் தான் அவரோடு பழக்கம் ஏற்பட்டது.

“அவர் தன்னைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. ஆனால் பல நாட்கள் இரவில் எட்டு மணி சுமாருக்கு என்னைக் கூப்பிடுவார். சின்ன கிராமம். வேறு யாரும் வரமாட்டார்கள். பல விஷயங்கள் பேசுவார். மனிதனாகப் பிறந்தவன் ஒருமுறையாவது இமயமலைக்குப் போய்வர வேண்டும், ஆனால் முன் பிறவியில் புண்ணியம் செய்தவனால் தான் அது முடியும் என்பார்.

“ஒரு நாள் அவருக்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. இன்னும் இரண்டு நாளில் அமாவாசை. அதற்கு மேல் தாங்காது என்று அம்மா சொன்னார். அதே போல் அமாவாசையன்று அவர் இறந்துவிட்டார். ஊரில் யாரோ ஒரு வயதானவர் தான் இவருக்கு நெருப்பு வைத்தார். பத்தாவது நாள் அம்மா ஊரைக் கூட்டி அவருக்காக விருந்து வைத்தார். அவர் சாவதற்கு முன்பு என்னிடம் கொடுத்தது தான் இந்த மண்டை ஓடு” என்று முடித்தார் நாயர்.

“அது வந்த நாளில் இருந்தே எங்கள் வீட்டில் நல்லது நடக்க ஆரம்பித்தது. எனக்கு இராணிப்பேட்டையில் வேலை கிடைத்தது. என் தங்கைக்கு கல்யாணம் நடந்தது. ஊரில் இருந்த பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்க முடிந்தது.....ஆனால்.....” என்று மேற்கொண்டு சொல்ல தயங்கியவர் போல் நிறுத்தினார் நாயர்.

“சொல்லுங்கள்” என்று ஊக்கப்படுத்தினேன். இனிமேல் தான் மண்டை ஓட்டின் மர்மம் வெளிப்படப்போகிறது என்று நிச்சயமானது.

“சாமியார் ஒரு துணிமூட்டையை என்னிடம் கொடுத்தபோது அதில் இந்த மண்டை ஓடு இருந்தது தெரியாது. தான் இறந்து ஐந்து வருடம் கழித்து தான் அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அது வரை பார்க்காமல் தான் இருந்தேன். யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று ஒரு பரணில் ஒளித்து வைத்தேன். எலி கடித்து, துணி கந்தலாகி, ஒரு நாள் தானாகவே உருண்டு விழுந்த போது தான் சாமியார் கொடுத்தது மண்டை ஓடு என்று தெரிந்தது. அம்மா அதைப் பத்திரமாக எடுத்து பூஜை அறையில் வைத்தார். ஆனால் அதன் பிறகு வீட்டில் எல்லாருக்குமே கெடுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது.      

“நன்றாக இருந்த அம்மா, குளத்தில் குளிக்கப் போனவள், திடீரென்று  இறந்து போனாள். எனக்கு நடக்கவிருந்த திருமணம் நின்று போயிற்று. நாங்கள் விற்ற வீட்டில் தனக்குப் பங்கு கொடுக்கவேண்டுமென்று தூரத்து உறவினர் ஒருவர் கேஸ் போட்டார். இங்கு நான் குடியிருந்த வீட்டின் மீது இடி விழுந்து சேதமானதில் வீட்டைக் காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பிறகு தான் இந்த வீட்டிற்குக் குடி வந்தேன். அதன் பிறகு எனக்குத் திருமணமே கூடிவரவில்லை....” என்று நாயர் சொன்னதும் அவர் மீது ஆழ்ந்த பரிதாபம் ஏற்பட்டது எனக்கு.

“அப்படியானால் அந்த மண்டை ஓட்டைத் தூக்கி எறிந்திருக்க வேண்டியது தானே?” என்றேன்.

“அதற்குக் காரணம் இந்தக் குடுகுடுப்பைக்காரன் தான். என்னிடம் அது இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? ஒரு நாள் விடியற்காலையில் ‘ஜக்கமா சொல்றா..ஜக்கம்மா சொல்றா.. அவர் கொடுத்ததைக் கை விட்டு விடாதே...பத்திரமா வச்சுக்க, பத்திரமா வச்சுக்க..’ என்று சொல்லிவிட்டுப் போனான். காலையில் அவன் வந்தபோது அவனிடம் கேட்டேன். மண்டை ஓட்டைக் காட்டினேன். குடுகுடுப்பைக்காரர்களுக்கு மந்திர உபாசனை உண்டு. அதனால் அவனிடம் யோசனை கேட்டேன்.

“அவன் இதைத் தொடாமல் பார்த்துவிட்டு சொன்னான்- ‘இது உன்னிடம் இருந்தால் உன் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இதை அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னால் ஓடும் நீரில் குளிப்பாட்டிய பிறகு சுடுகாட்டில் புதைத்து அதன் மீது ஒரு வேப்பஞ்செடியை நடு. எல்லாம் சரியாகும்’ என்று அறிவுரை கொடுத்தான்.

“மந்திர உபதேசங்களுக்கு அனுஷ நட்சத்திரம் ரொம்ப உகந்த நாளாம். நேற்று அந்த நாள். அதனால் தான் அதை எடுத்துக்கொண்டு விடியற்காலையிலேயே ஆற்றங்கரைக்கு வந்தேன். பிறகு நடந்தது தான் உனக்குத் தெரியுமே! இந்த குடுகுடுப்பைக்காரனுக்கு ஏனோ அந்த மண்டை ஓட்டின் மேல் திடீரென்று ஆசை வந்து விட்டது. ஆற்று நீரில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று எங்கிருந்தோ வந்தான்...” என்றார் நாயர்.

‘திடீரென்று அவன் வந்துவிடவில்லை; நான் ஆற்றில் இருந்த போதே அவனும் மந்திர உச்சாடனம் செய்து கொண்டு இருந்தான்’ என்று சொல்ல நினைத்தேன். இவரிடம் ஏன் சொல்வது என்று விட்டுவிட்டேன்.   

தனக்கு வேண்டுமென்று முன்பே சொல்லியிருந்தால் நாயரே கொடுத்திருப்பாராம். அப்படியில்லாமல் ஆற்றில் வந்து அவரை மிரட்டியிருக்கிறான். “இந்த மண்டை ஓடு சக்தி வாய்ந்தது. அதைக் கையில் வைத்திருப்பவன் மந்திர சக்தி உடையவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவன் முப்பது நாளில் சந்ததி இன்றி அழிந்து போவான்” என்று எச்சரித்திருக்கிறான். இவருக்குத் தாளமுடியாத கோபம் வந்திருக்கிறது.

அதே மண்டை ஓட்டால் அவன் தலையில் ஓங்கி அடித்துவிட்டு கரையேறி விட்டார். அவன் மயங்கித் தண்ணீரில் விழுந்து விட்டானாம்.

அவன் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, அருகிலிருந்த சுடுகாட்டில் குழி தோண்டி அதைப் புதைத்து விட்டாராம். ஒரு வேப்பஞ்செடியை அதன் மீது நட்டு, சாமியாரை மனதால் நினைத்து வணங்கிவிட்டு வந்தாராம்.

“இனிமேல் பயமில்லை. ஆனால் குடுகுடுப்பைக்காரன் எப்படியும் வருவான். அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று முடித்தார் நாயர்.

எனக்கு ‘சப்’பென்றிருந்தது. நான் இன்னும் சுவாரஸ்யமான கதையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனது அடிப்படை நோக்கம் கதை கேட்பதல்லவே! குட்டிச்சாத்தானை வசப்படுத்துவதல்லவா?

“அவனைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? உங்களுக்கு மந்திரங்கள் தெரியாதா? உங்கள் வீட்டில் மந்திரப் புத்தகம் ஒன்று இருந்ததே!” என்று சாதாரணமாகக் கேட்பதுபோல் கேட்டேன்.

நாயர் முகத்தில் சட்டென்று ஒரு திகைப்பு எற்பட்டது, இவனுக்கு எப்படித் தெரியும் என்பது போல். “அதெல்லாம் புத்தகம் படித்து வருவதல்ல, குரு மூலம் கற்றுக் கொண்டால் தான் வரும். மந்திர சக்தி என்பது சாதாரணமானதல்ல” என்றார் சற்று கண்டிப்பான குரலில்.

“அப்படியானால் இந்தப் புத்தகத்தில் போட்டிருப்பது தவறா? குட்டிச்சாத்தான் மந்திரத்தை வேறு யார் மூலமும் கற்றுக்கொள்ளக்கூடாது, தானாகவே தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறதே!” என்று தலைமாட்டில் இருந்த மலையாள மாந்திரீகம் புத்தகத்தைக் காட்டினேன்.

அடுத்த நிமிடம் அவர் முகம் மாறியது. இருட்டிலும் அவருடைய முகம் கலக்கமும் குழப்பமும் அடைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. “நீ சின்னப் பையன். இந்தப் புத்தகத்தை நம்புகிறாயா, இல்லை நான் சொல்வதை நம்புகிறாயா?” என்றார்.

இப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. “கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாள் சினிமா பாட்டு புத்தகம் வாங்கப் போன போது இந்தப் புத்தகத்தை வாங்கினேன். ஆர்வமாக இருந்ததால் படித்தேன்.  குட்டிசாத்தான் உபாசனை செய்தால் நமக்குப் பிடித்தமான இனிப்புப் பொருள்களைக் கொண்டுவந்து தரும் என்று இதில் இருந்ததால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற் ஆசை வந்துவிட்டது” என்றேன்.

நாயர் இருட்டில் என்னைத் தழுவிக்கொண்டார். தலையை அன்புடன் வருடினார். “பையா, உன்னுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் இம்மாதிரி மந்திர சக்திகள் எல்லாருக்கும் கை வந்து விடாது. அது மட்டுமல்ல, மந்திர சக்தி வந்துவிட்டால், குடும்பம், குழந்தை, வீடு, வாசல் எல்லாவற்றின் மீதும் பற்றுதல் நீங்கிவிடும். அதன் பிறகு பைத்தியம் போல் திரியவேண்டியது தான். இதெல்லாம் போகப்போக உனக்குப் புரியும். நான் கேரளாவில் பிறந்தவன். அங்கே மூன்று வீட்டுக்கு ஒருவர் மந்திரவாதி என்றால் மிகையாகாது. ஆனால் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் யாரும் வாழ்க்கையில் முன்னேறியதில்லை. அதனால் இந்தக் குட்டிச்சாத்தான், மோகினிப் பிசாசு இதெல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ படித்து முன்னுக்கு வருவதைப் பார். இல்லையென்றால் என் மாதிரி தான் ஆக வேண்டி வரும். சரியா?” என்று எழுந்தார்.

“இருங்கள்” என்று அவரை நிறுத்தினேன். “என்னை மாதிரி சிறு பையன்கள், ஆர்வத்தினால் குட்டிச்சாத்தான் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்திவிட்டால் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் வருமா?” என்று கேட்டேன்.

“நிச்சயம் வரும்! ஆனால் எப்போது, என்ன மாதிரி வரும் என்று சொல்ல முடியாது. முப்பது வயதுக்குள் ஏதாவது கெடுதல் நடந்தே தீரும்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நாயர். கதவைத் தாளிடும் முன்பு ஒருமுறை என்னைப் பார்த்து மெதுவாகச் சொன்னார்: “அது மட்டுமல்ல, நேற்று  இந்த மண்டை ஓட்டைச் சில நிமிடங்கள் உன் கையில் வைத்திருந்தாய் அல்லவா? அதன் விளைவாக உனக்கு ஏதாவது கெடுதல் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால், அந்த மண்டை ஓட்டை நினைத்து மூன்று தடவை என் பெயரைச் சொல்லு. உனக்கு வந்த கெடுதல் எனக்கு மாறிவிடும். இதை யாரிடமும் சொல்லாதே” என்றார்.

அப்படி ஒரு கெடுதல் வந்தது. பதினைந்து வருடங்கள் கழித்து.
           (நாளை நிச்சயம் முடிந்துவிடும்).      

இந்த வரிசையில் கடைசி பதிவு:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)

(C) Y.Chellappa

2 கருத்துகள்: