புதன், மார்ச் 13, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 2



இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1

கையிலிருந்த சுமைகளும், இருட்டும், மலைப் பாதையில் இருப்பதாகச் சொல்லப்படும் நரிகளும் என்ன செய்வதென்று புரியாத இக்கட்டான நிலைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டன. வேறு ஊராக இருந்தால் பஸ் நிற்கும் இடங்களில் ஒரு தேநீர்க் கடையாவது இருக்கும். ஒரு தேனீர் குடித்த மாதிரியும் இருக்கும். பேச்சுத் துணையும் இருக்கும். வேறு வழி இல்லை எனில் அந்த 

கடையிலேயே இரவைக் கழித்து விடலாம்.மருத்துவாம்பாடியில் அதுவும் இல்லை.

தேன்கனிக்கோட்டையில் ஏழாவது படித்துக் கொண்டிருந்த பொழுது காலையில் தினமும் பாலும் தயிரும் வாங்கக் காய்கறி அங்காடிக்குச் செல்வதுண்டு. ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா என்று  ஒருவன் கூவிக் கொண்டிருப்பான். அவன் முன்னால் தினத்தந்தி அளவுக்கு பெரிய பலகையில் ஸ்டாம்ப் மாதிரி நிறைய படங்கள் ஒட்டியிருக்கும். பத்து பைசா கொடுத்தால் ஒரு படம் கொடுப்பான். 'பிரித்து விடாதே' என்று அதட்டுவான். மீண்டும், ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா என்று கூவுவான். சுமார் பத்து அல்லது பன்னிரண்டு படங்கள் விற்றவுடன், திரும்பவும், ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா, கடைசி தரம், இதோ குலுக்கப் போகிறேன்  என்று உச்ச குரலில்  கூவுவான்.
மேலும் ஒன்றிரண்டு பத்து பைசாக்கள் சேரும்.

எல்லோரும் ஆவலாய்க்  காத்திருக்க, ஒரு பித்தளைச் செம்பில் ஒன்று இரண்டு போன்ற எண்கள் எழுதிய சிகரெட் அட்டைகளைப் போட்டு, தன் உள்ளங்கையால் மூடி, ஐந்தாறு தடவை தலை
கீழாகக் குலுக்கி, அந்தக் கூட்டத்திலேயே சிறுவனான ஒருவனை எடுக்கச் சொல்வான். உடனடியாக அந்த எண்ணை அறிவிக்காமல் அந்தப் பையனை ஏதோ குற்றம் செய்துவிட்ட மாதிரி சில நிமிடம் உற்றுப் பாத்துவிட்டு அதன் பிறகு தான் அறிவிப்பான். உடனே ஒவ்வொருவரும் தங்கள்
கையிலிருக்கும் படத்தைக் கிழித்து அதன் பின்னல் அந்த எண் 
இருக்கிறதா என்று ஆவலோடு பார்ப்பார்கள். அதிர்ஷ்ட எண் 
இருக்கும்  நபர், அங்கே கடை விரித்திருக்கும் பொருட்களில்
தனக்கு வேண்டிய ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். தேநீர் வடிகட்டி, சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, ஷேவிங் ரேசர்,
ஒன்றாகச் சுற்றிய மூன்று சீப்புகள், ஐந்தாவது வகுப்பு மாணவர்கள் வரை அணியக் கூடிய பெல்ட்டு, பெண்களுக்கான பிளாஸ்டிக்
பொட்டு, ஐந்து கலர் ரிப்பன்கள், ஜெர்மன் வெள்ளியிலான
குங்குமச்  சிமிழ், ஆஞ்சநேயர், முருகன் படம், எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி படம், போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்கள் 
அங்கே இருக்கும்.

ஆர்வ மிகுதியால் ஒரு நாள் நானும் பத்து பைசா போட்டேன். அதிர்ஷ்ட எண்ணைக் குலுக்கும் வரை நெஞ்சில் 'திக் திக்' தான். பாட்டிக்கு என்ன பதில் சொல்வது என்று தான் கவலை. நல்ல வேளை, எனக்கே அன்று அதிர்ஷ்டம் விழுந்தது. ஆனால் எனக்குப் பிடித்தமான பொருள் ஒன்றுமே அங்கில்லை. எனவே ஆஞ்சநேயர் படத்தை எடுத்துக் கொண்டேன். நீல வண்ணத்தில், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயர் படம். எனக்கு ஒரே குஷி. பத்து ரூபாய் படம் பத்தே பைசாவுக்குக் கிடைத்ததென்றால் சும்மாவா? அதிலும் அஞ்சநேயரை மிகவும் வணங்கும்  
பாட்டியின் வாயை இந்த விஷயத்தை வைத்தே இன்னும் ஒரு மாதத்திற்குக் கட்டிப்போட்டு விடலாமே!

அப்படியே ஆயிற்று. 'என் தலைமாட்டில் வைத்துக் கொள்ள இந்த சைஸ் ஆஞ்சநேயர் படம் தான் வேண்டும் என்று நேற்றுக் கூட ஆசைப்பட்டேன். என் பிரார்த்தனை பலித்துவிட்டது' என்று பாட்டி சொல்லிக்கொண்டார். பள்ளியிலிருந்து நேரம் கழித்து வந்தாலும் சரி, அவர் தூங்கிக் கொண்டிருக்கையில் நாங்கள் பெருத்த இரைச்சலோடு விளையாடினாலும் சரி, பல  நாட்கள் வரை அவர் கோபிக்கவேயில்லை.

அந்த அஞ்சநேயரை இப்போது நினைத்துக் கொண்டேன், எனக்கு ஒரு வழி காட்டமாட்டாயா என்று. இல்லை, இல்லை, இந்த மலைப் பாதையைத் தவிர வேறு வழி  காட்ட மாட்டாயா என்று.

உண்மையில் ஆஞ்சநேயருக்கு சக்தி இருந்தது என்று தான் நினைக்கிறேன். அடுத்த சில நிமிடங்களில்  இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொரு சைக்கிளில்அங்கு வந்தனர். என்னைப் பார்த்து ஆச்சரியமாக, " யார் நீங்கள்? இந்த இருட்டில் சாமான்களுடன் நிற்கிறீர்கள்? எங்கு போக வேண்டும்?" என்று கேட்டனர். அது போதாதா எனக்கு, கடகடவென்று சொன்னேன். இரவுக்குள் சொரகொளத்தூர் போய்விட வேண்டும், உதவி செய்வீர்களா என்றேன்.

இருவரில் ஒருவர் பதின்வயதினர். பள்ளி மாணவர் போலிருந்தார். மற்றவருக்கு இருபத்தைந்து வயதிருக்கும். அவர் கலகலவென்று சிரித்துக்கொண்டே, "உதவி செய்யாவிட்டால் எப்படி? நாளை உங்கள் முகத்தில் தானே விழிக்கவேண்டும்?" என்றார். எனக்குப்  புரியவில்லை.

"கவலை வேண்டாம் சார்! என் பேர் குமரன். சொரகொளத்தூர் உயர்நிலைப் பள்ளியில் தான் நானும் ஆசிரியராக இருக்கிறேன். ஓவிய ஆசிரியர். உங்களைப் போல நானும் டென்-எ-ஒன் தான்! ஆனால் உங்களை விட ஒரு வருடம் சீனியர். ஏனென்றால் போன வருடம் திருப்பத்தூரில் டென்-எ-ஒன் னாக இருந்தேன். இங்கு வந்து பத்து நாள் தான் ஆகிறது. வீடு வாடகைக்கு எடுத்திருக்கிறேன். போளூரில் போய் வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கி, நம்ம ஹெட்மாஸ்டர் நாகராஜன் சார் வீட்டில் வைத்து விட்டு இப்போது சொரகொளத்தூர் தான் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார். "நீங்களும் போளூரிலேயே இறங்கி சார்  வீட்டிலேயே தங்கி இருக்கலாமே" என்றார்.

யாருக்கு இதெல்லாம் தெரியும்? பழைய சைக்கிளில் காலையும் மாலையும் கல்லூரிக்குப்  பத்து கிலோமீட்டர் போய் வந்ததும், மீதி இருந்த நேரங்களில் பெரும்பகுதி ராணிப்பேட்டை நூலகத்தில் 
கழித்ததும்,  நண்பர்கள் நடத்தும் கவியரங்கங்களுக்காகக் கவிதை எழுதுவதும் தவிர எனக்கு வேறு யாருமே  எதுவுமே  பழக்கமில்லையே!

"பரவாயில்லை, நம்மிடம் இரண்டு சைக்கிள் இருக்கிறதே! உங்கள் சாமான்களை அண்ணாமலையிடம்  கொடுங்கள். அவன் நம்ம 
ஸ்கூல் தான்.  ஒன்பதாவது படிக்கிறான்.  சூட்கேசுடன் என் பின்னால் உட்காருங்கள். டார்ச் லைட் இருக்கிறது. சைக்கிளில் 
டைனமோவும் ஒர்க்கிங் கண்டிஷன் தான். பயம் இல்லாமல்  
போகலாம்" என்றார், குமரன்.

இருந்தாலும் எனக்குச் சற்று தயக்கம். "ஆறு மைல் தூரம், மலைப் 
பாதை, குள்ள நரிகள் இருக்கும் என்றார்களே!"

"தெரியாதவர்கள் சொல்லியிருப்பார்கள். மலைப் பாதை என்று சொல்வதற்கில்லை. அங்கங்கே கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கும். பொதுவாக காட்டுப் பாதை. ஆனால் குள்ளநரிகள் கிடையாது. தூரமும் வெறும் ஐந்து கிலோமீட்டர் தான். சைக்கிளில் மாணவர்கள் நிறைய பேர் செல்வதால், பாதை நல்ல அகலமாக இருக்கும் " என்று ஆறுதலாகச் சொன்னார், குமரன்.

" புலி சிங்கம் கூட கிடையாது சார், பயப்படாதீங்க" என்று தன் பங்குக்குத் தைரியமூட்டினான், அண்ணாமலை.

மீண்டும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொன்னேன். 
 
சொரகொளத்தூரை அடையும் பொழுது மணி ஒன்பது ஆகிவிட்டது.
நல்ல இருட்டு, ஆனால் தெருவில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. (அன்றைய தமிழ்நாடு!). நினைத்ததற்கு மாறாக நல்ல வளமான ஊராகவே இருந்தது. நிறைய கல்வீடுகள்.

குமரன்,  தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அண்ணாமலை சாமான்களை உள்ளே வைத்துவிட்டு, 'குட் நைட் சார்' என்று  கிளம்பினான். அப்போது தான் எனக்கு நிம்மதி ஆயிற்று. வீ ட்டுக்கு உடனே இது பற்றி எழுத வேண்டும்.

ஸ்டவ்வில் கொஞ்சம் பாலுடன் ஒரு அலுமினியக் குவளை 
இருந்தது. அதைக் காய்ச்சி இருவரும் குடித்தோம். பிஸ்கட்டும் 
வாழைப் பழமும் சாப்பிட்டோம்.

குடிசை வீடு தான். மஞ்சம்புல் வேய்ந்த கூரை. ஆனால் நல்ல 
கனமான சுவர்கள். அண்மையில் தான் வெள்ளை யடித்திருக்க வேண்டும். மின்வசதி இருந்தது. மூன்று மின்விளக்குகள், ஒரு 
மின்விசிறி. ஆனால் வெம்மை தாங்க முடியவில்லை.

"நான் கீழே பாயில் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள்" என்று கயிற்றுக் கட்டிலைக் காட்டினார் குமரன். இருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை  எடுத்துக் கொண்டார்.

"பரவாயில்லை. நீங்கள் கட்டிலிலேயே படுங்கள். நான் பாயில் படுக்கிறேன்" என்று சொன்னாலும் அவர் கேட்கவில்லை. "ஒரு ராத்திரி மட்டும் தானே" என்றார்.

"இரவில் சிறுநீர் கழிக்க வெளியே போக வேண்டி இருக்கலாம். அதனால் கதவைத் தாளிட வேண்டாம். இங்கே திருடர் பயம் கிடையாது" என்று போர்த்திக் கொண்டார்.

"நாளை, ஞாயிற்றுகிழமை யல்லவா? சற்று  அதிகமாகவே தூங்குங்கள். பக்கத்தில் மணியக்காரரிடம் இதே போன்ற வீடு காலியாக இருக்கிறது. நீங்கள் கேட்டால்  மறுக்க மாட்டார்" என்றார்.

குமரனுக்கு நன்றி சொன்னேன். அவர் மட்டும் இல்லையென்றால்
இன்று இரவு எங்கே இருந்திருப்பேனோ! அசதியால் உடனே தூங்கிப் போனேன்.
*******

திடீரென்று ஏதோ சப்தம். பக்கத்தில் யார் வீட்டிலோ  பன்னிரண்டு அடித்தது. புரண்டு படுத்தேன். அந்த கும்மிருட்டிலும் கூரையில் ஒரு பல்லி தெரிந்தது. என்னையே பார்ப்பது போல் இருந்தது. கண்ணை  இறுக்கியபடி, விட்ட தூக்கத்தைத் தொடர முயன்றேன்.

அப்போது  தான் ......

ஏதோ ஓர் உருவம் வெளிக் கதவைத் திறந்துகொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து கட்டிலின் அருகே வருகிறது. சுற்று முற்றும் பார்க்கிறது. 'உஷ்' என்கிறது. சிறிது தயக்கத்திற்குப் பின் போர்வையால் மூடியிருந்த என் கால்களை, கிள்ளுவது போல் மெல்ல வருடுகிறது. கையிலிருந்து வளைச் சத்தம் எழுகிறது. மெட்டி யோசையும் கூட.

அதிர்ந்து போனேன். மோகினிப் பிசாசுகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது தானோ?

(தொடரும்)

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-4



(c) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக