புதன், ஜூலை 10, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)


இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)

1974ல் வங்கிப்பணியில் சேர்ந்தேன். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டிருந்த பழம்பெரும் தனியார் வங்கியில் சென்னை -தி.நகர் கிளையில் அதிகாரியாக நுழைந்தேன். 1975ல் கடலூரில் துவங்க இருந்த புதிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டேன். டிசம்பர் எட்டாம் தேதி சனிக்கிழமை யன்று திறப்பு விழா.


நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல சேவைக்காகப் பெருமதிப்பு பெற்றிருந்தது இவ்வங்கி. எனவே வியாபார நிறுவனங்கள் அதிகம் இருந்த திருப்பாதிரிப்புலியூரை விட்டுவிட்டு, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சுய தொழில் புரியும் டாக்டர்கள், வக்கீல்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த இடமான மஞ்சகுப்பம் என்ற பகுதியில் இடம் பார்க்கப்பட்டது.

 
அது ஒரு பழைய வீடு. நடுப்புறம் திறந்தவெளி முற்றத்துடன் நாலு பக்கமும் அழகிய தூண்கள் இருக்கும. முற்றத்தின் இருபுறமும் தலா ஒரு கூடமும்  சிறிய அறையும் இருந்தன. பின்பக்கத்தில் தோட்டம் போடக்கூடிய அளவுக்கு நல்ல விசாலமான காலியிடம். நீண்ட உத்திரங்களுடன் கூடிய ஓடுபோட்ட கூரை. உள்புறமாகவே படிக்கட்டில் ஏறினால் ஒற்றை மாடியில் இன்னொரு சிறிய அறை. நுழைந்தவுடன் நடையில் இருபக்கமும் பெரிய திண்ணை. இது தான் வங்கிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம்.

முற்றத்தை ஒட்டித் தென்புறம் இருந்த கூடம் தான் ‘கவுண்ட்டர்’களாக வடிவமைக்கப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு ஐந்து நாற்காலிகளும், காசாளருக்குக் கம்பி வலையும், மேலாளருக்கு முக்கிய நாற்காலியும் ஒரு மேசையும் போடப்பட்டன. கூடத்தின் முடிவில் இருந்த அறை தான் பணமும் ஆவணங்களும் பத்திரப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டு கனமான இரும்புக்கதவு போடப்பட்டது.  
 
கட்டிடத்தை அப்போது தான் ஒரு வியாபாரி வாங்கியிருந்தார். இன்னும் சீர்திருத்தம் செய்யப்படாத நிலையில் வங்கிக்கு வாடகை ஒப்பந்தம் போட்டுவிட்டார். வங்கி திறக்கும் நாளும் அறிவித்தாகி விட்டது. அவசரம் அவசரமாக சில ஒழுங்குகள் செய்தார். சுவருக்கு வண்ணம் பூசியது தவிர மற்ற எல்லாப் பணிகளும் வங்கியே செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
 
தலைக்கு மேலிருந்த உத்திரங்களை நீக்கிவிடுவதென்று பேசியிருந்தாலும் பிறகு ஏனோ  நடைபெறாமல் போனது. மேலாளரான நான் அமரும் இடத்தில்
சரியாக என் தலைக்கு மேல் ஒரு உத்திரம் இருந்தது. அதன் நிழல் தரையில் விழுவதுண்டு.

 அப்போது எனக்கு மணமாகி இருக்கவில்லை. ‘தனியாக வீடு பார்ப்பதை விட, இங்கிருக்கும் அறைகளில் ஒன்றில் தங்கிக்கொண்டு விடுங்களேன், வாடகையும் மிச்சமாகும்’ என்றார் கும்பகோணத்திலிருந்து வந்த மேலதிகாரி. பொதுவாக அப்படி அனுமதிப்பதில்லை. எனவே நான் அகமகிழ்ந்து போய் சரியென்று ஒப்புக்கொண்டேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஐந்து கட்டிடங்கள் தாண்டி அப்போது தான் ‘கீதா கபே’ என்ற புதிய உணவங்காடி தொடங்கப்பட்டிருந்தது. காலை ஐந்தரைக்கே இஞ்சியும் மிளகும் முந்திரியும் மணக்கும் பொங்கல்-வடை கிடைக்கும். காப்பியின் சுவை சொல்லி மாளாது. எனவே சாப்பாட்டு பிரச்சினையும் தீர்ந்து விடுமே!
 
மேலும், புதிய வங்கிக்கிளை என்பதால் அதிக வெளிவேலைகள் இருக்கும். இரவு வீடு திரும்ப நேரமாகலாம். வங்கியும் வீடும் ஒன்றாகவே இருந்தால் இரவிலும் அலுவலக வேலை செய்து கொள்ளலாம் அல்லவா?

நேர்-எதிர் வீட்டில்  அப்போது ஓர் இயற்கை மருத்துவர் இருந்தார். இளைஞர். வங்கி திறப்பதற்குப் பத்து நாள் முன்பாகவே நான் இங்கு குடிவந்துவிட்டதால் என் தலை தெரியும்போதெல்லாம் சுதந்திரமாக வந்து அமர்ந்து கொள்வார். புதிய ஊர் என்பதால் அவரிடம் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். தன் வீட்டு வேலைக்காரியிடம் சொல்லியனுப்பி என் கணக்கில் காப்பியும் குளிர்பானமும் அவ்வப்பொழுது கீதாகபேயிலிருந்து வரவழைத்துக் கொள்ளும் உரிமையை அவராகவே எடுத்துக் கொண்டு விட்டது பின்னால் தான் தெரிந்தது.

திறப்பு விழா நாளன்று முன்னூறு குளிர்பானங்கள் வரவழைத்தோம். வந்த கூட்டமோ நூறுக்குள் தான். ஆனால் நூற்றி எழுபது செலவழிந்ததுடன், சுமார் ஐம்பது பாட்டில்கள் காணவுமில்லை. சில நாள் கழித்து அவருடைய வேலைக்காரி காலி பாட்டில்களைக் கொண்டுவந்து கொடுத்தாள், முன்னுரை பின்னுரை இல்லாமல். (அதன் பிறகு அவரை ஒரு வாரம் காணவில்லை!)

வங்கியைத் தினமும் கூட்டிப் பெருக்க ஆள் வேண்டுமல்லவா? ‘ரொம்ப ஏழையான பெண்மணி இருக்கிறார். மாதம் முப்பது கொடுங்கள், போதும்’ என்று ஒருத்தியை அறிமுகப்படுத்தினார். அவள் வந்து கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘இந்தக் கட்டிடத்திலா இருக்கப்போகிறீர்கள்?‘ என்று என்னைப் பரிதாபப்படுத்தினாள். மறுநாள் மருத்துவர் வந்து அதே கேள்வியைக் கேட்டார்.  “வங்கிக்கு சரி. குடித்தனத்திற்கு சரிப்படுமா என்று தெரியவில்லை” என்றார். இடம் போதாது என்பதை அப்படி சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டேன். என்னவானாலும் ஒப்பந்தம் போட்டாகிவிட்டது, மாற்றமுடியாது இனிமேல்.

கடலூருக்கு வருகிறவர்கள் தவறாது தரிசிக்கும் கோயில்கள் மூன்று உண்டு. ஒன்று, கெடிலம் பாலத்தின் முடிவில் பஸ்நிலையம் போகுமுன் வலப்புறம் திரும்பினால் வரும் ஆஞ்சனேயர் கோயில். இரண்டாவது, திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோயில். (இங்கு தான் ‘கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே’ என்ற பாடல் பிறந்தது). மூன்றாவது, சுமார் அரைமணிப் பயணத்தில் திருவேந்திபுரத்தில் இருக்கும் தேவனாதஸ்வாமி கோயில் என்றும் ஹயக்ரீவர் கோயில் அழைக்கப்படுவது.

கும்பகோணத்திலிருந்து வந்த மேலதிகாரிகளுடன் இம்மூன்று கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தேன். வங்கியின் திறப்பு விழா நல்ல முறையில் நடைபெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். திருவேந்திபுரத்தில் வைணவ அர்ச்சகர்கள் மெட்டுப்போட்டது போல் பாடிக்கொண்டே அர்ச்சனை செய்வார்கள். கேட்கவே இனிமையாகவும் தெய்வீகமாகவும் இருக்கும். அப்படி ஒரு அர்ச்சகர் என்னிடம் வந்தார். ‘கல்யாணம் ஆகிவிட்டதா?’ என்றார். ‘இல்லை. ஆனால் நான் வந்தது அதற்காக இல்லை. வங்கிக்காகத்தான் பிரார்த்தனை’ என்றேன். ‘இங்குள்ள ஸ்வாமி ரொம்ப சக்தி வாய்ந்தவர். திருப்பதி பெருமாளுக்கு இவர் மூத்தவர் என்று ஐதிகம். அதனால், செய்யும் பிரார்த்தனையன்றி, செய்யாத பிராரத்தனைகளும் இங்கு பலித்துவிடும்’ என்றார்.

‘தாயார் பரம கருணை வாய்ந்தவர். தனியாக இந்த ஊருக்கு வருபவர்களைத் தம்பதிகளாகத்தான் அனுப்பிவைப்பார்’ என்றும் சொன்னார். நல்ல வேளை, ஜாதகம் கொடுங்கள் என்று கேட்கவில்லை.

(அவர் சொன்னதன் பலனோ என்னவோ, ஆறே மாதத்தில் எனக்கு அதே ஊரில் திருமணம் நடந்து விட்டது).
****
திறப்பு விழாவிற்காகக் கும்பகோணத்திலிருந்து சில இளம் அதிகாரிகள் முன்கூட்டியே வந்திருந்தார்கள். அவர்களும் என்னுடன் அதே கட்டிடத்தில் இரவு தங்கினார்கள். சுற்றிலும் ‘கவுண்ட்டர்’ வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் தரையில் ஒரு ஜமுக்காளத்தை விரித்து எல்லாரும் படுத்துக்கொண்டோம். ஓரமாக ஒரு எவர்சில்வர் அடுக்கில் குடிநீர் வைத்திருந்தோம்.

நடு ராத்திரியில் ஒரு நண்பர் புரண்டு புரண்டு படுத்தார். திடீரென்று “ஆ...ஊ..” என்று அலறினார். எல்லாரும் விழித்துக்கொண்டு விளக்கைப் போட்டால், அவரோ கடுமையான நித்திரையில் இருந்தபடியே உளறிக்கொண்டிருந்தார். அவர் தலையையும் கைகளையும் அழுத்திப் பிடித்துக்கொண்டு  “ஒன்றுமில்லை, தூங்குங்கள்” என்று சமாதானப்படுத்தினோம். “காலா காலத்தில் கல்யாணம் ஆகவில்லையென்றால் இப்படித்தான். கண்ட கண்ட கனவுகள் வந்து உளறுகிறான் பார்!” என்றார் எங்களை விட வயது அதிகமான ஓர் அதிகாரி.          
****
திறப்பு விழா நல்ல முறையில் முடிந்ததில் வங்கியின் தலைவருக்கு மிகவும் திருப்தி. வந்த அதிகாரிகள் கும்பகோணம் திரும்பிவிட்டார்கள். இனி நான் தான் ராஜா. எல்லாப் பழிகளுக்கும் குறைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியவன்.

கடுமையான உடல்வலியுடன் படுத்தேன். சுவர்களில் புதிய பெயிண்ட்டின் வாசனை தூங்கவிடாமல் அடித்தது. கொசுத்தொல்லை வேறு. இரண்டு மின்விசிறிகளைச் சுழலவிட்டுக்கொண்டு தூங்கினேன். அப்படியும் வெப்பம் குறையவில்லை. தலைக்கு நேர் மேலாக உத்திரம்.

‘ஸீரோ வாட்’ விளக்கு ஒன்று எதிர் சுவற்றில் எரிந்துகொண்டிருந்தாலும் இருட்டு அடர்த்தியாகவே இருந்தது. எந்தச்  சிந்தனையும் இல்லாமல் மனது காலியாக இருந்தது.

இரவு சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். திடீரென்று காற்று அதிகக் குளிராக வீசுவது போல் இருந்தது. கண்களைத் திறக்க முயன்றேன். ஏனோ முடியவில்லை.

சிறிது நேரத்தில்  கனமான மெத்தை மாதிரி ஏதோ ஒன்று என்மேல் மெல்ல  இறங்கி என் உடல் முழுதும் போர்த்தி என்னை அழுத்துவது போலிருந்தது. மார்பில் தான் சற்று அதிக அழுத்தம். “ம்..ம்..ம்..” என்று தான் ஓசை வாயிலிருந்து வருகிறதே யன்றி மேற்கொண்டு பேச்சு வரவில்லை. எழுந்திருக்க முயல்கிறேன். முடியவில்லை.

சுமார் அரை நிமிடம் தான் இருக்கும். விளக்கிச் சொல்ல முடியாத ஒரு நிலைமை. நெற்றியில் வியர்த்துப்போனது தெரிகிறது. கையால் மார்பைத் தடவுகிறேன், அழுத்தம் குறையாதா என்று. சட்டையைக் கழற்றாமல் தூங்கியிருக்கிறேன். சட்டைப்பைக்குள்ளிருந்த  ஆஞ்சனேயர் கோயில் துளசி இலைகள் கையில் வருடுகின்றன. உடனே மனம் ‘ஆஞ்சனேயா.... ஆஞ்சனேயா..’ என்று சொல்லத் தொடங்குகிறது. அடுத்த நொடியில் குளிர் நீங்கிவிட்டது. எழுந்தேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். விளக்கைப் போட்டேன்.  

உத்திரத்தைப் பார்த்தேன். ஒன்றுமில்லை.

‘உத்திரத்தின் கீழ் படுக்கக்கூடாது’ என்று பாட்டி அடிக்கடி சொல்வார். கெட்ட கனவு வருமாம். இப்போது வந்தது கனவா அல்லது வேறு ஏதோ அனுபவமா?

‘இந்தக் கட்டிடத்திலா இருக்கப்போகிறீர்கள்?’ என்று வேலைக்காரி கேட்டதன் பின்னணியில் ஏதும் மர்மம் இருக்குமோ? இன்று விசாரித்துவிட வேண்டும்.

அதன் பிறகு தூக்கம் வரவில்லை. வங்கியின் மேலிடத்திலிருந்து வரும் ‘சர்க்குலர்’ களைப் படிக்க ஆரம்பித்தேன். ஃப்ளாஸ்க்கில் கொஞ்சம் காப்பி இருந்தது. ஆறியிருந்தாலும் பரவாயில்லை என்று குடித்தேன். எப்போது காலை ஏழு மணியாகும் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி இருந்தேன்.
****
வேலைக்காரி மணியடித்தாள். ‘வணக்கம் சார்’ என்றாள். எங்கு பார்த்தாலும் மாவிலைகளும், பூக்களும் சிதறிக்கிடந்தன. ‘கொஞ்சம் வேகமாக சுத்தம் பண்ணு’ என்றேன்.

அவள் பெருக்கிக் கொண்டிருக்கும்போதே மெல்ல பேச்சுக் கொடுத்தேன். ‘இதோ பார், என்னிடம் நீ எதையோ மறைக்கிறாய். அது சரியில்லை. உள்ளதைச் சொல்லி விடு” என்று அதட்டலாகவே சொன்னேன்.

அவள் பாவம், ஒன்றும் புரியாமல், “நான் ஒண்ணும் தப்பு செய்யலியே சார்! நீங்க எதப் பத்திச் சொல்றீங்க?” என்றாள், கண்களில் பயத்துடன். “டாக்டர்  தான் கூல்டிரிங்சு கொண்டு வரச் சொன்னாரு. அதான் காலி பாட்டில் எல்லாம் திருப்பிக் கொண்டுவந்துட்டனே சார்” என்றாள்.

“அதில்லை. அன்று என்னிடம் கேட்டாயே, இந்தக் கட்டிடத்திலா இருக்கப் போகிறீர்கள் என்று. அது” என்றேன்.

கையில் இருந்த துடைப்பத்தைக் கீழே போட்டாள். “ஐயோ, அதச் சொல்றீங்களா? நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்“ என்றாள்.

பிறகு சொன்னது இது: பல வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டில் ஒரு நெசவாளி தற்கொலை செய்துகொண்டாராம். கல்யாணம் ஆகாதவராம். வீட்டுக்கும் அவர் தான் உரிமையாளராம். அதனால் அவருடைய ஆவி இந்த வீட்டில் உலவுகிறதென்று சொல்கிறார்களாம். அதனால் யாரும் இந்த வீட்டை வாங்க முன்வரவில்லையாம். இப்போது தான் யாரோ ஒரு நகைக்கடைக்காரர் துணிந்து வாங்கியிருக்கிறாராம்.

“ஏன் கேக்குறீங்க சார்? ஒங்கள ஏதாச்சும் செஞ்சுதா அந்த ஆவி?” என்று கவலையோடும் ஆர்வத்தோடும் கேட்டாள்.

எனக்கு திக்கென்றது. இவளிடம் மேற்கொண்டு எதாவது பேசினால் ஊரெல்லாம் பரவி விடும். பயந்துகொண்டு வங்கிக்குள் யாரும் வரமாட்டார்கள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ சொன்னாயே, அதான் கேட்டேன். ஆவியாவது, மண்ணாவது!” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். மனதிற்குள், இன்று இரவு என்ன செய்யப்போகிறோம் என்று சிந்தனையாக இருந்தது. “நீ போகும் போது ஒங்க டாக்டரை வரச் சொல்” என்றேன்.

அந்த இயற்கை மருத்துவர் வந்தார். “ என்ன சார், எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்றார்.

“அதிருக்கட்டும். இந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்துகொண்டார்களாமே, நீங்கள் என்னிடம் சொல்லவில்லையே” என்றேன் அவர் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே.

“அப்படியா? எனக்குத் தெரியாதே! யார் சொன்னர்கள்?”

“உங்கள் வீட்டு வேலைக்காரி தான்”.

அவருக்கு வியர்த்தது. “மன்னிக்க வேண்டும் சார். இந்த விஷயம் உங்களுக்கு வீட்டு ஓனர் சொல்லவில்லையா? தெரிந்து தான் இடத்தை ஒப்பந்தம் செய்தீர்கள் என்று எண்ணினேன்” என்றார்.

எனக்குப் புரிந்தது. ஒன்று, இது முழு வதந்தியாகவும் இருக்கலாம், அல்லது தற்கொலை உண்மையாகவும், ஆவி என்பது வதந்தியாகவும் இருக்கலாம்.. ஆனால் எனக்கு ஏற்பட்ட அனுபவம்?

வீட்டுக்காரருக்கு போன் செய்தேன். ஊரில் இல்லை, நாளை வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார் அவர் மனைவி.

அன்று காலை அலுவலக நேரமான பத்து மணிக்கு அய்யம்பேட்டையிலிருந்து ஓர் ஊழியர் வந்து சேர்ந்தார். அவருக்கு ஊர் பாண்டிச்சேரியாம். இரண்டு வருடமாக அய்யம்பேட்டையில் இருந்தாராம். பாண்டிச்சேரியில் கிளை இல்லாததால் இவ்வூருக்கு மாற்றல் கேட்டு வாங்கினாராம். (கடலூரிலிருந்து பாண்டிச்சேரிக்கு இருபத்திரண்டு கிலோமீட்டர் தான்). வீடு பார்க்கும் வரை என்னோடு இங்கேயே தங்கிக்கொள்ளட்டுமா என்றார். இன்னும் திருமணம் ஆகவில்லையாம்.

இதை விட எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறென்ன இருக்க முடியும்? சரி என்றேன். குறைந்த பட்சம் ஆவி அனுபவத்தில் பாதிப்பங்கு இனிமேல் இவருக்குப் போய்விடுமல்லவா?
****
அன்று இரவு சற்று முன்னேற்பாட்டுடன் நான் உத்திரத்திற்கு நேராகப் படுக்காமல் தள்ளிப் படுத்தேன். அவர்? உத்திரத்தின் நேர் கீழே! பார்க்கலாம் என்ன ஆகிறதென்று. மனதிற்குள் திகில் கலந்த பரவசம். கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்தேன்: இரவு 11.45 மணிக்கு. அவரை ‘உன் கடிகாரத்தைக் கொடு’ என்றேன். ஏன் என்றார். ‘அலாரம் வைக்க வேண்டும்!’ என்றேன். பேசாமல் கொடுத்தார். 11.55க்கு அலாரம் வைத்தேன். ஒன்றுக்கு இரண்டு விளக்குகளை எரியவிட்டேன். இருவரும் படுத்தோம்.

11.45க்கு என் அலாரம் அடித்தது. எழுந்தேன். நான் தான் தூங்கவே இல்லையே! ஆனால் அவர் கம்பீரமாக நித்திரையில் இருந்தார். ‘சரி, இன்னும் சிறிது நேரத்தில் இவர் என்னமாய் துள்ளப்போகிறாரோ  என்று கவலைப்பட்டேன்.

11.55க்கு அலாரம் அடித்தது. அவர் நிம்மதியாகவே தூங்கிக்கொண்டிருந்தார். 12 மணி ஆயிற்று. 12.30 ஆயிற்று. தூக்கம் கண்ணைச்  சுழற்றியது. ஆனால் ஏமாந்துவிடக்கூடாது என்று கண்களைக் கசக்கி விழிப்புக்குக் கொண்டுவந்தேன். ஒரு மணிக்கு ‘அது’ வந்தால்?

ஒவ்வொரு அரை மணியாக நான் கண்மூடிக் கண் விழித்தது தான் மிச்சம். இவருடைய ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தைக் கலைக்க முடியவில்லை. உடம்பில் எந்தச் சலனமும் இல்லை. வாய் குழறலும் இல்லை. பொழுது விடிந்தது. எழுந்தார்.

“ஏன் சார்! நடு ராத்திரியில் யாரோ ரெண்டு தடவை மணி அடிச்ச மாதிரி இருந்ததே ! ஒரு வேளை ஆவி, கீவி வந்திருக்குமோ?” என்று வெகுளியாகக் கேட்டாரே பார்க்கலாம்!
***
அடுத்த நாளும் ஏதும் நடக்கவில்லை.

அதற்கடுத்த நாள் தான் வீட்டுக்காரர் வந்தார். அவரை ஒரு பிடி பிடித்தேன். முக்கியமான ஒன்றை மறைத்து இந்தக் கட்டிடத்தை எங்கள் தலையில் கட்டிவிட்டீர். உம்மை என்ன செய்கிறேன் பார்- என்ற பாணியில் பேசினேன்.

அவர் பாவம், அழுதே விட்டார்.

“யாரிடமும் சொல்லி விடாதீர்கள் சார்! இங்கு ஒரு நெசவாளி தற்கொலை செய்துகொண்டது உண்மை தான். அது தெரியாமல் கிரயம் செய்து  பத்திரமும் பதிவு செய்துவிட்டோம். அப்புறம் என்ன செய்வது? ஒரு மலையாள மந்திரவாதியைப் பார்த்தோம். அவர் வந்து கட்டிடத்தைப் பார்வையிட்டார்.  ஒரு பூசை செய்தார். செத்துப் போனவன் ரொம்ப நல்லவன். ஆவியாகத்தான் அலைகிறான். ஆனால் அவனால் யாருக்கும் தொல்லை வராது. அதே சமயம் இங்கு குடும்பமாக வசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி மக்கள் வந்து போகும்படியான ஒரு அலுவலகமாகப் பார்த்து வாடகைக்கு விட்டு விடுங்கள். செத்துப் போனவன் தொழிலில் நஷ்டமடைந்து, அதனால் தன்னை யாரும் மதிக்கவில்லையே என்று தனிமையில் வருந்தியிருக்கிறான். தன் வீட்டுக்கு அடிக்கடி மனிதர்கள் வந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டால் அவனுக்கு விமோசனம் கிடைத்துவிடும்” என்றாராம்.

“எதற்கும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நவக்கிரக பூஜை செய்துவிடுகிறேன். இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு மதிப்பு குறைந்துவிடும் சார்” என்று கெஞ்சினார். அதன்படியே செய்தார்.

அதற்கப்புறம் அதே இடத்தில் நான் மூன்றரை வருடம் இருந்தேன். ஆவி போனது போனது தான். வரவேயில்லை! வங்கியும் நல்ல வளர்ச்சி கண்டது.
****
சரி, உங்கள் கருத்தென்ன?
 • ஆவிகள் உண்டா, இல்லையா?
 • நம்பலாமா, கூடாதா?
 • உங்களுக்கு இம்மாதிரி  அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?
 • Email: chellappay@yahoo.com
பின் குறிப்பு: நாயர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. குடுகுடுப்பைக்காரனும் தான். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
© Y.Chellappa  

4 கருத்துகள்:

 1. வழக்கமாக வெள்ளிக்கிழமை ஆவி என்னிடம் பேச வரும். உங்கள் கேள்விக்குப் பதிலைக் கேட்டுச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நனறி ஐயா! ஆவிகளிடம் என்னைப் பற்றி நல்ல விதமாகச் சொல்லி வையுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது அது பகல் பொழுது ஏதோ ஓன்று அமுக்குவது போல இருந்த்தது கத்தி கூச்சலிட்டேன் அருகில் யாரும் வரவில்லை ஒரு வழியாக எழுந்து நடந்ததை சொன்னால் யாரும் நம்பவில்லை அதன் பிறகு அதற்க்கு அமுக்கான் என்றும் அறிவியல் ரீதியாக பார்த்தல் நம் கைகளை நெஞ்சில் வைத்து படுக்கும் பொது ரத்த ஓட்டம் தடை பட்டு நம்மை அழுத்துவது போல இருக்கும் என்று சொன்னார்கள் பாதி நம்பிட்டேன் மீதி ?

  பதிலளிநீக்கு
 4. எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியாக ஏதாவது விளக்கம் சொல்லிவிட முடியும்; ஆனால் அது குறிப்பிட்ட செயல் முடிந்து, அதைப் பின்னோக்கிப் பார்க்கும்போது தான். (post-mortem). செயல் நடந்துகொண்டிருக்கும்போது அதை உணர்ந்து அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே புரிகின்ற சில விஷயங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. தங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு