சனி, ஜூலை 13, 2013

அல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்

பதினொன்றாம் வகுப்பு தேறியவுடன் கல்லூரியில் சேர வேண்டுமென்று கனவு கண்டேன். ஆனால் நம்பிக்கை கொள்ளவில்லை. காரணம் இராணிப்பேட்டையில் கல்லூரி எதுவும் இல்லை. ஒரு மணிநேரம் பயணித்தால் வேலூரில் ‘ஊரீஸ்’ என்னும் பழம்பெரும் கல்லூரி இருந்தது. ஆனால் தினசரிப் பயணம் செய்யவும் தனியார் கல்லூரிக்கான கட்டணம் செலுத்தவும் வசதியிருக்கவில்லை.

இராணிப்பேட்டையும் அதன் அருகிலுள்ள மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரியும் முஸ்லீம் ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர்களாகும். இராணிப்பேட்டையிலும் குடியாத்தத்திலும் அப்போது எண்ணற்ற பீடித் தொழிற்சாலைகள் இருந்தன. பீடி இலைகளைத் தொழிற்சாலையிலிருந்து பெற்று அதை பீடியாகச் சுற்றுவதும், அந்த பீடிக்கு மேல் ‘மஹாராஜா பீடி’ ‘ஜாடி பீடி’ போன்ற லேபிள்களை ஒட்டுவதும் ஏழைகளின் இரண்டு முக்கிய தொழில்கள்.


ஆடு, மாடுகளின் தோலானது, கற்றாழையும் சில குறிப்பிட்ட ரசாயனங்களும் கலந்த கலவையில் நீண்ட தொட்டிகளில் நாள்கணக்கில் ஊறவைக்கப்படுவதான  ‘தோல் பதனிடும்’ தொழில் தான் மேல்விஷாரத்தில் பிரசித்தம். அதனால் மயிர் நீக்கப்பட்டு மழுமழுப்பான தோல் கிடைக்கும். அது  ஆம்பூர், வாணியம்பாடி போனதும் செருப்பு, ஷூ, பை, பெல்ட்டு  போன்ற தோல் பொருட்களாக மாறும். தோலாகவும் விற்பனை ஆகும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் திருப்பூருக்கு அடுத்தபடி இந்த ஊர்களுக்குத் தான் முக்கியமானவை.

இராணிப்பேட்டையிலிருந்து ஆற்காடு வழியாக வேலூர் செல்லும் சாலையில் ஆறு மைல் தொலைவில் இருப்பது விஷாரம். முதலில் வரும் நிலப்பகுதி கீழ்விஷாரம் என்றும்  ஒரு மைல் தாண்டியதும் மேல்விஷாரம் என்றும் அழைக்கப்படும். (இப்போது பஸ்கள் கீழ்விஷாரத்தை ஒதுக்கிவிட்டு மேல்விஷாரத்தையும் அதிகம் தொடாமல், புறவழிச்சாலையில் செல்கின்றன). சிறிய ஊர் தான். ஆனால் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இடம். குட்டி குட்டி சந்துகள். ஆனால் இரண்டு வீட்டுக்கு ஒன்று என்பது போல்   ‘இம்ப்பாலா’ கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். ஹவாலா எனப்படும் சட்டவிரோதப் பணமாற்றம் அதிகம் நடக்கும் இந்திய ஊர்களில் மேல்விஷாரத்தின் பெயரும் இருப்பதாக பொருளாதாரக் குற்றங்களுக்கான உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் வகுப்புத்தோழன் கூறிய தகவல்.

இவ்வூரில் பெரும்செல்வந்தராய் வாழ்ந்தவர், அமரர் அப்துல் ஹக்கீம் என்பவர். கல்வியறிவு இல்லாதவர். ஆனால் திருமகள் இவரைக் கைப்பிடித்து வழி நடத்தினாள். பொருள் குவிந்தது. அதில் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி வைத்தார். மேல்விஷாரத்தில் ஒரு கல்லூரி தொடங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை ஆவணப்படுத்தினார். அவரது வாழ்நாளில் அது நிறைவேறவில்லை. ஒதுக்கப்பட்டிருந்த தொகையை வைத்துத் தனியாகத் தொழில் நடத்தினர், வாரிசுகள். ஆனால் லாபம் அதிலேயே தொகுத்து வைக்கப்பட்டது. கடைசியில் அன்னாரின் பேரன் காலத்தில் கனவு நனவானது. (1965-66 கல்வியாண்டில்).

கல்லூரிக்கு உடனடியாகக் கட்டிடம் கட்ட அவகாசம் இல்லாததால், மேல்விஷாரத்தில் இருந்த ஓர் அனாதை விடுதியில் (‘அஞ்சுமன்-ஏ-மொய்துல் இஸ்லாம்’) “சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி” துவக்கப்பட்டது. முதல் வருடம் பி.யு.சி. என்னும் (அக்கால) புகுமுக வகுப்பு மட்டும் நடந்தது. அடுத்த கல்வியாண்டில் பி.ஏ. (சரித்திரம்) ஆரம்பிக்கப்பட்டது. (1966-67). அது தான் நான் கல்லூரியில் சேர வேண்டிய ஆண்டு.

கல்லூரிக் கனவை அறவே மறந்திருந்த நிலையில், மேல்விஷாரம் என்ற அருகிலுள்ள சிற்றூரில் இப்படியொரு கல்லூரி இருப்பதும், அதில் கணிதம், பௌதிகம், வேதியியல் கொண்ட ‘முதல்’ பிரிவில் புகுமுக வகுப்பு இந்த ஆண்டு தொடங்குகிறார்கள் என்ற தகவலும் தெரிந்த போது என் உள்ளம் பரபரத்தது. எப்படியும் இக்கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்றும், ஒரு சைக்கிள் இருந்தால் ஆறு மைல் போவது கடினம் இல்லை என்றும் தீர்மானித்துக் கொண்டேன். என்னை விட என் தாயாருக்கு இதில் முனைப்பு அதிகம் இருந்தது. ஆனால் பண உதவி செய்யும் நிலையில் உறவினர்கள் யாரும் இல்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்றேன். இஸ்லாமியப் பணக்காரர்கள் பலர் வித விதமான கார்களில் வந்திருந்தனர். ‘செண்ட்’டின் நறுமணம் கற்றை ஆக்கிரமித்திருந்தது. உள்ளூர் அரசியல்வாதிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர்.

ஐந்து ரூபாய் கொடுத்து ‘பிராஸ்பெக்டஸ்’ வாங்கினேன். ஆங்கிலத்தில் இருந்தது. நாலே பக்கம். கூடவே கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பம் இலவசமாய்க் கொடுத்தார்கள். இதற்கு ஏன் ஐந்து ரூபாய் என்று தெரியவில்லை. (ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கிடைத்த காலம்). சிலர் இரண்டு, மூன்று விண்ணப்பங்கள் கூட வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆசையோடு அந்த விண்ணப்பத்தைப் படித்தேன். கடைசியில் ‘கட்டணம்’ என்ற பகுதி வந்த போது சற்று கனமான இதயத்தோடு மெதுவாகப் படித்தேன்: முதல் பருவக் கட்டணம்: எண்பது ரூபாய். இரண்டாம் பருவத்திற்கு 60 ரூபாய். வேறு கட்டணம் ஏதுமில்லை. நிலையான வருமானம் இல்லாதிருந்த அப்பாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று பயமாக இருந்தது.  

அப்போது ‘ராமு’ என்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. தரை டிக்கெட் இருபத்தைந்து காசு. ‘பெஞ்சு’ டிக்கெட் ஐம்பது காசு. ஜெமினி கணேசன், நாகையா நடித்தது. பெஞ்சு டீகெட் வாங்கினேன்.
 

வாழ்க்கையில் விரக்தியுற்று, பிழைக்க வழியின்றி தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் கதாநாயகன் (ஜெமினி கணேசன்) தனது வாய் பேசாத இளம் மகனுடன் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அபயம் தருவது போல்  எங்கிருந்தோ வருகிறது ஒரு கண்ணன் பாடல்.  

“நம்பினோர் கெடுவதில்லை – நான்குமறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் – நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னிதிக்கே வாராய் நெஞ்சே!”

என்ற முதல் வரிகள் (‘தொகையறா’) அவர்களை ஓர் ஆலயத்திற்கு இழுத்துச்செல்கின்றன. அங்கு ஓர் முதியவர்( வி.நாகையா) கண்ணனின் திருமேனியில் லயித்தவராய் மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருக்கிறார். கூட்டத்தோடு இவர்களும் அமர்கிறார்கள். அவர் பாடப் பாட, கதாநாயகனின் கண்களில் இருந்த சோகமும் அவநம்பிக்கையும் படிப்படியாக மறைந்து வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் கண்களில் புதியதொரு வெளிச்சமும் தெரிகிறது.

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் ஏந்திக் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்”

என்ற அடிகளைக் கேட்டவுடன் என் கண்களில் நீர் தளும்பியது. அதுவரை கோயில்களுக்குப் போயிருக்கிறேன், திருப்பாவை திருவெம்பாவை ஒப்பித்திருக்கிறேன் என்றாலும் கடவுளிடம் இன்னது வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததில்லை. அதற்கு அவசியம் வந்ததில்லை. இப்போதோ, அந்த இடத்திலேயே எழுந்து நின்று  வேண்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. “கண்ணா, என்னை எப்படியும் கல்லூரியில் சேர்த்துவிடு, நான் படித்தாக வேண்டும்” என்று பிரார்த்திக்கொண்டே இருந்தேன்.

ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த ஒரு கண்ணன் சிலை தான் அந்த வெள்ளித் திரையில் தெரிந்தது என்றாலும் பெரியதொரு கோபுரத்துடன் கூடிய ஏதோ ஒரு கோயிலில் வீற்றிருக்கும் பெருமைக்குரிய தெய்வமாகவே எனக்குத்  தெரிந்தது.

“முடவர்களை நடக்கவைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறியவைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேசவைக்கும் பிருந்தாவனம்”

என்று நாகையாவுக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடும் உருக்கமான குரல், கண்ணனை நோக்கி நானே பாடுவது போல் ஒலித்தது.

என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதுபோல், அடுத்த நொடியில், ஜெமினியின் குரலில் டி.எம்.சௌந்தரராஜன் பாடுவார்:

“கருணை என்னும் கண் திறந்து காக்க வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்கவேண்டும்
கனிமழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண்மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்”

என்று கதறுவார். சோகமான வேடம் என்றால் ஜெமினிகணேசனுக்கு மிகப் பொருத்தமான ஒன்று. அதிலும் இப்பாடல் வரிகள் சோகத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்ததால் அவர் கண்ணிலும் என் கண்ணிலும் நீர் ஆறாக வழிந்தது.

“கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா!”

என்ற கடைசி இரண்டு வரிகள் கண்ணதாசன் எனக்காகவே எழுதிய  வரிகளோ என்று தோன்றியது. (யூடியூபில் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0)

அதற்கு மேல் என்னால் படம் பார்க்க முடியவில்லை. கண்கள் குளமாகித் திரைக் காட்சி தெளிவில்லாமல் போனது. இன்னும் சற்று நேரம் இருந்தால் ‘ஓ’வென்று அழுதுவிடுவேன் போலிருந்தது. வீட்டுக்கு வந்தேன். குளித்துவிட்டுப் படுத்தேன். “கண்ணா, என்னை எப்படியும் கல்லூரியில் சேர்த்துவிடு, நான் படித்தாக வேண்டும்” என்று மானசீகமாக மறுபடியும் மறுபடியும்  வேண்டிக்கொண்டேன்.

இரவு எட்டு மணி இருக்கும். வாசற்கதவை யாரோ தட்டுவது கேட்டது. எங்கள் தூரத்து உறவினர் ஒருவர், சுமார் அறுபது வயது, நின்றிருந்தார். கிராமத்தில் அவருக்கு நிலபுலங்கள் உண்டு. நல்ல மனிதர். அதுவரை அவர் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. கிராமத்திலேயே அவர் இருந்ததால் நானும் அதிகம் பார்த்ததில்லை.

“கடைசி பஸ் போய்விட்டது. ராத்திரி தங்குவதற்காக வந்தேன்” என்றார். மோர் கொடுத்தோம். குடித்தார். “உன் படிப்பு முடிந்திருக்கணுமே! பி.யு.சி. எந்தக் கல்லூரியில் சேரப் போகிறாய்?” என்று கேட்டார். ஒரு சம்பிரதாயத்திற்குக் கேட்ட மாதிரி தான் இருந்தது. ஆனால் என்னுடைய இயலாமையை வெளிப்படுத்துவதற்காகக் கேட்டது போல் எனக்கு வலித்தது.

 “சேரணும், ஆனால் எப்போது  என்று தெரியாது” என்றேன், குரல் தழுதழுக்க.

“அப்படின்னா ? இன்னும் அப்ளிகேஷனே போடலியா ?“ என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

அதற்குள் அம்மா வந்து விளக்கம் சொன்னார். “மேல்விஷாரத்தில் காலேஜ் வந்திருக்கிறதாம். ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டால் தினமும் ஆறும் ஆறும் பன்னிரண்டு மைல் போய்விட்டு வந்துவிடுவேன் என்கிறான். ஆனால்...” என்று மேலே சொல்லத் தயங்கினார்.

“அட அசடே! பணம் தான் பிரச்சினையா? எவ்வளவு ரூபாய் வேண்டும்?” என்றார்.

நான் அவசரமாக “முதல் டெர்ம் ஃபீஸ் எண்பது ரூபாய்” என்றேன்.

அவர் தன் பையிலிருந்து எட்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் கொடுத்தார். “நல்லாப் படிக்கணும்” என்றார். தூங்கப்போய்விட்டார்.

எனக்கு என் கண்களையே நம்பமுடியவில்லை.

கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்”

என்பது இவ்வளவு சீக்கிரம் பலித்துவிடும்படியான சத்திய வார்த்தைகளா என்று சிலிர்த்துப் போனேன். கடவுள் என்பது நிச்சயமான உண்மை என்பதும், சரியான நோக்கத்திற்காக நம்பிக்கையோடு வழிபடுபவனுக்கு அந்த நம்பிக்கையே கடவுளாகி வழிகாட்டுகிறது என்றும்  எனக்குப் புரிந்த நாள் அது.
****
பேர் தான் ‘அப்துல் ஹக்கீம்’ கல்லூரியே தவிர, ஆசிரியர்களில் நான்கைந்து பேரும் மாணவர்களில் சுமார் பத்து அல்லது பதினைந்து பேரும் தான் முஸ்லீம்கள்.  அகமத் பாத்ஷா என்பவர் கல்லூரி முதல்வர். இங்கு வருமுன் திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரியில் சரித்திர ஆசிரியராக இருந்தவர். உண்மையான முஸ்லீம். ஐந்துமுறை தொழுபவர். ஆனால் அப்படித் தொழ முன்வராத முஸ்லீம்களை வேறுபடுத்திப் பார்க்கமாட்டார்.

 தமிழுக்கு ஷாகுல் ஹமீது (‘எஸ்.ஹமீது’) என்பவர்  துறைத்தலைவராக வந்தார். கல்லூரி விழாக்களுக்குப் பளபளப்பான கோட்டுசூட்டில் வருவார். கல்லிடைக்குறிச்சிக்காரர். குரலே தனியானதொரு இனிமையாக இருக்கும். மலேயாவில் இதற்கு முன் பணியாற்றினாராம். மலேசிய வானொலியில் அவர் பேசிய பேச்சுக்களைப் புத்தகமாகப் போட்டிருந்தார்.
 
அவர் சிலப்பதிகாரம் நடத்தும்போது அற்புதமாக இருக்கும். மதுரையில் புது வாழ்வு தொடங்க வேண்டி கண்ணகியுடன் வருகிறான்  கோவலன். அவளுடைய  காற்சிலம்பை  விற்றுத் தொழில் தொடங்க  எண்ணம். அதுவே தனக்கு  எமனாக முடியப் போகிறது என்று அவனுக்கு எப்படித் தெரியும்? ஆனால் மதுரையின் கோட்டைச் சுவர்களின் மேல் பறக்கும் கொடிகளுக்குத் தெரிகிறது. "கோவலா, வராதே, போய்விடு" என்று அவனை  வழிமறித்துக் கூறுகின்றனவாம் அவை.  
   
"போர் உழன்று எடுத்த  ஆர் எயில் நெடுங்கொடி 
வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட"
 
என்று இளங்கோ அடிகள் கூறுவதின் நயத்தை அவர் அரை மணி நேரம்  விளக்குவார். (அவரது நூலிலும் இது ஒரு கட்டுரையாக இருந்தது.)
 
1967ல் கவிஞர் சுரதா தலைமையில் எங்கள் கல்லூரியின் முத்தமிழ்விழாக் கவியரங்கம் நடந்தபோது மாணவர்களின் சார்பில் என்னைக்  கவிஞனாக மேடையேற்றியவர் அவரே.

 அப்போது வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவருடன் சமமாக அமர்ந்து நானும் கவிஞனாக உருவெடுத்த தமிழ்த்தலம், மேல்விஷாரம். (பின்னாளில், சென்னை புதுக்கல்லூரியில் சேர்ந்தார், ஷாகுல் ஹமீது. பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கழகத்தில் (TNPSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  சில வருடங்களுக்குப் பிறகு அவர் காலமான செய்தி, ‘இந்து’வில் விளையாட்டுப் பக்கத்தின் இடது கீழ்மூலையில் வந்திருந்தது.

என்பால் பேரன்பும் பெருமதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இன்னொரு தமிழ்ப் பேராசிரியர், அலிபூர் ரகீம். கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றம். ஆனால் மென்மையான இதயம். கலைஞர் கருணாநிதியின் முன்னுரையோடு வெளிவந்த ‘ஒன்று பரம்பொருள்’ என்ற அவரது நூலை வெளியிட்டவர், ‘பாலமுருகனடிமை’ என்று அழைக்கப்படும் ரத்தினகிரி சாமியார் என்றால் ஆச்சரியமாக  இல்லை?

பி.யு.சி. முடித்தவுடன், அதே கல்லூரியில் பி.எஸ்.சி. (கணிதம்) தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் சேர்ந்தால் உன் திறமைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று எல்லோரும் அறிவுரை சொன்னார்கள். ஆனால் அந்த இரு படிப்புகளும் அப்போது சென்னையில் மட்டுமே இருந்தன.

 பி.எஸ்.சி.யில் எனக்குக் கணிதப் பேராசிரியர், வி.எம்.கலீமுல்லா என்பவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். சிறந்த ஆளுமையும் அதே சமயம் கனிவும் கருணையும் கொண்டவர். எப்படியாவது ‘தூய கணிதத்தில்’ (PURE MATHEMATICS) நீ ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து விடு. மற்றவர்களுக்கு அது கடினம். ஆனால் நீ கவிதை எழுதும் திறமை பெற்றவன் என்பதால், கணிதமும் கவிதை போன்றே தர்க்க ரீதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதால் நீ எளிதாக பி.எச்டி. முடிக்க முடியும்” என்று அடிக்கடி சொல்லி ஊக்கப்படுத்துவார்.  ஆனால் வங்கிப்பணி கிடைத்த போது குடும்பச் சூழ்நிலை காரணமாக அதை இழக்க முடியாமல் அதிலேயே வாழ்க்கை கடந்துவிட்டது.
*****
 ஒரு சமயம் கல்லூரியில் மாணவர்களின் இரண்டு சைக்கிள்கள் திருடு போய் விட்டன.

கல்லூரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் சைக்கிளில் தான் வரவேண்டும். ஏனென்றால், காலை நேரத்தில் ஆர்க்காடு-வேலூர் பஸ்கள் இடைவழியில் எந்த ஊரிலும் நிறுத்த மாட்டார்கள். மாணவர்களைக் கண்டால் நிறுத்தாமலேயே போய் விடுவதும் உண்டு. எனவே கல்லூரி வளாகத்தில் சுமார் இருநூறு சைக்கிள்கள் எப்போதும் இருக்கும். பாதுகாவலை முன்னிட்டு நிழல்கூரை அமைக்கவும், காவலாளிக்குச் சம்பளமாகவும் எங்களிடம் மாதம் இருபது ரூபாய் கட்டணம் வேறு வசூலித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில், திருட்டு போன சைக்கிள்களுக்கு மாணவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த இரு மாணவர்களும் மிகவும் ஏழைகள் என்பதும் அதிமுக்கிய காரணம்.

இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சார்பாக நான் தான் முதல்வரை சந்தித்துப் பேசவேண்டி வந்தது. அதற்கு முன் மாணவர்கள் ஊர்வலமாக மேல்விஷாரம் முழுதும் சென்று வந்திருந்தார்கள். எனவே முதல்வர் முகம் கோபத்தால் சிவந்து காணப்பட்டது. “நீ ஏன் அவர்களுக்குத் தலைமை தாங்குகிறாய்? உன்னை டிஸ்மிஸ் செய்துவிடுவேன். அப்புறம் என்ன செய்வாய்? உனது ஸ்காலர்ஷிப்பை நிறுத்திவிடுவேன்” என்றேல்லாம் பயமுறுத்தினார். இந்தத் தகவலைக் கேட்ட மாத்திரத்தில்  மற்ற மாணவர்கள் வேகமாக ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “தயவு செய்து அந்த இருவருக்கும் உதவுங்கள். அவர்கள் மிகவும் ஏழைகள்” என்று மட்டும் சொல்லிவிட்டு பதிலுக்கு நிற்காமல் வந்துவிட்டேன்.

மறுநாள் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே கல்லூரிக்குச் சென்றேன்.

ஒன்றும் நடக்கவில்லை. அந்த இருவருக்கும் தொலைந்து போனதற்குச் சமமான மதிப்புடைய வேறு பழைய சைக்கிள்கள் அன்றே  தரப்பட்டன. மாலையில் முதல்வர் அறையைத் தற்செயலாகக் கடந்தபோது என்னை அழைத்தார். “நன்றாகப் படி. உன்னை முதலில் கவனித்துக் கொள்” என்றார். அவ்வளவு தான். ‘கடிதோச்சி மெல்ல எறிக” என்றாரே வள்ளுவர்!
****
'இசைமுரசு' நாகூர் ஹனீபா 

முத்தமிழ் விழாவின் ஒரு பகுதியாக பிரபல முஸ்லீம் பாடகர் நாகூர் ஹனீஃபாவின் கச்சேரியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்த்துறைத் தலைவர் ஷாகுல் ஹமீது விரும்பினார். ஆனால் அதற்கு நிர்வாகம் இசையவில்லை. 
 
ஹனீஃபா, ஒரு தமிழ் பேசும் கீழ்த்தட்டு முஸ்லீம் என்றும், மேல்விஷாரத்தில் இருப்பவர்கள் உருது பேசும் செல்வந்தர்களான மேல்தட்டு முஸ்லீம்கள் என்றும் இருவருக்கும் இடையே வர்க்க பேதமும் பொருளாதார பேதமும் இருந்தது என்றும் ஆசிரியர்கள் அறைப்பக்கம் போனபோது காதில் விழுந்தது. இத்தகைய பிரிவினை பற்றி நான் அதுவரை கேள்விப்பட்டதில்லை.
 
எனக்குத் தெரிந்து நாகூர் ஹனீஃபாவின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு முஸ்லீம்களை விடவும் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமே அதிகம் இருப்பார்கள். அந்த அளவுக்கு அவரை ஒரு முஸ்லீமாகப் பார்க்காமல் இன்னொரு டி.எம்.சௌந்தரராஜனாகத் தான் மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது புதிய செய்தியாக இருந்தது. எப்படியோ, நிர்வாகக்குழுவைச் சரிக்கட்டினார் ஷாகுல் ஹமீது.

நாகூர் ஹனீஃபாவின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.

“அதிகாலை நேரம்” என்று பாட  ஆரம்பித்தார். கூட்டம் இருந்த இடத்திலேயே துள்ளியது. “அருள்மேவும் ஆண்டவனே” என்ற பிரபலமான பாடலைப் பாடினார். “நபியே நபியே எங்கள் சலாம்” என்று வணங்கினார். “தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே” என்று தழுதழுத்தார். “காணக் கண் கோடி வேண்டும் –காஃபாவை” என்ற பாடலும் “மெக்கா மெதினா” என்ற பாடலும் “...ஃபாத்திமா, ஃபாத்திமா..” என்று ஒரு பாடலும் பாடினார். கடைசியில் அவரது முத்திரைப் பாடலான “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று கேட்டுக்கொண்டு அவர் முடித்தபோது கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று.

தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்துக்களுக்கு  ஒரு பித்துக்குளி முருகதாஸ் என்றால், அதே மாதிரி தீர்க்கமும் இனிமையும் யாப்புப் பிறழாத கவிதை வரிகளுமாகப் பாட முஸ்லீம்களுக்கு ஒரு நாகூர் ஹனீஃபா இருந்தார். இருவரையும் கேட்டு மகிழும் அதிர்ஷ்டமுள்ள  தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.

நாகூர் ஹனீஃபாவுடன் ‘ராணி’ என்ற பெண்மணி சேர்ந்து பாடுவது வழக்கம். அன்றோ, விழா ஆரம்பமாவதற்குச் சற்று முன்,  கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர், ஹனீஃபா மட்டும் தான் பாட வேண்டும், அந்தப் பெண் பாடக்கூடாது என்று ஆட்சேபம் எழுப்பினார். மாணவர்கள் கூட்டமாயிற்றே, விடுவார்களா? பெருத்த கூச்சல் எழுந்தது.  கடைசியில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மொத்தமாக வெளியேறினார்கள். அதன் பிறகே ஹனீஃபா பாடத் தொடங்கினார். (ஆனால் ராணி பாடினாரா, அல்லது முக்கியமானவர்களின் மனத்தாங்கலுக்கு ஆளாக வேண்டாம் என்று பாடாமல் குழுவில் வெறுமனே அமர்ந்திருந்தாரா என்பது மட்டும் நினைவுக்கு வரவில்லை.)

 தோல் பதனிடும் ஊர் என்பதால் மேல்விஷாரத்தில் எப்போதும் கரும்புகையோ செம்புகையோ வானில் மிதந்துகொண்டே இருக்கும். தாங்க இயலாத நாற்றம் மூக்கைத் துளைக்கும்.  மிலாடி நபி திருவிழாவின் போது ஆட்டுத் தலைகள் வீதியெங்கும் ஏராளமாக இரைந்து கிடக்கும். அப்போது ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து முஸ்லீம்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிகொள்வர். நிறைய தான தருமங்கள் நிகழும்.

மேல்விஷாரத்தில் நான் கழித்த நான்கு ஆண்டுகள், என்னை யாரென்று எனக்கே அறிவித்த ஆண்டுகள். தமிழோடு என்னை  ஓர் இரும்புச் சங்கிலியால் பிணைத்த காலகட்டம் அது. கதை, கட்டுரை, சொற்பொழிவு, இலக்கியக் கூட்டங்கள், புத்தக விமர்சனங்கள் என்று ஓய்வில்லாமல் என்னை வழி நடத்திய அந்தப் பொன்னான தருணங்கள் மீண்டும் வருமா?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தின் போது “அல்லா-ஹூ-அக்பர்”  என்று இசையோடு பாடுவார் ஒரு முஸ்லீம் மாணவர். புகுமுக வகுப்பில் வேறு ஒரு பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அவரையே பாடச் சொல்வார்கள். அப்துல் ஹக்கீம் அவர்களின் உறவினர் என்று மட்டும் தெரியும். யாருடனும் அதிகம் பழகமாட்டார். இந்த ரமலான் மாதத்தில் அவர் எங்கிருந்தாலும் அவருக்கும், இதனைப் படிக்கும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது ரமலான் மாத நல்வாழ்த்துக்கள் !
© Y.Chellappa
********

 

4 கருத்துகள்:

 1. ‘கடிதோச்சி மெல்ல எறிக” என்றாரே வள்ளுவர்! //

  “கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
  கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா!”//

  அருமையான நினைவலைகள்

  பாராட்டுக்கள்...!

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி, தங்கள் வருகைக்கு. இளமையின் நினைவுகள் நம்மை மீண்டும் இளமையாக்குகின்றன அல்லவா? அதே சமயம் நமக்கு வயதாகிவிட்டதையும், இனி மிச்சமிருப்பதை விரைந்து சாதிக்கவேண்டும் என்ற வேட்கையையும் நமக்கு ஊட்டுகிறதல்லவா?

  பதிலளிநீக்கு
 3. ennai meendum kallori kalathirkku alaithu sendramaikka kodi kodi nandrigal, neengal kooriyathu pola alipore sir konjam murattu manithar thaan, innum innum ennai engo kondu sendrathu intha pathivu..endrum anbudan rasool..

  பதிலளிநீக்கு
 4. அன்புடையீர்
  முதலில் வாழ்த்துகள்
  காதலனைக் குரங்கு என்று சொல்லலாமா? ( ‘அபுசி-தொபசி’-29)
  என்ற கட்டுரையை படித்து இங்கு வந்து இக் கட்டுரையை படித்தேன்
  முதலில் படித்தது சரித்திரம்/
  இது நினைவலைகள்
  இரண்டுமே படிக்க வேண்டிய பாடங்கள் .
  நிறைய நிகழ்வுகள் தந்து மனதை நிறைவடையச் செய்து விட்டீர்கள் . மகிழ்வோடு நன்றியுடன் வாழ்த்துகள் சொல்வதில் பெருமிதம் கொள்கின்றேன் .

  கிளியனூர் இஸ்மத் அவர்கள் குறிஞ்சிச் சுவை நூலைப் பற்றி ஒரு கவிஞனின் பார்வை என்ற இந்த லிங்கை அனுப்பி வைத்தார்கள் .உங்களை அறிய வைத்தமைக்கு அவருக்கும் நன்றி .
  அன்புடன்
  முகம்மது அலி ஜின்னா

  பதிலளிநீக்கு