திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணே கலைமானே (சிறுகதை)

கண்ணே கலைமானே
இமயத்தலைவன்

நியூஜெர்சியில் பிரபலமான  உயர்நிலைப்பள்ளி அது. இரண்டாவது, மூன்றாவது கிரேடு மாணவர்களின் பெற்றோர்கள் குழுமியிருந்தனர். வரப்போகும் ஆண்டு விழாவை வித்தியாசமாகக் கொண்டாடுவதற்கான கருத்துக் கேட்கும் கூட்டம்.  

இரண்டாவது படிக்கும் சகுந்தலா என்கிற ‘ஷக்’ குடன் தாயார் இந்திராவும், ‘அமெரிக்கால பள்ளிக்கூடம்னா எப்படி யிருக்கும்னு பாக்கணும்’ என்று பாட்டி ராஜம்மாவும் வந்திருந்தனர்.

பள்ளி முதல்வர் மிஸ். சாம்சன் அனைவரையும் வரவேற்றார். “இந்த வருடம் ஆண்டு விழாவிற்கு நமது கவர்னரை அழைப்பதாக இருக்கிறோம். அதனால் விழா மிகவும் சிறப்பாக மட்டுமின்றி வித்தியாசமாகவும் இருக்கவேண்டும். அதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்” என்றார்.
“என் வீட்டில் நூறு முயல் குட்டிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும்  கொண்டுவரட்டுமா?” என்றாள் ஒரு சிறுமி. அனைவரும் சிரித்தனர்.

“என்னிடம் சீனாவில் வாங்கிய பலவண்ணப் பாம்பு இருக்கிறது. அதை நான் கவர்னருக்குக் கொடுக்கலாமா?” என்றான் ஒரு சிறுவன். மீண்டும் சிரிப்பு எழுந்தது.

“ஆனால் ஜாஸியை நான் கொண்டுவர மாட்டேன். அதற்கு உடம்பு சரியில்லை” என்றாள் இன்னொரு சிறுமி. ஜாஸி என்பது அவளுடைய பூனைக்குட்டி. ‘ஜுரமா?’ என்று ரகசியமாகக் கேட்டான் அருகிலிருந்த சிறுவன்.

ராஜம்மா எழுந்தார். “மிஸ். சாம்சன், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்தக் குழந்தைகள் சொன்னதையே கொஞ்சம் விரிவுபடுத்தி, மாணவர்களின் செல்லப்பிராணிகளின் கண்காட்சி ஒன்றை ஆண்டுவிழாவில் நடத்தினால் என்ன?” என்றார். உடனே பெருத்த கர ஒலி எழுந்தது, பெற்றோர்களிடமிருந்து.

ஆசிரியர்களுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. என்றாலும் ஐ-பேடில் கூகுள் தேடலில் பார்த்த பிறகே ஆமோதித்தார், மிஸ். சாம்சன். இதுவரை நியூஜெர்சியில் எந்தப் பள்ளியிலும் செல்லப் பிராணிகளின் கண்காட்சி சமீபத்தில் நடந்திருக்கவில்லை. “தேங்க்யூ மேடம் ஃபார் யுவர் வேல்யுபிள் ஐடியா” என்று ராஜம்மாவைக் கைகுலுக்கிப் பாராட்டினார். ராஜம்மாவுக்கு ஒரே பூரிப்பு. சென்னையில் தன் பேரன் படிக்கும் பள்ளியில் இத்தனை வருடத்தில் அவளை யாரும் பொருட்படுத்தியதில்லை.

சகுந்தலா ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு “பாட்டி, யூ ஆர் கிரேட்!” என்றாள். “பாட்டின்னு சொல்லாதடி, ராஜம்மான்னு சொல்லு. எனக்கென்ன தொண்ணூறு வயசா ஆகுது? செப்டம்பர் வந்தா எழுபத்திரண்டு” என்று கோபித்தார் ராஜம்மா.

பள்ளியிலிருந்து திரும்பும்போது இந்திராவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. “ஷக், அம்மாவோட ஐடியா சரி, நீ கொண்டுபோய்க் காட்டுவதற்கு உன்னிடம் செல்லப்பிராணி எதுவும் இல்லையே. என்ன செய்யப் போகிறாய்?” என்றாள்.

“ஆமாம், வாட் ஷல் ஐ டூ? ராஜம்மா, நீயே ஒரு வழி சொல்லு” என்றாள் ஷக். “நாய், பூனை, பல்லி, ஓணான், தேள் எல்லாம் நிறைய பேரிடம் இருக்கிறது. வேறு புது அனிமல் தான் எனக்கு வேண்டும்”.

“ஏம்மா இந்திரா, இங்க பஞ்சவர்ணக்கிளி கிடைக்குமா? கிடைத்தால் வாங்கிப் பழக்கிவிடலாம். ‘வெல்கம் மிஸ்டர் கவர்னர்’னு அது சொன்னா எல்லாரும் அசந்து போய்டுவாங்களே” என்றார் ராஜம்மா.

 நல்ல யோசனை தான் என்று இந்திரா கூகுளில் தேடியபோது தெரிந்தது, பஞ்சவர்ணக்கிளிகளை வீட்டில் வளர்க்க அனுமதியில்லை என்று. அவை அபூர்வப் பிராணிகளாம். “சரி, நாளை பாஸ்கரைக் கேட்கலாம். அவன் சரியான க்ளூ கொடுப்பான்” என்றாள் இந்திரா. பாஸ்கர், குடும்ப நண்பன். நுவார்க்கில் ஒரு அனிமல் ரிசர்ச் பிராஜக்ட்டில் இருந்தான்.
***  
சகுந்தலாவைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே “ ஓ! அதற்குள் நீ இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாயா? உன் முதல் பர்த்டேயில் பார்த்தபோது இத்தனூண்டு தானே இருந்தாய். ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடுவாய்?” என்றான் பாஸ்கர். “போங்க அங்க்கிள்” என்று வெட்கப்பட்டாள், சகுந்தலா.

“உனக்கு புதிய அனிமல் வேண்டுமா? ஆனால் நான் பிராணிகள் வியாபாரத்தில் இல்லையே!” என்று கலகலப்பாகப் பேசினான். வீட்டிலேயே ஒரு ஆராய்ச்சிக் கூடம் வைத்திருந்தான். மான் குட்டிகளுக்கு ஏற்படும் ஒரு விசேஷமான நோய் பற்றி ஆராய்வதாகச் சொன்னான். பவர்பாயிண்ட் காண்பித்தான். அவ்வளவு தான், ராஜம்மாவுக்கு ஐடியா கிடைத்துவிட்டது. “ஷக், நீ ஒரு மான் குட்டி வளர்த்தால் என்ன?” என்றார்.  

“சரியாப் போச்சு. அதற்கெல்லாம் அனுமதி கிடைக்காது. மான் ஒரு  வைல்டு அனிமல்” என்றான் பாஸ்கர்.

“அதென்னமோ, நீ மான் குட்டியைக் கொண்டுபோய்க் காட்டினால் தான் புதுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒபாமாவுக்கு ஈமெயில் அனுப்பினால் பர்மிஷன் தரமாட்டாரா?” என்றார் ராஜம்மா வெகுளியாக. எல்லாரும் சிரித்தனர். “ஒபாமா இந்த நாட்டுக்கு ஜனாதிபதி. மான் வளர்ப்பதற்கெல்லாம் அவரிடம் போக முடியாது” என்றாள் இந்திரா.

“இல்லை, அவர் ரொம்ப நல்ல மனுஷர்னு கேள்விப்பட்டேன். சரி, போகட்டும். எது கஷ்டமோ அதைச் செய்தால் தானே பேர் வாங்க முடியும்? பாஸ்கர், நீ தான் சகுந்தலாவுக்கு எப்படியாவது ஒரு மான் குட்டி வாங்கிக் கொடேன்” என்றார் ராஜம்மா.

பாஸ்கர் எல்லாருக்கும் டீ கொடுத்தான். “ஒரு வழி இருக்கு. அது பிராக்டிகலா இல்லையான்னு நீங்க தான் முடிவெடுக்கணும்” என்றான். வீட்டில் வளர்ப்பதைவிட, வனத்துறையின் மான் பண்ணையிலிருந்து ஒரு மான்குட்டியை ‘ஸ்பான்ஸர்’ செய்வது,  ஆண்டுவிழாவுக்குக் கொண்டுவந்து காட்டிவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்பதே அந்த யோசனை. பென்சில்வேனியா மாநில நுழைவாயிலில் இருந்த ஒரு மான்பண்ணையின் முகவரியைக் கண்டுபிடித்துக் கொடுத்தான்.
***
பார்த்தபோதே சகுந்தலாவுக்குப் பிடித்துவிட்டது அந்த இடம். நெடுஞ்சாலை ஓரமாக இருந்த அடர்ந்த வனப்பகுதி. வட்டமான கம்பிவேலி.  வசந்த காலத்தின் புதிய பசுமையோடு நெடிதுயர்ந்த மரங்கள். அப்போதுதான் பூத்த மக்னோலியாக்களின் மனம் மயக்கும் நறுமணம். சிவப்பும் மஞ்சளுமாகப் பூத்து நிற்கும் பெயர் தெரியாத பூமரங்கள். ஏராளமான இளம் ஆரஞ்சு மரங்கள். நன்கு பராமரிக்கப்பட்ட பசுந்தரை.

“வாருங்கள்” என்று வரவேற்றார், கேப்டன் கமாரா. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது பார்த்த உடனே தெரிந்தது.  “ஈமெயிலில் சொன்னபடி வெள்ளை வாலுள்ள, புள்ளியில்லாத, ஒரு மான் குட்டியை நீங்கள் ஸ்பான்ஸர் செய்ய எங்களுக்கு முழுச் சம்மதம். அது பற்றிய விதிமுறைகளும் உங்களுக்கான அடையாள வில்லையும்  தயாராக உள்ளன. வாரத்தில் மூன்று நாட்கள் நீங்கள் வந்துபோகலாம். எங்கள் மருத்துவர் குழு உங்களுக்கு எல்லா உதவியும் செய்யும்” என்று அவர்களுக்கு மருத்துவர் குழுவை அறிமுகப்படுத்தினார்.

மருத்துவர் ஜேம்ஸ், சகுந்தலாவைக் கைகுலுக்கி, “கங்க்ராட்ஸ் மிஸ் ஷக்! உங்கள் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு கேப்டன் அனுமதி அளித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும். வாருங்கள், உங்களுடைய மான் குட்டியிடம் அழைத்துப்போகிறேன்” என்று சுமார் அரை மைல் தூரம் அவர்களை நடத்திக்கொண்டு போனார்.

மென்மையான புல்தரையில் படுத்திருந்தது ஒரு மான் குட்டி. பெண்ணாம். பிறந்து இரண்டு வாரம் ஆனது. மெத்துமெத்தென்று வெல்வெட் மாதிரி தேகம் இளவெயிலில் மினுமினுத்தது. வயிறு ஒட்டியிருந்தது. அடுத்தடுத்து எழ முயன்று கீழே விழுந்தது. அதன் கண்கள் அவ்வளவு அழகு. சகுந்தலாவுக்குச் சொல்லமுடியாத சந்தோஷம். அம்மாவைத் திருப்தியுடன் பார்த்தாள். “ரொம்ப அழகா இருக்குல்லே? அதோட அம்மா எங்கே?” என்றாள்.

“காலையில் பால் கொடுத்துவிட்டுத் தாய் மான் போய்விடும். நாள் முழுதும் புல் மேய்ந்துவிட்டு மாலையில் தான் வரும்” என்றார் ஜேம்ஸ்.

“அதுவரை இவளுக்குப் பசிக்காதா?” என்று ஆர்வமாகக் கேட்டாள், ஷக்.

“ஊஹூம், நடுவில் பிஸ்கட்டுகள் கொடுப்போம். சில சமயம் ஐஸ்க்ரீம் இல்லாமல் கோன் கொடுத்தால் உன் கையிலிருந்தே வாங்கிச் சாப்பிடும். குடிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துவிடவேண்டும். சுத்தமான புல்லையும், ரோஜா இதழ்களையும் விரும்பிச் சாப்பிடும். பிளம், ஸ்டிராபெர்ரி பழங்களையும் கொஞ்சமாகத் தரலாம்.”

“வேறு என்னவெல்லாம் நான் தெரிந்துகொள்ள வேண்டும்?”

“அப்படிக் கேள்” என்றார் ஜேம்ஸ். “தினமும் காலை, மாலை இரண்டு வேளை  மான் குட்டியை நடக்க விட வேண்டும். அப்போது தான் உடலுக்குப் பலம் வரும். விரும்பிய புல்பூண்டுகளை அது சாப்பிடமுடியும். நன்றாக வெயில் அடிக்கும்போது நிழலுள்ள கொட்டடியில் இருத்த வேண்டும். மென்மையான பிரஷ் கொண்டு தினமும் உடம்பு தேய்த்துவிட வேண்டும்.  படுப்பதற்குத் தரை மேல் வைக்கோல் போட்டு அதன்மேல் உலர்ந்த புல்லால் மூடிவிடவேண்டும். நீ எவ்வளவு அதிக நேரம் அதனுடன்  செலவிடுகிறாயோ அந்த அளவுக்கு அது உன்னிடம் அன்போடு விளையாடும்” என்று விளக்கினார் ஜேம்ஸ்.

கேட்கக் கேட்க சகுந்தலாவுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. உடனே அந்த மான் குட்டியுடன் விளையாடத் தொடங்கிவிட்டாள். “அம்மா, இவளை  ஜூலியான்னு கூப்பிடப்போறேன்” என்று அறிவித்தாள்.
***
அடுத்த வாரம் ஆண்டுவிழா என்று முடிவாகியது. மிஸ்.சாம்சன் ஆசிரியர்களை அழைத்து ஏற்பாடுகளைப் பற்றி விசாரித்தார். பதினைந்து குழந்தைகள் தங்களுடைய செல்லப்பிராணிகளைக் கொண்டுவருவதாகப் பெயர் கொடுத்திருந்தனர். அவற்றை ஒரு பவர்பாயிண்ட்டாகக் காட்டினாள் ஒரு ஆசிரியை. சகுந்தலாவின் மான் குட்டி தான் எல்லாரையும் கவர்ந்தது. வெகுதூரம் போய் ஒரு மான் குட்டியைத் தேடி, அதனோடு வாரம் மூன்று நாட்கள் செலவிட்டு, நட்பையும் பாசத்தையும் பொழிந்து ஷக் மகிழ்ச்சியோடும் விளையாடும் காட்சிகளைப் பார்த்து  “இட்ஸ் கோயிங் டு பி தி ஹைலைட்” என்று சந்தோஷப்பட்டார், மிஸ்.சாம்சன். “நிச்சயம் இதற்காக அவர்கள் வீட்டில் ஏராளமாக செலவு செய்திருக்கவேண்டும். லுக் அட் தேர் கமிட்மெண்ட் ! அமேஸிங்” என்றார்.
***
ஜூலியாவுக்கும் சகுந்தலாவுக்கும் இடையிலான தோழமை நன்கு வேரூன்றிவிட்டது. தூக்கத்தில் கூட ‘ஜூலியா’ ‘ஜூலியா’ என்றே பிதற்றினாள். சனிக்கிழமை காலை எப்போது வரும் என்று காத்திருப்பாள். ஜூலியாவுக்கென்று பழங்களும் பிஸ்கட்டுகளும் கோன்களும் எடுத்து ஃப்ரிஜ்ஜில் அடுக்குவாள். ஜூலியாவும் தானும் இருக்கும் புகைப்படத்தைப் பெரிதாக்கி வீட்டுக்கூடத்தில் ஒட்டினாள். “ஜூலி என்று கூப்பிட்டால் போதும், ஓடிவந்து என் பக்கம் நிற்கும்” என்று நண்பர்களிடம் பெருமையாகச் சொல்வாள். ஜூலியாவைப் பற்றி ஒவ்வொரு நாளும் பாஸ்கருக்கு மெயில் அனுப்புவாள். “கவர்னர் என் ஜூலியைத்தான் கையில் எடுத்துக்கொண்டு போட்டோவுக்கு நிற்பார்” என்று சவால் விட்டாள்.
 ***
அன்று மாலை தான் ஆண்டுவிழா. இந்த இரண்டு மாதத்தில் ஜூலியா நன்றாக வளர்ந்திருந்தது. கால்கள் மிகவும் நீண்டும் செழுமையாகவும் இருந்தன. முகத்திலும் கண்களிலும் மினுமினுப்பு தெறித்தது. ஓரிடத்தில் நிற்காமல் துள்ளிக் கொண்டிருந்தது. செடிகளிலும் மரங்களிலும் வாலைத் தேய்த்துக்கொண்டே ஓடியது. ”வால் மூலம் தான் மான் மோப்பம் பிடிக்கும்” என்றார் ஜேம்ஸ். “ஷக், உன்னுடைய அன்பு தான் ஜூலியை இவ்வளவு வேகமாக வளர வைத்திருக்கிறது” என்று பாராட்டினார்.

“ஜூலியை அழைத்துப்போக உதவியாளருடன் வேன் தயாராக உள்ளது.  ஒரு மணி நேரத்தில் புறப்படலாம்” என்றார் கேப்டன் கமாரா.
***
உதவியாளர் ஜூலியாவை நன்றாகத் துடைத்து வெதுவெதுப்பான நறுமண நீரால் நீவி விட்டார். ஜூலி மகிழ்ச்சியோடு ‘ம்ம்..ம்ம்’ என்று முனகியது. உற்சாகத்தில் ஓடப்பார்த்தது. ஷக் அதை இறுகப் பிடித்துக்கொண்டு முத்தமிட்டாள். ஜூலி வேனில் ஏறிக்கொண்டது. கதவை மூடித் தாளிட்டார்கள். ஏர் கண்டிஷன் செய்த விசேஷ வண்டி அது.

அதன் தாய் அப்போது திடீரென்று அங்கு ஓடி வந்தது. ஆனால் வழக்கமான வேகம் இல்லை. ஒரு காலை சற்று நொண்டுவதாகத் தெரிந்தது.  சில இடங்களில் ரத்தமும் தெரிந்தது. உடம்பில் நிறைய சிராய்ப்புகள். அதே சமயம் கண்களில் ஒரு தேடல். ஓரிடத்தில் நிற்காமல் பரபரத்தது.

உதவியாளர், “ஷக்! நீ ஓடிப்போய் காரில் உட்கார். தாய் மான் யாருடனோ சண்டையிட்டிருக்கவேண்டும். காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த மானைப் பிடிக்கப் போனார்.

தாய் மான், தன் குட்டி வேனில் இருப்பதைப் பார்த்துவிட்டது. வேகமாக ஓடிப்போய்க் கதவை முட்டியது. தன்னை விட்டு அவளைப் பிரித்துவிடப் போகிறார்கள் என்று அதற்குத் தோன்றியதோ என்னவோ! கதவு திறக்கும் வரை விடப்போவதில்லை என்பது போல் முட்டிக்கொண்டே இருந்தது. அதனால் தலையில் ரத்தம் வழிய ஆரம்பித்தது.

உதவியாளர் இதை உணர்ந்தார். வேன் கதவைத் திறக்க ஓடினார். ஆனால் தாய் மான் விட்டால் தானே! கடைசியில் ஒரு நீண்ட சுருக்குக் கயிற்றை வீசி மானின் கழுத்தைத் தன்னை நோக்கி இழுத்தார். தனது உறுதியான கரங்களால் அதன் முகத்தை இறுக்கித் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டார். “உன் குட்டி பத்திரமாக இருக்கிறது, கவலைப்படாதே” என்று அதன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாகப் பேசினார். மானின் வேகம் கொஞ்சம் அடங்கியது. ஆனாலும் ஆற்றாமையாலும் உடல் வலியினாலும் பெருமூச்சு விட்டது.

சாவியைப் போட்டு வேன் கதவைத் திறந்தார் ஜேம்ஸ். ஜூலியா தாயைப் பார்த்ததும் வேகமாகக் குதித்து இறங்கியது. ஓடிப்போய் தாய் மடியில் முகம் புதைத்துப் பால் குடிக்கத் தொடங்கியது. தாய் மான், காணாதது கிடைத்துவிட்ட மாதிரி தன் நாக்கினால் குட்டியை விடாமல் நக்கித் தன் அன்பை வெளிப்படுத்தியது.

உதவியாளர் மென்மையாக ஒவ்வொரு காயத்தையும் கழுவி மருந்திட்டார். மருந்தின் எரிச்சலால் மான் மெல்ல அலறியது. ஜூலியா தலையைத் தூக்கி என்ன என்பது போல் பார்த்தது. ‘அதற்குள் என்ன அவசரம்? இன்னும் குடி’ என்று அவளைத் தன் மடியோடு சேர்த்துக்கொண்டது தாய். ஜூலியா இன்னும் வேகமாகக் குடிக்க ஆரம்பித்தது.

சகுந்தலா ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். குட்டி மானோடு அவளுக்குப் பழக்கம் இருந்தது. ஆனால் தாய் மானோடு இல்லையே. அதுவும் வேன் கதவை முட்டிய வேகத்தைப் பார்த்தபிறகு கிட்ட நெருங்கவே பயமாக இருந்தது. ஜூலி சீக்கிரம் பால் குடித்துவிட்டு வரவேண்டுமே என்று பதைபதைப்புடன் இருந்தாள்.

இந்திராவின் செல்போன் ஒலித்தது. “ஷக், இன்னுமா கிளம்பவில்லை? மணி பன்னிரண்டு ஆகிறதே! தாமதப்படுத்தினால் கவர்னர் வந்து விடுவார். அப்புறம் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் சகுந்தலாவின் அப்பா.

தாய் மான் இவ்வளவு நேரம் நின்று பால் கொடுத்தது, திடீரென்று கால்கள் தளர்ந்து கீழே  விழுந்தது. ஜூலி ஒன்றும் புரியாமல் தாயைப் பார்த்துக்கொண்டு நின்றது. அதற்குள் ஜேம்ஸ் வந்துவிட்டிருந்தார். “இது வழக்கமாக நடக்கிற ஒன்று. இரண்டு ஆண்மான்கள் சண்டையிடும்போது இந்தப் பெண் மான் நடுவில் நுழைந்திருக்கிறது. அதனால் தான் உடலில் பலத்த காயங்கள். மேலுக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் உள்காயம் ஆற சில நாட்கள் ஆகும். அதுவரை இதன் நடவடிக்கைகள் புரிபடாமல் தான் இருக்கும். குட்டிகளை விட்டுப் பிரியவே பிரியாது” என்றார். ஒரு நீண்ட ஊசியைப் போட்டார். பிறகு மெல்ல ஜூலியின் மேல் கை வைத்தார்.

அவ்வளவு தான், சுருண்டு படுத்திருந்த தாய் மான் துள்ளி எழ முயன்றது. ஜேம்ஸை நோக்கி ஆத்திரமாகப் பார்த்தது. மீண்டும் தொப்பென்று தரையில் விழுந்தது. “பார்த்தீர்களா, தன் குட்டியைப் பிரித்துவிடுவார்களோ என்று கருதி எதிர்த்துப் போராடுகிறது” என்றார்.

தாய் தரையில் விழுவதைக் கண்டதும் ஜூலி, தன் அம்மாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தன் வலிமை கொண்டமட்டும் கூவியது. அதற்குப் பதில் கொடுப்பதுபோல் தாயும் கூவியது. ஜூலி விடாமல் தாயின் முகத்தைத் தன் நாக்கால் தடவிக்கொண்டே இருந்தது.

சகுந்தலா பயத்தினால் அதிர்ந்துபோனாள். இருந்தாலும் “ஜூலீ!” என்று சத்தமாகக் கூப்பிட்டாள். ஜூலி கவனிக்கவில்லை. மீண்டும் கூப்பிட்டாள். அது கண்டுகொள்ளவில்லை.  தாயின் முகத்தை நக்கியபடியே இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஜூலியிடம் நெருங்கி அதன் முதுகைத் தொட்டாள். ஊஹூம், அது இவள் பக்கம் திரும்பவேயில்லை.

சகுந்தலாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. இப்படி ஒரே நிமிடத்தில் ஜூலி தன்னை மறந்துவிட்டதே! இன்று காலைவரை எவ்வளவு அன்பாக இருந்தது. ஏன் இப்படி மாறிவிட்டது?  நண்பர்கள் எல்லாரும் ஜூலியை ஆவலோடு எதிர்பார்ப்பார்களே, அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? கவர்னருடன் போட்டோ எடுக்க முடியாமல் போய்விடுமே! எவ்வளவு ஏமாற்றம்!

“அழாதடி கண்ணு” என்று சமாதானப்படுத்தினார் ராஜம்மா. “அட் டைம்ஸ் அனிமல்ஸ் ஷோ அன்ப்ரெடிக்டபிள் பிஹேவியர்” என்று அவளை அணைத்துக் கொண்டாள், இந்திரா. 

அப்போது தான், அன்றொரு நாள் இரவு அம்மாவின் தலைவலிக்காக தான் ஓடிப் போய் தைலம் கொண்டுவந்து தடவியதும், தன்னை மறந்து தாயின் மேலேயே தூங்கிவிட்டதும் சகுந்தலாவுக்கு நினைவு வந்தது. ஜூலியும் அதைத்தான் செய்கிறாளோ? அம்மாவை விட எனக்கு யாரும் முக்கியமில்லை என்று சொல்லாமல் சொல்கிறாளோ?

கணவருக்குப் போன் செய்தாள் இந்திரா. “ஸாரிங்க. ஜூலியோட அம்மாவுக்கு என்னவோ ஆய்ட்டது. அதனால ஜூலி எடத்த விட்டு நகர மாட்டேங்கறா. அவளை இனிமேல வேன்ல ஏத்த  முடியாதுன்னு தோணுது” என்றாள்.

“என்ன உளறுகிறாய்? இவளைத் தான் மிஸ்.சாம்சன் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜூலி மட்டும் வரவில்லையென்றால் ஆண்டுவிழாவே களையிழந்து போகும். நிச்சயம் ஷக் தண்டிக்கப்படலாம்”.

அம்மாவிடமிருந்து போனைப் பிடுங்கினாள் சகுந்தலா. “பரவாயில்லை டாடி! ஜூலியும் என்னெ மாதிரி கொழந்த தானே! அதான் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேன்னு அவள விட்டு வரமாட்டேங்கிறா. நீங்க பிரின்சிபால் கிட்ட சொல்லிடுங்க டாடி. நான் எல்லாத்தயும் வீடியோ பண்ணிட்டு வந்து அவங்களுக்குப் போட்டுக் காட்றேன்” என்றாள் விம்மிய குரலுடன். போனைக் கையில் பிடித்துக்கொண்டு ஓவென்று அழுதவள், பாட்டியைக் கட்டிகொண்டு, “நா தோத்துப் போய்ட்டேன் ராஜம்மா” என்றாள்.

“இது தோல்வியில்லடி கண்ணு! இது தான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்க்கும் கொழந்தைக்கும் உள்ள உறவு தான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சிடுத்து இல்லையா?” என்றார் ராஜம்மா.
****

(குறிப்பு: மன்னிக்கவும். ஒரு வாரப் பத்திரிக்கை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பப்பட்ட  ஐந்து  கதைகளில் ஒன்று இந்தக் கதை. பரிசும் பெறவில்லை. வெளியிடுவதற்கும் தேர்ச்சி பெறவில்லை. உங்கள் கருத்து என்ன?)

(c ) Y. Chellappa 
email: chellappay@yahoo.com   

8 கருத்துகள்:


 1. விலங்குகளுக்குத் தாய்ப் பாசம் உண்டு என்பது தெரியும். இருந்தாலும் இதில் சொல்லப் பட்ட அள்வு இருக்குமா தெரியவில்லை. மற்றபடி கதைக் களன் சொல்லிச் சென்ற விதம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உண்மை நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதிய கதை தான் இது!

  பதிலளிநீக்கு
 3. உண்மை நிகழ்ச்சியை வைத்துதான் எழுதி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தேர்வு பெற்றால் மட்டுமே சிறந்த கதை என்று முடிவுக்கு வந்து விட கூடாது. எழுத்தாளர் இந்துமதி சந்திப்பில் கூட இதை கூறியிருந்தார். பிரபல பத்திரிக்கை சிறுகதை போட்டிக்கு நீதிபதியாக ஐந்து பேரில் ஒருவராக அவரும் சென்ற போது மற்ற நான்கு பேர் நிராகரித்த சிறந்த கதையை இவர் தேர்ந்தெடுத்து சிறந்த கதை என்று வலியுறுத்தினாராம். தாய்மையை சொல்ல வந்த விஷயம் நன்று!

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ஐயா.

  ஹரணி வணக்கமுடன்.

  கதை எதார்த்தமாகப் போகிறது. சொல்லும்விதம் அருமையாக உள்ளது. பூனைக்குட்டிக்கு உடம்பு சரியில்லையா என்று பக்கத்து இருக்கைப் பையன் கேட்பது ரசனையான உரையாடலின் உச்சம். இக்கதை போட்டியில் வெற்றிபெறவில்லை என்பது வருத்தம் என்றாலும். உலகமெங்கும் பரிசுகள், விருதுகள் பெரும்பான்மை விழுக்காடு வாங்கப்படுகின்றன எனும்போது நாம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. இருப்பினும் இக்கதையின் ஏற்படும் நிறைவு நமக்குக் கோடி பெறும்.

  தாய்மைக்கேது நிகர்? மனிதமாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும்.

  பதிலளிநீக்கு
 5. உஷா அன்பரசுவுக்கும் ஹரணிக்கும் மனமார்ந்த நன்றிகள். போட்டியில் வென்றவர்களுக்கு நமது பாராட்டுக்கள். நமது படைப்பு பரிசு பெறவில்லை என்பது குறித்து வருந்தவேண்டிய அவசியம் இல்லை என்று புரிகிறது. ஏனெனில் ஒவ்வொரு முயற்சியும் என்றாவது ஒரு நாள் வரவிருக்கும் வெற்றிக்கு ஓர் அடித்தளமாகும் அல்லவா? அது மட்டுமன்றி, தேர்வுக்குழுவின் இயலாமையையும் நான் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு கதையும் அதைப் படிப்பவரின் உள்ளப்பாங்கைப் பொறுத்தும், படித்தபிறகு அவருக்குள் எழுந்த உணர்வுகளைப் பொறுத்தும் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும். எந்த இரண்டு மனிதர்களுக்கும் இவ்விரண்டு விஷயங்களும் ஒன்றாக இருப்பதில்லையே! உஷா அவர்களுக்கு மீண்டும் நன்றி. அவர் மட்டும் தெரிவித்திராவிட்டால் நான் இப்போட்டியில் கலந்துகொண்டிருக்க மாட்டேன். (உங்கள் இருவரையும் பதிவர் மாநாட்டில் பார்க்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது).

  பதிலளிநீக்கு
 6. நன்றாக இருந்தது.
  ஆக்கங்கள் வாசிப்போருக்கானது- பகிர்தலுக்கானது- தற்போதைய யுகம் இணைய வலைப்பின்னலுடைய உலகம் தழுவியது. தாங்கள் ஏற்கனவே பிரசுரித்தும் விட்டீர்கள்.
  தங்களது ஆக்கங்களை வேறு பிரசுர நிறுவனர்கள் ஏற்கலாம் - ஏற்காதும் போகலாம்! அதைத் தீர்மானிக்க எம்மால் முடியாதுதானே!!
  தொடரட்டும் தங்களது பகிர்வுகள்.
  0 உலகினில் மனித உயிரி தோன்றியதின் பின் சகலனவும் அவனது 'ஆளுகைக்குள்' முடங்கினதாகவே மௌனித்த டீதாற்றப்பாடுடன் இயற்கையின் சுழற்சி தொடர்கிறது. சிந்திப்பதாக'ச் சொல்லும் இந்த மனித உயிரி இயற்கையின் பிள்ளைதான் என்பதை ஏனோ தன்னிலை மறந்ததாகவே தொடர்ந்தும் பயணிக்கிறது.

  “இது தோல்வியில்லடி கண்ணு! இது தான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்க்கும் கொழந்தைக்கும் உள்ள உறவு தான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சிடுத்து இல்லையா?” எனவாக ராஜம்மா நினைவில் மூழ்கியதாக முடித்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 7. தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம்.

  தாய்மைக்கு மணிகுடம் சூட்டும் கதை ..

  பரிசு பெறாவிட்டால் என்ன

  மனதில் சிம்மாசனமிட்டூ அமர்ந்துகொண்டதே..!

  பதிலளிநீக்கு