ஞாயிறு, ஜூன் 30, 2013


அவரவர் கவலை (கவிதை)


தோழன்-1.1

தண்ணீர் இல்லை நதிகளிலே

தரையைத் தோண்டியும் பயனில்லை

மழையும் பெய்ய மனதில்லை

மக்களுக் கேது மின்சாரம்?

தோழன்-1.2

கிணறும் உண்டு நீருண்டு

கீழே நூறடித்  துளையுண்டு

எடுத்தால் கிடைக்கும் குடிநீர்தான்

ப்போ வருமோ மின்சாரம்?

 ****

தோழன்-2.1

பிளஸ்-டூ மதிப்பெண் மிகவுண்டு

பிடித்த கோர்ஸிலும் இடம் உண்டு

கட்டணம் செலுத்தப் பணம் எங்கே?

கல்வித்துறையே பதில் சொல்வாய்!

தோழன்-2.2

படித்தேன் முடித்தேன் பட்டமுடன்

பட்டயம் சிலவும் நான் பெற்றேன்

வெற்றுப் பயலாய்த் திரிகின்றேன்

வேலை கொடுப்பவர் யாரிங்கே?

 *****

தோழன்-3.1

கட்சியும் உண்டு கொடியுண்டு

கைகலப் புக்கும் ஆளுண்டு

கூட்டணி உண்டு, எம்.எல்.ஏ.

கூட்டம் மட்டும் எமக்கில்லை!

தோழன்-3.2

கட்சியும் கொடியும் டி.வி.யும்

கைவசம் உண்டு, எம்.எல்.ஏ.

கைவிரல் இடுக்கில் நழுவுகிறார்

கட்சியை நடத்தல் எவ்வாறோ?

 ****

தோழன்-4.1

டாலர் வெளியே போகிறதாம்

ரூபாய் மதிப்புக் குறைகிறதாம்

பெட்ரோல் விலையைக் கூட்டுகிறார்

பிழைப்பது எப்படி? புரியவில்லை!

தோழன்-4.2  

தீராக் கவலை நமக்கேனோ?

தேனீர் விலையும்  ஏறும் முன்

சூடாய், அடிப்போம் சிங்கிள் டீ!

சூப்பர் ஸ்டார் படம் போவோமா?

-    கவிஞர் இராய. செல்லப்பா.

(c ) Y .Chellappa 
email : chellappay@yahoo.com  

4 கருத்துகள்:

  1. இப்படி எல்லாம் உண்மையை புட்டு புட்டு வைத்து ரசிப்புடன் முடித்து விட்டீர்கள் ஐயா....

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. போகிறபோக்கைப் பார்த்தால் இனி சிங்கிள் டீ கூட முடியாது. அதிலும் ஒன் பை டூ, அதாவது ஒரு டீயை இருவர் குடிக்கும் நிலைதான். மிகவும் யதார்த்தமான கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள

    உண்மையில் சிங்கிள் டீதான் எப்போதும் சுகம்.

    இனி அதுவும்...

    எளிமையழகு மிளிரும் கவிதைகள். பொருளுரைக்கும் விதம் அதைவிட அருமை.

    பதிலளிநீக்கு
  4. உண்மையை உண்மையாகப் பேசுவதே முடியாமல் போய்க்கொண்டிருக்கும் நாட்கள் அல்லவா இவை! தங்கள் வரிகைக்கும் ரசிப்புக்கும் நன்றி- திண்டுக்கல் தனபாலன், (‘சோழநாட்டில் பௌத்தம்’) டாக்டர் ஜம்புலிங்கம் மற்றும் தஞ்சை-கரந்தை ஹரணி அவர்களே! மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு