ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

மாணிக்கமும் மசால்வடையும் -1

ரயில் இன்னும் வராதது நல்லதாய்ப்போயிற்று. குடையை மடித்துக்கொண்டு, புத்தகப்பை மேலிருந்த மழை நீரை உதறிவிட்டு  ஸ்டேஷன்மாஸ்டர் அறையை அடைந்த போது சரியாக மணி 7.30. காலை. விருத்தாசலம் –பெங்களூர் பாசஞ்சர் தனது சரியான நேரமான 7.15 க்கு வந்திருந்தால் நான் கல்பகனூர் எல்லையைக்கூடத் தாண்டியிருக்கமாட்டேன்.

இத்தனைக்கும் ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்டேன். படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு, கிணற்றடியைச் சுத்தம் செய்து, துணி துவைத்து, குளித்து முடிக்கும்போது மணி ஆறு.



பூஜையறையில் விளக்கேற்றி, வழக்கமான ஸ்லோகங்கள் சொல்லி (மனதிற்குள்ளாகவே), கற்கண்டு நைவேத்தியம் செய்த பிறகு,  சமையலறைக்கு வெளியில் அதற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மூலையில் பாரம்பரியம் மிகுந்த கல்சட்டியில் இருந்த பழைய சோற்றை முதல் நாள் புரைகுத்திய கெட்டித் தயிருடன் கலந்து (அநியாயத்திற்குக் காரமாக இருந்த) மாகாளி ஊறுகாயுடன் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டுப் பின்கட்டு வழியாக கொத்தாம்பாடி பஸ்  நிறுத்தத்தைக் கடந்து மரவள்ளிக் கிழங்கு வயல்களின் நடுவே வேகமாக நடந்து கல்பகனூர் ரயில் நிலையத்தை இணைக்கும் ஒற்றையடிப் பாதையை அடைந்தபோது மணி 7.20 ஆகிவிட்டது. திடீரென மழைத்தூறல் வேறு. கையில் எப்போதும் குடை கொண்டுவரும் வழக்கத்தால் புத்தகப் பை நனையாமல் தப்பியது.

“வாங்க சார்” என்று வரவேற்றார், ஸ்டேஷன் மாஸ்டர் ராஜாராம். எஸ்.எம் என்று தான் அவரை அழைப்போம். ஆத்தூரிலிருந்து வருகிறார். காலை ஐந்து மணிக்குக் கிளம்பும் கூட்ஸ் வண்டியில் கார்டுக்கருகில் நின்று பேசிக் கொண்டே வண்டி ‘ஸ்லோ’ ஆகும்போது கல்பகனூரில் இறங்கிவிடுவார். அதை விட்டால் பஸ் பிடித்து மெயின் ரோட்டில் இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து தான் ஸ்டேஷனை அடைய வேண்டும். கையில் சிறிய ஃப்ளாஸ்க்கில் காப்பி கொண்டுவருவார். அதில் எனக்கும் சிறிது தருவார். காலையில் அந்த ரயிலுக்காக வந்து நிற்கும் முதல் பயணிகளுள் நானும் ஒருவன்.

“என்ன சார், இன்னிக்கு லேட்டாயிடுச்சா?” என்று காகித டம்ளரில் எனக்குக் காப்பியை ஊற்றினார் எஸ்.எம். “ஆமாங்க, சில நாள் இப்படித்தான் ஆயிடுது” என்றேன். மழை நாள் காலையில் சாப்பிடும் சூடான முதல் காப்பிக்குத் தான் எப்படியொரு சுவை !

“கடலூர் ஓ.ட்டி.யில் வண்டி லேட்டாம். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும்.  உங்களுக்கு காலேஜ் லேட்டாயிடுமா?”

“இல்லீங்க, இன்னிக்கு ஃப்ஸ்ட்டு அவர் கிளாஸ் கிடையாது. பத்தரை மணிக்குள்ள இருந்தாப் போதும்” என்றேன்.

அதற்குள் ரயிலில் போகும் வழக்கமான கல்லூரிக் கும்பல் வந்து சேர்ந்தது.  திடீரென்று அடித்த மழையால் எல்லாருமே இன்று கொஞ்சம் லேட் தான். தென்னம்பிள்ளையூரிலிருந்து மகேஷும் பாலகிருஷ்ணனும் ஒரே குடையில் வந்து வணக்கம் சொன்னார்கள். வடக்குப்புறக் காலனியிலிருந்து பி.யு.சி. படிக்கும் பானுமதி குட்மார்னிங்க் சொன்னாள். “லதா லீவு சார். பச்சையப்பன் வாழப்பாடில வந்துருவான்” என்றாள். மின்னாம்பள்ளியில் இறங்கிவிடும் மூன்று ஐம்பது லிட்டர் பால் ‘கேன்’ களுடன் சிங்காரம் சைக்கிளை நிறுத்தி, புன்சிரித்தார். “இன்னிக்கு நான் வரலீங்க, எம் மச்சான் இவரு தான் வருவார். கொஞ்சம் பாத்துக்குங்க” என்றார். மச்சான், ராமு, தலையை லேசாய் வளைத்து வணக்கம் சொன்னார். “உங்கள கொத்தாம்பாடில பாத்துருக்கனெ” என்றார். “ஆமாங்க. எங்க அண்ணாரு வீடு” என்றேன்.

மழை நின்றுவிட்டிருந்தது. ரயில் நிலையத்திற்கு நன்கு பழக்கமான இரண்டு பாட்டிகளும் ஊருக்குப் புதியவரான பெரியவர் ஒருவரும் பிளாட்பாரத்திற்கு அருகில் வந்து நின்றனர். வேகவைத்த மரவள்ளிக் கிழங்குக் கூடையுடன் இருந்த பாட்டி வாழப்பாடியில் இறங்கிவிடுவார். இருபது நிமிடப் பயணம் தான். எலுமிச்சம்பழக் கூடை வைத்திருந்த பாட்டி அயோத்தியாப்பட்டணம் வரை வருபவர். ஒருமணிப் பயணம். இருவரும் சீசன் டிக்கட்காரர்கள். என்னைப் போலவே.

ரயில் நிலையத்தில் ஆறுமுகம் என்ற கடைநிலை ஊழியர் ஒருவர் உண்டு. என்னை விட சில ஆண்டுகள் பெரியவராக இருக்கலாம். ரயில் கல்பகனூர் எல்லையை நெருங்கும்போது ஓடிப்போய் மணி யடிப்பார். வண்டி கிளம்பும் போதும் அடிப்பார். ஆனால் அந்த ஓசைகள் அவருக்கே கேட்குமோ என்னவோ அவ்வளவு மென்மையாக அடிப்பார். மற்ற நேரங்களில் என்ன செய்வாரோ தெரியாது. பொதுவாக, தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார் எனலாம். இன்றோடு 4230 நாட்களாக சிந்துபாத் கதை வந்துகொண்டிருக்கிறது என்று தன் ஞாபக சக்தியால் மாணவர்களை ஆச்சரியப்படுத்துவார். சில சமயம் என்னிடம் விகடன், தீபம், கலைமகள் இரவல் வாங்குவதுண்டு. ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி இருவரில் யாருடைய எழுத்து உயர்ந்தது என்று விவாதிக்கத் தனக்குப் புலமை உண்டு என்றும், பிறவிப்பயனாகத்தான் ஒரு நாளைக்கு நான்கே முறை ரயில் வரும் கல்பகனூர் ஸ்டேஷனில் வந்து மாட்டிக் கொண்டதாகவும் சொல்லி என்னிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பதற்குள் ரயில் வந்துவிடும். “நாளைக்குத் தொடர்ந்து பேசலாங்க” என்று பச்சைக்கொடியை எடுத்துக்கொண்டு கடைசிப்பெட்டிக்கு அருகில் ஓடி நிற்பார். இன்றும் அப்படியே.

எஸ்.எம். சொன்னபடியே பத்து நிமிடத்தில் ரயில் வந்து விட்டது. என்னுடைய வழக்கமான பெட்டியில் ஏறிக்கொண்டேன். என்னைப் பார்ப்பதற்காகவும், கணக்குப் பாடத்தில் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் மற்ற பெட்டிகளிலிருந்து மாணவர்கள் சிலர் எனது பெட்டிக்கு மாறினார்கள்.

பி.எஸ்.சி முடித்தபின் ஓராண்டு காலம் ஆசிரியனாகப் பணியாற்றிய பின்னர், எம்.எஸ்.சி.க்கு விண்ணப்பித்திருந்தேன். சேலம் ஹஸ்தம்பட்டியிலிருந்த  அரசுக் கலைக்கல்லூரியில் இடம் கிடைத்தது. (சென்னை பிரஸிடென்ஸி கல்லூரிக்கு அடுத்தபடியாக  பட்டப்படிப்பு பிரிவுகள் அதிகம் கொண்ட ஒரே கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அது தான்). அங்கு எம்.எஸ்.சி. (கணிதம்) ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன.

ஆத்தூருக்கு அருகிலிருந்த கொத்தாம்பாடி என்ற ஊரில் எனது ஒன்றுவிட்ட அண்ணன் அப்போது கணக்குப்பிள்ளையாக இருந்தார். தாரமங்கலத்திலிருந்த நிலங்களை விற்றுவிட்டு என் தாத்தா (அம்மாவின் அப்பா) வும் அவருடன் இருந்தார். ஆகவே நான் கொத்தாம்படியில் தங்கி சீசன் டிக்கட் வாங்கிக்கொண்டு ரயிலில் தினமும் சேலம் சென்று வருவதென்று முடிவாயிற்று.  
கடலூரிலிருந்து பெங்களூர் செல்லும் பாசஞ்சர் ரயில் விருத்தாசலம் , சின்ன சேலம், ஆத்தூர் வழியாகக் கல்பகனூர் வரும்போது காலை ஏழேகால் மணி. அது எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று சேலம் டவுன் சேரும் போது காலை ஒன்பது மணியாகிவிடும். அங்கிருந்து குறுக்கு வழியாகப் போனால் ஒன்பதரைக்குள் கல்லூரியை அடைந்து விடலாம். அதே போல், இரவு  ஏழு மணிக்கு சேலம் டவுனிலிருந்து கிளம்பும் அதே வண்டியில் ஏறினால் எட்டே முக்காலுக்குள் கல்பகனூரை அடைந்து விடலாம். ரயிலுக்கு மாணவர்க்கான சீசன் டிக்கட் காலாண்டிற்கு முப்பது மூன்று ரூபாய் தான். (இப்போது அந்த ரயில் இல்லை).

ரயில் கல்பகனூர் எல்லையைத் தாண்டிய உடன் மகேஷ் எழுந்து அருகில் வந்தான். “சார், ட்ரிகனாமெட்ரில டவுட் சார். எனக்கு மொதல்ல சொல்லிக் கொடுங்க சார்” என்றான். தலையை நிமிர்த்தி வேறு யாருக்கும் அதே சந்தேகம் உண்டா என்று பார்த்தேன். பானுமதி வந்தாள். பி.யு.சி. கணக்கு தான் என்றாலும் சில பி.எஸ்.சி மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு ‘தீரம்’, இரண்டு உதாரணங்கள் முடிப்பதற்குள் ஏத்தாப்பூர் ரோடு (ஸ்டேஷன்) வந்துவிட்டது.

சில நிமிடங்களே ரயில் நிற்கும் என்றாலும், பெரும்பாலான மாணவர்கள் இறங்கி ஏறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு காப்பி, டீ, மசால் வடை, மாங்காய் சுண்டல், முறுக்கு போன்ற கல்விக்கு மிகவும் பயன் தரக்கூடிய விஷயங்கள் கிடைக்கும். காலை ரயிலில் வெறும் வயிற்றில் ரயிலேறிய கிராமத்து மாணவர்களுக்கு இதெல்லாம் அவசியம் தானே! ஆனால் அந்தப் பொருட்களை விற்கும் மாணிக்கம் என்ற சிறுவன் தான் அதை விட முக்கியமான காரணம்.

மாணிக்கத்திற்கு சுமார் பன்னிரண்டு வயது இருக்கலாம். தகப்பனார் இல்லை. ரயில் வருவதற்கு அரை மணி முன்பு தான் காப்பி, டீ க்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பான். புதிய பாலை முதல் முறையாகக் காய்ச்சி முதல் டிகாக்ஷனில் அவன் போடும் காப்பி, கும்பகோணம் டிகிரி காப்பியைத் தோற்கடித்துவிடும் என்பது ரயில்வே வட்டாரத்தில் பிரசித்தி. வீட்டிலிருந்து அவனுடைய தாயார் அன்றாடம் புதிதாகச் செய்து கொண்டுவரும் முறுக்கு, மசால் வடை, மற்றும் சுண்டல் ஐட்டங்களும் அப்படியே சாப்பிட்டவரை அசத்தும் சுத்தமும் நேர்த்தியும் உடையவை. ஒருமுறை சுவைத்தவர்கள் தினம் தினம் சுவைக்காமல் இருக்க முடியாது. விலையும் மற்ற ஊர்களை விட சற்றுக் குறைவு. ஆகவே மாணிக்கத்தின் வியாபாரம் நல்லமுறையில் நடந்துவந்தது. 

காப்பி, டீ என்று தான் ரயிலோரம் வந்து குரல் எழுப்புவான் மாணிக்கம். ஆனால் யாரும் வெறும் காப்பியோ, டீயோ மட்டும் சாப்பிட்டு நகர்ந்து விட முடியாது. மசால் வடை அவனது ஸ்பெஷாலிட்டி. அவனுடைய இங்கிதமான பேச்சும், தாமதிக்காமல் சப்ளை செய்யும் திறமையும், “நீங்க சாப்பிடுங்கண்ணா! வண்டி நாம்ப சொன்னாத்தான் பொறப்படும்” என்று சிரித்துக்கொண்டே அவன் தரும் உத்தரவாதமும் மாணவர்களிடையே அவனுக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது. தினமும் வரும் மாணவன் அன்று வரவில்லை யென்றால், எல்லாரிடமும் கேட்டுத் துளைத்து விடுவான். காசில்லாமல் வரும் சிலபேர் அவனிடம் கணக்குப்புத்தகத்தில் எழுதிவிட்டு கடன் பெறும் வசதியும் உண்டு.

ரயிலிலிருந்து இறங்காத மாணவர்கள், வெறுமனே கையசைத்தால் போதும், இறங்கிவந்தவர்கள் மூலம் வேண்டியதைக் கொடுத்தனுப்புவான். ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சொன்னாலும் விடமாட்டான். “உங்களுக்காகவே செய்தது சார்” என்று உசுப்பிவிடுவான். சுருக்கமாகச் சொன்னால், ரயில் பயண மாணவர்கள் வாழ்க்கையில் மாணிக்கமும் அவனது மசால் வடையும் இன்றியமையாத அம்சமாகிவிட்டார்கள் என்றால் மிகையாகாது.
(நாளை முடியும்)
இவ்வரிசையில் இதற்கு அடுத்த பதிவு:
மாணிக்கமும் மசால்வடையும் -2


© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

1 கருத்து:

  1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு