சனி, ஏப்ரல் 20, 2013

மீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்

 வியாழனன்று (18.4.2013) பகலில்  நியுஜெர்சியிலிருந்து நான்கு நாள் பயணமாக பால்டிமோர்/வாஷிங்டன்  வந்தோம். வசந்தகாலம் எங்களைத் தொடர்ந்து வந்தது. நியுஜெர்சியின் குளிரானது கொஞ்சம் கொஞ்சமாக விலகி, லேசான வெயிலுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. இடையில் டிலாவர்
என்ற ஊரில் சாலையோர இளைப்பாறும் விடுதியில் ஸ்டார்பக்ஸ் காப்பி சாப்பிட்டு வண்டிக்கு 'கேஸ்' நிரப்பிக்கொண்டு  பால்டிமோரை நெருங்கும்போது மழை தூற ஆரம்பித்துவிட்டது.

வழியில் பல இடங்களில் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. யாருடைய பயணத்தையும் பாதிக்காதபடி தேவையான எச்சரிக்கை பலகைகள் சரியான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று நான்கு இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருவதையும் கண்டோம். அவற்றின் வடிவமைப்பு கவனைத்தை ஈர்ப்பதாக இருந்தது.

பால்டிமோரிலிருந்து சில மைல்கள் தொலைவில் அருமையான இயற்கைச் சூழ்நிலையில் அமைந்திருந்த 'மேரியாட் ரெசிடென்சி இன்' என்ற விடுதியில் தங்கினோம். தரைத்தளத்தில் அறைகளுக்கு 101,102 என்று எண்கள் கொடுத்திருந்தார்கள்.  எனவே முதல் தளத்தில் இருந்த எங்கள் அறைக்கு '2'ல் ஆரம்பிக்கும் எண் வந்தது. ஹாலும் இரண்டு படுக்கையறைகளும், ஒரு சமையலறையும் கொண்ட 'சூட்'. சமையல் செய்வதற்குத் தேவையான
பெரிய மின் அடுப்பும், குளிர்பெட்டியும், போதுமான பாத்திரங்களும் இருந்தன.

சன்னல் கண்ணாடிகளின் இடையே தெரிந்த இயற்கைஎழில் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. சுற்றிலும் இளஞ்சிவப்பும் தும்பையின் வெண்மையும் கொண்ட பூக்களே இலைகளாய் நிறைந்திருக்கும் மரங்கள். அருகிலேயே, இன்னும் சிலநாளில் அதேபோல் பூத்துவிடுவோம் என்ற உறுதியோடு  பட்டமரங்கள் போல் தோற்றமளித்த ஏராளமான மரங்கள். புல்லோடு படர்ந்து பூத்திருந்த மஞ்சள் நிற டாஃப்படில்கள். சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு நிறங்களில் ஆர்க்கிட்கள்.

கொண்டுவந்திருந்த எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் பசியைத் தணிக்க தொலைக்காட்சியைத்  திறந்தால், திங்கட்கிழமை யன்று பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டத்தின் போது நிகழ்ந்த வெடி விபத்தைப் பற்றியே எல்லா
சேனல்களிலும் செய்திகள் நிரம்பியிருந்தன. சினிமா  எதாவது
பார்க்கலாமென்றால் அந்த சேனல்களுக்குத்  தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமாம். செய்தியை மட்டுமே பார்த்து விட்டு உறங்கப் போனோம்.

நேற்று வெள்ளிக்கிழமை. (19.4.2013). பாஸ்டன் வெடிவிபத்துக்கு இரண்டு இளைஞர்கள் தான் காரணம் என்று ஒருவழியாக வீடியோ ஆதாரங்கள் மூலம் போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர் என்றும், ஒருவன் வெள்ளைத் தொப்பியும் மற்றவன் கறுப்புத் தொப்பியும் அணிந்து கொண்டிருந்ததைப்  பாருங்கள்
என்று எல்லா தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டே இருந்தார்கள்.

அடுத்த நிகழ்ச்சியில், கறுப்புத் தொப்பி அணிந்தவன் அண்ணன் என்றும் அவன் போலீசாரோடு துப்பாக்கிச் சண்டை நிகழ்த்தியபோது மரணமடைந்தான் என்றும், வெள்ளைத்தொப்பி அணிந்த தம்பி இப்போது உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கிறான் என்றும் செய்தி வந்தது. அவன் பாஸ்டன் நகருக்குள் 'வாட்டர்டவுன்' என்ற பகுதியில் தான் ஓடிக் கொண்டிருக்கிறான் என்பதால், அந்த நகர் முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ஆயுதம் தங்கிய போலீஸ் சோதனை நிகழ்த்தினார்கள். எப்படியும் இன்று இரவுக்குள் அவன் பிடிபடலாம் என்றும், அவனிடம், மிகவும் ஆபத்தான வெடிமருந்துப் பொருட்களும் ஆயுதங்களும் இருக்கக் கூடுமாதலால் இவ்வளவு முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது என்றும் மாநில கவர்னரும், நகர  மேயரும், போலீஸ் அதிகாரிகளும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

(கார் கிளம்பிவிட்டது. மீதியை இரவோ அல்லது நாளையோ எழுதுவேன்).
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


1 கருத்து: