வெள்ளி, ஏப்ரல் 12, 2013

ஆலப்பாக்கம் அஞ்சலை - 1

வெயிலுக்கு முன் கிளம்பவேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும் முடிவதில்லை. பஸ் நிலையம் வருவதற்குள் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. நல்ல வேளை, கடலூர்-சென்னை ’பாயிண்ட் டு பாயிண்ட்’ பஸ் கிடைத்துவிட்டது. மூன்றரை மணி நேரத்தில் சைதாப்பேட்டை போய்விடும்.

‘ஜன்னலோரம் உட்காருகிறீர்களா?‘ என்று பலத்த மரியாதையோடு கேட்டார், 16 ஆம் எண் இருக்கைக்காரர். எனது எண் 15. சரி என்றேன். ஜன்னலோரம் அமர்ந்த பிறகு தான் உறைத்தது, ரைஸ் குக்கரிலிருந்து அடிக்கிற ஆவி மாதிரி அனல் காற்று என்மீது அடுத்த மூன்றரை மணி நேரம் அடிக்கப் போகிறதென்ற உண்மை. என் மனைவி அடிக்கடி சொல்வது சரியாகத்தான் இருக்குமென்று தோன்றியது. (‘உங்களுக்கு ‘அது’ கொஞ்சம் போதாது’). பெண்களுக்கு எப்போதுமே உள்ளுணர்வு அதிகம்.

ஜன்னலோரத்து இருக்கை என்றால் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு. மொத்த வெளி உலகமும் நம் கண்களுக்கு முன்னே விரிந்து கொண்டே போகும் அழகை எப்படி வருணிப்பது? கண நேரமே தோன்றி மறைந்தாலும் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை அப்படித்தான் நான் பார்த்தேன். திருச்செந்தூர் சாலையில் தோகை விரித்தாடிய மயிலும், தஞ்சாவூர் அருகில் திடீரென்று குறுக்கிட்டுப் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பும், பேர் தெரியாத ஏதோ ஊரில் பதினைந்தடி உயரத்தில் அய்யனார் சிலைக்குப் பக்கத்தில் ஜோடியாக நிற்கும் இரண்டு வெள்ளைக் குதிரைகளும், பயணிகள் தேனீர் குடிக்க பஸ் நிறுத்தும் சுகாதாரமில்லாத  இடத்தில் மலை ஒன்றின் மீது புதிதாய் முளைத்த கோயிலின் கோபுரமும்.... இப்படி எத்தனை எத்தனை! ஆகவே வெயிலுக்கு பயந்து இத்தகைய அற்புதங்களை இழந்துவிட நான் தயாரில்லை.

“வேர்க்கடலை இரண்டு ரூபா” என்ற சிறுமியிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினேன். ஐந்து கூம்பு வடிவப் பொட்டலங்களைக் கொடுத்தாள். திண்டிவனம் வரை தாங்கும்.

வழக்கமாக பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் என்றால் உடனே எடுத்து விடுவார்கள். முதல் காரணம், கூட்டம். மற்ற பஸ்கள் நாலரை மணியில் போவதை, இந்த பஸ் மூன்றரை மணியில் கடந்துவிடும் என்பதால் எப்போதுமே டிமாண்டு அதிகம். இரண்டாவது, பஸ் நிலையத்தின் ஓரமாக நிரந்தரச் சாக்கடையில் நாளெல்லாம் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளின் துர் நாற்றம். இப்போது வெயிலும் சேர்ந்துகொண்டது. பஸ் கிளம்பினால் தான் பயணிகளுக்கு விடுதலை.

டிரைவருக்கு நேர் பின்னால் இருக்கும் இரண்டு இருக்கைகளும் வி.ஐ.பி.க்களுக்காக காலியாக வைக்கப்படுவது வழக்கம். வி.ஐ.பி.க்கள் வரவில்லை யென்றால், டிரைவருக்கோ, கண்டக்டருக்கோ வேண்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். இன்று அந்த இருக்கையாளர்களில் ஒருவர் இன்னும் வராததால் தாமதம். அவர் அவர்களின் யூனியன் தலைவராம்.

ஒரு வழியாக அவர் வந்ததும், டிரைவர் பவ்வியமாக “வாங்க அண்ணே, என்று வரவேற்று, “அண்ணி சௌக்கியமா?” விசாரித்து, அவர் உட்கார்ந்த பின்னர் தனது இருக்கையில் அமர்ந்தார். கிளம்புவதற்கு அறிகுறியாக ஹாரனை ஒலித்தார். கண்டக்டர் விசில் அடிக்காமல் ‘ரைட்’ என்றார். வலப்புறம் சுழன்று பின் இடப்புறம் வேகமாகத் திரும்பி, சில ‘சாவுகிராக்கிகள்’  மீது மோதுவது போல் பயமுறுத்திய பின் கடலூர் புது நகர் நிலையத்திலிருந்து வெளிவந்தது பஸ். சிக்னலுக்காக நின்றது.

அந்த இடம் மூன்று சாலைகள் சந்திக்கும் இடம். ஒன்று, கடலூர் முதுநகருக்குச் செல்வது. இன்னொன்று கெடிலம் பாலத்தைக் கடப்பதற்கு. மூன்றாவது, ஒரு சிறிய தெரு மாதிரி இருக்கும். இரண்டு பக்கமும் காயலான் கடைகள். முடிவில் ஒரு பழங்காலத்து ஆஞ்சனேயர் கோயில். வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழியும். சக்தி வாய்ந்தவர் என்பாள் என் மனைவி. அப்போதெல்லாம் மாதம் ஒருமுறையாவது வருவோம். சென்னைக்குப் போனபின் இரண்டு வருடங்களாக நேரம் கூடவில்லை. அடுத்தமுறை எப்படியாவது தரிசித்தாக வேண்டும்.

சிக்னல் பச்சை விழுந்தது. டிரைவர் வண்டியை மெதுவாகப் பாலத்தை நோக்கி நகர்த்தினார். அதற்குள் ஒரு பெண்மணி வண்டியின் குறுக்காக வந்து விழுந்தே விட்டார். டிரைவரின் சாமர்த்தியத்தால் தான் அவள் பிழைத்தாள் என்று சொல்ல வேண்டும். சிக்னலில் இருந்த போலீஸ்காரர் ஓடிவந்தார். “என்னமே, வீட்டுல சொல்லிட்டு வந்தியா?” என்றார். அவள் ஒருவாறு எழுந்து “இல்லீங்கய்யா. அதோ அந்த மேனேஜர் சார பாக்கணுங்க. முக்கியமான விஷயங்க. அதனால தான்..” என்று ஜன்னல் பக்கமிருந்த என்னைக் கை காட்டினாள்.

எல்லார் கவனமும் என்மீது திரும்பியது. நானும் அப்போது தான் அவளைப் பார்த்தேன். ஒரு கிராமத்துப் பெண். சுமார் முப்பது வயது இருக்கலாம். கையில் ஒரு பழைய துணிப்பை. காலில் செருப்பு இல்லை. மிகுந்த ஏழ்மை அவள் முகத்திலும் ஆடையிலும் தெரிந்தது. கண்களில் இருட்டு. அனேகமாக இன்னும் சாப்பிட்டிருக்கமாட்டாள் என்று தோன்றியது. ஆனால் அவள் யார்? என்னை ஏன் கை காட்டினாள்?

நான் விடுவிடென்று கீழிறங்கினேன். “யாரம்மா நீ?” என்றேன். பாலத்தில் வரிசையாக வண்டிகள் கூடிவிட்டன. இந்த பஸ் நகர்ந்தாக வேண்டிய கட்டாயம். போலீஸ்காரர் “வண்டியை எடப்பா” என்றார். பஸ் என்னை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டது. நல்ல வேளை, இறங்கும்போதே பெட்டியுடன் இறங்கிவிட்டேன்.

அவள் வேகமாக என்னை நோக்கி வந்தாள். “அய்யா, நல்லா இருக்கிறீங்களா அய்யா?” என்று முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். ஆனால் அவள் யாரென்று எனக்கு ஞாபகம் வரவில்லை. “நல்லா இருக்கேம்மா. ஆனா நீங்க யாரு? “ என்றேன்.

“நான் தாங்க அஞ்சலை” என்று ஒரு நிமிடம் நிறுத்தினாள், எனக்கு நேரம் தருவதைப் போல. ஊஹூம், ஞாபகம் வரவில்லை. விழித்தேன்.

இரவு எப்படியும் சென்னை சேர்ந்தாக வேண்டும் நான். அடுத்த பஸ் பிடிக்கவேண்டும். நல்லவேளை இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்கவில்லை. அஞ்சலை என்பவள் வந்து தொந்தரவு செய்கிறாளே! 

“அய்யாவுக்கு மறந்து போயிட்டதா? நான் பூவாணிக்குப்பம்க. உங்க பேங்குக்குப் பக்கமாத் தாங்க என் குடிசை. அய்யா கூட வந்து பாத்தீங்களே எங்க வூட்ட, அந்த அஞ்சலை தாங்க நான்” என்றாள்.

அடடே, அவளா? இப்போது நினைவுக்கு வந்து விட்டது. கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஆலப்பாக்கம் என்ற ஊரில் எனது வங்கியின் கிளையை ஆரம்பித்தபோது நான் முதல் மேலாளராக இருந்தேன். ஒரே வருடம் தான். வங்கி அதிகாரிகள் இரண்டாண்டுகள் ஏதாவதொரு கிராமத்தில் கட்டாயமாகப் பணியாற்றவேண்டும் என்பது நடைமுறையின்படி அங்கு வந்தேன். ஏற்கெனவே கடலூரில் சிடி யுனியன் வங்கியில் நான் இருந்தவன் என்பதால் அருகிலுள்ள ஆலப்பாக்கத்திற்கு என்னைப் போகச் சொன்னார்கள். அந்தச் சிறிய கிராமத்தில் வங்கி துவக்கும் அளவுக்கு சரியான கட்டிடங்கள் இல்லாததால் அருகிலுள்ள பூவாணிக்குப்பம் என்ற ஊரில் ஒரு உரக்கிடங்கைச் சரிப்படுத்தி தரச் சொல்லி அவசரம் அவசரமாக வங்கியைத் தொடங்கினோம். வங்கிக் கட்டிடம் ஒன்றைத் தவிர அந்த ஊரில் மற்றவை யெல்லாமே குடிசைகள் தாம். அதில் ஒரு குடிசை தான் இந்த அஞ்சலையினுடையது. அப்போது பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும்  ஒரு வித்தியாசம் இருந்தது: முன்னை விடவும் இப்போது ஏழ்மை அதிகம் என்பது தான்.

பஸ்சை நிறுத்தி என்னை ஓடிவந்து பார்க்கிற அளவுக்கு அப்படி என்ன அவசரம் அவளுக்கு என்று தெரிந்து கொண்டாக வேண்டும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள். (அடுத்த பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்சை விட்டுவிடக்கூடாது).

அவள் நிச்சயம் பசியோடிருக்கிறாள் என்று தோன்றியதால், எதிரிலிருந்த அஜந்தா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். “வேணாங்கய்யா” என்று மறுத்தாள். “பரவாயில்லை” என்று சொல்லி காலியாக இருந்த கடைசி நாற்காலியில் உட்காரச் சொன்னேன். நடுப்பகல் நேரம் ஆதலால் மிகுந்த கூட்டம். அவளுக்கு ஒரு சாப்பாடும் எனக்கு ஒரு லஸ்சியும் சொன்னேன். (கடலூரில் லஸ்சி என்றால் பெரும்பாலும் மோரில் தான் செய்வார்கள்!)

 வயிற்றில் கொஞ்சம் சாப்பாடு இறங்கியதும் அவளுக்கு முகத்தில் சற்றே வெளிச்சம் வந்தது. “ரொம்ப மன்னிக்கணுங்க அய்யா! உங்கள பஸ்சிலிருந்து எறங்க வச்சுட்டேன். எனக்கு வேற வழி தெரியலீங்க” என்றாள். அழுதுவிடுவாள் போலிருந்தது. அவள் மேற்கொண்டு ஏதாவது சொல்லப்போக, தெரிந்தவர்கள் யாராவது வேறு மாதிரி எண்ணிக்கொண்டால் என்ன செய்வது என்று பயம் வந்து விட்டது. “சரி, பஸ் ஸ்டேண்டிற்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம் வா” என்று நடந்தேன்.    

வட்ட வடிவமான பஸ் நிலையத்தில் நிறைய கடைகள் இருந்தன. ‘மோகன் கார்மென்ட்ஸ்” என்று ஒரு கடை. பேருக்கு சில ரெடிமேடு ஆடைகள். மற்றபடி முறுக்கு, வாழைப்பழம், சீப்பு, கண்ணாடி, கர்சீப்புகள், தேங்காயெண்ணெய் முதல் ஷாம்ப்பூ வரையான ஒரு ரூபாய் பிளாஸ்டிக் தொங்கல்கள், சிறிய லக்ஸ், லைப்பாய், மெடிமிக்ஸ் சோப்புகள், இன்னபிற விற்கும் கடை.  அன்று மூடியிருந்தது. அங்கு நின்று கொண்டோம். “அழக் கூடாது. நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப்போகிறாய் என்று நினைக்கிறேன். சீக்கிரமாகச் சொல்லிவிட வேண்டும். இன்னும் அரை மணியில் எனக்கு பஸ். புரிகிறதா?” என்றேன். தலையசைத்தாள். சொல்ல ஆரம்பித்தாள்.
***
அஞ்சலையின் ஊர் நெய்வேலி அருகில் ஒரு கிராமம். மூன்றாவது வரை பள்ளிக்குப் போனதாக ஞாபகம். அதன் பின் அம்மாவுக்கு உதவியாக வீட்டிலேயே இருந்து விட்டாள். அப்பா, நெய்வேலியில் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணை லாரிகளில் ஏற்றும் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். சொந்தத்திலேயே கல்யாணம். கணவன் பூவாணிக்குப்பத்தில் மாரியம்மன் கோவில் நிலத்தில் பயிரிட்டுவந்தான். அரை ஏக்கர் நிலம் தான். வீராணம் ஏரிப் பாய்ச்சல். தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் விளைவு பரவாயில்லை. விளைச்சல் இல்லாத நாட்களில் அவனும் நெய்வேலியில் மாமனாருடன் லாரி வேலைக்குப் போய்விடுவான்.  

அஞ்சலையின் கட்டுப்பாட்டினால் குடிப்பழக்கம் அவனை அண்டாமல் இருந்தது. கடனில்லாமலும் பெற்றோரிடம் எதிர்பார்க்காமலும் வாழ்க்கையை கௌரவமாக நகர்த்திக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தை பிறந்தது. ராம் என்று பெயர் வைத்தாள். (எம்.ஜி.ஆர். ரசிகை). 

குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது தான் ஆலப்பாக்கத்தில் எங்கள் வங்கி செயல்படத் தொடங்கியது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கான   மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அவள் கணவனுக்குப் பயிர்க்கடன் ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது.  நெல் அறுவடை ஆனதும் (அதாவது ஆறு மாத முடிவில்) வட்டியோடு அசலைத் திருப்பித் தர வேண்டும்.

அந்த வருடம் நல்ல மழை பெய்தது. பூச்சித் தொல்லையும் குறைவு. எனவே விளைச்சல் எதிர்பார்த்தபடி இருந்தது. அஞ்சலைக்கு வெளி மனிதர்களிடம் பழைய கடன்கள் ஏதும் இல்லை யென்பதால், அறுவடை ஆனவுடன் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் ஒழுங்காகத் திரும்பி வந்து விட்டது. அதே சமயம், பெரிய விவசாயிகள் வாங்கிய கடன் கணக்குகளோவெனில் கிணற்றில் போட்ட கல் மாதிரி அசையாமல் இருந்தது. எத்தனை தடவை நடந்தாலும், “இன்னும் நெல்லுக்குச் சரியான விலை வரவில்லை, அதனால் நெல்மூட்டைகள் அப்படியே இருக்கின்றன. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்ற ஒரே பதில் தான் கிடைத்தது. அன்றாடம் காய்ச்சிகளான ஏழை விவசாயிகள் பயந்துகொண்டு கடனைத் திருப்பி செலுத்த முன்வந்தால், அவர்களை இவர்கள் மிரட்டி வைப்பதாகவும் தகவல் கிடைத்தது. பெரிய விவசாயிகளின் அனுமதி யின்றி வங்கியின் பக்கம் வருவதற்கே ஏழை விவசாயிகளுக்கு இயலாத காரியமாகி விட்டது.

அறுவடையின் முடிவில் பயிர்க்கடனை யார் திருப்பிச் செலுத்தினார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அடுத்த பருவத்திற்கான பயிர்க்கடன் தரப்படும் என்பதால், இரண்டாவது பருவத்தின் போது குறைந்த எண்ணிக்கையுள்ள பயிர்க்க்கடன்களே வழங்க முடிந்தது. அதில் அஞ்சலையின் கணவனுக்கும் ஒன்று. மீண்டும் அதே இரண்டாயிரம் ரூபாய். “ நான் மத்தவங்க மாதிரி இல்லீங்க. இப்ப கட்டின மாதிரியே அடுத்த தடவையும் மொதல்ல வந்து திருப்பிக் கொடுக்கறவ நானாத்தான் இருப்பேன், நீங்க வேணாப் பாருங்க” என்றாள் அஞ்சலை உறுதியான புன்னகையுடன்.

ஆனால் அடுத்த முறை அவள் திருப்பிச் செலுத்துவதைப் பார்ப்பதற்கு நான் அங்கு இல்லை. எனக்கு ஒரே வருடத்தில் அங்கிருந்து சென்னைக்கு மாற்றலாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்து விட்டன தெரியுமா, ஆலப்பாக்கத்தில் ?
****
கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் கடலூரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டரில் நெடுஞ்சாலை மீதே அமைந்த ஊர் தான் ஆலப்பாக்கம். வன்னியர்களும் ரெட்டியார்களும் பணம்படைத்த மீனவர்களும் தான் நில உடைமையாளர்கள். தலித்துகள், அந்நிலங்களில் கூலிக்கு விவசாயம் செய்பவர்கள். எனவே வர்க்கம் சார்ந்த கருத்துவேறுபாடுகள் நிலவிக்கொண்டிருந்தது சொல்லாமலே புரியும்.


ஒவ்வோர் அறுவடைக்கு முன்பும் கூலி உயர்வு கேட்டுப் போராட்டங்கள் நடக்கும். பலவீனமான நில உடைமையாளர்கள் பணிந்துபோவார்கள். அதிக நிலமும் அரசியல் செல்வாக்கும் ஆள்பலமும் உடையவர்களோ எளியவர்களைப் பணியவைத்து பழைய கூலிக்கே முடித்துக் கொள்வார்கள். அதே சமயம் தொழிலாளர்களும் தங்கள் ‘வேலையை’க் காட்டாமல் இருக்க மாட்டார்கள். அதாவது, ஒப்புக்கொண்ட கூலிக்கு நெற்கதிரை மட்டும் ஒரு சாண் அளவுக்கு அறுத்துக் கொடுப்பார்கள். கீழுள்ள தண்டுப் பகுதியை (அதாவது பின்னால் வைக்கோல் ஆகுமே அதை) அறுக்க மாட்டார்கள். அப்படியே விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள். வெளியூர் ஆட்களைக் கொண்டு வந்து அறுக்கவும் வழியில்லை; ஏனெனில் அருகிலுள்ள எல்லா ஊர்களிலும் தொழிலாளர்கள் மன நிலைமை இதே போல் தான். அந்த வைக்கோல் தானே கால்நடைகளுக்கு உணவு? நில உடைமையாளர்கள் வேறு வழியின்றி கூலி உயர்வை ஒப்புக்கொண்டு வைக்கோலை அறுத்து  வீட்டுக்குக் கொண்டுபோவார்கள்.

இந்தக் காரணங்களால் தலித்துகளுக்கும் பெருவாரியான இனமான வன்னியர்களுக்கும் பனிப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது, பல ஆண் டுகளாகவே. அத்துடன், வன்னியர்கள் சார்பாக அம்மாவட்டத்தில் புதியதொரு அரசியல் கட்சி ஆழமாக வேரூன்றி, தேர்தல் வெற்றிக்காக அலைந்து கொண்டிருந்தது. தலித்துகளை அடக்கினாலன்றி அந்தத் தொகுதியில் தமது வேட்பாளர் வெற்றி பெற இயலாது என்பதால், தலித்துகளுக்கு சரியான பாடம் கற்பிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த நேரமும் வந்தது, ஒரு அமாவாசை இரவன்று.

அமாவாசை நல்ல நாள் என்பதால், புதிதாக அறுவடை ஆன நெல்லைப் புழுக்கி அரிசியாக்கி வைத்திருந்தாள் அஞ்சலை. பல நாட்களுக்குப் பிறகு அன்று தான் அரிசிச் சோறு சாப்பிட எண்ணி உலை வைத்தாள். தோட்டத்தில் விளைந்த கருனீலக் கத்தரிக்காய்களை அரிந்து வைத்தாள். கையெட்டும் உயரத்திலிருந்த முருங்கைச் செடியிலிருந்து பிஞ்சுக்கீரையைப் பறித்துக் கழுவிக் கொண்டாள். அதற்குள் குழந்தை அழவே, அவனைத் தன் கணவனிடம் கொடுத்து, “கொஞ்ச நேரம் வச்சிக்கிட்டிருங்க. சாப்பாட்ட முடிச்சிட்டு வந்துடறேன்” என்றாள். கணவன் தூரத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கைக் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவதற்காக கிழக்குத் தெருவிற்குள் போனான். குழந்தை அழுகையை நிறுத்துவதாகக் காணோம். எனவே அவன் மேலும் சற்று தொலைவு குழந்தையுடன் நடந்து போனான். அப்படியும் குழந்தையின் அழுகுரல் மெல்லியதாகக் கேட்டுக் கொண்டு தான் இருந்தது அவள் காதுகளில்.


அமாவாசை இருட்டு. மின்விளக்கு இல்லாத குடிசை. அடுப்பின் வெளிச்சத்திலும் அஞ்சலையின் முகம் பிரகாசமாக இருந்தது. இந்த வருடம் அவளுக்கு ஆனந்தமான வருடம். வங்கியிலிருந்து கிடைத்த கடன் அவளுக்குக் கடவுளே வந்து வரம் கொடுத்த மாதிரி இருந்தது. அதிலும், ஒரு தடவை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு, பெருமிதத்துடன் இரண்டாவது முறையாகக் கடன் வாங்கியபோது அவள் தன் வாழ்க்கையின் லட்சியத்தையே அடைந்துவிட்டதாக உணர்ந்தாள். தன்னுடைய நிலத்தில் தன் கையால் விளைந்த நெல்லை அவள் இப்போது உண்ணப் போகிறாள். இரவானதும் சாராயக் கடைக்குச் செல்லும் மற்ற ஆண்கள் மாதிரி இல்லாமல் அவளுடைய கணவன் அவள் சொல்லுக்கு இணங்கி நல்ல ஒழுக்கமுள்ளவனாய் நடந்து கொள்கிறான். ஒரே குழந்தை. அதுவும் ஆண் குழந்தை. வேறென்ன வேண்டும் ஒரு ஏழைப் பெண்மணிக்கு? நாளை விடிந்ததும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றுவதாய் மனதிற்குள் நேர்ந்து கொண்டாள் அஞ்சலை.

உலை வெந்து விட்டதா என்று பார்த்தாள். இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போலிருந்தது. அப்போது தான் ‘தொப்’ பென்று ஏதோ ஒரு பொருள் குடிசைக்குள் வந்து விழுவதை உணர்ந்தாள். இன்னதென்று புரிவதற்குள், பளீரென்று ஒரு வெளிச்சம். பலத்த ஓசையுடன் வெடித்தது, பெட்ரோல் குண்டு! ஒரே நிமிடம் தான், தன்னைச் சுற்றிலும் தீக்கங்குகள் சூழ்ந்து கொள்வதைக் கண்டாள். “அய்யோ” என்றபடி வெளியே ஓடினாள்.

அவள் மட்டுமா? ஆலப்பாக்கத்திலிருந்த எல்லா குடிசைகளிலிருந்தும் எல்லாரும் ஓடினார்கள். கிழக்கிலிருந்த கடலோரத்தை நோக்கி தலித்துகள் கூட்டமாக இருட்டில் திக்குத் தெரியாமல் ஓடினார்கள். அவர்களைத் துரத்திக் கொண்டு முகமூடி யணிந்த ஒரு பெருங்கூட்டம் பின்னாலேயே ஓடியது, கைகளில் ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகளோடு. “அய்யோ, அம்மா, அப்பா” என்ற தீனக்குரல்கள் எங்கு நோக்கினாலும்.

ஆலப்பாக்கத்திலிருந்த அத்தனை தலித் குடிசைகளும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டன. தடுத்தவர்கள் வெட்டப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தை என்ற பாரபட்சமின்றி அனைவரும் தாக்கப்பட்டனர். ஆடு மாடுகள், விளைபொருட்கள், சைக்கிள்கள், மாட்டுவண்டிகள், தேனீர்க் கடைகள் என்று எல்லா வாழ்வாதாரங்களும் தீயில் பொசுங்கிப் போயின. சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக நின்று போனது. தீயணைப்புத் துறையும், காவல்துறையும் வந்தபோது, அவ்வூரில் மிஞ்சி இருந்தது வங்கிக் கட்டிடம் ஒன்று மட்டுமே.
(நாளை முடியும்)
இவ்வரிசையில் இதற்கு அடுத்த பதிவு:
ஆலப்பாக்கம் அஞ்சலை-2


***
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

2 கருத்துகள்:

  1. அவர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டு விழும் வரை... அவர்களின் பல கனவுகள் சிதையும் வரை... பஸ் பிடிக்கும் படபடப்பு இருந்தது...

    கதையாகவே இருக்கட்டும்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. உண்மை நிகழ்வை அடிப்படியாக வைத்து எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்று

    பதிலளிநீக்கு