புதன், ஏப்ரல் 24, 2013

மீண்டும் அமெரிக்கா-4


பால்டிமோரில் நிற்கும் பழைய கப்பல் 

இரவு பதினோரு மணிக்கு விடுதிக்குத் திரும்பி, தொலைக்காட்சிப் பெட்டியை திருகிய உடன், பாஸ்டன் (Boston)  மாரத்தானின் போது வெடிகுண்டு வைத்ததாகத் தேடப்பட்டு வந்த 19 வயது இளைஞன் ஸோக்கர் ஸர்ணயேவ் (Dzhokhar Tsarnaev) பிடிபட்டுவிட்ட செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. அவனை ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடிய படகினுள்ளிருந்து பிடித்தார்களாம். கழுத்திலும் காலிலும் குண்டுபட்டிருந்ததால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டார்களாம். 24 மணி நேரமாக ஊரடங்கு சட்டத்தின் கீழிருந்த பாஸ்டன் நகரம், குற்றவாளி பிடிபட்டுவிட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பொதுமக்கள் தெருவில் திரண்டு வந்து கொண்டாடியதைக் காட்டினார்கள்.

(அமெரிக்காவில் கடலோர நகரங்களில், தனிவீட்டில் குடியிருப்பவர்கள் சிலர், சக்கரம் வைத்த படகுகளை வீட்டில் சொந்தமாக வாங்கிக் கட்டி வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. விடுமுறை நாளான சனி/ஞாயிறு அதிகாலை, காரின் பின்பகுதியில் இந்தப் படகை இணைத்துக்கொண்டு கடற்கரைக்குப் போய்ப் படகு சவாரி செய்வது இவர்களுக்குப் பிடித்தமான உடற்பயிற்சி).

வழக்கமாக, இம்மாதிரி விஷயங்களில், குற்றவாளியின் மதம் என்னவோ அதைக் குற்றவாளியாக்கியும், அவன் வெளிநாட்டவனாயிருந்தால் அந்த நாட்டையே குற்றவாளியாக்கியும் எழுதுவது அமெரிக்கப் பத்திரிகைகளின்  வழக்கம். ஆனால் இம்முறை, இந்தக் குற்றவாளி ஒரு முஸ்லீமாக இருந்தும், அவன் செச்சென்யா என்ற நாட்டிலிருந்து வந்தவனாயிருந்தும், பத்திரிகைகள் இஞ்சி தின்ற குரங்கு போல அடக்கி வாசித்தன. காரணம், அவன், ஒரு அமெரிக்கக் குடிமகன். ரஷ்யா துண்டு துண்டாக உடைந்தபோது, சுதந்திரத்திற்காகப் போராடிய நாடு செச்சென்யா.(Chechnya) அன்னாட்டிலிருந்து அகதியாக வந்து பின்னர் குடியுரிமை பெற்றவன், ஸாக்கர் ஸர்ணயேவ். இதே நாட்டின் சுகங்களை அனுபவித்துவிட்டு உண்ட வீட்டுக்கே இவன் இரண்டகம் செய்தது ஏன் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒபாமா கூறினார்.

ஆனால் அமெரிக்க ஊடகங்களின் ஒரு நல்ல விஷயம், அவை, சில நேரங்களில் தனி மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பது தான் – அவன் குற்றவாளியாக இருந்தாலும் கூட. இந்த நாட்டில், போலீஸ் யாரைக் கைது செய்தாலும், கைது செய்யப்படுபவனிடம் உடனடியாக ‘மிராண்டா விதிக’ளைக் கூற வேண்டும் என்பது சட்டம். மிராண்டா (Miranda) விதிகள் என்பன மூன்று:

1.       (உன்னை கைது செய்யும் இந்த நேரத்தில், போலீசாகிய  நாங்கள் எது கேட்டாலும் பதில் பேசாமல்) மௌனமாக இருக்க உனக்கு உரிமை உண்டு.( You have the right to remain silent).

2.       (அப்படி மௌனமாக இராமல் நீ ஏதாவது பேசினால்) நீ பேசுவது, நீயே கொடுக்கும் வாக்குமூலமாகக் கருதப்பட்டு, உனக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். (Anything you say can and will be used against you in a court of law).

3.       உனக்காக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யும்படி கேட்க உனக்கு உரிமை உண்டு.( You have a right to an attorney. If you cannot afford an attorney, one will be appointed for you).

1966ல் ‘மிராண்டா வெர்ஸஸ் அரிஸோனா’ என்ற வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திய விதிமுறை இது. (www.mirandarights.org)  ஒருவரைக் கைது செய்த நிமிடமே இவ்விதிகளை அவருக்கு எடுத்துக்கூறி அவரது தனி மனித உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும் என்பது இதன் நோக்கம். 

பாஸ்டன் வெடிகுண்டு வழக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த இளைஞனிடம் மேற்படி மிராண்டா விதிகளைக் கூறிய பிறகு தான் அவனைக் கைது செய்யவேண்டும் என்று ஒருசாராரும், மூன்று பேர் உயிரிழக்கவும், சுமர் 170 பேர் படுகாயம் அடையவும் மேலும் ஏராளமான பொருட்சேதம் ஏற்படவும் காரணமான இவனுக்கு எந்த உரிமையும் வழங்காமல் ராணுவ முறைப்படி தான் அதிரடியாக விசாரணை செய்யவேண்டும் என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், வெள்ளை மாளிகை, முதல் தரப்பினரின் கருத்தையே ஆதரித்தது. ஆகவே, ஒரு நீதிபதியின் முன்னிலையில், ஸர்ணயேவிடம், மிராண்டா விதிகளின்படி அவனது உரிமைகளை எடுத்துக் கூறி, அவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்த பின்னரே அவனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அவன் கைது செய்யப்பட்டான். (இன்னும் முழுமையாக குணமடைய பல நாட்கள் ஆகலாம். அதுவரை மருத்துவ மனையிலேயே இருப்பான்).

(அதே நேரத்தில் குவாண்ட்டனாமா போன்ற கொடுஞ்சிறைகளில் எந்த உரிமையும் விசாரணையுமின்றி வருடக்கணக்கில் வாடுகின்ற கைதிகளும் உண்டு. என்றாலும் பெரும்பான்மையான மக்களைப் பொருத்தவரையில், தனிமனித உரிமைகள் மதிக்கப்படுவது, அமெரிக்க நீதித்துறையின் நல்லம்சமாகும்).  

ஆக, பாஸ்டன் வெடிகுண்டு வழக்கின் இப்போதைய நிலை இது தான்: ஸர்ணயேவ் சகோதரர்கள், இணையத்தில் ஓமன் நாட்டு வலைத்தளம் ஒன்றிலிருந்த தகவல்களைக் கொண்டு தாங்களாகவே வெடிகுண்டு தயாரிக்கும் திறமையைப் பெற்றிருக்கக் கூடும் என்றும், போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த மூத்த சகோதரன் தாமர்லன் (Tamerlan Sarnaev) தான் இந்த சதியின் மூளை என்றும், இப்போது உயிருடன் பிடிபட்ட இளைய சகோதரன் அவனது கருவியே என்றும், வேற்று நாட்டு தூண்டுதல்கள் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
******
தொலையட்டும். நமது விஷயத்துக்கு வருவோம்.

(அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களைப் போலவே) பால்ட்டிமோரிலும் சிறுவர்க்கான மியூசியம் ஒன்று உள்ளது. அங்கு என் பேரனுடன் மூன்று மணி நேரம் கழித்தோம். அவனுடன் ஓடிப்பிடிக்க எங்களுக்குத் தான் போதுமான வல்லமை இல்லாதது தெரிந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது பெர்ல் ஹார்பரில் போர்முனையில் ஈடுபட்டு, சிதையாமல் மீண்ட ஒரு போர்க்கப்பலும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் பால்ட்டிமோரில் காட்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தோம்.
 
அருகிலேயே சிறப்பானதொரு ‘அக்வேரியம்’ உள்ளது. பல்வகை மீன் இனங்கள், ஆமைகள், உடும்புகள், ஜெல்லி மீன்கள் என்று கண்கவரும் வகையில் அதே சமயம் அறிவூட்டுவதாகவும் அமைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பெரிதும் கவரக்கூடிய ‘டால்பின்’ காட்சியும் உண்டு. நல்ல பயிற்சிபெற்ற ஆறு டால்பின்கள் சுமார் முக்கால் மணி நேரம் எங்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தின.

****
வாஷிங்டனில், பாராளுமன்றக் கட்டிடமான ‘கேப்பிடல் ஹில்’லின் எதிரில் மிக பிரம்மாண்டமான கட்டிடமாக அமைந்திருப்பது, தாமஸ் ஜெஃப்பர்ஸன் பில்டிங். அதில் தான் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ என்ற மிகப் பெரிய நூலகம் உள்ளது. (உண்மையில், அருகிலுள்ள மேலும் இரண்டு கட்டிடங்களிலும் இந்நூலகம்  பரவியுள்ளது).

தரைத்தளத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு அமர்ந்து படிக்கவும் குறிப்பெடுக்கவும் வசதியான இருக்கைகள். ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூலம் நூலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் மட்டுமே இங்கு வரலாம். மற்றவர்களுக்கு அனுமதியில்லை.
மற்ற தளங்களில் கலை, அறிவியல் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. மிகப் புராதனமான கையெழுத்துப் பிரதிகளும், ஆதி அச்சுப் பிரதிகளும் உரிய பாதுகாப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினத்தந்தியில் பாதியளவிலான ஆட்டுத்தோலில் சுமார் நூறு பக்கங்களில் ஜெர்மனியில் மெயின்ஸ் (Mainz) நகரில், கூட்டன்பர்க் அச்சிட்ட ஆதி பைபிளின் பிரதியைப் பார்த்தேன். அதற்கும் முந்தியதான, கையால் எழுதப்பட்ட இன்னொரு பைபிளையும் பார்த்தேன். அதை ‘ஜயண்ட் பைபிள் ஆஃப் மெயின்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், தேசப்படங்களும், அகழ்வாராய்ச்சியில் அவ்வப்போது கிடைத்த கலைப் பொருட்களும் காணக் கிடைக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மட்டுமே என்று சிறிய அளவில் 1800ல் 740 புத்தகங்களுடன் துவங்கிய ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம், 1814ல் பிரிட்டிஷ் படையினரால் கொளுத்தி அழிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்து அப்போது ஓய்வு பெற்றிருந்த தாமஸ் ஜெஃபர்ஸன், தம்மிடமிருந்த 6487 புத்தகங்களை வழங்கி இந்த நூலகம் மீண்டும் உயிர்த்தெழக் காரணமானார்.   அவரது பெயரில் நிற்கும் இன்றைய கட்டிடம் 1897ல் கட்டப்பட்டது.  படிப்படியாக வளர்ந்து இன்று 15 கோடிக்கும் அதிகமான நூல்களைக் கொண்ட மாபெரும் நிறுவனமாக விளங்குகிறது.  
அமெரிக்காவில் வெளியாகும் எந்த நூலாக இருந்தாலும் அதன் இரண்டு பிரதிகள் இந்த நூலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது சட்டம். அது மட்டுமின்றி, புத்தகங்கள், திரைப்படங்கள், ஆடியோ-விடியோக்கள், மற்ற கலைபடைப்புகள் இவற்றிற்கெல்லாம்  ‘காப்பிரைட்’ எனப்படும் காப்புரிமை வழங்கும் அதிகாரம் கொண்ட ‘காப்பிரைட் ஆஃபீஸ்’ இந்தக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது. (www.loc.gov).
****    
இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகம் கட்டாயம் வாங்கவேண்டும் என்று என் மனைவியின் கட்டளை. ‘சாவி’ எழுதியது. வாங்கினேன். கையோடு அமெரிக்கா கொண்டு வந்தேன்.

அறுபதுகளில் ஆனந்தவிகடனில் தொடராக வந்த நகைச்சுவைக் கதை. கோபுலுவின் அற்புதமான கோட்டோவியங்கள் கண்ணிலிருந்தே நீங்காது.  எத்தனையோ முறை படித்திருக்கிறேன். இன்னும் படித்தாலும் சாவியின் கற்பனை அலுப்பூட்டாது. அவர் எங்கள் வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பது மேலும் மகிழ்ச்சியூட்டும் அம்சம். (மாம்பாக்கம்). ஆயிரம் முறைக்குமேல் மேடையேறி, இன்றும் உலகமெங்கும் ரசிக்கப்படும் கதை.
அமெரிக்காவின் (அப்போதைய) பெரிய பணக்காரர்களில் ஒருவர், ‘ராக்ஃபெல்லர் (Rockefeller). (ராக்-ஃபெல்லர் என்பது தவறு, ‘ராக்-க-ஃபெல்லர்’ என்பது தான் சரியான உச்சரிப்பு என்கிறார்கள் இவ்வூரில்). அவருடைய திருமதிக்குத் திடீரென்று ஓர் ஆசை. ஒரு (தென்) இந்திய முறைப்படியான திருமணத்தை அமெரிக்காவில் (தனது) வாஷிங்டன் நகரத்தில் நடத்திப் பார்த்தால் என்ன என்று. எவ்வளவு கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என்கிறார். அதை எப்படி நடத்திக் காட்டுகிறார்கள் என்பது தான் கதை.

முதலாவதாக, ஒரு பெண்ணும் மாப்பிள்ளையும் வேண்டுமே! சென்னையிலிருக்கும் ருக்கு தான் பெண். டில்லியில் செக்ரடேரியட்டில் வேலை பார்க்கும் ராஜா என்ற ராஜகோபாலன் தான் மணமகன். இருவர் வீட்டிலும் அமெரிக்கா சென்று திருமணம் நடத்திகொள்ள சம்மதிக்கிறார்கள்.

இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஆசாமிகள், சமையல்காரர்கள், ஆயிரத்தெட்டு சாஸ்திரிகள், நூறு பெட்ரோமாக்ஸ் விளக்குகள், நறிக்குறவர்கள், அவர்களைப் பார்த்து குரைப்பதற்கு நூறு நாய்கள்...என்று எல்லா விஷயங்களும் சென்னையிலிருந்து வாஷிங்டன் பறக்கின்றன.

திருமணத்திற்காக அப்பளம் ஒரு லட்சம், கைமுறுக்கு ஐம்பதாயிரம், பருப்புத் தேங்காய் பத்தாயிரம் என்று முடிவாகிறது. அப்பளம் இடுவதற்காக ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியை ஒழித்துக் கொடுக்கிறார்கள். அப்பளம் இடுவதற்காக நூறு பாட்டிகள் சென்னையிலிருந்து மிக முன்னதாகவே வாஷிங்டன் வருகிறார்கள்.
அப்பளம் இடுவதையும், ஜாங்கிரி சுற்றுவதையும் முன்னோட்டமாகக் காண்பித்த பின், முழு திருமணத்தையுமே தொலைக்காட்சியில் லைவ் ரிலே காட்ட ஏற்பாடு செய்கிறார்கள். (ஹூம், இது நடப்பது 1960களில் என்பதை மறக்கவேண்டாம்).  

ஆர். ஸ்ட்ரீட், ஜார்ஜ் டவுன், டம்பர்ட்டன் ஓக்ஸ், சம்மர் ஹௌஸ், கான்ஸ்டிடியூஷன் அவன்யூ, டைடல் பேஸின் என்று வாஷிங்டனின் முக்கிய இடங்களில் திருமணத்தின் வெவ்வேறு நிகழ்ச்சிகளை சாவி கொண்டுபோகிறார். (இந்தக் கதையை எழுதியபோது சாவி அவர்கள் வாஷிங்டனை நேரில் சென்று பார்த்ததில்லை. தகவல்களின் அடிப்படையிலேயே கற்பனையை ஓடவிட்டிருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து தான் வாஷிங்டன் வர நேர்ந்ததாம். அப்போது இந்த இடங்களைப் பார்த்து மகிழ்ந்தாராம்).
மாலை மாற்றுதல், அருந்ததி பார்த்தல், ஜானவாசம், சாந்திமுகூர்த்தம், பாலிகை விடுதல், சம்பந்தி சண்டை என்று நமது திருமணங்களின் தவிர்க்கமுடியாத அம்சங்களை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினால் அவர்கள் எப்படி இந்தப் புதுமையை ரசிப்பார்கள் என்ற கற்பனையை நகைச்சுவை இழையோட நூல் முழுதும் தருகிறார், சாவி.  

(நான் வாங்கியது, சென்னை, கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட 2012 பதிப்பு. 144 பக்கம். 70 ரூபாய்.)
****சென்ற முறை வாஷிங்டன் பயணத்தின் போது ஜெஃபர்சன் மெமோரியல் பார்க்க விட்டுப் போனது. எனவே இப்போது போனோம். அதன் அருகில் தான் போட்டோமாக் நதி (Potomac) ஓடுகிறது.அங்கு தான் ருக்கு-ராஜா திருமணத்தின்போது பாலிகை கரைத்தார்கள் என்று சாவி எழுதியிருக்கிறார். அந்த நினைவாகவும், அமரர் சாவிக்கு அஞ்சலி செலுத்துவது போலவும், ‘வாஷிங்டன் திருமணம்’ நூலை கையிலேந்திக் கொண்டு போட்டோமாக் நதிக்கரையில்  படம் பிடித்துக் கொண்டேன்.

ஆனந்த விகடனில் அவர் எழுதி வெளியான போதே நான் படித்திருந்த மற்ற தொடர்களான ‘வழிப்போக்கன்’, ‘விசிறி வாழை’, ‘கோமகனின் காதல்’ மூன்றும் ஞாபகம் வந்தன. ‘கேரக்டர்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் மனித குணாதிசயங்களைப் படம்பிடித்துக் காட்டியதும் நினைவுக்கு வந்தது. ‘வேதவித்து’, ஆப்பிள் பசி’ என்ற தொடர்களும் நிழலாடுகின்றன. காமராஜர் பற்றி ‘சிவகாமியின் செல்வன்’ எழுதினார். நான் பிறப்பதற்கு முன்பு அவர் எழுதிய ‘நவகாளி யாத்திரை’யும் நினைவில் இருக்கிறது.

 விகடனிலிருந்து வெளியேறி, ‘குங்குமம்’ வார இதழைத் தொடங்கியதும், அதன் பிறகு, தானே சொந்தமாக ‘சாவி’ என்ற வார இதழை நடத்தியதும் தெரிந்த விஷயமே. ‘சாவியை ஆறு லட்சம் பிரதிகள் விற்கும் இதழாக வளர்க்கவேண்டும் என்பதே என் லட்சியம்’ என்று அவர் எழுதியது இன்றும் என் கண்ணில் தெரிகிறது. (அப்போது இந்தியாவில் ‘மலையாள மனோரமா’ வார இதழ் தான் அதிக பட்சமாக ஆறு லட்சம் விற்றது. அதை மிஞ்சவேண்டும் என்ற லட்சியம்). ஆனால் ஒரு லட்சம் தாண்டும் முன்பே ‘சாவி’ நின்று போனது. நிறைவேறாத கனவுடனேயே அமரரானார், சாவி என்கிற சா.விஸ்வனாதன். ‘கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்தவர். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கியும் கைதூக்கியும் விட்ட மாமனிதர். தமிழ்ப் பத்திரிகை உலகில் நிச்சயம் ஒரு முக்கிய இடம் சாவிக்கு உண்டு.
****
பால்ட்டிமோரில் சில நண்பர்களைச் சந்தித்துவிட்டு, மீண்டும் நியுஜெர்சியை நோக்கிப் பயணமானோம்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

 

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


4 கருத்துகள்:

 1. I like the subject..... nice... I like your another blog... keep posting....

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே! நிறைய ஆங்கில நூல்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்; அத்துடன் வலைப்பூ எழுதும் வேலையும் செய்வதால் சில நாட்கள் விட்டுப்போய் விடுகிறது. இனி இடைவெளியில்லாமல் எழுத உறுதி பூண்டிருக்கிறேன். உங்களின் தொடர்ந்த ஆதரவைக் கோருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இன்றுதான் தங்கள் தளத்துக்கு வருகிறேன். இந்த இடுகை மட்டுமே வாசித்துள்ளேன். நேரமிருக்கும்போது பழைய இடுகைகளையும் வாசிப்பேன். இந்தப் பதிவில் அமெரிக்கா பற்றிய பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டேன். வாஷிங்டனில் திருமணம் பற்றிய சுவையான செய்திகளுக்கு மிக்க நன்றி. ஒரு நாட்டைப் பார்க்காமலேயே அதைப் பற்றிய விவரணைகளை அழகாகச் சொல்லி கதையை எழுதிய சாவி அவர்களை எப்படிதான் பாராட்டுவது?

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள செய்திகள் அய்யா தொடர்கிறேன். சாவி யின் நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு