திங்கள், ஏப்ரல் 15, 2013

மாணிக்கமும் மசால்வடையும் - 2


இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
மாணிக்கமும் மசால்வடையும் -1

‘எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்’ என்று ஆங்கிலப் பழமொழி இருக்கிறதல்லவா? அது மாணிக்கம் விஷயத்தில் உண்மையாயிற்று.


ஏத்தாப்பூரில் அவனுக்குத் தொழில் போட்டியாளனாயிருந்த ஒருவன், மாணிக்கம் அனுமதியின்றி கடை நடத்துவதாகவும், அவனிடமிருந்து அதிகாரிகள் தொடர் லஞ்சம் பெற்று வருவதாகவும் இதனால் ரயில்வேக்குப் பெருத்த இழப்பு நேருவதாகவும்  மொட்டை கடிதம் எழுதியதில், மாணிக்கத்தை உடனடியாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறிய நிலையமென்று இதுநாள் வரை ஏலத்தில் விடாமலிருந்த சிற்றுண்டிக்கடை உரிமை இனிமேல் ஏலத்தில் விடப்படுமென்று அறிவிப்பு வந்தது. ஆனால் அதைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தொடரவில்லை. விளைவு, ஏத்தாப்பூரில் வண்டி நின்றால் டீ, காபிக்குக் கூட வழியில்லாமல் போயிற்று.



இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள் தாம். அதிகாலையில் எழுந்து ரயிலுக்கு ஓடிவருபவர்கள், மாணிக்கத்தின் சூடான டீயையும் மசால்வடையையும் பெரிதும் நம்பியிருந்தார்கள். அது மட்டுமின்றி, நேர்மையாக உழைத்து ஒரு சில காசுகள் சம்பாதித்துக் கொண்டிருந்த அந்த ஏழை பையனைத் திடீரென்று தூக்கி எறிந்து விட்டதாலும்  ரயில்வே நிர்வாகத்தின் மேல் மாணவர்களின் கோபம்  பீறிட்டது. ஒவ்வொரு முறையும் ஏத்தாப்பூர் நிலையத்தில் வண்டி நிற்கும்போது, மாணவர்கள் இறங்கி கோஷமிட்டார்கள். ரயிலைத் தாமதப்படுத்தினார்கள். தினத்தந்தியில் செய்தி வரும்படி செய்தார்கள். ஆனால் ரயில்வே நிறுவனத்தின் விதிகளை வளைக்க முடியவில்லை. கடை ஏலம் போடுவது குறித்து முடிவு எடுக்காமலே தாமதப்படுத்தினார்கள்.

பாஸ்கர் என்றொரு மாணவன் ஆத்தூரிலிருந்து தினம் வருபவன். அவனுடைய தூரத்து உறவினர், ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு யோசனை சொன்னார், மாணிக்கத்தை சீசன் டிக்கட் எடுத்து தினமும் சேலம் வரை பயணம் செய்து, ரயிலிலேயே விற்பனை செய்யட்டுமே என்று. 

அது மாணிக்கத்திற்குத் தெரியாமலில்லை. ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன. ஏற்கெனவே சிலர் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறி இறங்கி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக இருக்க மாணிக்கம் விரும்பவில்லை. “அவர்களும் என்னைப் போல ஏழைகள் தானே, அவர்கள் வயிற்றில் அடிப்பதா” என்றான். மேலும் ரயிலில் வரும் டிக்கட் பரிசோதகர்களுக்கு தினம் மாமூல் தரவேண்டும். அப்படித் தந்தாலும் புதிய பரிசோதகர்களோ அல்லது ‘ஸ்குவாட்’ எனப்படும் திடீர் சோதனையாளர்களோ வந்தால் வழியில் இறக்கி விட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட அவமானங்கள் வேண்டுமா என்று யோசித்தான் மாணிக்கம்.

கடைசியில் அவனுக்கு ஏற்ற மாதிரியும், ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்குப் பாதிப்பு இல்லாமலும் ஒரு வழி கண்டுபிடித்தான் பாஸ்கர். அது இது தான்: தினமும் மாணிக்கம், ஏத்தாப்பூர் ஸ்டேஷனுக்கு பதில், அதற்கு முதலாவதாக உள்ள பெத்தனாயக்கன் பாளயம் ஸ்டேஷனில் காலை முதல் வண்டியில் ஏறிக்கொள்ள வேண்டியது. தனது காபி, டீ, மசால் வடை மற்ற தயாரிப்புகளை, அடுத்து வரும் வாழப்பாடி ஸ்டேஷன் வரை மட்டுமே விற்க வேண்டியது. வாழப்பாடி வந்தவுடன் இறங்கிவிட வேண்டும். (ஏனென்றால் அங்கிருந்து ஏற்கெனவே ஒரு பையன் இதே தொழிலைச் செய்து கொண்டிருந்தான்).

இதில் மாணிக்கத்திற்கு உடன்பாடு ஏற்பட்டது. ஒன்று, யாருக்கும் மாமூல் கொடுக்க வேண்டியதில்லை. மற்ற வியாபாரிகளுக்கும் அவனால் நஷ்டமில்லை. அவனுடைய வியாபரம் பெரும்பாலும் இந்த இரண்டு ஸ்டேஷன்களுக்கிடையில் வரும் மாணவர்கள் மூலமே ஆதலால், பழைய வியாபாரம் எந்த வகையிலும் குறையப் போவதில்லை. “அதை விட முக்கியம், வாழப்பாடியில் இறங்கி டவுன்பஸ் பிடித்து ஏத்தாப்பூரில் இறங்கி, உடனே பள்ளிக்கூடம் போவதற்கும் நேரம் இருக்கும்” என்று மகிச்சி யடைந்தான் மாணிக்கம். (அப்போது தான் அவன் வேலை செய்து கொண்டே பள்ளிப் படிப்பைத் தொடர்வதும் எங்களுக்குத் தெரிய வந்தது. அதனால் மாணவர்கள் மத்தியில் அவனுடைய மதிப்பும் அவனுக்கு உதவ வேண்டுமென்ற வேகமும் இன்னும் அதிகரித்தது).

அடுத்த நாளே அந்த திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தான் மாணிக்கம். இந்த யோசனையைச் சொல்லி ஓர் ஏழை மாணவனுக்கு மறுவாழ்வு அளித்ததற்காக பாஸ்கருக்கு எல்லாரும் பாராட்டு தெரிவித்தார்கள். ரயில் மாணவர்கள் மொத்தம் இருநூறு பேர் இருக்கலாம் என்பதால், சூட்டோடு சூடாக இச்செல்வாக்கைப் பயன்படுத்தி அடுத்த மாதம் நடக்க உள்ள மாணவர் தலைவர் தேர்தலில் பாஸ்கர் நின்றால் எளிதாக வெல்ல முடியும் என்றும் ஆலோசனை சொன்னார்கள்.
*******
சின்னசேலத்திலிருந்து சேலத்திற்கு வாரம் இருமுறை வருபவர், நல்லமுத்து. வயது சுமார் ஐம்பது இருக்கும். சிவனடியார். நீறணியாத நெற்றியோடு அவரைப் பார்க்கவே முடியாது. ஊதுவத்தி நிறுவனம் ஒன்றின் முகவராக இருந்தார். சேலத்திலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் அலைந்து ஆர்டர் பிடிப்பது அவர் வேலை. இளைஞர்களிடம் அவருக்கு மிகுந்த பரிவுண்டு. நாங்களும் வயது காரணமாக அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தோம். நல்ல கருத்துக்களை அடிக்கடி வற்புறுத்திப் பேசுவார்.  அவர் சொல்லும்போது அறிவுரை மாதிரியே தெரியாது. கேட்பவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

அப்படித்தான் ஒருநாள், நாம் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், பெற்றோரை, அதிலும் குறிப்பாக, பெற்ற தாயை மதித்து வாழ வேண்டும் என்றார். தாயார் இறந்து விட்டால் அவரது புகைப்படத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் மாலை போட்டு வணங்கவேண்டும் என்றும் சொன்னார்.

தேனீர்க் ‘கெட்டிலும்’ மசால்வடைத் தூக்குமாக எங்கள் பெட்டியில் நுழைந்த மாணிக்கம், தனது வினியோகம் முடிந்து அடுத்த பெட்டிக்குப் போகும் தறுவாயில் அவருடைய பேச்சைக் கேட்டவன், அசையாமல் கதவருகே நின்றுவிட்டான். அவனை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  “ஏனப்பா அழுகிறாய்” என்று விரைந்து அவனை அணைத்துக் கொண்டார், நல்லமுத்து. “ஒண்ணும் இல்லீங்கய்யா” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு இறங்கினான் மாணிக்கம்.
*****   
அன்று ஏப்ரல் 14. வழக்கம் போலத் தமிழ்ப் புத்தாண்டு. அரசு விடுமுறை யாதலாலும், மார்ச் மாத இறுதிக்குள் பலருடைய தேர்வுகள் முடிந்து விட்டிருந்ததாலும் ரயிலில் அதிக மாணவர்கள் இல்லை. எம்.எஸ்.சி வகுப்பிற்கு இன்னும் பாடங்கள் பாக்கி யிருந்ததால் நான் கல்லூரிக்குப் போகவேண்டி இருந்தது. எனது பேராசிரியர் திரு ட்டி. கோவிந்தராஜன் அவர்கள் சிறப்பு வகுப்பு எடுக்கச் சம்மதித்திருந்தார். ரயில் குறித்த நேரத்தில் வந்து விட்டது. பெத்தனாயக்கன்பாளையத்தில் மாணிக்கம்  ஏறுவானென்று எதிர்பார்த்தால் வந்தது வேறொரு பையன். காபி, தேனீர் மட்டும் கொண்டு வந்தான்.

இன்று வரமுடியாவிட்டால் முதல் நாளே சொல்லிவிடுவானே, மாணிக்கம். நேற்று சொல்லவில்லையே!

“நீ யாரப்பா, ஏன் மாணிக்கம் வரவில்லை?” என்றேன்.

“நான் அவனுடைய நண்பன் பழனி சார். அம்மாவுக்கு உடம்பு முடியலயாம். அதனால இன்னிக்கி மட்டும் என்னை அனுப்பி இருக்கான். நான் மாட்டேன்னு சொன்னேன். ஆனா வழக்கமா வர்ற காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்க்காகவாவது நீ போய்த்தான் ஆகணும்னு சொன்னான். காபி, டீ அவனே போட்டது. அம்மாவால முடியாததால் மசால் வடை முறுக்கு இன்னிக்கி இல்லீங்க சார்” என்றான் அவன்.

“அப்படியா “ என்றேன் வருத்தத்துடன். “அம்மாவுக்கு என்ன உடம்பாம்?”

“தெரியாது சார்” என்றான் பழனி.

எனக்கு என்னவோ போலிருந்தது. என் வீட்டிலேயே ஒருவருக்கு உடல் நலமில்லாதது போல் மனது கனத்தது. சின்னப் பையன், பொறுப்போடு வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பது மட்டுமின்றி, படிப்பையும் விடாமல் இருக்கிறான். ஒரு நாள் அம்மா படுத்துவிட்டாலும் அவனுக்கு உதவி செய்பவர்கள் யார் ?

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் தெய்வமும் மனிதர்கள் மூலமாகத் தானே செயல்பட வேண்டும்?

நாளை ரயில் மாணவர்கள் வரும்போது இதைபற்றிப் பேச வேண்டுமென்று முடிவு செய்தேன்.
****
பகல் ஒரு மணிக்கே வகுப்பு முடிந்துவிட்டது. ரயிலுக்கு இரவு ஏழுமணி வரை காத்திருக்க வேண்டும். பஸ்சில் போவதே மேல் என்று ராஜகணபதி கோவில் வரை நடந்தேன். வேண்டாம் வேண்டாமென்று சொல்லியும் இரண்டு முழம் ஐந்து ரூபாய் என்று மல்லிகைப் பூவைக் கையில் திணித்துவிட்டுப் போய்விட்டாள், கோவில் வாசல் பூக்காரி. பஸ் வந்தது. திடீரென்று ஒரு யோசனை. போகும் வழியில் மாணிக்கத்தைப் பார்த்துவிட்டுப் போனால் என்ன? வீட்டில் அவசர வேலை எதுவும் இல்லையே! “ஏத்தாப்பூர் ஒரு டிக்கட்” என்றேன்.
*****
மாணிக்கத்தின் வீட்டைக் கண்டுபிடிப்பது கடினமாயில்லை. ‘மசால் வடை’ என்ற அடைமொழி எல்லாருக்கும் அவனைப் பரிச்சயப்படுத்தி யிருந்தது. மிகப் பழையதான ஓட்டு வீடு. சுண்ணாம்புப் பூச்சை  இழந்த வெளிச் சுவர்கள். சிறிதுமில்லாமல் பெரிதுமில்லாமல் ஒரு திண்ணை. கதவு மூடியிருந்தது. மெதுவாகத் தட்டினேன். (‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’). பதில் இல்லை. மீண்டும் தட்டினேன். பதில் இல்லை. ஒரு வேளை, தாயாரைத் தனியாக விட்டுவிட்டு மருந்தோ ஏதோ வாங்கப் போயிருப்பானோ மாணிக்கம்? திண்ணையில் அமர்ந்தேன். பிற்பகல் வெயில் தகித்தது.

அந்த வழியாகப் போன ஒரு பெண்மணி என்னிடம், “மாணிக்கத்தைப் பார்க்க வந்தீர்களா?” என்றார். நான் எழுந்தேன். “அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாமே” என்றேன்.
“அவனுடைய அம்மாவுக்கா? “ என்று சந்தேகத்தோடு பார்த்தார். “ரயிலில் மசால் வடை விற்கும் மாணிக்கத்தைத் தானே சொல்கிறீர்கள்? அவனுக்கு அம்மா கிடையாதே!”

அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. “அம்மா கிடையாதா?” மாணிக்கமா பொய் சொல்லுவான்?

“ஆமாங்க. ரெண்டு வருஷம் முன்ன இதே தமிழ் வருஷ பிறப்பு நாள்ள தான் அந்தம்மா இறந்து போனாங்க. இவன் தான் பாவம், ராத்திரி நாலு மணிக்கே எழுந்து மாவரைப்பான். வடையும் முறுக்கும் பண்ணுவான். சின்ன பையன் பண்ணினதாச்சேன்னு வாங்காமப் போய்டுவாங்களோன்னு பயத்தால அம்மா பண்ணிக் கொடுத்ததுன்னு சொல்லிவப்பான். ரொம்ப கருத்தான பையன். வீட்டுல அவங்க பாட்டி இருக்காங்க. அவங்களுக்கு தான் அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போகும்” என்று சொன்னவர், சற்று பலமாகக் கதவை உள் நோக்கி அழுத்தியதில் கதவு திறந்து கொண்டது. “பாட்டி, மாணிக்கத்தப் பாக்க யாரோ வந்திருக்காங்க”

‘கிறீச்’ சென்ற ஓசையுடன் கட்டிலில் இருந்து எழுந்தார் பாட்டி. நரையும் திரையுமாக இருந்தார். நிச்சயம் எழுபது இருக்கும். “வாங்க, உள்ள வந்து  ஒக்காருங்க. கொஞ்ச நேரத்தில வந்துடுவான். குடிக்கத் தண்ணீர் தரட்டுமா?” என்று கேட்டார். கண் சரியாகத் தெரியாது போலும். இல்லையென்றால் என்னை ‘வாங்க’ என்று மரியாதையாகக் கூப்பிடுவாரா?

“வேண்டாம் பாட்டி. நான் திண்ணைலயே இருக்கேன். ஒண்ணும் அவசரம்  இல்லை. நீங்க படுத்துக்கோங்க” என்றேன்.

“ஒரு காரியமாப் போயிருக்கான். இன்னிக்கி முடிக்காம வரமாட்டேன்னு சொன்னான். மூணு மணிக்குள்ள வந்துடறேன்னான். இப்ப என்ன மணி?”

“மூணு ஆகப் போகுது பாட்டி”.

“அப்ப வந்துடுவான். நீங்க யாரு ? அவனுக்கு சினேகிதரா?”

“ஆமாம்,” என்றேன். பின்னே, மசால் வடை வாடிக்கையாளன் என்றா சொல்வது?

“உங்ககிட்ட சொல்றதுக்கென்ன?  அவனுக்கு அம்மான்னா உசிரு. ரெண்டு வருஷம் ஆச்சி அவ போயி. எம் பொண்ணு தான். திடீர்னு இருதயம் நின்னு போச்சின்னு சொல்லிட்டாங்க. நான் பாவி, கல்லாட்டம்  இருக்கேன்...” என்று விசும்பினார்.

பிறகு, “யாரோ சினேகிதர் சொன்னாராம், அம்மா போட்டோவை வச்சி வெள்ளிக்கிழம வெள்ளிக்கிழம மால போட்டு நமஸ்காரம் பண்ணினா நல்லது நடக்கும்னு.  அவளுக்கு ஏது போட்டோ? நாலஞ்சு வருஷம் முன்னாடி ஒரு கல்யாணத்துக்கு சமையல் வேலைக்குப் போனா. எல்லாம் முடிஞ்சி வெத்தல பாக்கு கொடுக்கறப்ப போனாப் போறதுன்னு இவளையும் மத்த வேலக்காரங்களையும் மொத்தமா ஒரு போட்டோ புடிச்சாங்கன்னு அவ எப்பவொ சொன்ன ஞாபகம். அந்த வீட்டுக்குப் போய்க் கேட்டிருக்கான். இவனை மதிச்சி யாரு பதில் சொல்லுவாங்க? அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டில தான் இருக்கு, எங்க கிட்ட இல்லேன்னிருக்காங்க. இவன் விடாம, அவங்க வீட்டு அட்ரஸ் கேட்டு வாங்கிட்டு, தொணைக்கு ஒரு போட்டோ எடுக்கற ஃப்ரண்டையும் கூட்டிக்கிட்டு போயிருக்கான். அம்மா படத்தொட தான் வருவானாம், பாருங்களேன். பிடிவாதத்துல அவன் அப்பனக் கொண்டிருக்கான்”. என்று நிறுத்தினார் பாட்டி.

மாணிக்கம் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். கையில் இருந்த பூவை அங்கிருந்த நாற்காலியின்மேல் வைத்தேன். வீட்டுக்கு அம்மா படம் வந்தவுடன் இது முதல் மாலையாக இருக்கட்டுமே !

நல்லமுத்து சாருக்கு மனதிற்குள் நன்றி சொன்னேன். பூக்காரிக்கும் தான்.
******
© Y.Chellappa

    
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


1 கருத்து:

  1. உங்கள் அருமையான அனுபவங்களை ஆழமான கதையாக்கி தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு