சனி, ஏப்ரல் 06, 2013

மூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை - 1

நவராத்திரி வந்து விட்டால் போதும், சத்யாவைப் பிடிக்கவே முடியாது. வக்கீல் தெருவில் ( ராணிப்பேட்டை ) எல்லா வீடுகளுக்கும் அவள் வந்தாக வேண்டும். இல்லையென்றால் அவளுடைய வீட்டுக்குப் போயாவது அவளைக் கையோடு அழைத்துக்கொண்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அமைதியான சுபாவம். நிலம் அதிராமல் நடப்பாள். முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு. தோற்றத்தில் மகாலட்சுமி போலிருப்பாள். பாட ஆரம்பித்தாலோ, கலைவாணியே நேரில் வந்து பாடுவதுபோல் இருக்கும். ஒன்பது நாளும் அவள் எல்லார் வீட்டிலும் பாடியாக வேண்டும். ஏழெட்டு பாடல்களை அவள் நன்றாகப் பாடக்கூடியவள் என்றாலும் நேயர் விருப்பம் என்னவோ ஒரே ஒரு பாடல் தான்: “வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்” என்ற பாரதியார் பாட்டு தான்.



எங்கள் வீட்டிலிருந்து தெரு முனைக்கு வந்தால் ஒரு தண்ணீர்க் குழாய் இருக்கும். அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் முதலியார் வீடு. அடுத்தது பாயம்மா என்ற தையல்காரம்மாவின் வீடு. மூன்றாவது குப்புசாமி செட்டியார் வீடு. அதையொட்டிய சந்தில் இரண்டே வீடுகள் எதிரெதிராக இருக்கும். ஒன்று பால்கார கிருஷ்ணன் வீடு. எதிரில் தர்மனாதன் சார் வீடு. அவருடைய மூத்த பெண் தான் சத்யா. அவளுக்கு அடுத்து ஒரு பையன்.

தர்மனாதன் சார் ஏதோ ஒரு பஞ்சாயத்து போர்டு அலுவலகத்திலோ அல்லது தாலுக்கா ஆபீசிலோ வேலையிலிருந்தார். அடிக்கடி வெளியூர்ப் பயணமோ அல்லது இரவில் மிகவும் தாமதமாகத்தான் வருவாரோ, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் வீட்டிலிருக்கும் நாட்களில் தெருவிலிருக்கும் எல்லா வீடுகளுக்கும் கேட்கும்படியாக அவருக்கும் எதிர் வீட்டு பால்காரருக்கும் விவாதம் நடக்கும். அனேகமாக அது இரவு ஏழு மணியளவில் தான் இருக்கும். பால் பாக்கியை அவர் கேட்க, “நீ கொடுக்கும் தண்ணீர்ப் பாலுக்கு நாலு மாதம் கழித்து தான் பணம் தருவேன்”என்று இவர் சொல்ல, அடுத்தடுத்து விதண்டாவாதங்கள் தொடரும். தெருவில் வேறு யாரும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். பால்காரருடைய கோபமும், பாலில் அவர் கலக்கும் தண்ணீரின் அளவும் அவ்வளவு பிரசித்தம். தர்மனாதன் ஒருவராவது தட்டிக்கேட்கிறாரே என்று அவர்களுக்கு மனதிற்குள் சந்தோஷம். அரை மணி நேரம் இருவரும் கத்தி ஓய்ந்தபின், சத்யா பயந்த முகத்தோடு மெல்ல மெல்ல நடந்து வந்து, “அப்பா, நான் படிக்கணும்ப்பா. சத்தம் போடாமல் இருங்கப்பா..” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லுவாள்.பால்காரரின் மனைவி அதற்காகவே காத்திருந்தவள் போல உள்ளிருந்தபடியே, “கொழந்த படிக்க வாணாம்? உள்ளார வா” என்பாள். “அந்தக் கொழந்த மொகத்துக்காகத் தான் பாக்கறேன்,இல்லேன்னா ரெண்டுல ஒண்ணு பாத்திருப்பேன்” என்று கடைசி வீர வார்த்தையோடு பால்காரர் கதவைப்பெருத்த ஓசையோடு சாத்துவார்.   

இது தினசரி நடவடிக்கை என்பதால் சத்யா கவலைப் படுவதில்லை,. அவளுக்குத் தெரியும், பொழுது விடிந்தால், பால்காரர் தனது நீண்ட பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, “சத்யாம்மா“ என்று உரத்த குரலில் அழைப்பார். சத்யா ஓடிப்போய் அதற்காகவே வைத்திருக்கும் பால்சொம்பை நீட்டுவாள். பாலை ஊற்றியபடியே “நல்லா படிம்மா, கண்ணு” என்று வாழ்த்திவிட்டுப் போவார். “எழுந்த ஒடனே ஒம்மொகத்துல முழிச்சா தான் மனசுக்கு நல்லாயிருக்கும்மா” என்று சொல்லியபடியே  தன் சைக்கிளில் அடுத்த தெருவுக்குப் பறப்பார்.

எங்கள் தெருவில் அனேகமாக எல்லாரும் வக்கீல்கள். (எனவே தான் தெருவுக்கே வக்கீல் தெரு என்று பெயர்). வசதியானவர்கள். நிறைய வீடுகளில் சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருந்தார்கள். ஒரே ஒருவர் கார் வைத்திருந்தார். அவரும் கோர்ட்டுக்குப் போகும்போது குதிரைவண்டியில் தான் போவார். (தன்னுடைய காரில் இன்னொருவருக்கு சவாரி கொடுப்பதேன் என்று தான்).  நவராத்திரி ஒன்பது நாட்களும் விமரிசையாக இருக்கும். தெருவில் மாக்கோலம், கதவெல்லாம் வண்ணவண்ணக் காகிதப் பூக்களின் தோரணம். மல்லிகையும் மருக்கொழுந்தும் மணமணக்கும். எல்லாரும் கொலு வைத்திருப்பார்கள். ஆறு முதல் பத்து படிகள் வைத்து ஏராளமான பொம்மைகள் அலங்காரமாக நிறுத்தியிருப்பார்கள்.

பள்ளி விடுமுறை என்பதாலும், எங்கள் தெருவில் சுமார் பதினைந்துக்குக் குறையாத பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்ததாலும் எல்லார் வீடுகளிலும் எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். பத்து நிமிடமாவது உட்காரச் சொல்லி, போகும்போது கையை நீட்டச்சொல்லி கடலை, பட்டாணி, மாங்காய் போட்ட சுண்டலோ, வெல்லம் போட்ட கடலைப்பொடியோ, அல்லது கற்கண்டு-தேங்காய்-முந்திரி கலந்து சிறிய பொட்டலமாகக் கட்டியோ தருவார்கள். பெண் குழந்தைகளுக்கு மேற்கொண்டு ஒரு குங்குமச்சிமிழும், கண்ணாடி-சீப்பும், சற்று உயரமான பெண்களுக்கு ரவிக்கை துண்டும் கிடைக்கும். வாயாடியான பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும். “மாமி, எதிர் வீட்டில் கொலு ரொம்ப மட்டமா இருக்கு. பத்து வருஷம் முன்னால வாங்கின பொம்மைங்க தான்! ஒங்க வீடு மாதிரி புத்தம் புதுசா ஒண்ணுகூட இல்லே” என்று சொல்லும் பெண்ணுக்கு விசேஷமான கவனிப்பு உண்டு. வெற்றிலை, பாக்கு, பழம் அத்துடன் ஒரு ரூபாய் நாணயமும் கிடைக்கும். எல்லார் வீட்டிலும் அவள் இதே மாதிரி தான் விமர்சனம் செய்வாள் என்பது, கூட வரும் பெண்களுக்குத் தெரியும். ஆனால் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் வருமானத்தில் நிச்சயம் பங்கு கிடைக்குமே!    

ஆனால் சத்யாவுக்கு மாத்திரம் எப்போதுமே ஸ்பெஷல் தான். நன்றாகப் பாடுவாள் என்பதால் அவளுக்கு வெற்றிலை பாக்குடன் இரண்டு ரூபாய் நாணயங்கள் நிச்சயம் உண்டு. (ஆனால் யாருக்கும் பங்கு தரமாட்டாள்). சில வீடுகளில் அவளுக்கு பட்டுப் பாவாடை-சட்டை கூட கொடுப்பார்கள். கண்ணாடி ஃபிரேம் போட்ட ஸ்வாமி படங்களும் கிடைக்கும். ஒருமுறை ஒரு கிருஷ்ணர் படத்தை எனக்குக் கொடுத்து விட்டாள். “ஏற்கெனவே வீட்டில் ஐந்து கிருஷ்ணர் படம் இருக்குடா” என்றாள்.

எங்கள் மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவில் பையன்கள் வரிசையில் முதலாவதாக நானும், பெண்கள் வரிசையில் முதலாவதாக அவளும் உட்காருவோம். அது மட்டுமின்றி, எல்லா பரிட்சையிலும் அவளும் நானும் எப்போதுமே முதல் ரேங்க்கு தான். தமிழில் 95ம், கணக்கில் 97ம் அவள் எடுத்தால், நான் கணக்கில் 95ம், தமிழில் 97ம் எடுத்திருப்பேன். ஆக, இருவருமே முதல் ரேங்க்கு தான். படிப்பில் இப்படி போட்டி போட்டாலும் எங்களுக்குள் விரோதம் கிடையாது. மனஸ்தாபம் கிடையாது. அதனால் தானோ என்னவோ, நான் இல்லாமல் சத்யா எந்த வீட்டுக்கும் கொலு பார்க்கப் போனது கிடையாது.

சத்யாவைப் பாட்டுப் பாடச் சொல்லுவார்கள். என்னை, திருக்குறள், நாலடியார் ஒப்பிக்கச் சொல்வார்கள். ஆனால் எனக்கு நாலணா காசு தான் தருவார்கள். நவராத்திரியில் மட்டும் ஆண்கள் என்றால் இளக்காரம் என்று புரிந்தது. ஆனாலும் அந்த நாலணா எனக்கு இனித்தது. சிறுவர் மாதமிருமுறையான ‘கண்ணன்’ வாங்குவதற்கு அது போதுமே!    

ஐந்தாவது படிக்கும்வரை சத்யா என்னுடைய பள்ளியில் தான் படித்தாள். ‘கண்ணன்’ இதழில் என்னுடைய விடுகதை ஒன்று வெளியாகி இருந்தது. அதுவும் தீபாவளி சமயம். எங்கள் பள்ளியில் திடீர் ஹீரோ ஆனேன். ‘எனக்கும் ஒரு விடுகதை எழுதிக் கொடுடா’ என்று கெஞ்சினாள் சத்யா. நான் மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அன்று இரவு அவளுடைய அம்மா என் அம்மாவிடம் சொல்ல, அப்போதும் மறுத்துவிட்டேன். மறு நாள் காலை அவளுடைய அப்பாவே வந்துவிட்டார். ஒரு கண்ணைச் சுழற்றி அவர் பார்த்த பார்வையிலேயே ஆடிப் போய்விட்டேன். ‘சத்யாவை அனுப்புங்கள்’ என்றேன். நான் சொல்லச் சொல்ல ஐந்து விடுகதைகளை அவள் எழுதிக்கொண்டாள். பெரிய வெள்ளைத்தாளில் முத்துமுத்தாக எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் அந்த வருடம் பள்ளி முடியும் வரை கண்ணனில் அது வெளியாகாததில் அவளுக்கு ஏகப்பட்ட வருத்தம். கோடை விடுமுறைக்கு வெளியூர் போகும்போது என்னிடம் அவள் சொல்லிக்கொள்ளவே இல்லை.  
ஒரு மாதம் கழித்து பள்ளி திறந்தபோது அவளும் நானும் ஒரே ரேங்க்கில் அதாவது முதல் ரேங்க்கில் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட்டோம். ஆனால் அவள் மட்டும் பள்ளிக்கு வரவே இல்லை. அது மட்டுமா ?  
(தொடரும்)

இவ்வரிசையில் இதற்கு அடுத்த பதிவு:
மூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை-2

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 

2 கருத்துகள்:

  1. சத்யா பள்ளிக்கு ஏன் வரவில்லை என்பதை அறிய ஆவலுடன் அடுத்த பதிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  2. மலரும் நினைவுகள் ரொம்ப நல்லா இருக்கே... ரொம்ப சுவாரஸ்யம் தொடருங்க!

    பதிலளிநீக்கு