வியாழன், ஏப்ரல் 04, 2013

பாரதிதாசனுக்கு வயது 122 (கவிதை)

ஏப்ரல் மாதத்தில் பிறந்து ஏப்ரல் மாதத்திலேயே மறைந்து போனவர்,  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். (பிறப்பு: 1891 ஏப்ரல் 29) (இறப்பு: 1964 ஏப்ரல் 21). எட்டயபுரத்து மீசைக்காரனாம் பாரதியின் அணைப்பாலும் அறிமுகத்தாலும் உத்வேகம் பெற்று 73 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து தமிழுக்குப் பல்வேறு காவியங்களும் கவிதைகளும் படைத்தளித்த பாரதிதாசனாரின் நூற்று இருபத்திரண்டாம் பிறந்த நாளை முன்னிட்டு எனது கவிதை இதோ.
 
இருபதாம் நூற்றாண்டு
இணையற்ற நூற்றாண்டு
இரண்டு பெருங்கவிஞர்கள்
ஒன்றாய் இருந்தாரே!
 
மேனியெலாம் சூரியனாய்
நெஞ்சமெலாம் நிலவாய்
எட்டயபுரத்தில் ஒரு பாரதி
 
நெஞ்சமெலாம் சூரியனாய்
மேனியெலாம் சந்திரனாய்ப்
பாண்டியிலே அவன் தாசன்!
 
சூரியனுக்கு
நிலவு பிறக்கலாம்
இது பௌதிகம்.
நிலவுக்குச்
சூரியன் பிறக்குமா?
இது சந்தேகம்.
 
பிறந்ததே!
பாரதி மூட்டிய கனலில்
சுப்பு ரத்தினம்
அக்கினிக் குஞ்சானான்
அழல் நெருப்பினில்
குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டா?
 
பாவேந்தர்
இரண்டு வரியிலே
எழுதி வைத்தாலும்
இயற்றி முடித்தது
காவிய மாயினும் 
ஊடே ஒளிர்ந்தது,
தமிழ் நெருப்பே!
அதன் கொழுந்து வெளிச்சமே
‘குடும்ப விளக்’கானது!
‘தமிழச்சியின் கத்தி’க்குச்
சாணை தீட்டியது!
 
ஒரே இரவில்
உதித்த பெருங்கவிதை,
‘தமிழியக்கம்’!
 
துறைதோறும் துறைதோறும்
தொண்டாற்றத் தமிழுக்குத்
துடித்த நெஞ்சம்
விம்மி வெடித்துச்
சீறியதே, தமிழியக்கம்!
 
இதனைப் படித்துவிட்டால்
இவன் எழுத்தை
எல்லாம் படித்ததாய்
எண்ணிடலாம்!
அவன்
தனி மனிதனல்ல,
தமிழ் இயக்கம்!
 
எழுபத்து மூன்றாம் வயதில்
மரணதேவன்
‘எதிர்பாராத முத்தம்’ இடும்வரை
இவன்
இயங்கிக்கொண்டே இருந்தான்,
தமிழை
இயக்கிக்கொண்டே இருந்தான்!
****
கற்பனை நெய்த
காஞ்சிப்பட்டு, பாரதி!
தாசன், கதர்ப் பட்டு!
 
கண்ணில் தமிழ்பட்டுக்
காதல் ஏற்பட்டு
மூண்ட வெறியில் முளைத்த
முரட்டுப் பட்டு!
**
(வேறு நடை)
பாரதிதா சன் தனக்கு
வாய்த்த நண்பர் பலபேர் – அவன்
பைந்தமிழில் மனமுருகிப்
பழகியவர் சிலபேர்!
 
பழைமையினை இவன் வெறுத்தான்
பழக வந்தார் சிலபேர்- அன்னாள்
பார்ப்பனரை இவன் வெறுத்தான்
நெருங்கி வந்தார் சிலபேர்!
 
விருத்தமதில் இவன் திறமை
வியந்து வந்தார் சிலபேர் –அதை
உருப்போட்டே ஒப்புவித்தே
உயர்ந்துவிட்டார் சிலபேர்!
 
கூட்டமதில் இவன்பாட்டைக்
கும்பிட்டார் சிலபேர் – உதவி
கோரிவந்தபோது கதவைத்
தாளிட்டார் பலபேர்!
 
படம் எடுக்க இவன் நினைத்தான்,
படம் எடுத்தார் சிலபேர்- திரைப்
படம் எடுக்க இவன் நினைத்தான்,
படம் எடுத்தார் சிலபேர்- நாகப்
படம் எடுத்தார் சிலபேர்!
இடம் கொடுத்தான் நண்பருக்கு
மனம் உடைத்தார் சிலபேர்! -இவன்
மனம் உடைத்தார் சிலபேர்!
 
கவிஞன் என்று சொன்னாலே
காயம் நெஞ்சில் படுமா? இல்லை,
கன்னித் தமிழர் நன்றிசொல்லும்
கருணை இந்த விதமா?
 
ஏப்ரலிலே அவன் பிறந்தான்,
ஏப்ரலிலே மறைந்தான்
இலக்கியத்தின் விளிம்புகளில்
இலக்கணமாய் நிறைந்தான்!
 
பாண்டியிலே அவன் பிறந்தான்,
பாண்டியிலே மறைந்தான்,
பாரதத்தின் எல்லை நான்கும்
தாண்டியும் புகழ் உயர்ந்தான்!
-    கவிஞர் இராய. செல்லப்பா.
(c) Y.Chellappa
 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


5 கருத்துகள்:

  1. சிறப்பான வரிகள் ஐயா... பாராட்டுக்கள்...

    வேறு நடையும் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பாரதிதாசனை நினைவுபடுத்தும் அருமையான கவிதை ஐயா! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. வாட மறுக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் என் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருப்பதற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. இளையவர்களை ஊக்குவிப்பதன் மூலமே புதிய கருத்துக்களை நாம் பெற முடியும் என்பதே காரணம். நன்றாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு