திங்கள், அக்டோபர் 07, 2013

திடீரென்று வந்தவன் (சிறுகதை)

-இமயத்தலைவன்

காலை ஆறு மணிக்குக் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்று  அதிர்ச்சியோடு கதவைத் திறந்தான் குமார். வாசலில் ஒரு வாலிபன். கையில் சூட்கேசும் முதுகில் லேப்டாப் பையுமாக தமிழ் நாட்டு ஆசாமி. விமானப் பதிவு அட்டைகள் சூட்கேசில் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹாய்...குட் மாணிங். ஐ ஆம் சிவா” என்றான்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த குமாருக்கு “வெல்கம்” சொல்வதா வேண்டாமா என்று யோசனையாயிருந்தது. ஒரு வேளை பக்கத்து ஃப்ளாட்டுக்குப் போகவேண்டியவனோ? எதற்கும் இருக்கட்டும் என்று “ஹாய், ஐ ஆம் குமார்” என்றான், கதவைப் பாதியளவே திறந்தபடி.

“என்ன குமார், என்னை எதிர்பார்க்கவில்லையா நீங்கள்? பாஸ்கருடைய ஈமெயிலைப் பார்க்கவில்லையா?” என்ற சிவா, பதிலை எதிர்பார்க்காமல் சூட்கேசை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
குமாருக்கு அப்போது தான் நினைவு வந்தது. அவசரமாகத் தன் ஐபோனை எடுத்து ஈமெயிலுக்குப் போனான். “நியூயார்க்கிலிருந்து என் நண்பன் சிவா அட்லாண்ட்டா வருகிறான். ஜஸ்ட் டூ டேஸ். உன்னோடு தான்  தங்கப் போகிறான். ஒரு சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன். அவன் போட்டோ இணைத்திருக்கிறேன். ஃப்ளைட் விவரம் .....” என்று இருந்தது.

“சாரி சிவா! நேற்று திடீரென்று சர்வர் பிராப்ளம். டெக் சப்போர்ட் திணறிப் போய்விட்டது. முடித்துக் கொண்டு வீடு வரும் போது காலை நாலு மணி. அதனால் பெர்சனல் ஈமெயில் பார்க்கவில்லை” என்று அவனிடம் மன்னிப்பு கேட்பது போல் கூறிய குமார், சோஃபாவைக் காட்டி “இதில் படுத்துக் கொள்ளுங்கள். இன்று சனிக்கிழமை யல்லவா, உங்களுக்கும் விடுமுறை தானே?” என்றான்.

“ஆம், விடுமுறை தான்” என்ற சிவா, குமாரின் அறையை ஒரு முறை நோட்டம் விட்டான். ஹாலும் ஒரே படுக்கையறையும் கொண்ட அடுக்குவீடு. சாமான்கள் வைக்கவும், துணிமணிகளுக்காகவும் சுவரோடு ஒட்டிய அறைகள் இருந்தன. அமெரிக்காவில் எல்லா வீடுகளிலும் தவறாமல் இருக்கும் மாடுலார் கிச்சனும் பெரிய ஃப்ரிஜ்ஜும் மைக்ரோவேவ் ‘அவனு’ம் இருந்தன.
படமோ காலண்டர்களோ இல்லாமல் சுவர்கள் காலியாக இருந்தன. ஒரே ஒரு கட்டில். அதில் குமார் படுத்துக்கொண்டான். மற்றபடி ஒரு சோஃபா, ஒரு மேஜை, அதன் மேல் லேப்டாப், டெலிபோன், மோடம் இருந்தன. ஒரு டீபாய். சன்னலோரத்தில் துணி காயப்போடும் கம்பி மடிப்பு. இஸ்திரி பெட்டியும் அதற்கான பலகையும் ஒரு மூலையில் காணப்பட்டது.
தரை பளிங்கு போல் தூய்மையாக இருந்தது. குளியலறையும் அதே போல். குப்பை கூடைகள் வெளிப்புறம் பிசுக்கில்லாமல் இருந்தன. முதல் நாள் போட்ட குப்பை தான் இருந்தது.

சமையலறையில் துளி அழுக்கும் இல்லாமல் பளிச்சென்றிருந்தது. மேடை மீது காப்பி கலக்கவும் பழம் பிழியவும் கருவிகள் இருந்தன. அவையும் அழுக்கில்லாமல் இருந்தன.
“நன்றி குமார். கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?” என்று சோஃபாவில் படுத்தான் சிவா. ‘இவன் எதற்காக வந்திருக்கிறான் என்று சொல்லமாட்டானா?’ என்று குழம்பியவாறு விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான் குமார்.
****
பாஸ்கரும் குமாரும் நியூயார்க்கில் படிக்கும் போது நண்பர்கள். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இங்கு வந்த பிறகே அறிமுகம் ஆனார்கள். இருவரும் வேவ்வேறு துறையில் படித்தாலும், பல்கலைகழகத்தில் தங்குவதற்கு ஒரே அறை ஒதுக்கப்பட்டபோது நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

பாஸ்கர் ஓரளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். நினைத்த நேரத்தில் பார்த்த பொருள்களை எல்லாம் வாங்குவான். நண்பர்களை விருந்துக்கு அழைப்பான். குமாரோ நடுத்தர வர்க்கம். முழுக்க முழுக்க ஸ்காலர்ஷிப்பையே நம்பியிருந்தவன். ஆகையால் எதையும் பலமுறை யோசித்த பின் தான் வாங்குவான். நண்பர்கள் அழைத்தாலும் வேறு வேலை இருப்பதாகச் சொல்லித் தப்பித்துக் கொள்வான். இன்று அவர்கள் கொடுக்கும் விருந்துக்குப் போனால், நாளை அவர்களுக்குத் தானும் விருந்து கொடுக்க வேண்டுமே! பணத்துக்கு எங்கே போவது?
படிப்பு முடிந்த பின் இருவருக்கும் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்தது. பாஸ்கர் நியூயார்க்கிலேயே ஒரு வங்கியில் சேர்ந்தான். குமாருக்கு அட்லாண்ட்டாவில் ஒரு விமானக் கம்பெனியில் கணினித்துறையில் வேலை கிடைத்தது. மிகவும் நெருக்கடியான வேலை. உலகெங்கிலிருந்தும் இவர்களது விமானங்களில் பதிவு செய்தவர்களும் தகவல் விசாரிப்பவர்களும் தரும் அழைப்புகளைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் தங்கள் விமான சேவையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று புதுப்புது ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்குவது தான் குமாரின் வேலை.

ஆரம்பத்தில் அவனோடு நான்கு பேர் உதவியாளர்களாக இருந்தனர். குமாருக்கு வேலை பழகியவுடன், அவனது தனித்திறமைகளைக் கண்டுகொண்ட நிர்வாகம், அவனுக்குக் குழுத்தலைவனாகப் பதவி உயர்வு அளித்தது. இதனால்  வேலைப்பளு அதிகரித்தது என்றாலும் தனது வேலை, உரிய அங்கீகரிப்புக்கு உள்ளானதில் அவனுக்கு உற்சாகம் பீறிட்டது. எனவே வேலையில் அதிக நேரம் செலவிட வசதியாக அலுவலகத்தின் அருகிலேயே தன் வீட்டை மாற்றிக் கொண்டான்.

அடிக்கடி வீட்டு ஞாபகம் வரும். ஆனால் ஒருமுறை போய்வர லட்ச ரூபாய் செலவாகும் என்பதால் இந்த இரண்டு வருடங்களில் அவன் இந்தியா போவதைத் தவிர்த்திருந்தான். தனது திருமணச் செலவுக்காகப் பணம் சேரவேண்டுமென்பதில் அதிகக் கவலையோடிருந்தான். அம்மா அடிக்கடி எச்சரிப்பாள்: ‘நீ பாட்டுக்கு அங்கிருந்து எவளையாவது இழுத்துக்கொண்டு வந்து இவள் தான் உன் மருமகள் என்று சொல்லிவிடாதே! உனக்காக நல்ல நல்ல இடங்களிலிருந்து ஜாதகம் கேட்டு வருகிறார்கள்’ என்று.
‘இழுத்துக்கொண்டு’ வரும் அளவுக்கு அவனை யாரும் கவரவில்லை என்பதில் அவனுக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் ஒரு பக்கம் கவலையாகவும் இருந்தது. அவனுக்குப் பின் வேலையில் சேர்ந்த பிரதீப் அகர்வாலுக்கும் கணேஷ்மூர்த்திக்கும் சில மாதங்களிலேயே தோழிகள் கிடைத்து விட்டார்கள். அதுமட்டுமல்ல, அவ்விரு தோழிகளும் குமாரின் அடுத்த கொட்டடியில் வேலை பார்ப்பவர்கள் தாம். குமாரைப் பார்த்தவுடன் மரியாதையாகப் புன்னகைப்பதோடு சரி. ஒருத்தி தெலுங்கு, இன்னொருத்தி இந்தி பேசுபவள். ஒருவேளை, பெண்களைக் கவரும் அம்சங்களில் முக்கியமான ஏதோ ஒன்று தன்னிடம் குறைகிறதோ?

கடைசியாக அம்மா அனுப்பியிருந்த பெண்ணின் புகைப்படத்தை  கண்ணில் கொண்டு வந்தான். குத்துவிளக்கு மாதிரி அடக்கமான பெண். இமை விரிந்த கண்களும் கன்னச் சிவப்பும் அவள் அழகுக்கு மேலும் மெருகூட்டின. சுருளான கூந்தலைப் பின்னி முடித்து, கன்னத்தில் கொஞ்சம்போல் கற்றையாக  வழிய விட்டிருக்கலாமே என்று தோன்றியது. தனக்கு வரும் மனைவிக்கு அதுபோல் இருக்கவேண்டும் என்று அவனுக்கு ஒரு கனவு இருந்தது. இவளோ கூந்தலைக் கத்தரித்திருந்தாள். ஆனாலும்  சமமில்லாத இருகூறுகளாகத்  தோள்களில் விரிந்த  அக்கூந்தல்  தன்னை ஏதோ ஓர் இனிய உலகிற்குள் கொண்டுபோவதை முதன்முதலாய் உணர்ந்தான். மீண்டும் மீண்டும் அப்புகைப்படத்தைப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்தபோது சுவரில் அவள் உருவம் தன்னைப் பார்த்துப் புன்னகைப்பது போல் பிரமை ஏற்பட்டது. ஒரு திருமணத்தின்போது அவளைப் பார்த்ததாகவும் இவனுக்கு எல்லாவகையிலும் ஏற்றவள் என்றும் அம்மா எழுதியிருந்தாள். அது மட்டுமன்றி, அவளுக்கு அமெரிக்காவில் எம்.எஸ்.படிக்க ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்திருப்பதாகவும் மற்ற விவரங்களைக்  கேட்டிருப்பதாகவும் சொன்னாள்.     
***
சிவா எழுந்திருக்கும்போது மணி பத்து. அதற்குள்ளாகவே குமார் எழுந்து காப்பி தயாரித்து வைத்திருந்தான். குளித்து வெளியில் கிளம்புவதற்காக உடையணிந்து கொண்டு தயாராக இருந்தான். “நான் விமான நிலையம் வரை போய் வர வேண்டி இருக்கிறது. திரும்பி வர ராத்திரி எட்டு மணி ஆகலாம். உங்களிடம் ஒரு சாவி இருக்கட்டும்என்று வீட்டு சாவிக்கொத்து ஒன்றைக் கொடுத்தான்.

“ரொம்ப நன்றி குமார். உங்கள் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்” என்று சாவிக்கொத்தை வாங்கிக்கொண்ட சிவா, “காரில் தானே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
“காரா? என் ஒருவனுக்குக் கார் எதற்கு? ஆனால் லைசென்ஸ் வாங்கிவிட்டேன். கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கலாம். ஸீ யூ” என்று நடந்தான் குமார் புன்னகைத்தபடி.

“சீக்கிரம் நடக்கட்டும். கங்கிராட்ஸ்” என்றான் சிவா.
குமார் போனதும், வீட்டை மீண்டும் ஆராய முற்பட்டான்.

கம்ப்யூட்டர் அருகே ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. ‘ஷாலினி’ என்று கையொப்பம் தெரிந்தது. பின்புறம் ‘இவளை விட அழகி இருக்கமுடியுமா?’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. குமாரின் கையெழுத்து தான். அதைப் பார்த்ததும் தனக்குள் புன்னகைத்தான் சிவா. ‘ஓ, அவள் தானா இவள்?’
மேசை டிராயரை இழுத்தான். அதிகம் இருந்தது அலுவலகம் சம்பந்தமான காகிதங்கள் தான். மருந்துக்குக் கூட வேறு பெண்களின் புகைப்படங்களோ, தகவல்களோ இல்லை. தனியாக வாழும் இளைஞர்கள் வாங்கிப்படிக்கும் கிளுகிளுப்பூட்டும் புத்தகங்கள் எதுவும் இல்லை. கடந்த சில மாதங்களின் ‘கிரெடிட் கார்டு’ ஸ்டேட்மெண்ட்கள் இருந்தன. எல்லாமே நியாயமான செலவுகள் தான். சரியாகத் திருப்பிச் செலுத்திய விவரமும் இருந்தது.  

ஈமெயில் பார்க்கலாம் என்று லேப்டாப்பைத் தட்டினான். அப்போது தான் தெரிந்தது, குமார் தனது ஈமெயிலை அணைக்காமலேயே போய்விட்டிருந்தது. அம்மாவிடமிருந்து வந்த மெயிலுக்குக் குமார் எழுதிய பதில் திரையில் தெரிந்த்து. “எனக்கும் இவளைப் பிடித்திருக்கிறது. நீ மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு உனக்கு சம்மதமானால் அதன் பிறகு என்னோடு ‘ஸ்கைப்’பில் பேசமுடியுமா என்று அவளிடம் கேட்டுச் சொல்” என்று முடித்திருந்தான்.
வாசல் கதவை இன்னொருமுறை சரிபார்த்துவிட்டு வந்தான் சிவா. குமாரின் எல்லா ஈமெயில்களையும் ஒன்று விடாமல் படித்தபிறகு மெயிலை மூடிவிட்டு வெளியே வந்தான். ‘சம்பளம்’ என்ற தலைப்பில் இருந்த தொகுப்பை விரித்தான். அமெரிக்காவில் பதினைந்து நாளைக்கொருமுறை சம்பளம் தருவார்கள். அந்தப் பட்டியல்கள் வரிசையாக இருந்தன. படிப்புக்கேற்ற நல்ல சம்பளம். கடந்த மாதத்தின் இரண்டாவது சம்பளப் பட்டியலில் ‘குறிப்பு’ என்ற கட்டத்தில் ‘தனித்திறமைக்காக வழங்கப்படும் போனஸ்’ என்று ஒரு தொகை இருந்தது. அலுவலகத்தில் குமாருக்கு நல்ல பெயர் இருப்பதை அது காட்டியது. 

மாலையில் குமாருக்குப் போன் செய்தான் சிவா. “நான் இரவு கிளம்புகிறேன். ரொம்ப நன்றி. சாவியை அபார்ட்மெண்ட் மேனேஜரிடம் கொடுத்துவிடுகிறேன்” என்றான். “நல்லது, மீண்டும் சந்திப்போம்” என்றான் குமார்.
****
திருமணம் முடிந்து அட்லாண்ட்டாவுக்கு மனைவியுடன் வந்து இறங்கினான் குமார். ஷாலினியே மனைவியாக அமைந்ததில் அவனுக்கு எல்லையில்லாத மனத்திருப்தி. தனது நண்பர்களுக்கு வரவேற்பு விருந்து ஏற்பாடு செய்தான்.

அது ஓர் இந்திய ஓட்டல். கல்லாப் பெட்டியருகே முருகனைப் பற்றிப் புராணச் சொற்பொழிவு நிகழ்த்தி மறைந்துபோன பெரியவர் ஒருவரின் படம் இருந்ததைப் பார்த்து ஷாலினி வியப்புடன் கேட்டாள்: “ஓ, அதே குரூப் ஓட்டலா இது?” என்று.
“ஆம், இல்லையானால் அடை, அவியல், இடியாப்பம் சாப்பிட நாம் வேறு எங்கு போவது?” என்று சிரித்தான் குமார். 

எண்ணி இருபது பேர் தான். அதில் எட்டு பேர் அமெரிக்கர்கள். ஒருவர் ரஷியன். ஒருத்தி மெக்ஸிக்கன். மற்றவர்கள் இந்தியர்கள். எல்லாருக்குமே ஷாலினியின் அழகு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. “யூ ஆர் வெரி லக்கி” என்று குமாரைக் கைகுலுக்கினார்கள். விருந்துக்காகவே மெனக்கேட்டு நியூயார்க்கிலிருந்து வந்திருந்தான் பாஸ்கர்.
விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். குமார் எல்லாருக்கும் நன்றி சொன்னான். “இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் விட்டீர்களே” என்றான் பாஸ்கர். குமார் சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாரும் போய்விட்டிருந்தார்கள். “ஆனால் அவர் இங்கு வரவில்லை” என்றான் பாஸ்கர், ஷாலினியைப் பார்த்து குறும்புச் சிரிப்போடு. அவளும் பதிலுக்குப் புதிரான புன்னகையைக் குமார் மீது தூவினாள்.

“யாரைச் சொல்கிறாய் பாஸ்கர்?” என்றான் குமார்.
ஷாலினி குமாரின் கன்னத்தோடு இழைந்தபடி சொன்னாள்: “சிவாவைத் தான் சொல்கிறார் பாஸ்கர். அவர் தானே உங்களைப் பற்றி விசாரித்து இந்த ரிப்போர்ட்டை அப்பாவுக்கு அனுப்பினார்” என்று தன் கைப்பையிலிருந்து ஒரு ஈமெயில் ப்ரிண்ட்-அவுட்டைக் காட்டினாள்.

“இந்தப் பையனைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டேன். இவன் வேலையில் சேர்ந்த தேதி.... இப்போதைய சம்பளம்....டாலர்கள். வேறு பெண்தொடர்பு எதுவும் இல்லை. சிக்கனமாகக் குடும்பம் நடத்துகிறான். வீண் செலவுகள் இல்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறான். அலுவலகத்தில் நல்ல பெயர். அங்கிருக்கும் பெண் ஊழியர்கள் இவனிடம் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள். தன் அம்மாவிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான எல்லா அம்சமும் இவனிடம் இருக்கிறது” என்று அந்தக் குறிப்பில் இருந்தது.
“அடப் பாவி! என்னைப் பற்றித் துப்பறியத் தான் என்வீட்டிற்கே வந்தானா? நீ தானே அனுப்பி வைத்தாய்? அப்போ உனக்கும் தெரியாதா அவன் எதற்காக வருகிறான் என்று?”

பாஸ்கர், குமாரை நெருங்கி அவன் தோளைத் தட்டினான். “ரிலேக்ஸ், குமார்! சிவாவை அனுப்பியதே நான் தான். நான் புதிதாகத் திறந்திருக்கும் ‘இண்டியன் மேரேஜ் ப்யூரோ’ வில் மணமக்கள் பற்றித் துப்பறியும் வேலையில் இருப்பவன் தான் சிவா. என்னுடைய முதல் கிளயண்ட், ஷாலினியின் அப்பா தான். என் முதல் வேலையை வெற்றிகரமாக ஆக்கியதற்காக உனக்கு நன்றி” என்றான்.

“ஆமாம் குமார்! அப்பாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளை என்றால் மிகவும் பயம். அவருடைய நண்பர்கள் சிலருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் குழம்பிப் போயிருந்தார். அத்துடன் சென்னையிலேயே அதிக வசதியான இடங்களும் வந்திருந்தன. நல்ல வேளை, பாஸ்கர் மூலம் சிவா அனுப்பிய ரிப்போர்ட் தான் அவருக்குத் தைரியம் கொடுத்தது. அதனால் சிவாவுக்கு என் சார்பிலும் நன்றி தெரிவிக்கவேண்டும்” என்றாள் ஷாலினி.
****
(c) Y.Chellappa) email: chellappay@yahoo.com
 குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

16 கருத்துகள்:

 1. அருமையான சிறுகதை ஐயா. ஒரு காலத்தில் உறவினர்கள் விசாரிப்பார்கள், ஆனால் இன்று...

  பதிலளிநீக்கு
 2. நியாயமான கதை. சரியாக நகர்ந்துபோகிறது தொய்வில்லாமல். எதார்த்தமான உரையாடல்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி, ஹரணி அவர்களே, தனபாலன் அவர்களே! தங்கள் பணிமிகுசூழலிலும் சிறுகதை படிக்க நேரம் செலவிட்டமை, மகிழ்ச்சி தருகிறது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கதைகள் எல்லோராலும் நிச்சயம் படிக்கப்படும் பேசப்படும் .உங்க கதையும் வெற்றிபெறும்

  பதிலளிநீக்கு
 5. கதையை படித்துக்கொண்டிருக்கும்போதே முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவல் எழுந்தது. கதை விறுவிறுப்பாக இருந்தது. எடுத்துக்கொண்ட கதைக்கரு மிகவும் அருமை. இக்காலகட்டத்திற்குப் பொருத்தமானது.

  பதிலளிநீக்கு
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி, டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. வலைச்சரத் தகவலுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. தீர விசாரித்து திருமணம் செய்யும் அருமையான அமைப்பு வியக்கவைக்கிறது..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 10. துப்பறியும் சிவா என்ற கதாபாத்திரத்திற்கு குமாரும் ஷாலினியும் பாஸ்கரும் செல்லப்பா ஐயாவும் நானும் நன்றி கூறத்தான் வேண்டும்.
  கதை 'கச்'சித்தமாய் இருந்தது.
  எனது வலைப்பூவுக்கு வந்து அன்போடு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா!!!

  பதிலளிநீக்கு
 11. அருமையான கதை
  இன்றைய சூழலுக்கு இந்தவகையில்
  விசாரிப்புக் கூடத் தேவைதான்
  மனம் கவர்ந்த கதைக்கும்
  தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு