புதன், செப்டம்பர் 11, 2013

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
இமயத்தலைவன்

“புதுமையாக இருக்குமாமே!” என்றாள் சுமித்ரா.

“ஆம். அது ஒரு பஸ் தான், ஆனால் வாத்து போல தரையிலும் தண்ணீரிலும் போகும். அதனால் தான் ‘டக் டூர்’ என்கிறார்கள். சக்கரம் வைத்த படகு மாதிரி இருக்கும். இரண்டாம் உலகப்போரில் ராணுவத்திற்காகச் செய்த வண்டி, யுத்தம் முடிந்த பிறகு சுற்றுலாவுக்கு விட்டு விட்டார்கள்” என்றாள் எலைன்.


சுமி என்கிற சுமித்ரா பாஸ்டனுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகி விட்டன. ‘பெர்க்கலி  காலேஜ் ஆஃப் ம்யூசிக்’கில் எம்.எஸ். படிக்க வந்தாள். பியானோ விருப்பப் பாடம். இன்னும் ஒரு வருடம் தான் பாக்கி. அவளுடைய அறைத் தோழி எலைன். ‘கண்ட்ரி ம்யூசிக்’கும் விடியோகிராபியும் படிக்கிறாள்.

“எனக்குத் தண்ணீர் என்றால் கொஞ்சம் பயம். ஆனால் நீ வருவதாக இருந்தால் இன்று போகலாம்” என்றாள் எலைன். சீனாவிலிருந்து வந்தவள். பார்ப்பதற்கு அமெரிக்கப் பெண் மாதிரியே இருப்பாள். அவள் தந்தை இதே ஊரில்  ஹார்வர்டு ஸ்கொயரில் ரெஸ்டாரண்ட்டு நடத்துகிறார்.

“சரி, போகலாம்” என்று கிளம்பினாள் சுமி. பாஸ்டனின் முக்கிய இடமான கோப்ளி ப்ளேஸிலிருந்து கிளம்பியது, ‘டக் டூர்’ வண்டி. “ஹாய், ஐ ஆம் கேப்டன் தார்ண்ட்டன். வெல்கம் டு யூ” என்று பேச ஆரம்பித்த டிரைவர், கடைசி வரை பேசிக்கொண்டே இருந்தார். அவர் தான் அந்த வண்டிக்கு ‘கைடு’மாம். அமெரிக்க சுதந்திரப் போருக்குக் காரணமான ‘பாஸ்டன் டீ பார்ட்டி’ நடந்த ஊர் இது என்று தொடங்கி, நகரத்தின் முக்கிய இடங்களைக் காட்டி விளக்கிக்கொண்டே வந்தார்.  

இருபது இருக்கைகள் தான். விடுமுறை நாள் என்பதால்  சிறுவர்களும் குழந்தைகளும் அதிகம் இருந்தனர். பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள். சுமியும் எலைனும் அருகருகில் அமர, எதிரில்  இரண்டு இளைஞர்கள்  அமர்ந்தார்கள். நண்பர்கள் போலும். ஒருவன், இந்தியன், அதிலும் தமிழ்ப்பையன் என்பது முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது. அவன் சுமியைப் பார்க்கக் கூச்சப்பட்டவனாக,  எலைனைப் பார்த்து ‘ஹாய்’ என்றான். அவனுடன் இருந்தவன் ஓர் ‘ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன்’. (‘நீக்ரோ’ என்ற சொல் தடை செய்யப்பட்டுவிட்டது). சுமியைப் பார்த்து  ‘ஹாய்’ என்றான். இவர்களும் பதிலுக்கு ‘ஹாய்’ சொன்னர்கள்.

வண்டி, நியூபரி தெரு, க்வின்ஸி மார்க்கெட், ப்ரூடென்ஷியல் சென்ட்டர் வழியாகப் போய், ‘தடக்’ கென்று பெருத்த ஓசையுடன் சார்லஸ் நதியில் இறங்கியது. தண்ணீரை வாரி இறைத்தது. குழந்தைகள் ‘ஆ’ வென்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். பின்  காற்றில் மிதக்கும் பலூன் மாதிரி ஆற்று நீரில் மெல்லத் தவழத்தொடங்கியது வண்டி. பாஸ்டனுக்கும் கேம்ப்ரிட்ஜிற்கும் இடையில் ஓடும் நதி என்பதால் இரண்டு நகரங்களின் வானுயர்ந்த கட்டிடங்களையும் ரசித்துக்கொண்டே வந்தாள், சுமி. ”ஈஸ் இட் நாட் ஃஃபெண்ட்டாஸ்டிக், எலைன்? “ என்றாள்.

எலைனை முந்திக்கொண்டு தமிழ்ப்பையன் “ஆமாம், இது போல நான் பார்த்ததேயில்லை. ஒரு வேளை தாம்சன் பார்த்திருக்கக்கூடும்” என்று தமிழில் சொன்னான். பிறகு, அதையே ஆங்கிலத்தில் சொன்னான். சுமிக்குச் சிரிப்பு வந்தது, அடக்கிகொண்டாள். தமிழ்ப் பையன்களே இப்படித்தான். அமெரிக்கா என்பதை மறந்து திடீரென்று தமிழுக்குத் தாவி விடுவார்கள். அதோடு பெண்கள் என்றால் கூச்சம் வேறு. நிலைமையை இயல்பாக்கவேண்டும் என்று எலைனைப் பார்த்து, ”நீ என்ன சொல்கிறாய், எலைன்?” என்று கேட்டாள். “எனக்குத் தண்ணீரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனாலும் இந்த அனுபவம் த்ரில்லிங்க் தான்” என்றாள் எலைன்.

லாங்க்ஃபெல்லோ பிரிட்ஜும் பங்க்கர் ஹாலும் கடந்துபோன பின் ‘டக் டூர்’ மீண்டும்  தரைக்கு வந்தது. தமிழ்ப்பையன் சுமியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். “நான் ரவி. சென்னையிலிருந்து வருகிறேன். ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்திருக்கிறேன்” என்றான். சுமி தன்னைப் பற்றிச் சொன்னாள். எலைனும் தாம்சனும் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அவன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சரித்திரத்தில் பி.எச்டி. செய்கிறானாம். “எலைன், உங்கள் ரெஸ்டாரண்ட்டில் சீன உணவுகள் சூப்பர், ஆனால் இத்தாலியன் சமாச்சாரங்கள் சுமார் தான்” என்றான்.
***
சுமிக்கு அந்த வாரம் எக்கச்சக்கமான வேலை இருந்தது. அவள் முடிக்கவேண்டிய ஏழு பேப்பர்களில் கம்ப்யூட்டர் கிராபிக்சும் ஒன்று. சரியான வழிகாட்டுதல் இல்லாததால் குழம்பினாள். ‘டக் டூர்’ போய்வந்தது கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தாலும் ஒரு புதுமையான வடிவத்தை உருவாக்கிக் கட்டினாலொழிய கிராபிக்ஸ் துறை பேராசிரியை  ‘ஏ-கிரேடு’ தர மாட்டாள். ரிஸ்க் எடுக்கமுடியாது.

அப்போது செல்போன் ஒலித்தது. ரவி. “வணக்கம். பேசலாமா?” என்றான். ஏனோ அவனுடைய குரலைக் கேட்டதும் மனத்திற்குள் தென்றலடித்தது சுமிக்கு. “..லாம்” என்றாள்.
“நல்ல வேளை, இதை விட சுருக்கமாகப் பேசாமல் போனீர்களே” என்று சிரித்தான் ரவி. பதிலுக்குச் சிரித்தாள் சுமி.

“ரசிக்கக் கூடிய சிரிப்பு உங்களுடையது” என்றான். ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் இம்மாதிரி பேசினால் ‘செக்சுவல் காமெண்ட்’ என்று போலீசைக் கூப்பிட்டுவிடுவாள். எச்சரிக்க வேண்டும். ஊருக்குப் புதியவன்.

“ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? உங்கள் சிரிப்பை மட்டும் தானே வர்ணித்தேன்?” ரவி தொடர்ந்தான்.
அப்படியானால்? இன்னும் ஏதேதோ வர்ணிக்கப் போகிறானா? சுமிக்கு மென்மையான அதிர்ச்சியாக இருந்தது, அதே சமயம் அவளுடன் இப்படி அந்தரங்கமாக எந்த ஆணும் பேசியதில்லை என்பதால் ஓர் இன்பமான எதிர்பார்ப்பும் இருந்தது. அவன் பேசட்டும் என்று பேசாமல் இருந்தாள்.

“நான் பேசியது தவறென்றால், போனை வைத்து விடட்டுமா?” என்று தணிவான குரலில் ரவி கேட்டான்.

“இல்லையில்லை” என்று பரபரப்புடன் கூறினாள் சுமி. அவன் போனை வைத்துவிடக் கூடாதே என்று விரும்பினாள். “நீங்கள் பேசியதில் தவறு ஒன்றுமில்லை” என்றாள்.

“அதானே பார்த்தேன். அமெரிக்கா வந்ததும் சில பேர் மாதிரி நீங்களும் மாறி விட்டீர்களோ என்று நினைத்தேன். நம்ம ஊர்ப் பெண் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்” என்றான்.

சுமிக்கு நிஜமாகவே புரியவில்லை. என்ன சொல்ல வருகிறான்?

“என்ன அவசரம்? உங்களுக்கும் ஒரு வருடம், எனக்கும் ஒரு வருடம் இருக்கிறதே! கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளுங்களேன்” என்று அவன் மென்மையாகச் சிரித்ததில்  அவனுடைய முகம் தெரிந்தது அவளுக்கு.

“ஓகோ, நீண்டகாலத் திட்டத்தோடு தான் எப்போதும் பேசுவீர்களோ? ஆமாம், எம்.பி.ஏ. அல்லவா?” என்றாள் சுமி.

“நிச்சயமாக! அதே சமயம் ‘பிளான்-பி’ யும் கைவசம் உண்டு” என்று சிரிப்பை அதிகப்படுத்தினான் ரவி.

“அதென்ன ‘பிளான்-பி’ ?”

“நினைத்தது நடக்கவில்லையென்றால், இரண்டாவது வழி தயாராக இருக்க வேண்டும் என்ற மேனேஜ்மெண்ட் மந்திரம். அது தான் ‘பிளான்-பி’”.

“உதாரணம் சொல்ல முடியுமா?” என்றாள் சுமி. ஏனோ அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றியது.

“பாருங்களேன், உங்களுக்கு போன் செய்தேன். ஒருவேளை நீங்கள் போனை எடுக்காமல் இருந்திருந்தால் உங்கள் தோழி எலைனுக்குப் போன்செய்து மாலை ஏழுமணிக்கு ஹார்வர்டு ஸ்கொயரில் சந்திக்கலாமா என்று கேட்கச் சொல்லியிருப்பேன். பிளான்-பி” என்றான் ரவி.
சுமிக்கு அவனது நடவடிக்கை அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் ஏனோ பிடித்தது.  ”இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்றாள் ஆவலுடன்.

“எதிரில் இருப்பவர்களின் கருத்தைக் கேட்டபிறகு தான் முடிவெடுக்கவேண்டும் என்பதும் ஒரு மேனேஜ்மெண்ட் தத்துவம்” என்றான் ரவி, மிகவும் மெல்லிய குரலில்.

தான் அவன் வசமாகிவிட்டது புரிந்தது சுமிக்கு. உடம்பெல்லாம் ஒரு சந்தோஷப் பரவல். அவனுடைய அழைப்பைப் புறக்கணிக்க முடியாது.

“பிளான்-பி யில் ஒரு திருத்தம். ஹார்வர்டு ஸ்கொயருக்குப் பதில் பாஸ்டன் கார்டன். ஏழு மணிக்கு பதில் எட்டு மணி” என்றாள்.
****
“இந்த செமிஸ்டரில் உன் பெர்ஃபர்மன்ஸ் எதிர்பார்த்தபடி இல்லை” என்றார் பேராசிரியர் ரூடி. அவர் முன்னால் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான் தாம்சன், கையில் தனது ஆய்வுக் குறிப்புகளுடன்.

 “இது உனக்கு ஆறாவது வருடம். இந்த செமிஸ்டரில் முடியாததையும் சேர்த்து அடுத்த செமிஸ்டரில் நீ தேர்ச்சி பெறவில்லையானால்  உன் உதவித்தொகை நிறுத்தப்படும். உன் பி.எச்டி.யும் தாமதப்படும். புரிகிறதா?”

“புரிகிறது புரொஃபசர் ரூடி! தயவு செய்து என் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள். என் வீட்டில் எல்லோரும் என்னைத் தான் நம்பியிருக்கிறார்கள். நான் எப்படியும் இந்த வருடம் பி.எச்டி. முடித்தாக வேண்டும்” என்று கெஞ்சினான் தாம்சன்.

ரூடி ஒரு நிமிடம் சிந்தித்தார். “அப்படியானால் பிரமிக்கத்தக்கதொரு ஆய்வுக்கட்டுரையை நீ சமர்ப்பிப்பது தான் ஒரே வழி. கமிட்டியில் நோபல் பரிசுபெற்றவர்களும் இருப்பார்கள். தெரியுமல்லவா?” என்றார். பிறகு தன் மேஜைமேல் குவிந்திருந்த காகிதங்களிலிருந்து ஒன்றை எடுத்து “இதைப் பார். கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் புரொஃபசர் மிட்டர் தன்னுடைய ஆராய்ச்சிக்காக ஆசியா பயணம் போகிறார். அவருடன் உதவியாளராக ஒரு செமிஸ்டர் நீ செலவழித்தால் உனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு  அதிக மதிப்பீடு கிடைப்பது உறுதி. ஆனால் ஃபண்டிங்க் இருக்காது. யோசி” என்றார்.
அது போன்ற வாய்ப்பைத்தான் எதிர்பார்த்திருந்தான் தாம்சன். “யோசிக்க ஒன்றுமில்லை புரொஃபசர் ரூடி. என் செலவில் போகத் தயார். தயவு செய்து அவருடைய ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள்” என்றான்.
***
ஏப்ரல் மாதம் மூன்றாவது திங்கட்கிழமை பாஸ்டன் நகரத்தில் விடுமுறை நாள். அன்று ‘தேசபக்தர் தினம்’ கொண்டாடப்படும். அத்துடன் ‘மராத்தான்’ என்னும் ஓட்டப்பந்தயமும் நடைபெறும். வயது வித்தியாசமின்றி மக்கள் கலந்து கொள்வர். எந்த நாட்டவரும் வரலாம்.

தாம்சனும் ரவியும் மராத்தானில் கலந்து கொள்வதற்காகத் துவங்கும் இடமான ஹாப்கிண்ட்டன் போனார்கள். சுமியும் எலைனும் பார்வையாளர்களாகப் போனார்கள். மராத்தான் முடியும் இடத்திற்குச் சற்று முன்னதாக பாஸ்டனின் பாயில்ஸ்டன் தெருவில் ஒரு துணிக்கடை வாசலில்  நின்றுகொண்டார்கள்.
காலை 9 மணிக்குக் கிளம்பிய ஓட்டம், ஃப்ராமிங்காம் வழியாக நியூட்டனை அடைந்து, பாயில்ஸ்டன் தெருவழியே பாஸ்டனின் கோப்ளி ஸ்கொயரை அடைய வேண்டும். 26 மைல் தூர ஓட்டம். வெற்றி பெறுபவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்களும் ஒரு ஆலிவ் மாலையும் கிடைக்கும்.

பாஸ்டன் ஓட்டப் பந்தயங்களில் வாட்டசாட்டமான  ஆஃப்ரிக்கப் பெண்களே  ஜெயிப்பது வழக்கம். எனவே ரவிக்கு வாய்ப்பில்லை என்று சொன்னாள், சுமி. “ஓடுவதே ஒரு அனுபவம் தானே! கட்டாயம் வந்துவிடு. அடுத்த வருடம் திருமணம் ஆனதும் ஜோடியாக நாம் ஓடலாம்” என்றான் குறும்புடன். “ஓ, அவ்வளவு தூரம் போய்விட்டீர்களா? முதலில் மராத்தானை முடியுங்கள்” என்று சிரித்தாள் சுமி. திருமணக்கோலத்தில் அவனுடன் மராத்தான் ஓடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தபோது தன்னை மீறி சிரிப்பு வந்தது.
“என்ன சுமி, உனக்கு நீயே சிரிக்கிறாய்?” என்று வியப்புடன் கேட்டாள்  எலைன். சுமிக்கு வெட்கமாகிவிட்டது. “ஒன்றுமில்லை, போ” என்றாள்.

“எனக்கா தெரியாது? நானும் இப்படித்தான் என் பாய்ஃப்ரண்டை நினைத்து திடீர் திடீரென்று சிரிப்பேன்” என்று சொன்னதும் தோழியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் சுமி.
***
மராத்தானில்  ஓடுவதற்கென்று முன்கூட்டியே பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் எளிதாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சுமார் இருபத்தேழாயிரம் பேர் கலந்துகொண்டார்கள். வெற்றி எல்லையை நோக்கி முன்னேறிய முதல் பத்துப் பேரில் ஒன்பது பேர் ஆஃப்ரிக்கப் பெண்கள். அவர்களில் ஓர் எதியோப்பியப் பெண் வெற்றிக்கோட்டை அனேகமாக தொட்டு விடுவாள் என்ற நிலை.

அப்போது தான் யாரும் எதிர்பாராவிதமாக ஒரு வெடிகுண்டு வெடித்தது. வெற்றி எல்லைக்கு சுமார் 50 மீட்டர்கள் முன்னதாக, சுமியும் எலைனும் நின்றிருந்த இடத்தின் அருகில் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த சில நொடிகளில் இன்னும் சற்று தொலைவில் இரண்டாவது குண்டு வெடித்தது.
காதைப் பிளக்கும் ஓசை. எங்கும் ஓவென்ற அலறல். தீப்பிழம்புகள். ரத்த வெள்ளம். சதைத் துண்டுகள். கண்ணை மறைக்கும் புகைப் படலம்.  தப்பித்து ஓடுவதற்கு வழியோ நேரமோ இல்லை. பார்க்குமிடமெல்லாம்  மக்கள் வெள்ளம். சுமியும் எலைனும் தூக்கி எறியப்பட்டார்கள். ரவியும் தாம்சனும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் வந்தது. குண்டு வெடித்த இடங்களைச் சுற்றி வேலியிட்டது. தீயணைப்பு எஞ்சின்களும் ஆம்புலன்ஸ்களும் அவசர சிகிச்சைக் குழுக்களும் விரைந்து வந்தன.
***
மராத்தான் வெடிகுண்டு விபத்தில் உடல் முழுதும் பலத்த காயங்களோடு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள், எலைன். முற்றிலும் குணமாக மூன்று மாதங்கள் ஆயிற்று. சுமிக்கோ வலது காலை எடுக்க வேண்டியதாகி விட்டது. ரவியும் தாம்சனும் ஓட்டத்தில்  பின்னடைந்திருந்ததால் விபத்திலிருந்து தப்பினார்கள்.

ஊன்றுகோலுடன் நடை பழகிக்கொண்டிருந்த சுமியைப் பார்க்க வந்தான் ரவி. “மராத்தானில் ஜோடியாக ஓடலாம் என்றீர்களே, என் காலைப் பார்த்தீர்களா? “ என்று பாதி அழுகையுடன் சொன்னாள் சுமி. ஓடிவந்து தன்னைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்வான் என்று ஆசையுடன் இருந்தாள்.  

ஆனால் அவனோ, அவள் அருகில் வராமல், சற்று தூரத்தில் நின்று கொண்டான். “ரொம்ப வருத்தமாக இருக்கிறது சுமி. இப்படியெல்லாம் நடக்குமென்று  நான் கற்பனை கூட செய்ததில்லை. எவ்வளவு கனவுகளுடன் இருந்தேன் தெரியுமா?...” என்றான். அவன் பேச்சிலிருந்த தயக்கமும் அதீத எச்சரிக்கை உணர்வும் சுமிக்குத் திகைப்பை எற்படுத்தியது. அவன்  அதிர்ச்சியான தகவல் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடுங்கினாள்.
“தயவு செய்து நான் சொல்வதைத் தவறாக எண்ணிவிடாதே சுமி. இந்த மட்டும் பிழைத்தாயே அது பெரிய விஷயம். இனி படிப்பில் முழுக் கவனம் செலுத்து. உன் படிப்பிற்கும் இசைத்திறமைக்கும் நிச்சயம் உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நான் வரட்டுமா? ப்ராஜக்ட் வொர்க்கில் பிஸியாக இருப்பதால் இனி அடிக்கடி சந்திக்க இயலாது” என்று கூறியபடி அவள் கண்களைப் பார்க்கத் தயங்கியவனாக வெளியேறினான், ரவி.

ஆறுதலாக ஒரு வார்த்தை கூறுவான் என்று பார்த்தால், உறவையே அறுத்துக் கொண்டல்லவா போகிறான்? பாவி! இது தானா உன் காதல்? இவ்வளவு நாள் நடந்ததெல்லாம் வெறும் வேஷமா? ஊனமான பெண் என்பதால் ஒதுக்கிவிட்டு ஓடுகிறாயா? இது தான் உன் ‘பிளான்-பி’ யா?

“கெட் அவுட், யூ ரோக்” என்று பலம்கொண்ட மட்டும் கத்தினாள் சுமி. எலைன் மட்டும் வந்திராவிட்டால் அவள் வீசி எறிந்த மேஜைவிளக்கு நிச்சயம் அவன் தலையைப் பதம் பார்த்திருக்கும். 
“எலைன், அவன் என்னை ஏமாற்றிவிட்டான், துரோகி” என்று தோழியைப் பிடித்துக் கொண்டு கதறினாள் சுமி.

“எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறதாம். சொல்லிவிட்டுப் போகிறான். பாவி! ஆமாம், இருக்கிறது. நான் நிரூபித்துக்காட்டுவேன். இது உறுதி, எலைன், இது உறுதி” என்று எழுந்து நின்றாள் சுமி. ஊன்றுகோல் இப்போது பழகிவிட்டது போலிருந்தது அவளுக்கு.
“ஐ ஆம் சாரி, சுமி. கால் போனாலும் உன்னுடைய தன்னம்பிக்கை போகவில்லையே என்று மகிழ்ச்சி அடைகிறேன். வருந்தாதே. நாட்டில் பாய்ஃப்ரண்டுக்கா பஞ்சம். அழாதே” என்று அவள் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்து விட்டாள், எலைன்.
***
“பேராசிரியர் மிட்டரின் குழுவில் ஒரு உதவியாளனாகச் சேர்ந்து உடனடியாக ஆசியப் பயணம் போய்விட்டேன். என்னுடைய பி.எச்டி.க்கு வேண்டிய  முக்கியமான நிகழ்ச்சி அது. அதனால் தான் உங்களை உடனே சந்திக்க முடியவில்லை. என்னுடைய சுயநலத்திற்காக வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள். உங்களுக்கு நேர்ந்த விபத்திற்காக எனது மனமார்ந்த வருத்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் தாம்சன்.

சுமிக்கு மனம் நெகிழ்ந்து போயிற்று. ‘டக் டூரி’ல் பார்த்தபின் இன்று தான் சந்திக்கிறாள். பேசியது கூட இல்லை. இவன் யாரோ, நான் யாரோ.
“நீங்கள் மனம்விட்டு இப்படி உணர்வுபூர்வமாக வருத்தம் தெரிவிப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் நாம் பேசிக்கொண்டது கூட இல்லை. உட்காருங்கள். காப்பி சாப்பிடுவீர்களா என்று தெரியவில்லையே?” என்றாள். ஊன்றுகோலை ஓரமாகச் சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள்.  

தாம்சன் ஜன்னலோரமாகச் சாய்ந்தபடி நின்றான். நல்ல உயரம். “எனக்குக் காப்பி வேண்டாம். இது தான் வேண்டும்” என்று  அவளுடைய ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் காட்டினான்.

தன் துயரத்தைக் குறைக்கும் விதமாக இப்படி வேடிக்கையாகப் பேசுகிறான் என்று நினைத்தாள் சுமி. 

“இதைக் கொடுத்தால் பதிலுக்கு உங்களுக்கு இரண்டு கால்கள் கிடைக்கும்” என்றான் சுமி ஏதும் புரியாமல் அவனைப் பார்த்து விழித்தாள்.

தாம்சன் அந்த ஊன்றுகோலைத் தன் முகத்துடன் இறுக அணைத்துக் கொண்டான். மெலிதாக முத்தமிட்டான். “எலைன் நடந்ததை எல்லாம் சொன்னாள். உங்கள் தொடர்பிலிருந்து ரவி விலகி விட்டாராமே!  இன்னும் ஆறு மாதங்களில் என் தீசிஸ் முடிந்துவிடும். கொலம்பியாவிலேயே எனக்கு ஒரு வேலை இருப்பதாக புரஃபசர் மிட்டர் கூறியிருக்கிறார். உங்களுக்கும் அதே சமயம் படிப்பு முடிந்துவிடும் இல்லையா? அதன் பிறகு என் இரண்டு கால்களையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன். சம்மதமா?” என்றான்.

“உங்களை முதல் முதலில் பார்த்த நாளிலிருந்தே எனக்கு இந்த ஆசை இருந்தது. ஆனால் சொல்வதற்கு வாய்ப்பு கிட்டவில்லை, சுமி. என்னைப் புரிந்து கொள்வீர்களா?” என்றான், தழுதழுத்த குரலில். அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான்.

சுமியின் கண்கள் பனித்தன. எப்படி இவனால் என்னை மீறி என் இதயத்தைத் தொட முடிகிறது என்று ஆச்சரியப்பட்டாள்.

“மலேசியாவில் புரஃபசரும் நானும் ஆராய்ச்சி மேற்கொண்ட இடத்திற்கு அருகில் பத்துமலை முருகன் கோவில் இருந்தது. அங்கிருந்து ஒரு பரிசுப்பொருள் உங்களுக்காக வாங்கிவந்தேன். ஏற்றுக்கொள்வீர்களா?” என்று ஒரு சிறிய அட்டைப்பெட்டியைக் கொடுத்தான்.
சுமிக்கு ஏனோ கைகள் நடுங்கின. அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளன்போடு சொன்ன வார்த்தையென்று மனம் சொல்லியது.

அட்டைப்பெட்டியைப் பிரித்து உள்ளிருந்ததை எடுத்தாள்.
ஓர் அழகிய குங்குமச் சிமிழ்!
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 

5 கருத்துகள்:

  1. த்ன்னம்பிக்கை நிரம்பிய அழகிய கதை ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. மனதினை நெகிழச் செய்யும் கதை ஐயா நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் இயல்பான நடை. மனம் நெகிழ்ந்தது. மங்கலம் சுப மங்கலம்!..

    பதிலளிநீக்கு

  5. பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவமும் டக் டூரும் கலந்து எழுதி அசத்திவிட்டீர்கள்.ஒரு விளம்பரம் வருகிறது அதில் ஓடிப்போய்க் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு ஓடும்போதே திருமணம் செய்து கொள்வதை நகைச் சுவையாகக் காட்டுவார்கள்.அடுத்த மாரத்தானில் மாலையும்கழுத்துமாக ஓடலாம் என்பதைபடித்தபோது விளம்பரம் நினைவுக்கு வந்தது. பாராட்டுக்கள். you have a promise to keep என்று நினைவு படுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு