அன்னையர் தினம் (சிறுகதை)
இமயத்தலைவன்
ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தைக் கடந்து மன்ஹாட்டனுக்குள் நுழைந்தது கார். வசந்தகாலப்
பூக்களால் இளஞ்சிவப்புப் போர்வை போர்த்திருந்த ‘சென்ட்ரல் பார்க்’ வந்ததும்
இறங்கினாள் ஜேனட். அவள் வாழ்க்கையையே தூக்கி நிறுத்திய இடமல்லவா அப்பூங்கா!
இளம் வயதிலிருந்தே செய்தியாளராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தாள், ஜேனட். கல்லூரிப்
படிப்பிற்காக ஃபிலடெல்பியாவிலிருந்து நியூயார்க் வந்தபோது அவள் வானம் விரியத் தொடங்கியது.
கல்லூரி முடிந்தவுடன் ஒவ்வொரு மாலையும் ஏதாவதொரு பத்திரிகையின் அலுவலகத்திற்குப்
போய் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கவனிப்பாள். பிரபலமான செய்தியாளர்கள்
நுழையும் பொழுதெல்லாம் உதவி ஆசிரியர்கள் ஓடி வந்து புதிய செய்திக்காகச் சூழ்ந்து கொள்வதைப்
பார்ப்பாள். தானும் புகழ்வாய்ந்த செய்தியாளராக ஆகும்போது தன்னையும் இப்படித்தானே வரவேற்பார்கள்
என்று கற்பனை செய்வாள். அதற்கு சரியான வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்குவாள்.
அந்த நாளும் வந்தது. வழக்கம் போல்
கல்லூரியிலிருந்து சென்ட்ரல் பார்க் வரும் போது ஏழு மணி. இருள் கவியத்
தொடங்கிவிட்டது. ஆனால் விடியற்காலை ஒரு மணி வரை பார்க் திறந்திருக்கும் என்பதால்
எட்டு மணிக்கு மேல் தான் பெண்கள் வரத் தொடங்குவார்கள். விளக்குகள் நிறைய
இருந்தாலும், மரம் செடி கொடிகளின் நிழலால் அங்கங்கே இருட்டான பகுதிகள்
இருக்கத்தான் செய்தன. ஜேனட்டுக்கு இருட்டு பிடிக்கும். யாருக்கும் தெரியாதபடி புல்தரையில்
ஒரு மெல்லிய விரிப்பில் படுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை எண்ணுவதில்
அவளுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அன்றும் எண்ணினாள். ஒரே சமயத்தில் ஆறு
விமானங்கள்.
அப்போது புதருக்கு அப்பால் ஏதோ
விபரீதம் நடப்பது போல் தோன்றியது. ஐந்தாறு பேர்கள் கும்பலாக ஓடிவந்து தொப்பென்று
தரையில் விழுவதும் ஒரு பெண் ‘ஓ’ என்று அலறுவதும் ஒரே சமயத்தில் கேட்டது. ஜேனட்
திடுக்கிட்டவளாகத் தன்னிடமிருந்த விடியோ காமிராவை எடுத்துக்கொண்டு தரையில் ஊர்ந்து
அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கலானாள். காமிரா தன்போக்கில்
பதிவுசெய்யலாயிற்று.
ஐந்து கறுப்பு இளைஞர்கள். ஒரு
வெள்ளைப் பெண். இவ்வளவுதான் தெரிந்தது. அவள் ‘உம்..ம்..’ என்றும்
‘காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்’ என்றும் தீனமான குரலில் கதறிக்
கொண்டிருந்தாள். அவர்கள் அவளைப் பலவந்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜேனட்டுக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை. ஐந்து வலிமையான இளைஞர்களுடன் தன்னால் எதிர்த்து நிற்க முடியாது. கண்ணுக்கெட்டிய
தூரம் வரையில் நடப்பவர்கள் யாரும் தெரியவில்லை. மிகவும் உள்ளடங்கி இருந்ததால்
அதிகம் பேர் வராத இடம். ஆனால் இருபது அடியில் கார் போகும் பாதை இருந்தது. அங்கு
ஏதாவது கார் வந்தால் மட்டுமே இவளைக் காப்பாற்ற முடியும்.
ஜேனட் தன்னுடைய தரைவிரிப்பைச்
சுருட்டிக் கையில் எடுத்தாள். அந்த வழியில் வேகம் குறைவாக வந்துகொண்டிருந்த ஒரு
கார் மீது வீசினாள். அது ‘டண்’ணென்று மோதியதில் திகைப்படைந்த காரோட்டி,
‘சரக்’கென்று காரை நிறுத்தினார். காரின் முன்விளக்குகள் அந்தப் புதருக்கு நேராக
வெளிச்சம் அடித்தன. அவ்வளவே, அந்த ஐந்து இளைஞர்களும் ஆளுக்கொரு திசையாக விழுந்தடித்துக்கொண்டு
ஓடினார்கள்.
ஜேனட் அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.
தன் வயது தான் இருக்கும். அதிர்ச்சியில் மூர்ச்சையாகியிருந்தாள். முகமெல்லாம்
கீறல்கள். ஆடை கசங்கிக் கிழிந்திருந்தது. ஓடிப் போய் அந்தக் காரோட்டியிடம் விஷயம்
சொன்னாள். போலீஸ் வந்தது.
அடுத்த நிமிடம் டாக்ஸி பிடித்தாள். அருகிலிருந்த
நியூயார்க்கின் முக்கியமான மாலைச் செய்தி ஒன்றின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். தன்னிடம்
ஒரு முக்கிய செய்தி இருக்கிறது என்றாள். சென்ட்ரல் பார்க்கில் நடந்த பலாத்காரத்தின் சாட்சியாகத்
தன்னிடம் விடியோப் பதிவு இருக்கிறது என்றாள். தன்னை ஒரு செய்தியாளராக ஏற்றுக்கொண்டால்
மட்டுமே தகவல்கள் தர முடியும் என்றாள். அவளுடைய வீடியோ தான் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய ஒரே சாதனம்.
மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்ட அந்தப் பெண் இறந்து போனாள். ஒரு வெள்ளை யினப்
பெண், ஐந்து கறுப்பு இளைஞர்களால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோனதில் துப்பு துலக்கிய
இளம் செய்தியாளர் என்று அவளுக்கு அந்த வருடத்திய ‘புலிட்ஸர்’ விருது கிடைத்தது.
அதன் பிறகு அவள் கல்லூரிப் பக்கமே தலை காட்டவில்லை. பத்திரிகையில் அவளுக்குக்
கொடுக்கப்பட்டிருந்த காரில் நாள் முழுதும் சுற்றுவாள். மூலை முடுக்குகளில்
இருந்தும் செய்திகளை அள்ளிக்கொண்டு வருவாள். நகரச் செய்தியிலிருந்து நாடு முழுதும்
செய்தி சேகரிக்கும் பணிக்கு உயர்ந்தாள். பத்தாண்டுகளுக்குப் பின், அதே
பத்திரிகையின் சர்வதேச ‘டெஸ்க்’ கில் மூத்த நிருபராக உயர்ந்தாள். குவைத் மீது
ஈராக் படையெடுத்தபோதும், ஈராக் மீது அமெரிக்கா தனது ‘ஸ்கட்’ ஏவுகணைகளை வீசிய
போதும், நியுயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டபோதும் அவளுடைய செய்திக்கோவைகளே
முதல் பக்கத்தில் வெளியாயின.
**** ‘போகலாமா அம்மா?’ என்றபடி ஜான் கார் கதவைத் திறந்தான். ஜேனட் ஏறிக் கொண்டாள்.
எண்பது வயதானாலும் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் தெம்பை இழந்துவிடவில்லை
அவள். சோஷியல் செக்யூரிட்டியிலிருந்து அவளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருந்தது.
பழைய சேமிப்புகளிலிருந்து மாதாமாதம் வட்டி வந்துகொண்டிருந்தது. சாகும்வரை தனது
குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சிரமம் இருக்காது. இன்னும் கொஞ்ச
நேரத்தில் அவளுடைய புதிய வாழ்க்கை தொடங்கி விடும். அதன் பிறகு? அவளுடைய கவலை
யெல்லாம் தன் மகன் ஜானைப் பற்றியது தான்.
அவளுக்கு மணமானபோது வயது நாற்பத்தைந்து. கணவனுக்கு வயது அறுபது. குழந்தைகள்
இல்லாமல் முதல் மனைவி இறந்துபோனபின் திருமணமே வேண்டாமென்று இருந்தவர், ஒரு
திருமணச் சடங்கில் அவளைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்டார்.
அவருக்கு நியுயார்க்கில் கட்டிடத்
தொழில் இருந்தது. ஆனால் தொழில் கூட்டாளி
ஒருவன் கணக்குகளை ஏமாற்றிப் பெருத்த நஷ்டம் ஏற்படுத்திவிட்டதால் சொல்லிக்கொள்ளாமல்
ஓடிப்போனார். தனது பத்திரிகைத் துறை செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவரைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் ஜானுடன் நியூஜெர்சிக்குக் குடிபெயர்ந்தாள் ஜேனட்.
பத்திரிகைத் தொழிலிலிருந்து ஓய்வு பெறும்வரை அதே வீடு தான்.
**** கார் இப்போது மன்ஹாட்டனைத் தாண்டி, பிராங்க்ஸை நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் அடிக்கடி திருப்பங்கள். சிவப்பு விளக்குகள். ஜான் தாயிடம் எதுவும் பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. தன் ஒரே மகனுடன் இருக்கமுடியாமல் ஒரு எண்பது வயதுத் தாய் தனிக் குடித்தனம் போகிறாள். அவளைப் போகாதே என்று சொல்லும் சுதந்திரம் தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று கலங்கினான்.
‘படி, படி’ யென்று தாய்
சொன்னபோதெல்லாம் அலட்சியமாக இருந்தவன், தந்தை திடீரென்று தலைமறைவானபோது திடுக்கிட்டுப்போனான்.
படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு தன் நண்பனுடன் நியுயார்க்கில் ஒரு ‘டிராவல்
கன்ஸல்டன்சி’ ஆரம்பித்தான்.
அப்போது உதவியாளராக வந்து சேர்ந்தவள் தான் ஜெலீனா. பேச்சுத் திறமையும் செயலில் சுறுசுறுப்பும்
இருந்ததால் வாடிக்கையாளர்களைக் கவர
முடிந்தது. வியாபாரம் பெருகியது. நாளடைவில் நண்பன் விலகிவிட, ஜெலீனாவையே
பங்குதாரராக்கிக் கொண்டான். கணவனோடு நீண்டநாளாக விவாகரத்து வழக்கு இழுத்துக்கொண்டே
இருந்ததில் அமைதியிழந்திருந்த அவள் மீது ஜான் கொண்ட அனுதாபம் காதலாக மாறியது. எட்டாவது
படிக்கும் தன் மகன் மார்கனுடன் ஜான் வீட்டிற்கே
நிரந்தரமாகக் குடியேறிவிட்டாள், ஜெலீனா.
இட நெருக்கடியால் தன்னுடைய அறையை ஜெலீனாவுக்குக் கொடுத்துவிட்டு,
பால்கனிக்கும் ஹாலுக்கும் நடுவே ஒரு போர்வைத் தடுப்பினால் சிறிய அறையை உண்டாக்கிக்கொண்டாள்.
பகலில் சோஃபாவாக இருந்தது இரவில் படுக்கையாக விரிந்தது. ஒரு சிறிய டீப்பாயும்,
புத்தகங்கள் வைக்க ஒரு நாலடுக்கு அலமாரியும் இரண்டு சூட்கேசுகளும் தான் அவளுடைய சொத்து.
வீட்டு வாடகையும் மளிகைச் சாமான்களும் ஜானின் கிரெடிட் கார்டு பாக்கிகளும் அவள்
வங்கிக்கணக்கிலிருந்தே போக ஆரம்பித்தன.
இரண்டுங்கெட்டான் நிலைமையில் இருந்தான்
ஜான். மார்கனோ இவனிடம் ஒட்டவில்லை. மரியாதை காட்டுவதுமில்லை. ஜெலீனாவோ அலுவலகத்து
வேலைகளையும் செய்வதில்லை. வீட்டில் சரியான சமையலும் கிடையாது. அவளுடைய விவாகரத்து
வழக்கு இன்னும் முடிந்த பாடில்லை. அதற்கும் அவன் தான் செலவழிக்க வேண்டும்.
ஜேனட்டிடம் இங்கிதமாக நடந்துகொள்ளவும் ஜெலீனாவுக்குத் தெரியவில்லை. இந்தக் கிழவி
எப்போது ஒழிவாள் என்ற மனோபாவமே வெளிப்பட்டது. தன் தாயின் சுயமரியாதை அதிக நாள் அவளை இங்கு இருக்கவிடாது என்று ஜானுக்குத்
தெரிந்தது.
ஒட்டகத்தின் மேல் வைக்கப்படும் கடைசி
வைக்கோல் மாதிரியான நிகழ்ச்சி அன்று தான் நடந்தது. பள்ளியிலிருந்து மார்கனை விலக்கப்போவதாக தலைமை ஆசிரியை ஸாண்டிரா போன்
செய்தாள். “ஜேனட், உனக்கும் எனக்கும் எத்தனை வருஷங்களாகப் பழக்கம் ! அதனால் தான்
சொல்கிறேன், இந்தப் பையனின் நடவடிக்கைகள் சரியில்லை. போதைப் பொருள் விற்கும்
கும்பலுடன் இவனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அதனால் பள்ளியிலிருந்து
விலக்கப்போகிறோம். கூடிய விரைவில் போலீஸ் இவனையும் இவன் அம்மாவையும் தேடி வரப்
போகிறார்கள். நீ ஜாக்கிரதையாக இரு” என்றாள்.
ஜேனட்டுக்கு வியர்த்தது. எவ்வளவு தடவை
போதைப் பொருள் கும்பல்களைப் பற்றி அவள் எழுதியிருக்கிறாள்! மெக்ஸிகோவுக்கே போய்,
போதைக் கும்பலின் தலைவன் ஒருவனை ரகசியமாகப் பேட்டி எடுத்திருக்கிறாள்! எவ்வளவு
கொடூரமானவர்கள் அவர்கள். துப்பாக்கி தானே அவர்களின் பேச்சுமுறை! இந்தச் சிறுவனுக்கு எப்படி அவர்களின் தொடர்பு
ஏற்பட்டது? ஆதாரமில்லாமலா ஸாண்டிரா எச்சரிப்பாள்? தன் வீட்டுக்குப் போலீஸ் வருமா?
வந்தால் தன்னையும் இதில் சம்பந்தப்படுத்தி விடுவார்களா? போதைப்பொருள் தடுப்பு
விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக போலீஸ் நடவடிக்கைகளைக் குறை சொல்லி எவ்வளவு
விமர்சனம் எழுதியிருப்பாள்? அதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக் கொள்வார்களா?
ஜெலீனாவிடம் கேட்டபோது, அவள் முகம்
கோபத்தால் சிவந்தது. “இதெல்லாம் உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம்” என்றாள்
அலட்சியமாக.
“நில்!” என்று கத்தினாள், ஜேனட். “ஸாண்டிரா
விடம் பேசிவிட்டேன். நீ போய் மார்கனைப் பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக
எழுதிக்கொடு. வேறு பள்ளியில் சேர்த்துவிடலாம். இனிமேல் அவனுடைய வெளிஉலக
நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திவை. அவனுடைய எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது” என்றாள்.
வந்ததே கோபம் ஜெலீனாவுக்கு. “ஆஹா,
எவ்வளவு அக்கறை இவன் மேல்! உங்கள் மகனை நீங்கள் வளர்த்ததை விட இவனை நான் வளர்த்தது
ஒன்றும் குறைந்துவிடவில்லை. அந்த ஸாண்டிராவை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை”
என்று பொருமினாள்.
அதே சமயம் வெளியில் போயிருந்த ஜான்
வருவதைக் கண்டதும் “எல்லாம் உங்களால் தான்! நீங்கள் தானே என்னோடு வந்துவிடு என்று
அழைத்தீர்கள். இப்போது பாருங்கள், என் மகனுக்கு வந்த பழியை” என்று கண்களைக்
கசக்கினாள்.
ஜான், விஷயத்தைப் புரிந்துகொண்டவனாக வாசலில்
நின்றபடியே “அம்மா, அவளோடு எப்போதுமே உங்களுக்கு ஒத்துப் போவதில்லை. நீங்கள்
இனிமேல் இங்கிருப்பது சரியில்லை. வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று வேகமாகச்
சொல்லிவிட்டு உள்ளே வராமலே போய்விட்டான்.
அதிர்ந்து போனாள், ஜேனட். தன்
வீட்டில், தன் செலவில் வாழும் ஒரே மகன், தன்னைப் போகச் சொல்வதா? அதுவும் இன்னமும்
மணம் புரிந்துகொள்ளாமல் வாழும் ஒருத்தியின் முன்னிலையில்?
“ஜெலீனா!” என்று உறுதியாய் அழைத்தாள் ஜேனட். “இதோ பார்! மார்கன் விஷயத்தில் நீ
என்ன செய்வாயோ அது உன் இஷ்டம். ஆனால் என் மகனுக்கு ஏதாவது கெட்ட பெயர்
உண்டாக்கினால் உன்னைச் சும்மா விட மாட்டேன். என் மகனே போ என்று சொன்ன பிறகு எனக்கு
இங்கு என்ன வேலை? நாளை காலை வேறு இடத்திற்குப் போகிறேன். இனி உன்பாடு அவன் பாடு”
என்று கூறிவிட்டு தொலைபேசியை எடுத்தாள், ஜேனட்.
**** இதோ ஆண்டிரூஸ் தெரு வந்து விட்டது. தெருவில் பிரதானமாக ஒரு மருத்துவமனை. எதிரில் ஒரு பத்து மாடிக் கட்டிடம். ‘சீனியர் ஹௌஸ்’ என்று பலகை தொங்கியது. அது தான் இனி ஜேனட்டின் புதிய முகவரி.
காரை நிறுத்தி, சாமான்களைத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு ரிசப்ஷனுக்கு
வந்தான், ஜான். அவளுக்கு மூன்றாம் மாடியில் அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எலிவேட்டரில்
போகும்போதும் அவன் பேசவில்லை. 302ம் அறைக்குள் நுழையும்போது மட்டும்,
“ஜாக்கிரதையாக வாருங்கள், தரை வழுக்கும் போல் இருக்கிறது” என்றான்.
அது ஒரு பெரிய அறை. ஒரு கட்டில்,
சோஃபா, மேஜை, மூன்று நாற்காலிகள், ஒரு டீப்பாய், இரண்டு புத்தக அலமாரிகள்,
சாமான்கள் வைக்கச் சுவரோடு பொருந்திய மூன்று மடிப்பு ‘ஸ்டோரேஜ்’.
ஜேனட் கட்டிலில் உட்கார்ந்தாள்.
கொண்டுவந்த சாமான்களைப் பிரித்து வைத்துவிட்டு ஜான் நாற்காலியில் உட்கார்ந்தவன்
சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின், “நீங்கள் என்மீது கோபமாக இருக்கிறீர்கள்
அல்லவா?” என்றான். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
“முட்டாளே” என்று செல்லமாகக் கடிந்து
கொண்டாள், ஜேனட். எழுந்து அவனருகே நின்றாள். “நீ என் ஒரே மகன். உன் மீது கோபம்
வருமா?.. ம்.. என்ன செய்வது, எப்படியோ அவள்
உன் வாழ்க்கையில் நுழைந்துவிட்டாள். நல்ல வேளை, உங்களுக்குத் திருமணம்
ஆகவில்லை. யோசனை செய். இந்த உறவிலிருந்து வெளியே வருவது கடினமில்லை. உனக்குத்
தகுந்த மனைவி கிடைக்காமல் போக மாட்டாள்” என்றாள்.
தன்னருகே நிற்கும் தாயின் தளர்ந்துபோன கால்களைப் பார்த்தான். முதுமையின் கனிவு
பொலிந்த முகத்தைப் பார்த்தான். சொல்லமுடியாத வேதனையில் தவித்தான் ஜான். எழுந்து
கதவருகில் போனவன் திரும்பி வந்து அவள் இருகைகளையும் பற்றிக்கொண்டு “நிச்சயமாக என்
மீது கோபம் இல்லையே, அம்மா?” என்றான்.
கண்ணீர் குடமாக வழிந்தது.
***** ஜேனட்டுக்கு சீனியர் ஹௌஸ் வாசம் பழகிவிட்டது. அக்கம் பக்கத்து அறைகளில் அவள் மாதிரியே மூத்த பெண்மணிகள் இருந்தனர். நட்போடு பழகினர். அவர்களுக்கும் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் ஜேனட் தனது பத்திரிகையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. வாரம் இரண்டு முறை எதிரிலுள்ள மருத்துவமனைக்குப் போய், புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதனால் சுவாரசியமாகப் பொழுது போனது.
மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை. அமெரிக்காவின் முக்கியமான தினம். ‘மதர்ஸ்
டே’. பெற்ற தாயை நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கும் தினம். ஜேனட்
ஜன்னலருகில் நின்று வானத்தைப் பார்த்தாள். ஒரே ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது.
தனக்கும் ஒரே மகன் தானே! இன்று அன்னையர் தினம். நிச்சயம் வருவான்.
கதவைத் திறந்துகொண்டு “ஹாய்,
மார்கரெட்!” என்றபடி அவசரமாக நுழைய முயன்ற ஒருவர், இவளைக் கண்டதும் பின்வாங்கி, “ஐ
ஆம் ஸாரி” என்றார். மார்கரெட்டின் அறை எதிர்ப்பக்கம் இருந்தது. இது வரை அவளைத்
தேடி ஆறேழு பேர் வந்து பரிசு கொடுத்துவிட்டுப் போனார்கள். இத்தனைக்கும் அவளுக்குக்
குழந்தைகளே கிடையாது. இரண்டாம் மாடியிலிருந்து திருமதி ஸ்மித் வந்தாள். கையில் ஒரு
பழக்கூடை. “ஹேப்பி மதர்ஸ் டே” என்றாள். அவளுக்கு இதுவரை நான்கு பழக்கூடைகள்
வந்ததாம். அவ்வளவையும் ஒருத்தி என்ன செய்வது? அதனால் ஜேனட்டுக்கு ஒன்று
கொண்டுவந்தாளாம்.
கூடையில் ஸ்டிராபெர்ரி, பியர், பிளம்,
அன்னாசி, திராட்சை இவற்றுடன் இரண்டு மாம்பழங்களும் இருந்தன. பாதி சிவப்பும் பாதி
பசுமையுமாக ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருக்கும் அந்தக் கொரிய மாம்பழங்களைப் பார்த்ததுமே ஜேனட்டுக்கு
ஜானின் ஞாபகம் வந்துவிட்டது. அவனுக்கு மாம்பழம் என்றால் உயிர். அவனுக்காகவே
பம்பாயிலிருந்து தருவிப்பார் அவன் தந்தை. இப்போது நியூயார்க்கிலேயே கிடைக்கிறது.
ஜான் எப்படியும் வருவான். கலகலப்பாகப்
பேசமாட்டானே ஒழிய, அம்மாவின் மேல் அவனுக்குப் பாசம் அதிகம். ஜெலீனா தடுத்தாலும் கட்டாயம்
வருவான். அவன் வந்த பிறகு சாப்பிடலாம் என்று ப்ரேக்ஃபாஸ்ட்டோடு
நிறுத்திக்கொண்டாள்.
அவன் வரவேயில்லை.*****
அன்று ஜூன் 15ம் தேதி. ஓய்வே இல்லாமல் போயிற்று ஜானுக்கு. வாடிக்கையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். புதிதாகத் தொடங்கவிருக்கும் சொகுசுக் கப்பல் ஒன்றுக்கு அவன் ஏஜென்ஸி எடுத்திருந்தான். அதற்கு முற்பதிவு செய்யத்தான் அவ்வளவு கூட்டமும்.
மாலை நான்கு
மணி ஆயிற்று. பள்ளியிலிருந்து நேராக வந்தான், மார்கன். அம்மா ஆறு மணிக்கு வருவாள்,
இரவு சாப்பாட்டிற்கு டைம்ஸ் ஸ்கொயரில் ‘ஆலிவ் ட்ரீ’ ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போகலாமா
என்றான். என்ன விசேஷம் என்றால் ‘அம்மாவைக் கேளுங்கள்’ என்று சிரித்தான். அப்போது
கூரியர்க்காரி ஒரு பார்சலை ஜானின் மேஜைமீது வைத்துவிட்டுப் போனாள். சற்று கனமாக
இருக்கவே உள்ளே போய்ப் பிரித்தான். ஓர் அழகிய பிளாஸ்டிக் டப்பா. அதற்குள் சீரான
துண்டுகளாகத் தோல் அகற்றிய மாம்பழம்! திறக்கும்போதே வாசனை மூக்கை அணைத்தது. மேல்மூடியின்
உள்புறத்தில் ஒரு காகிதம் ஒட்டியிருந்தது. ‘ஹேப்பி பர்த்டே டு மை டியர் சன்’ என்று எழுதி ‘யுவர் டியரெஸ்ட் மதர், ஜேனட்’ என்று கையொப்பமிட்டிருந்தது.
கண்களில் நீர் கோர்த்தது ஜானுக்கு. இன்று
தான் தனக்குப் பிறந்த நாளா! வேலைப் பளுவில் எல்லாம் மறந்து போகிறது. மார்கனும்
ஜெலீனாவும் அதனால் தான் தன்னிடம் சொல்லாமல் விருந்துக்கு அழைக்கிறார்களா? போன
பிறந்த நாளைக்கு இரவு பன்னிரண்டு மணி அடித்தபொழுது தன்னை எழுப்பி அம்மா கொடுத்த பரிசு நினைவுக்கு
வந்தது. இரண்டு பழத்துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். நல்ல வேளை,
மார்கன் பார்க்கவில்லை. ஜெலீனாவுக்குத் தெரிந்தால் இன்னுமா அந்தக் கிழவியுடன்
ஆட்டம் போடுகிறாய் என்று கத்துவாள். பழத்துண்டங்களைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில்
போடுவாள். அன்னையர் தினத்தன்று எவ்வளவோ முயன்றும் தன்னைப் போகவிடாமல்
செய்தவளாயிற்றே!
‘அம்மா, என்னை மன்னித்து விடு.
நிச்சயம் நாளை வந்து பார்க்கிறேன்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். பிளாஸ்டிக்
டப்பாவை மூடி, மேஜை டிராயரில் ஒளித்தான்.
ரெஸ்ட்டாரண்ட்டில் ஜெலீனாவும் மார்கனும் அவனுக்கு ‘ஹேப்பி பர்த்டே’
பாடினார்கள். அவனுக்குப் பிடித்த உணவு ஆர்டர் செய்தார்கள். ஆனால் எதிலும் மனம்
லயிக்கவில்லை. ‘அம்மா, எதைச் சாப்பிட்டாலும் நீ அனுப்பிய மாம்பழம் போல் இல்லை.
உனது பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி. நாளை கட்டாயம் வந்து பார்க்கிறேன் அம்மா’ என்று மீண்டும் சொல்லிக்கொண்டான்.
**** மறுநாள் சீனியர் ஹௌஸ் போனான் ஜான். சூப்பர்வைசர் வரவேற்றார். தான் அனுப்பிய மாம்பழப் பார்சல் வந்ததா என்றார். கவனத்தோடு ஃப்ரிட்ஜில் வைத்திருந்து ஜூன் 15ம் தேதி மாலை ஜானுக்குச் சேரும்படி அனுப்பச் சொல்லியிருந்தாராம், ஜேனட்.
“இறந்தவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்ற நாங்கள் தவறியதேயில்லை” என்றார்.
குறிப்பு: ஒரு வாரப் பத்திரிக்கை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பப்பட்டு, தேர்வு பெறாத ஐந்து கதைகளில் இரண்டாவது கதை இது.)
(c ) Y. Chellappa
email: chellappay@yahoo.com
அம்மாவின் மேல் அவனுக்குப் பாசம் அதிகம். ஜெலீனா தடுத்தாலும் கட்டாயம் வருவான். ? யாரால் அம்மாவை மறக்க முடியும்
பதிலளிநீக்கு//அம்மா, என்னை மன்னித்து விடு. நிச்சயம் நாளை வந்து பார்க்கிறேன்...//
பதிலளிநீக்குகலங்க வைத்தது...
மிக்க நன்றி, கவியாழி அவர்களே! பதிவர் திருவிழாவில் உங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி, திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அமெரிக்கப் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாசம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை வெளிக்காட்டுவதில் பல இடர்ப்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. (இந்தியாவிலும் இப்படித்தானோ?)
பதிலளிநீக்குபாவம் ஜேனெட்.. ஜான் மேல் கோபம் தான் வருகிறது..மனைவியோ தாயோ.. எது சரியென்று பார்க்க வேண்டும் பிள்ளைகள்..
பதிலளிநீக்குநன்றி கிரேஸ் அவர்களே!பெரும்பாலும் பிள்ளைகள் தான் குழம்பிப் போய் சரியான முடிவெடுக்காமல் தங்கள் உறவுகளைக் காயப்படுத்தி விடுகிறார்கள் என்று படுகிறது.
நீக்கு
பதிலளிநீக்குஇத்தனை வயதிலும் அன்னையை பற்றிப் படித்தால் மனம் ஏங்குவதுண்டு.அன்னையர் தினத்தன்று என் மனைவியை வாழ்த்துவேன். அவள் என் பிள்ளைகளுக்கு அம்மா அல்லவா. தாய் மகன் பரிவில் அமெரிக்காவாயிருந்தால் என்ன. இந்தியாவாயிருந்தால் என்ன வித்தியாசம் இருக்குமா என்ன.?
சிறப்பான கதைக்கு வாழ்த்துக்கள்.
வயதாக வயதாக ஆண்களும் தாயுள்ளம் கொண்டவர்களாக ஆகிவிடுவது கண்கூடு.
நீக்குஉள்ளத்து உணர்வுகளை இந்த அளவு கதையில் கொணர முடியுமா என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. கதையும், பாத்திரங்களும் மனதைவிட்டு அகலாது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குமனதைத் தொடும் கதை.
பதிலளிநீக்குநன்றி விஷால் அவர்களே!
நீக்குபரிசு வென்ற சிறுகதை
பதிலளிநீக்குமனதையும்வென்றது..
பாராட்டுக்கள்..!
நன்றி இராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்கு