பனிகொழுத்த இமயமதில்
நடனமிடும் ஈசனவன்
முடிதனிலே அடைந்திருந்தாள்
நங்கை - அவள்
முழுப்பெயரோ புனிதமுள்ள ‘கங்கை’
– அதை
விடமுடியாத் தாகமுடன்
ஒருமனதாய்த் தவமிருந்து
புவிதனிலே பகிரதனாம் பிள்ளை –
கொண்டு
புயலெனவே தவழவிட்ட எல்லை...! (1)
‘காசி’யெனும் புனிதநகர்
காசினியில் உயர்ந்ததுவாம்
சாத்திரங்கள் சொல்லுகின்ற
பாடம் – அதில்
காலெடுத்து வைத்தவர்க்கும்
யோகம் – அங்கே
மாண்டவர்கள் மீண்டுவந்து
மண்ணினிலே பிறப்பதில்லை
மறைந்திடுமாம் பிறவியென்னும்
வேடம்! – என
மந்திரங்கள் சொல்லுமடா
நாளும்! (2)
நீதியுடன் இருந்தாலும்
நியாயமுடன் நடந்தாலும்
மானிடரின் வாழ்வினிலே ‘பாவம்’
– எந்த
வகையினிலும் சேர்ந்துவிடும்
நாளும் – அது
வாய்மொழியில் தான்வருமோ
வசைமொழியில் தான்வருமோ
ஊரிழுக்கும் தேரேனவே ஓடும் –
‘பாவம்’
நீயிருக்கும் திசையினிலே
சேரும்! (3)
பாவமது எந்தவகை
பழையதுவா புதியதுவா
யாவுமிந்தக் காசியதில்
போகும் – கங்கை
யாற்றினிலே மூழ்கியதும்
சாகும் – இனி
மீதமுள்ள வாழ்க்கையதில்
நூறுபிழை செய்தாலும்
பாவமது சேராதாம் உன்னை –
கங்கை
பாகிரதி செய்வாளாம் நன்மை! (4)
பாவமதை நாமுமினிப்
போக்கிவிட வேண்டுமெனச்
சுற்றமுடன் சென்றிருந்தேன்
நானும்- காசி
சுற்றிவந்து பார்வையிட்டேன்
நாளும் – அதைச்
சொல்லவந்தால் வார்த்தையிலே
உள்ளம்வெந்து போகுதடா
உண்மைநிலை எண்ணிவிட்டால்
கூசும் – நெஞ்சம்
உருகுதடா, உதடுமட்டும்
பேசும்! (5)
ஈசன்முடி மேலிருந்து
இறங்கிவந்த கங்கைநதி
ஓடிவரும் பாதையிலே தானே –
காசி
ஊர்க்கழிவும் சேருதடா நாளும்
– மெல்ல
நீரினிலே நாமிறங்கி
மூழ்கியெழும் போதினிலே
நாறுதடா காலடியில் சேறும் –
அதற்குள்
நாலுபக்கம் கூட்டம்வந்து
சேரும்! (6)
பாவையர்கள் ஆடைகளை
மாற்றுகின்ற வேளைதனைப்
பார்த்திருக்கும் கூட்டமொன்றும்
உண்டு – கங்கைப்
படித்துறையில் சூழ்ந்திருக்கும்
நின்று – வந்த
யாத்திரிகர் உடைமைகளைக்
காத்திருந்தே கொள்ளையிடும்
காசியிலே பாவமில்லை என்றால் –
இந்தக்
காசினியே பாவமில்லை யன்றோ? (7)
செத்தவர்கள் மேனிதனைப்
பட்டுத்துகில் போர்த்திவந்து
வைத்திருப்பார் வரிசையிலே
பார்த்தோம் - அனல்
வைப்பதற்குக் காத்திருப்பார்
பார்த்தோம் – கொண்டு
வைத்துவிட்டுப் போனவர்கள்
கண்மறைந்து போனவுடன்
பாதியிலே தூக்கிடுவார்
பிணத்தை – கங்கைப்
பாய்ச்சலிலே வீசிடுவார் நிணத்தை! (8)
காசியிலே போனவுயிர்
சொர்க்கமதைச் சேருமென்று
கனவுகண்ட மேனியிலே தானே –
கங்கை
யாற்றினிலே நெருப்பினிலே தானே
– புதுப்
பாவமெல்லாம் தான்படிந்து
பாசியுடன் போட்டியிட்டு
மீனினங்கள் உண்ணும்உண வாகும்
– மிச்சம்
மீந்தவுடல் மிதந்தபடி
சாகும்! (9)
முன்னோர்கள் வானுலகில்
தள்ளாமல் வாழ்ந்திடவே
சடங்குகளைச் செய்திடவும்
கொள்ளை – கொள்ளை
காசுபணம் வேண்டும், பகல்
கொள்ளை! – இதைக்
காண்கையிலே மானுடத்தைக்
கண்டாலே வெறுப்புவரும்!
என்னசுற்றம் என்ன இது பிள்ளை – அட,
ஏனிதற்கோர் விடிவுஇங்கே
இல்லை? (10)
என்றுமனம் சொல்லிடினும்
எண்ணமிட்டால் கங்கைநதி
என்னபிழை செய்ததிங்கே
சொல்வீர்! – மனிதன்
இட்டபிழை அத்தனையும்
என்பேன்! – கங்கை
அன்றுமுதல் இன்றுவரை
தன்கடமை செய்தபடி
ஆடிவரும் ஓடிவரும், பாடி –
காசி
யாத்திரையைத் தேடிவரும்
கூடி! (11)
(தில்லி வானொலியில் 30-6-1990 அன்று ஒலிபரப்பான கவிதை).
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.
Ph. 044-67453273