சனி, அக்டோபர் 26, 2013

அலையே வா! (சிறிய கவிதை)

 
பஹ்ரைனில் நான் -வருடம் 2006
வானத்து மேனியைத் தொட்டு-எழில்
வையத்தின் எல்லையாய்க் கால்பரப்பிட்டு
நீலத்தி ரைக்கடல் இங்கே – நல்
நித்திரை கொண்டு களித்திடல் காணீர்!

பொன்னென மேவிடும் நிலவு – அதன்
புத்தொளி கண்டு புறப்படும் அலைகள்
மின்னெனத் தாவிடும் மேலே – கரை
மீதினில் ஊர்ந்திடும் வேகத்தினாலே!

ஆயிரம் ஆயிரம் யுகங்கள் – கடல்
அன்னையின் மார்பினில் ஆடியதாலே
போயினதோ நீர் வேட்கை – மணல்
பூத்திடும் கரையினில் காணுது ஆசை?

வெள்ளியை உருக்கிய மேனி – அது
விண்ணினைத் தழுவிட விரைந்தது போலே
துள்ளி எழுந்திடும் சாயும் – உடன்
துணைவரத் துணைவரத் தொடர்ந்துமுன் னேறும்!

ஏழையின் கனவுகள் போலே – எழும்
இளமையின் ஆசைகள் தொடர்வது போலே
கோழையின் அச்சங்கள் போலே – அலை
கூட்டங்களாகவே வாழ்ந்திடல் கண்டேன்!

தனிமையில் இன்பங்கள் இல்லை – எனும்
தத்துவம் தன்னை ஞாலத்தில் வாழும்
மனிதருக் காகவே சொல்ல – அலை
வந்திங்கே பேசி மறைந்திடல் கண்டேன்!

எல்லையிட்டே நிற்கும் கரைகள் – அதை
எத்திவிட்டே அலை ஏகிடப் பார்க்கும்
வெல்வதுண்டோ ஒருநாள்? – எனில்
விடுவதுண்டோ அலை, வேகத்தைத் தானும்?

மாந்தருக்கே இது பாடம் – வெற்றி
மாலையைச் சூடிட யார் முனைந்தாலும்
சோர்ந்திட லின்றி மென் மேலும் –செயல்
துணிந்திடல் வேண்டும் என்பது காணீர்!

   - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
             (1988 இல் எழுதி இதுவரை வெளிவராத கவிதை).

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

வெள்ளி, அக்டோபர் 25, 2013

காசி யாத்திரை (இன்னொரு தீபாவளிக் கவிதை)


பனிகொழுத்த இமயமதில்
நடனமிடும் ஈசனவன்

முடிதனிலே அடைந்திருந்தாள் நங்கை  - அவள்

முழுப்பெயரோ புனிதமுள்ள ‘கங்கை’ – அதை

விடமுடியாத் தாகமுடன்

ஒருமனதாய்த் தவமிருந்து

புவிதனிலே பகிரதனாம் பிள்ளை – கொண்டு

புயலெனவே தவழவிட்ட எல்லை...!  (1)

 

‘காசி’யெனும் புனிதநகர்

காசினியில் உயர்ந்ததுவாம்

சாத்திரங்கள் சொல்லுகின்ற பாடம் – அதில்

காலெடுத்து வைத்தவர்க்கும் யோகம் – அங்கே

மாண்டவர்கள் மீண்டுவந்து

மண்ணினிலே பிறப்பதில்லை

மறைந்திடுமாம் பிறவியென்னும் வேடம்! – என

மந்திரங்கள் சொல்லுமடா நாளும்!  (2)

 

நீதியுடன் இருந்தாலும்

நியாயமுடன் நடந்தாலும்

மானிடரின் வாழ்வினிலே ‘பாவம்’ – எந்த

வகையினிலும் சேர்ந்துவிடும் நாளும் – அது

வாய்மொழியில் தான்வருமோ

வசைமொழியில் தான்வருமோ

ஊரிழுக்கும் தேரேனவே ஓடும் – ‘பாவம்’

நீயிருக்கும் திசையினிலே சேரும்!  (3)

 

 

பாவமது எந்தவகை

பழையதுவா புதியதுவா

யாவுமிந்தக் காசியதில் போகும் – கங்கை

யாற்றினிலே மூழ்கியதும் சாகும் – இனி

மீதமுள்ள வாழ்க்கையதில்

நூறுபிழை செய்தாலும்

பாவமது சேராதாம் உன்னை – கங்கை

பாகிரதி செய்வாளாம் நன்மை!  (4)

 

பாவமதை நாமுமினிப்

போக்கிவிட வேண்டுமெனச்

சுற்றமுடன் சென்றிருந்தேன் நானும்- காசி

சுற்றிவந்து பார்வையிட்டேன் நாளும் – அதைச்

சொல்லவந்தால் வார்த்தையிலே

உள்ளம்வெந்து போகுதடா

உண்மைநிலை எண்ணிவிட்டால் கூசும் – நெஞ்சம்

உருகுதடா, உதடுமட்டும் பேசும்! (5)

 

ஈசன்முடி மேலிருந்து

இறங்கிவந்த கங்கைநதி

ஓடிவரும் பாதையிலே தானே – காசி

ஊர்க்கழிவும் சேருதடா நாளும் – மெல்ல

நீரினிலே நாமிறங்கி

மூழ்கியெழும் போதினிலே

நாறுதடா காலடியில் சேறும் – அதற்குள்

நாலுபக்கம் கூட்டம்வந்து சேரும்! (6)

 

பாவையர்கள் ஆடைகளை

மாற்றுகின்ற வேளைதனைப்

பார்த்திருக்கும் கூட்டமொன்றும் உண்டு – கங்கைப்

படித்துறையில் சூழ்ந்திருக்கும் நின்று – வந்த

யாத்திரிகர் உடைமைகளைக்

காத்திருந்தே கொள்ளையிடும்

காசியிலே பாவமில்லை என்றால் – இந்தக்

காசினியே பாவமில்லை யன்றோ? (7)

 

செத்தவர்கள் மேனிதனைப்

பட்டுத்துகில் போர்த்திவந்து

வைத்திருப்பார் வரிசையிலே பார்த்தோம்  - அனல்

வைப்பதற்குக் காத்திருப்பார் பார்த்தோம் – கொண்டு

வைத்துவிட்டுப் போனவர்கள்

கண்மறைந்து போனவுடன்

பாதியிலே தூக்கிடுவார் பிணத்தை – கங்கைப்

பாய்ச்சலிலே வீசிடுவார் நிணத்தை! (8)

 

காசியிலே போனவுயிர்

சொர்க்கமதைச் சேருமென்று

கனவுகண்ட மேனியிலே தானே – கங்கை

யாற்றினிலே நெருப்பினிலே தானே – புதுப்

பாவமெல்லாம் தான்படிந்து

பாசியுடன் போட்டியிட்டு

மீனினங்கள் உண்ணும்உண வாகும் – மிச்சம்

மீந்தவுடல் மிதந்தபடி சாகும்! (9)

 

முன்னோர்கள் வானுலகில்

தள்ளாமல் வாழ்ந்திடவே

சடங்குகளைச் செய்திடவும் கொள்ளை – கொள்ளை

காசுபணம் வேண்டும், பகல் கொள்ளை! – இதைக்

காண்கையிலே மானுடத்தைக்

கண்டாலே வெறுப்புவரும்!

என்னசுற்றம்  என்ன இது பிள்ளை – அட,

ஏனிதற்கோர் விடிவுஇங்கே இல்லை? (10)

 

என்றுமனம் சொல்லிடினும்

எண்ணமிட்டால் கங்கைநதி

என்னபிழை செய்ததிங்கே சொல்வீர்! – மனிதன்

இட்டபிழை அத்தனையும் என்பேன்! – கங்கை

அன்றுமுதல் இன்றுவரை

தன்கடமை செய்தபடி

ஆடிவரும் ஓடிவரும், பாடி – காசி

யாத்திரையைத் தேடிவரும் கூடி!  (11)

 (தில்லி வானொலியில் 30-6-1990 அன்று ஒலிபரப்பான கவிதை).
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

 

புதன், அக்டோபர் 16, 2013

தீபாவளிக் கவிதை – சற்று முன்னதாகவே!


நரகாசுரன் வாழ்க

அரக்கனவன் நர காசுரன் – முன்பு
ஆண்டிருந் தானாம் நாட்டிலே
அறம்புரி வோரை வெருட்டியே – தன்னை
அண்டினபேரைத் துன் புறுத்தியே

இருந்திடும் வேளையில் தேவனாம்- கண்ணன்
எழுந்தரு ளிப் போர்க் களத்திலே
அரக்கனை வென்றுடல் வீழ்த்தினான்- அந்த
அரக்கனும் சாகையில் கூறினான்:

“கண்ணனே என் பிழை எண்ணினேன் – உன்
கைகளி னால் விழிப் பெய்தினேன் – இந்தச்
சின்னவன் சாவதும் இன்பமே! – உன்றன்
செந்தழல் பாதத்தில் நின்றுமே! – இனி

மண்ணினில் யாவரும் இந்தநாள் – தன்னை
மகிழ்ந்து கொண்டாடியே போற்றுக! – என்றும்
புண்ணிய ‘தீபா வளி’யெனப் – பெயர்
புனைந்துமே இந்தநாள் வாழிய!”
**

உண்மைக் கதையிது ஆகுமோ? – இல்லை
   ஒப்பனை ஏற்றிய சாயமோ? – இதைச்
சொல்ல வல் லோர்கள் யாவரோ? – எவர்
   சொன்னாலும் உண்மை மறையுமோ?

‘தீபாவளி’ என்ற சொல்லிலே – மனம்
   தீபச் சுடராக மின்னுமே! – தினம்
தீபாவளியென வந்திடின் – நம்
  சின்னக்குழந்தைகள் துள்ளுமே! – இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

மெல்ல மெல்ல இருள் போகவும் – ஒளி
    மெல்லக் கிழக்கினில் காணவும்
முந்தை இரவினில் கண்விழித்தே – பணி
   முற்றும் புரிந்திட்ட அன்னையும்

 செல்லக் குரலிட் டெழுப்புவாள் – பிள்ளை
     சின்ன இளமுகம் வருடுவாள்
துள்ளி எழுந்தவன் பாதி உறக்கத்தில்
     தூங்கிட மீண்டும் முயலுவான் – இவள்

செல்ல மொழியினில் ஏசுவாள் – வெடிச்
     சத்தங்களைத் துணை கோருவாள்  - புதுச்
சட்டையும் உண்டென்று கூறுவாள் – இவன்
    சட்டென்று துள்ளி எழுகுவான் – கண்ணில்

பாதிக் கனவுகள் பாதி விழிப்புகள்
பார்ப்பது தான் என்ன இன்பமே! – இந்தத்

   தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
   தீயவனாயினும் கும்மியடி- நர
   காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

எள்ளில்வரும் ஒரு எண்ணெய் வரும் – இவன்
   சின்ன உடலினில் மெல்ல விழும்
அன்னைவிரல் வரும் மெல்லத்தொடும் – பின்
   அழுத்திவிடும், கை வழுக்கி விழும்!

சொட்டும்துளி ஒரு கண்ணில் விழும் – அதைத்
   தொட்டவிரல் இன்னும் எண்ணெய் தரும்!
கொட்டும் கண்ணீருடன் குளிக்க வரும் – சிகைக்
   காயின் நெடியது தானும் வரும்!

எண்ணெய்க் குளியலை விட்டெழுந்தால் – இவன்
எய்துவதே பே ரின்பமடா! – இந்தத்

   தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
   தீயவனாயினும் கும்மியடி- நர
   காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

கன்னங்கருத்ததோர் மண்ணிருந்தே –வரும்
  வெள்ளைப் பருத்தியும் ஆலையிலே
கன்னம் கறுத்தவர் தொட்ட உழைப்பினில்
  வண்ணப் புத் தாடையாய்ப் பூத்து வரும்!

பச்சை இலைகளைத் தின்றுமிழும் – புழு
  பாருக்கெல்லாமே பட்டு தரும்!
வெள்ளி இழைகளைக் கத்தரித்தே – உடன்
  நெய்திடச் சேலையும் தான் பிறக்கும்!
 
காவிரி பாய்கிற ஊர்களிலும் – எங்கள்
  காஞ்சியிலும் சேலம் கூடலிலும்
பூவிரிக்கும் பட்டுச் சேலையின்றேல் – ஒளி
  பூத்திடுமோ,தீ பாவளியில்? – அந்தப்

பட்டுதரும் தொழி லாளர்கள் வாழ்வினில்
பரவட்டும் ஒளியென்று கும்மியடி- இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

மெல்லத் தெறிக்கின்ற ‘கேப்’ வெடியும் – விண்ணில்
  மேல்வெடிக்கின்றதோர் ‘ராக்கெட்’டும்
கண்ணைத்திருடும் வண்ண மத்தாப்பும் – நம்
  கால்தொட்டுச் சிரிக்கின்ற ‘சக்கர’மும்

யானைவெடிகளும் ‘பாம்பு’ம் ‘அணுகுண்டு’ம்
  யாரும் பிடிக்கின்ற ‘சாட்டை’யதும்
தானும் வெடிக்கவே தாவியழும், அன்னை
  தோளினில் சாய்ந்த இளங்குழந்தை!
 
பட்டுக்கரங்களில் பட்டாசை – சின்னப்
  பையன் எடுத்ததைத் தீக்கொளுத்திப்
‘பட்’டென ஓசையில் காதுகள் பொத்தியே
  பார்க்கின்ற இன்பமே இன்பமடா! –இந்தச்
 
சின்ன வெடிகளை மத்தாப்பு வாணங்கள்
செய்தவர் வாழ்கென்று கும்மியடி – எங்கள்
சிவகாசி வாழ்கென்று கும்மியடி – இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!

(குறிப்பு: 1991- இல் தீபாவளியன்று தில்லி வானொலியில் வெளியானது. என் மகனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது தீபாவளியன்று அவனுடைய நடவடிக்கைகளை அனுபவித்து எழுதிய கவிதை. மினியாபோலிஸில் இருந்து இன்றும் அவன் ரசிக்கக்கூடும்.).

 © Y. Chellappa
Email: chellappay@yahoo.com 

 

 

திங்கள், அக்டோபர் 07, 2013

திடீரென்று வந்தவன் (சிறுகதை)

-இமயத்தலைவன்

காலை ஆறு மணிக்குக் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்று  அதிர்ச்சியோடு கதவைத் திறந்தான் குமார். வாசலில் ஒரு வாலிபன். கையில் சூட்கேசும் முதுகில் லேப்டாப் பையுமாக தமிழ் நாட்டு ஆசாமி. விமானப் பதிவு அட்டைகள் சூட்கேசில் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹாய்...குட் மாணிங். ஐ ஆம் சிவா” என்றான்.

சனி, செப்டம்பர் 21, 2013

புதன், செப்டம்பர் 11, 2013

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
இமயத்தலைவன்

“புதுமையாக இருக்குமாமே!” என்றாள் சுமித்ரா.

“ஆம். அது ஒரு பஸ் தான், ஆனால் வாத்து போல தரையிலும் தண்ணீரிலும் போகும். அதனால் தான் ‘டக் டூர்’ என்கிறார்கள். சக்கரம் வைத்த படகு மாதிரி இருக்கும். இரண்டாம் உலகப்போரில் ராணுவத்திற்காகச் செய்த வண்டி, யுத்தம் முடிந்த பிறகு சுற்றுலாவுக்கு விட்டு விட்டார்கள்” என்றாள் எலைன்.

புதன், செப்டம்பர் 04, 2013

அன்னையர் தினம் (சிறுகதை)

அன்னையர் தினம் (சிறுகதை)
இமயத்தலைவன் 

ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தைக் கடந்து மன்ஹாட்டனுக்குள் நுழைந்தது கார். வசந்தகாலப் பூக்களால் இளஞ்சிவப்புப் போர்வை போர்த்திருந்த ‘சென்ட்ரல் பார்க்’ வந்ததும் இறங்கினாள் ஜேனட். அவள் வாழ்க்கையையே தூக்கி நிறுத்திய இடமல்லவா அப்பூங்கா!  

இளம் வயதிலிருந்தே செய்தியாளராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தாள், ஜேனட். கல்லூரிப் படிப்பிற்காக ஃபிலடெல்பியாவிலிருந்து நியூயார்க்  வந்தபோது அவள் வானம் விரியத் தொடங்கியது. கல்லூரி முடிந்தவுடன் ஒவ்வொரு மாலையும் ஏதாவதொரு பத்திரிகையின் அலுவலகத்திற்குப் போய் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கவனிப்பாள். பிரபலமான செய்தியாளர்கள் நுழையும் பொழுதெல்லாம் உதவி ஆசிரியர்கள் ஓடி வந்து புதிய செய்திக்காகச் சூழ்ந்து கொள்வதைப் பார்ப்பாள். தானும் புகழ்வாய்ந்த செய்தியாளராக ஆகும்போது தன்னையும் இப்படித்தானே வரவேற்பார்கள் என்று கற்பனை செய்வாள். அதற்கு சரியான வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்குவாள்.