திங்கள், ஆகஸ்ட் 05, 2013

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குளம் 

தாத்தாவின் முகமே இப்போது மறந்துவிட்டது. (அம்மாவின் அப்பா). இறந்து போய் முப்பத்தாறு வருடங்கள் ஆகிவிட்டது. அவரை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு வயது ஐந்தரை அல்லது ஆறு இருக்கலாம்.
அன்று மாலை ஐந்து மணிக்கே அம்மா சூடாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். புளிசாதமும் உருளைக்கிழங்கு பொடிமாசும். மணம் தெருவைக் கூட்டியது. ராத்திரி ஊருக்குப் போகிறோம் என்றார் அப்பா. எந்த ஊர் என்று கேட்கவில்லை. தாத்தா ஊர் தான் என்று தெரியும். இரண்டு வருடங்களாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘ஊதக்காத்து. குளிரும்’ என்று அப்பா கை வைத்த பனியன் போட்டுக்கொண்டார்.  பொதுவாக அவர் சட்டை அணிவதில்லை. ஒரு காஷ்மீர் போர்வையோடு சரி.
அம்மா, அப்பா, நான். என்னை விட மூன்று வருடம் பெரியவளான அக்கா. ஒரு இரும்புப் பெட்டி. துணிமணிகளைச் சுருட்டி மடித்து கன்றுக்குட்டி கட்டும் மெல்லிய கயிற்றால் கூட்டல் குறி போல் கட்டி, கயிற்றின் நுனி வளையம் மாதிரி அப்பா கையில்.வாழையிலையில் கட்டிய சாப்பாடும், முகம் தெரிகிற மாதிரி பளபளப்பான பித்தளை கூஜாவில் குடிநீரும் அம்மாவிடம்.

இராணிப்பேட்டையிலிருந்து பஸ். காட்பாடியில் இறங்கி ரயில். ரயிலில் கூட்டம் அதிகம் என்பதால் என்னைக் குண்டுகட்டாகத் தூக்கி சன்னல் வழியாக உள்ளே போட்டார் அப்பா. (அப்போதெல்லாம் சன்னலுக்குக் கம்பிகள் கிடையாது). அக்காவும் அதே வழியில். அம்மாவும் அப்பாவும் சாமான்களும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே வர தாமதம் ஆனதில் ரயில் போய்விடுமோ என்று பயம். என் முதல் பயணம் அது. சேலம் ஜங்ஷனில் இறங்கி ஓமலூருக்கு ரயில் மாறி பஸ்சில் தாரமங்கலம் அடையும் போது காலை மணி எட்டு.
****
‘இது தான் கைலாசநாதர் கோவில்’ என்றாள் அம்மா. ‘சாயந்திரம் குளித்துவிட்டு வந்து பார்க்கலாம்’ என்றாள். அதற்குள், “வாங்க சாமி” என்று குரல் கேட்டது. உயரமாக ஒல்லியாக கருப்பாக ஓர் ஆசாமி. அப்பாவைப் பார்த்து கை கூப்பினார். அம்மாவைப் பார்த்து “வாங்க தாயி” என்றார்.

“சவுக்கியமா கருவாயா? வண்டி எங்கே?” என்றாள் அம்மா. கருவாயன் அருகில் நின்றிருந்த மாட்டுவண்டியைக் காட்டினார். என்னையும் அக்காவையும் தூக்கி வண்டிக்குள் வைத்தார். “முன்னால் போய்விடுங்கள்” என்றார். நான் வண்டிக்கூண்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மாடு தன் வாலைச் சிலுப்பியபோதெல்லாம் அதன் முரட்டு ரோமம் என் கன்னத்தில் உராய்ந்தது.     

குருக்கப்பட்டி வர பத்து நிமிடம் கூட ஆகவில்லை. கோணல்மாணலான கருங்கல்லால் வேலிச்சுவர் போட்ட வயல்வெளி. நூறு தென்னைமரமும் பத்து ஏக்கரும் இருந்ததாம் தாத்தாவிடம். கண்பார்வை குறைந்தவுடன் ஐந்து ஏக்கர் விற்றுவிட்டாராம். (பணத்தை நங்கவள்ளியில் ‘ஜட்ஜ்’ அய்யரிடம் வட்டிக்கு விட்டிருப்பதாக அம்மாவின் ஊகம்).

கல்சுவரில் தென்னங்கூரை. ‘இது வீடு கிடையாது, குடிசை’ என்றாள் அக்கா. உள்ளே அறைகள் இல்லாததில் அவளுக்கு ஏமாற்றம். கூரையிலிருந்து புகைமண்டிய சிலந்தி வலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு மூலையில் மண் அடுப்பில் வெண்கலப் பானையில் உலை. பித்தளை ஊதுகுழலில்  எரியும் தென்னங்கட்டைகளை ஊதிக்கொண்டிருந்த பாட்டி, கண் எரிச்சலைத் துடைத்துக்கொண்டு, “வாம்மா, வாடா கண்ணு” என்றார் எங்களைப் பார்த்து.

“தாத்தா கிணற்றங்கரையில் இருப்பார். வர்றீங்களா?” என்றார் கருவாயன். “அப்படியே குளிச்சிட்டு வந்துடுங்க. சாப்பிடலாம்” என்றாள் பாட்டி.

பெரிய நிலைக்கிணறு. இருபதடி விட்டம். இறங்குவதற்குப் படிகள் இருந்தன. தாத்தா வேட்டியை சுருக்கி மடித்துக் கட்டியிருந்தார். அவர் பிடியில் ஒரு காளை மாடு ‘கவலை’ இழுத்துக் கொண்டிருந்தது. நீண்ட துருத்தியில் தண்ணீர் கிளம்பி ஒரு தொட்டியில் விழுந்து வாய்க்காலில் ஓடியது. குளித்தபோது சூடாக இதமாக இருந்தது. ‘இனிமே தெனமும் இப்படித் தான் குளிக்கப்போறேன். ஜாலியாக இருக்கு’ என்றேன். ‘ஆனால் நான் தான் முதலில்’ என்றாள் அக்கா.

“போதும் சாமி, கவலய நிறுத்திக்கலாம்” என்று கருவாயன் சொன்னவுடன் தாத்தா, மாட்டை அவிழ்த்து அவரிடம் கொடுத்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினார். ஆறடி உயரம். மெலிந்த தேகம். கடுமையில்லாத முகத்தில் மூக்குக் கண்ணாடி. சிவப்பும் மஞ்சளும் கலந்த பிளாஸ்டிக் ஃப்ரேமில் விரிசல் தெரிந்தது. அக்கா ஓடி வந்து “தாத்தா” என்று கட்டிக்கொண்டாள். “வாடா பரசு” என்று புன்சிரிப்புடன் என்னைத் தூக்கிகொண்டார். பரசுராமன் என்று அவர் தான் பெயர் வைத்தாராம். “நன்றாகப் படிக்கிறாயா?” என்றார். ‘உம்’ என்றேன் பெருமையுடன்.

“கருவாயா” என்று கூப்பிட்டார். அதற்குள் அவர் வயக்காட்டின் ஒரு மூலைக்குப் போய்விட்டிருந்தார். “கொழந்தைங்க வந்திருக்கில்ல, நல்ல எளனியா பத்து கா பறிச்சிப் போடு. கன்னியப்பன் காட்டுலேர்ந்து நா சொன்னேன்னு நாலு கரும்பு ஒடச்சிக்கிட்டு வா. சீக்கிரம் வா. மசமசன்னு நிக்காதே” என்று அதட்டலான குரலில் சொன்னார்.

கிணற்றிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியான வரப்பின் மீது நடந்தோம். வாய்க்காலில் வந்த தண்ணீர், வெள்ளம் மாதிரி ஒரு வயலில் பாய்ந்து அடுத்த வயலுக்குள் நுழைந்து சிறிது நேரத்தில்  மண்ணோடு கலந்து செடிகளிலும் பயிர்களிலும் ஈரமாக மின்னியதை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“அப்போது நீ சின்னக் குழந்தை” என்று தாத்தா ஒரு புளிய மரத்தைக் காட்டினார். “இப்போது நன்றாக வளர்ந்து விட்டது. கருவாயன் வந்தால் ஊஞ்சல் கட்டிக்கொடுக்கச் சொல்றேன். ரெண்டு பேரும் சந்தோஷமாக ஆடுங்கள்” என்றார்.

எதிர்ப்பக்கம் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது. ”முள் இருக்கும்.  போக வேண்டாம்” என்றார் தாத்தா. “அதோ பார்,  மாஞ்செடி. ஒங்க அண்ணன் நட்டது. மூணு வருஷம் ஆச்சு. நீ அஞ்சாவது படிக்கும்போது காய்க்க ஆரம்பிச்சிடும். மல்கோவான்னு தான் நெனைக்கறேன்.” என்று காட்டினார். பசுமையும் இளஞ்சிவப்பும் கலந்த இலைகள். அழகாக இருந்தது. அண்ணன் என்றது, என் பெரியம்மாவின் மகனை. அவன் பிறந்து சில வருடங்களில் பெரியம்மா இறந்துவிட்டார். பாட்டி தான் அவனை வளர்க்கிறாராம். நாகியம்பட்டியில் அப்பா வீட்டுக்குப் போயிருக்கிறானாம். அடுத்த வாரம் வருவானாம். இதுவரை அவனைப் பார்த்ததில்லை.

பருத்தியும் கொஞ்சம் போட்டிருந்தார் தாத்தா. அறுவடை முடிந்து பருத்தி மூட்டைகள் உள்ளே அடுக்கி வைத்திருக்கிறாராம். அந்த வயல்கள் காலியாக இருந்தன.

“தாத்தா, ஒனக்கு நூறு தென்ன மரம் இருக்காமே?” என்று கண்களை அகல விரித்துக் கேட்டேன். தாத்தா சிரித்துக்கொண்டே “நீயே எண்ணு பார்க்கலாம். சாப்ட பெறகு ரெண்டு பேரும் அப்படியே நடந்து போய் வயக்காட்டில் இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு பாத்துட்டு வந்து எங்கிட்ட சொல்லணும். சரியா?” என்றார். “சரி” என்று தலை ஆட்டினேன்.

அதற்குள் பாட்டியின் குரல் கேட்டது. “உளுத்தங்கா பறிச்சிட்டு வந்துடுங்க. இட்லிக்கு மாவரைக்கணும்” என்றாள். “ஒனக்கு வேற வேலை யில்லையா? உளுத்தங்காய வளரவே விடாதே” என்று தாத்தா சொன்னாலும், எங்களை அழைத்துக்கொண்டு உளுத்தஞ்செடிகள் இருந்த பக்கம் தான் போனார். செடியை நாசம் செய்யாமல் காய்களைப் பறிக்கும் விதம் சொன்னார். மூவரும் பறித்தோம். “ஏன் தாத்தா தோசை மாவு மாதிரி வாசனை வருகிறது?” என்றாள் அக்கா. “இதையும் அரிசியையும் சேர்த்துத் தானே தோசை மாவு அரைப்பார்கள்?” என்றார் தாத்தா.

அருகில் சின்னதாக இன்னொரு பாத்தியில் காராமணி வளர்ந்து கொண்டிருந்தது. அவரை, புடலை, பாகல் இன்னொரு வயலில் இருந்தன. ஆளுயரத்திற்குப் பந்தல் போட்டிருந்தார்கள். பச்சை நிறக் கத்தரிக்காய்களும் மஞ்சள் நிற வெண்டைக்காய்களும் இன்னொரு சதுரத்தில் காய்த்துக் கொண்டிருந்தன. “வெண்டைக்காயைப் பறித்து உடனே தின்று விடாதே! நன்றாகக் கழுவித் தான் சாப்பிடவேண்டும். பூச்சி மருந்து இருக்கும்” என்றார் தாத்தா.

“கொஞ்சம் இரு. சட்டினிக்குப் புளியங்காய் பறித்துக்கொள்ளலாம்” என்றவர் ஒரு நீண்ட தொறட்டியை எடுத்துவந்து பிஞ்சுப் புளியங்காய்களாகப் பார்த்து சொடுக்கினார். கீழே விழுந்ததைப்  பொறுக்கிக் கொண்டு பாட்டியிடம் கொடுத்தோம். யாருக்கும் தெரியாமல் ஒரு புளியம்பிஞ்சை வாயில் அடக்கிக்கொண்டேன். ஒரே புளிப்பு!

வீட்டிற்கு வந்துவிட்டோம். பாட்டியும் அம்மாவும் உளுத்தங்காய்களை உரித்து எடுத்துக்கொண்டு உரலில் அரைக்க உட்கார்ந்தார்கள். எங்கள் இருவருக்கும் தட்டில் புளிசாதமும் தயிர் சாதமும் தயாராக இருந்த்து. சாப்பிட்டுவிட்டு வீட்டின் பின்புறம் சுற்றிப் பார்க்கப் போனோம்.

தாத்தாவைத் தேடிக்கொண்டு பஞ்சு வியாபாரி ஒருவர் கைத்தராசுடன் வந்தார். ராத்தல் பருத்தி இவ்வளவு ரூபாய் என்று சொன்னார். தாத்தா சத்தம் போட்டார். “ஏண்டா இப்படி ஏழை விவசாயிகளைக் கொள்ளை அடிக்கிறீர்கள்?” என்றார். ஏதோ பேரம் நடந்தது. பருத்தி மூட்டைகளை எடை போட்டுக் கொடுத்துவிட்டு கைகழுவிக்கொண்டு ஒரு டம்ளர் மோர் குடித்தார். பஞ்சு வியாபாரிக்கும் ஒரு டம்ளர் கொடுத்தார். பொறுமையில்லாமல் அங்கும் இங்கும் நடந்தார். “என்னமாய் வெயில் கொளுத்துகிறது! பத்து எளனி வெட்டிக்கொண்டு வர எவ்வளவு நேரம் பண்ணுகிறான் இந்தக் கருவாயன்! வரட்டும், அவனை என்ன பண்ணுகிறேன் பார்” என்று கத்தினார். சரி, ஏதோ பெரிய சண்டை நடக்கப்போகிறது என்று நாங்கள் ஓடி வந்தோம்.

கருவாயன் வந்தார். பறித்த தென்னங்காய்கள் தோளிலும், நீண்ட கூர்மையான அரிவாள் கையிலுமாக, வியர்வை வழிய அவர் வந்ததைப் பார்த்தவுடன் தாத்தாவுக்கு மனம் இளகிவிட்டது. “ஏண்டா இவ்ளோ நேரமா காணமேன்னு பாத்தேன். ஒனக்கும் வயசாயிட்டே வருதில்லையா?” என்றார் இரக்கத்துடன். “தண்ணியாய் மூணு காய் வெட்டு. மொதல்ல இவருக்கு ஒண்ணு குடு. நாலு எடத்துக்குப் போறவர்” என்று பஞ்சு வியாபாரியைக் கைகாட்டினார்.

இனிமையென்றால் அவ்வளவு இனிமை, அந்த இளநீர். விடாமல் மூன்று இளநீர் குடித்தேன். மோவாயிலும் கழுத்திலும் வழிந்தது. “தாத்தா, நான் தினமும் இப்படித்தான் குடிப்பேன்“ என்றேன் கர்வமாக. “ஒனக்கில்லாததாடா கண்ணு?” என்றார் தாத்தா கொஞ்சலுடன். பள்ளிக்கூடம் போனதும் எல்லாப் பையங்களிடமும் இதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள வேண்டும். யாருடைய தாத்தாவுக்கு நூறு தென்னை மரங்கள் இருக்கும், என்னை விட்டால்?

அதற்குள் பாட்டி வேகமாக வெளியில் வந்தார். அரைத்த மாவு  கையில் வெள்ளையாக வழிந்து கொண்டிருந்தது. “ஒரு காரியம் சொன்னா அது மட்டும் தான் செய்வீர்களா?” என்று பிடித்துக்கொண்டார். எனக்கு விளங்கவில்லை. “இட்லிக்குச் சட்னி அரைக்க வேண்டாமா? பச்சை மிளகாயும் வெள்ளரிக்காயும் வேண்டாமா? சொன்னால் தான் செய்வீர்களா?” என்றார். “அவ்ளோ தானே, ஒரே நிமிஷம்” என்று தாத்தா ஓடினார். நாங்களும் பின்னால் ஓடினோம். அவர் பச்சை மிளகாயைப் பறிக்க, நாங்கள் குனிந்து தரையோடு தரையாய் விரல் நீளத்திற்கு வளர்ந்திருந்த வெள்ளரிக்காய்ப் பிஞ்சுகளைப் பறித்தோம். “கழுவாமல் தின்றுவிடாதே” என்று எச்சரித்தார் தாத்தா. பக்கத்தில் வாய்க்காலில் கண்ணாடி மாதிரி தண்ணீர். அவசரமாகக்  கழுவினோம்.  
ஆளுக்கு ஐந்து வெள்ளரிப்பிஞ்சுகள் பாட்டியிடம் கொடுத்தோம். வந்ததே கோபம் அவருக்கு. “ஒங்க தாத்தாவுக்குத் தான் கஞ்சத்தனம் என்றால் ஒங்களுக்குமா? ஒராளுக்குக் கூட காணாதே! போய் இதப்போல மூணு பங்கு கொண்டுவா” என்று ஒரு மூங்கில் கூடையைக் கொடுத்தார். “சீக்கிரமா பறிச்சிண்டு வா” என்றார்.

அக்கா வரவில்லை. நான் மட்டும் ஓடினேன். தெற்குப்பக்கத்து வரப்பிலிருந்து கிழக்குப்பக்க வரப்பிற்குப் போகவேண்டும். அப்போது கருவாயன் அதே வரப்பில் எனக்கு எதிராக வந்து கொண்டிருந்தார், தலையில் நாலு பெரிய கரும்புகளுடன். நீட்டிக்கொண்டிருந்த கரும்பு தோகை என்மீது திடீரென்று பட்டதில் நான் நிலை தவறி வெறுமையாய் இருந்த ஒரு வயலுக்குள் விழுந்தேன்.

வாய்க்கால் தண்ணீர் பாய்ந்து குளம்போல் ஆகியிருந்த வயல் அது.  விழுந்ததில் உடம்பெல்லாம் சேறு பூசிக்கொண்டது. வயலில் இருந்த சிறுகற்களும் உலர்ந்த புல்பூண்டுகளும் முகம், கை, கால் எல்லா இடத்திலும் கீறிவிட்டன.

கருவாயன், சுருக்கென்று திரும்பி, ஒற்றைக் கையால் என்னைத் தூக்கி விட்டார். “இருங்க சாமி, வர்றேன்” என்று கரும்பை ஓரமாக இறக்கி வைத்துவிட்டு என்னைக் கையோடு கூட்டிப்போய் கவலை இறைக்கும் பகுதியில் இருந்த பெரிய தொட்டிக்குள் தொப்பென்று போட்டார். “நல்லா தேச்சிக் குளிச்சுடு சாமி! இல்லாட்டி ஒடம்பு அரிக்கும்” என்றார்.

சப்தம் கேட்டு பாட்டி பதைத்துக்கொண்டு ஓடிவந்தார். “நல்ல வேளைடா கண்ணு! ஒண்ணும் பெரிசா ஆகலே. ரெண்டு நாள் ஜாக்கிரதையா நடந்தேன்னா பழகிடும். இரு சோப்பு கொண்டு வர்றேன்” என்று போனார். அன்று வெள்ளரிக்காய் பறிக்கும் பாக்கியம் இல்லாமல் போனதில் எனக்கு வருத்தமே.
****
மறு நாள் விடியற்காலையிலேயே எழுந்துவிட்டேன். நேற்று சாப்பிட்ட பிஞ்சு வெள்ளரிக்காயின் சுவை இன்னும் நாக்கிலேயே இருந்தது. இன்று எப்படியும் இருபது வெள்ளரிக்காய் சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. இருபது என்ன கணக்கு என்று தெரியவில்லை. ஒன்று, இரண்டு... என்று நூறு வரையும், பத்து, இருபது,...என்று ஆயிரம் வரையும், ஆயிரம், இரண்டாயிரம்,.. என்று லட்சம் வரையும் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனாலும் இருபது போதும் என்று ஏன் தோன்றியதோ தெரியவில்லை.

தாத்தா எனக்கு முன்னால் எழுந்து வயக்காட்டைச் சுற்றிப்பார்க்கப் போய்விட்டிருந்தார். நீண்ட சதுரமாக இருந்த வயற்காடு. தினமும் இரண்டு முறையாவது சுற்றிப் பார்க்காமல் அவருக்குத் தூக்கம் வராது என்பார் பாட்டி.
நான் வெள்ளரிக்காய் பறிக்கும்போது அவர் பார்த்து விடுவாரோ என்று பயம் இருந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லிவிடமாட்டார் என்றே தோன்றியது. என் மேல் அவருக்குக் கொள்ளை ஆசை. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் தப்பில்லாமல் ஒப்பித்தேனே!

புலர்ந்தும் புலராத பொழுது. வயலெங்கும் பனியின் ஈரப்பதம். இலைகளைத் தொட்டால் சில்லென்றிருந்தது. பாகற்பூக்களும் பூசணிப்பூக்களும் அப்போது தான் மலர்ந்துகொண்டிருந்தன. சில அவரைக் கொடிகளில் வெள்ளைப் பூக்களும் சிலவற்றில் இளம்நீலப்பூக்களும் தெரிந்தன. உளுந்துச் செடிகளுக்கு நடுவில் எப்படியோ ஒரு சங்குக்கொடி. அதில் வரிசையாக வெண்சங்குப் பூக்கள். வயலெங்கும் இலைகளும் பூக்களும் ஒரு புதுமையான வாசனைக் கலவையை இரைத்துக் கொண்டிருந்தன.
நான் வெள்ளரிக்கொடிகளின் அருகில் குனிந்தேன். விரல் நீளத்திற்குப் பிஞ்சுக் காய்கள் தரையில் படிந்திருந்தன. பாகல், புடலைக்கு மாதிரி இதற்கும் பந்தல் போட்டிருந்தால் நின்றுகொண்டே பறிக்கலாமே என்று தோன்றியது. தாத்தாவிடம் சொல்லவேண்டும்.

கடகடவென்று பறித்தேன். தாத்தா சொன்னது ஞாபகம் வந்தது. நன்றாகக் கழுவினேன். வரப்புகள் இணையும் இடத்தில் ஒரு கருங்கல் சதுரம் இருந்தது. அதில் உட்கார்ந்து ஒவ்வொன்றாகக் கடித்தேன். பிஞ்சாக இருந்ததால் மாம்பழம் போல் மென்மை. தூரத்தில் தாத்தா புங்கங்குச்சியால் பல் துலக்கியபடி நடந்துகொண்டிருந்தார். என் அருகில் வர ஐந்து நிமிடமாவது ஆகும். அதற்குள் இன்னும் பத்து வெள்ளரிக்காய்கள் தின்றுவிடலாம்.
மீண்டும் பறிப்பதற்காக எழுந்தேன். விடியற்காலையின் செவ்வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சூரிய வெளிச்சம் தென்னை மரங்களின் நடுவே வர ஆரம்பித்திருந்தது. ஈரக்காற்றில் தென்னம் ஓலைகள் மெல்ல அசைந்ததில் இனிமையான ஓசை  கேட்டது. கிணற்றடியை நோக்கிக் கவலை இறைப்பதற்காக மாட்டை இழுத்துப் போய்க்கொண்டிருந்தார் கருவாயன். வெள்ளரிக் கொடிகளின் பக்கம் குனிந்தேன்.

அப்போது சரசரவென்று ஏதோ ஒன்று என் காலருகிலிருந்து வேகமாக ஓடுவதுபோல் இருந்தது. கொடிகளுக்கு அடியிலேயே அது ஓடியிருக்க வேண்டும். ஏனென்றால் வெள்ளரிக்கொடிகள் இருந்த பாத்தியிலிருந்து அவரைப் பந்தல் இருந்த அடுத்த பாத்திவரை நீளமாக அசைவு தெரிந்துகொண்டே இருந்தது. அடுத்த பாத்தியின் வரப்பின் மேல் அது நகர்ந்த பொழுது தான் தெரிந்தது, பாம்பு என்று. புலர்காலை வெளிச்சத்தில் அதன் நிறம் தெரியவில்லை. ஆனால் பெரிதாக இருந்தது மட்டும் இன்னும் நினைவிருக்கிறது. பயத்தால் “தாத்தா” என்று அலறினேன்.

அதற்குள் அருகில் வந்துவிட்ட தாத்தா, என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ஏண்டா, பாம்பைப் பார்த்து பயந்தியா?” என்று சாதாரணமாகக் கேட்டார். நான் பயம் விலகாமல் தலையாட்டினேன்.

“அது வாழும் பாம்பு. ஒன்றும் செய்யாது. வா போகலாம்” என்றார். அதற்குள் கருவாயனும் ஓடிவந்திருந்தார். “அதுக்கு வெள்ரிப்பிஞ்சுன்னா உசிரு. காலங்கார்த்தாலெ வந்து தின்னுட்டுப் போகும். அதனால நீ இனிமே வெளிச்சம் வந்த பொறவு வெள்ரிக்கா பறிச்சுக்கோ சாமி” என்றார் என்னிடம் கனிவோடு.

பாம்பு வெள்ளரிக்காய் சாப்பிடும் என்ற தகவல் எனக்குப் புதுமையாக இருந்தது. பள்ளிக்கூடம் போனால் உடனே சொல்ல வேண்டியது இது தான் என்று நினைத்துக் கொண்டேன். நகரத்தில் இருப்பவர்களுக்கு இது எங்கே தெரிந்திருக்கப் போகிறது!

அன்று முதல் நான் வெள்ளரிக்காய் வயல் பக்கமே போகவில்லை. கருவாயன் கொண்டுவந்து கொடுத்த கரும்பும் குச்சிக்கிழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒரு வாரம் வரை வந்தது. நாகியம்பட்டியிலிருந்து அண்ணன் அடுத்த மாதம் தான் வரமுடியுமாம். அவனைப் பார்க்கமுடியாதது மிகவும் வருத்தமாயிருந்தது.

புளியமரத்தில் தாம்புக்கயிற்றால் ஊஞ்சல் கட்டிக்கொடுத்தார், கருவாயன். நானும் அக்காவும் ஆசை தீர ஆடினோம். பெரிய பெரிய நெல்லிக்காய்களைக் கடித்து மென்று, ஒவ்வொரு கடிக்கும் பிறகும் ஓடிப்போய் வாய்க்காலில் தண்ணீர் குடித்தோம். சர்க்கரை மாதிரி வாயெல்லாம் இனிப்பு. பிறகு ஊஞ்சல். எனக்காக அம்மாவே வெள்ளரிக்காய் பறித்து வந்து கொடுத்தாள். என்னை மடியில் வைத்துக்கொண்டு அம்மாவும் ஊஞ்சல் ஆடினாள். “ஒங்க ரெண்டு பேர் மாதிரி தான் நானும் அக்காவும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுவோம். ஹூம், அவள் அப்பவே போய்விட்டாள் ஒங்கள எல்லாம் பாக்காமே” என்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

ஒரு வாரம் போல் இருந்திருப்போம். கிளம்பவேண்டிய நாள் வந்தது. வயலில் விளைந்த எல்லாக் காய்கறிகளிலும் பழங்களிலும் பருப்புகளிலும் எங்களுக்கென்று ஒரு பங்கு எடுத்து மூட்டையாகக் கட்டினார் பாட்டி. சின்ன வெங்காயமும் குச்சிக்கிழங்கும் உரித்த தேங்காய்களும் சிறு துண்டுகளாக வெட்டிய கரும்பும் ஒரு கோணிப்பையில் வைத்தார் கருவாயன். கறிவேப்பிலையும் கொத்துமல்லியும் ஒரு ஈரத்துணிக்குள் அடங்கின. அவசரம் அவசரமாக மல்லிகைப்பூவைத் தொடுத்து அம்மாவுக்கும் அக்காவுக்கும் சூட்டினார் பாட்டி. ”கைலாசநாதரை நெனச்சிக்கோ! ஒரு கொறைவும் வராது” என்று நெற்றியில் விபூதி இட்டார்.

கருவாயன் மாட்டுவண்டி கொண்டுவந்தார். என்னையும் அக்காவையும் ஏற்றிவிட்டார். முன்பக்கமாக உட்கார்ந்தோம். பிறகு மூட்டைகள். அப்பா, அம்மா. பாட்டியும் தாத்தாவும் கண்களில் நீர்வழியப் பிரியாவிடை கொடுத்தார்கள். “போலாங்களா சாமீ?” என்று வண்டியில் ஏறி, சாட்டையைக் கையில் எடுத்தார் கருவாயன்.

தாத்தா என்னவோ நினைத்துக்கொண்டவராக “ஒரு நிமிஷம் நில்லு” என்று வயக்காட்டுக்குள் ஓடினார். திரும்பி வரும்போது கை நிறைய  வெள்ளரிப்பிஞ்சுகள். “இந்தாடா, இதைச் சாப்பிட்டுக் கொண்டே போ. சந்தோஷமா இரு” என்று ஒரு பிஞ்சை என் வாயிலிட்டார். இவ்வளவு நாள் இல்லாத இனிப்பை உணர்ந்தேன். அதன் பெயர் தான் பாசம்  என்று தெரிந்துகொள்ளப் பல வருடம் ஆனது.
****
தாரமங்கலத்திற்கும் தாத்தா தோட்டத்திற்கும் அதன் பிறகு நாங்கள் போகவேயில்லை. கண்பார்வை மோசமானதால் வயல்காட்டைப் பராமரிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கருவாயனுக்கே விலைக்குக் கொடுத்துவிட்டு ஆத்தூரில் பேரனோடு போய் விட்டாராம். தாத்தாவுக்குத்  தெரியாமல் தேங்காயும் பருத்தியும் திருடிவிற்று அதே பணத்தில்  வயக்காட்டையும் வாங்கிவிட்டானாம் கருவாயன் என்று பேசிக்கொண்டார்கள்.

 பல வருடங்களுக்குப் பிறகு கடைசி தடவையாக நான் தாத்தாவைப் பார்க்கப்போன போது எனக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. அவர் இறந்துபோய்ப் பத்து நாட்கள்.
*****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

10 கருத்துகள்:


  1. இனிமை சேர்க்கும் நினைவுகள். வாழ்க்கைத் தரம் எவ்வளவு மாறிவிட்டது. ஒப்பிட்டுப் பார்ப்பீர்களா.?கவலைக் கிணறும் நிலமும் பயிர்வகைகளும் நினைத்துப் பார்க்கவே இப்போது முடியாது. ஒரு முறை என் பேரப் பிள்ளைகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். சாலையில் அறுத்த நெற்கதிர்களை பரப்பி இருந்தார்கள் அது என்ன என்று குழந்தைகள் கேட்க காரை நிறுத்தி ஒரு கதிரை வாங்கி this is paddy from which we get rice என்று என் மறுமகள் விளக்கம் கொடுத்தாள்...!

    பதிலளிநீக்கு
  2. ஆம். இயற்கையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். கண்ணெதிரே இருந்த பொருள்களைக் கூட தேடி கண்டுபிடிக்கும் நிலை நம் குழந்தைகளுக்கு.

    பதிலளிநீக்கு
  3. அருமை. இதற்குமேல் எழுத ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  4. மலரும் நினைவுகள் அருமை ஐயா. இயற்கையை விட்டு விலவி வெகுதூரம் நாம் சென்று விட்டோம். தாங்கள் அனுபவித்த இந்த சுகம், தங்களின் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்காதுதானே? கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  5. பொதுவாகவே கிராமத்துக்குச் சென்றால் உடனே இளநீர் வெட்டிக்கொடு என்ற வாஞ்சையான மொழிகளைக் கேட்க முடியும். தற்போது களப்பணி செல்லும்போதுகூட அதனை அனுபவித்துள்ளேன். அறிமுகம் ஆகாதவர்களையே நன்றாகக் கவனிப்பார்கள் என்றால், தாத்தா வீட்டுப்பாசம் என்பதை நினைத்தாலே இனிக்கிறது. அதனை நீங்கள் பகிர்ந்துகொண்டவிதம் எங்களை அந்த கிராமத்திற்கே அழைத்துச்சென்றுவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கருத்திட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. தாத்தா பாட்டிகளுடன் உறவாடி மகிழும் நல்வாய்ப்பு பெற்ற குழந்தைகள் குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது. உலகமயமாகிவிட்ட இன்றைய வாழ்வில் இன்னும் எத்தனை நாள் இத்தகைய உறவுகள் நிலைத்திருக்குமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. கருத்திட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. தாத்தா பாட்டிகளுடன் உறவாடி மகிழும் நல்வாய்ப்பு பெற்ற குழந்தைகள் குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது. உலகமயமாகிவிட்ட இன்றைய வாழ்வில் இன்னும் எத்தனை நாள் இத்தகைய உறவுகள் நிலைத்திருக்குமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அப்போது தான் மலர்ந்துகொண்டிருக்கும் பாகற்பூக்களும் பூசணிப்பூக்களும் மணக்க வெள்ளரிப்பிஞ்சுகள் இனிக்ககாருமையான பாச நினைவலைகள்..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு