ஞாயிறு, ஜூலை 21, 2013

ஆடி வெள்ளியில் அட்லாண்ட்டாவில் மகாலட்சுமி தரிசனம்

அட்லாண்ட்டா -மகாகணபதி-(கோவில் இணையதளத்திலிருந்து)
 மகனைப் பார்ப்பதற்காக அட்லாண்ட்டா வந்தோம். சென்னை மாதிரியே வெயில். சென்னை மாதிரியே இந்தியப் பொருள்கள் எது வேண்டுமானாலும் கிடைக்கும் பெரும் கடைகள். நகரின் நடுநாயகமான இடத்தில்  இருபத்து நான்கு மாடி அடுக்கில் பதினான்காவது மாடி. எதிரில் ஹயாத் ரீஜென்சி ஓட்டல். சன்டிரஸ்ட் பாங்க். சற்று நடந்தால் குழந்தைகள் மியூசியமும், அமெரிக்காவிலேயே பெரியதான ‘அக்வேரிய’மும். 1996ல் ஒலிம்பிக் போட்டிகள் இவ்வூரில் நடந்தபோது ஏற்படுத்தப்பட்ட ‘செண்ட்டீனியல் ஒலிம்பிக் பார்க்’கும் அருகிலேயே உள்ளது.

நேற்று (19.7.2013) வெள்ளிக்கிழமை. காலை முதலே மழை தூறிக் கொண்டிருந்தது. அதே சமயம் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. ரிவர்டேல் (Riverdale) என்ற இடத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வரலாமே என்று தோன்றியது. கிளம்பிய பிறகு தான் ‘இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை’ என்பது நினைவுக்கு வந்தது. 


12 ஆம் பிறையின் ஒளியில்  கொடிமரத்துடன் கோவில் 

சிறு குன்று மாதிரி உயர்ந்திருந்த அழகானதொரு பகுதியில் அமைந்த கோவில். பாதையின் எதிர்ப்புறம் அட்லாண்ட்டா விமான நிலையம் அமைந்திருக்கிறது.

ஆலய நுழைவாயில் 
விளிம்பில் பூச்செடிகளுடன் கண்ணைக்கவரும் பசுமையான புல்தரையை அடக்கிய பெரிய தோட்டம் நம்மை அழைக்கிறது. பளபளக்கும் கொடிமரத்தின் எதிரே இரண்டாக அமைந்த அழகிய கோபுரங்கள். ஒன்று சிவாலயமாகவும் இன்னொன்று பாலாஜி ஆலயமாகவும் அமைந்திருக்கிறது.

முதல் கோபுரத்தினுள் (சிவாலயத்துள்) நுழைந்ததுமே கல்விக்கதிபதியாம் கலைமகள் நம்மை அழைப்பதுபோல் ‘ஞானசரஸ்வதி’ என்ற திருநாமத்துடன் தரிசனக் கோலத்தில் அமர்ந்திருப்பது புதுமையாகவும் மனதை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அடுத்து கண்கவர் வடிவத்தில் கன்னிகாபரமேஸ்வரியும், அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மகாகணபதியும், அழகிய லிங்கரூபத்தில் இராமலிங்கேஸ்வரனாகச் சிவனும், ‘பர்வதவர்த்தினி’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் பார்வதி தேவியும் நமக்கு தரிசனம் தருகிறார்கள். தாய்க்கும் தகப்பனுக்கும் இடையில் வள்ளி தெய்வயானை உடனுறை முருகன் சன்னிதி கொண்டிருக்கிறான். நாகரூபமான நாகேந்திரனுக்கும், காலபைரவருக்கும் தனி இடங்கள் தரப்பட்டிருந்தன.
கோவில்-இன்னொரு தோற்றம் 
 
பார்வதி சன்னிதியில் கற்பூர ஆரத்தியைக் கண்டுகொண்டு அடுத்த கோபுரத்தினுள் (பாலாஜி ஆலயத்தினுள்) நுழைந்தோம்.

அங்கு கருணையே பொழியும் பெரிய திருமுகத்துடன் துர்கை நம்மை வரவேற்கிறாள். திருவேங்கடவனாம் பாலாஜியும் பத்மாவதி தாயாரும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளும் நமக்கு தரிசனம் தருகிறார்கள். சிறிய திருவடியும் பெரிய திருவடியும் எழுந்தருளியிருக்கிறார்கள். நவகிரக சன்னிதியும் அமைந்திருக்கிறது.

மகாலட்சுமியின் சன்னதியில் கூட்டம் இருந்தது. ஆடி வெள்ளி என்பதால் விசேஷமான பூஜை நடந்துகொண்டிருந்தது. எல்லோர் கையிலும் அழகிய அட்டை ஒன்று தரப்பட்டது. அதில் அஷ்ட லட்சுமிகளின் ஸ்தோத்திரம் ஒருபுறமும், மகாலட்சுமியின் “நமஸ்தேஸ்து மகாமாயே..” என்று தொடங்கும் ஸ்தோத்திரம் மறுபுறமும் அச்சிடப்பட்டிருந்தது. அர்ச்சகர் அம்மந்திரங்களை உச்சரிக்கும் போது நாமும் பிழையின்றி உடன் உச்சரிக்க முடிந்தது. சமஸ்கிருத மந்திரம் முடிந்தபின் திருப்பாவை சொல்லி ஆரத்தி காட்டினார்கள். துளசி தீர்த்தமும், சடாரியும், பிரசாதமாக ஆளுக்கொரு வாழைப்பழமும் கிடைத்தன. கேசரியும், இனிப்பு சேவையும், கொண்டைக்கடலை சுண்டலும் வாயிலருகே வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்கொண்டோம். வழக்கமாக இனிப்பையே தொடாத என் (அமெரிக்கப்) பேரன் வினயனே ஆசையுடன் கேசரியைச் சாப்பிட்டது வியப்பாக இருந்தது. (இனிமேல் அதே சுவையில் அவனுக்குக் கேசரி செய்து தருவது பற்றி என் மகள் ஆலோசிக்கக்கூடும்.)
ஆண்டாள் -(கோவில் இணைய தளத்திலிருந்து)

ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை யென்றால் மயிலாப்பூரிலுள்ள எல்லாக் கோவில்களையும் விடாமல் தரிசித்துவிடும் பழக்கமுள்ள என் மனைவிக்கு இந்த ஆண்டு அட்லாண்ட்டாவில் அதே தரிசனம் கிடைத்தது மன நிறைவளிப்பதாக இருந்தது. அதிலும் குடும்ப மாகத் தரிசிக்க முடிந்தது மேலும் மகிழ்ச்சியூட்டியது.

இக்கோவிலின் இணையதள முகவரி: http://HinduTempleOfAtlanta.org
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

13 கருத்துகள்:

  1. அட்லாண்ட்டாவில் அன்னையின் தரிசனம் கிடைத்தது மன நிறைவளிப்பதாக இருந்தது.

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நிலவோளியில் கோவில் ரம்மியமாக இருக்கிறது.
    உங்கள் மனைவிக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மன் தரிசனம் கிடைத்தது.
    அந்தப் புண்ணியம் எல்லாம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. படங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம்... வாழ்த்துக்கள் ஐயா... தொடர்க... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இணையத்தின் வழி எங்களையும் அட்லாண்டாவிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி அய்யா.
    ஆலய தரிசனம் கோடி புண்ணியம்.

    பதிலளிநீக்கு
  5. அம்பாளின் தரிசனம் இங்கு மட்டும் அல்ல அகில உலகிலும் கிட்ட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் ஐயா .பக்திப்
    பரவசம் நிறைந்த தங்களின் இல்லத்தரசிக்கும் என் இனிய
    வணக்கங்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  6. கோயில்களின் படங்களைப் பார்க்கும்போது தென்னிந்திய கட்டிடக் கலையில் தென் இந்தியர்களால் கட்டப் பட்டதுபோல் தோன்றுகிறது திருப்பாவை சொல்லல் சடாரி உபயோகம் எல்லாம் தென் இந்திய மரபு அல்லவா. மேலை நாட்டினர் கோயிலுக்கு வருகிறார்களா.?நம்மவருக்கு எங்கு போனாலும் கோயில் தரிசனம் அவசியம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆம், பெரும்பாலான அமெரிக்கக்கோவில்கள், தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் தான் கட்டப்பட்டுள்ளன. காரணம், இவற்றைத் தோற்றுவிக்க முனைந்தவர்கள் தென்னிந்தியர்களே. கோவிலுக்கு அமெரிக்கர்களும் வருகிறார்கள். அட்லாண்ட்டாவில் நான் பார்த்தபொழுது ஓர் அமெரிக்கர், கற்பூரம் ஒத்திக்கொண்டு, கோவிலை மூன்றுமுறை சுற்றிவந்து, பிறகு சற்று நேரம் அமர்ந்துவிட்டு, அதன் பிறகே காரில் ஏறியதைக் கண்டேன். நியூஜெர்சியில் எல்லாக் கோவில்களிலும் பிறநாட்டவர்களும் வந்து போவதைக் கண்டிருக்கிறேன்.

    அனைவரின் வருகைக்கும், கருத்துரைத்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆலய தரிசனம் கிடைத்தது.
    பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உங்களுடன் கோயிலுக்கு வந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
    http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  12. நன்றி அம்பாள் அடியாள் அவர்களே! திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்கள் ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு