திங்கள், ஜூன் 24, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)



பிட்ஸ்பர்க் – பிப்ஸ் கன்ஸர்வேட்டரியில் கண்ணாடி மனிதர்கள்
ஆவிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போது எனக்கு வயது பத்து.

இராணிப்பேட்டையில் வக்கீல் தெருவில் வெங்கடாத்திரி என்ற பிரபல வக்கீல் இருந்தார். அவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் ஒரு சந்து இருக்கும். ‘வக்கீல் தெரு சந்து’ என்று  பெயர். மொத்தம் மூன்றே வீடுகள். முதல் வீட்டில் நாங்கள் இருந்தோம். கூடமும், இரண்டு அறைகளும், நுழைந்தவுடன் முற்றத்தில் கிணறும் இருந்த ஓட்டு வீடு.

ஜெயபால் என்பவர் வீட்டு சொந்தக்காரர். ராணிப்பேட்டையின் உயிர் ஆதாரமாக விளங்கிய ஈ.ஐ.டி. பாரி கம்பெனியில் ஊழியர். அதிகம் படிப்பில்லை. மாதா மாதம் வாடகை வாங்க வரும்போது என் தாத்தா அவரை நீண்ட நேரம் நிற்க வைத்த பிறகு தான் தருவார். அதற்கு முன் “வாடகைப் பணம் பன்னிரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன் – இப்படிக்கு ஜெயபால்” என்று பாம்பு பஞ்சாங்கத்தின் மீது தைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற அட்டையில் எழுதியாக வேண்டும். அது தான் ரசீது.


எழுதி முடிப்பதற்குள் ஜெயபாலுக்கு வியர்த்துவிடும். ‘ஒரு வரி எழுத இவ்வளவு நேரமா?’ என்பது போல் தாத்தா அவரைப் பொறுமையின்றி பார்த்துக் கொண்டிருப்பார். எழுதிய உடனே கொடுப்பதற்காக பாட்டி  கையில் காப்பியுடன் நிற்பார். ஜெயபாலுக்கு வயது முப்பதுக்குள் தான் இருக்கும். பாட்டி காப்பியை அவரிடம் கொடுத்து “தூக்கிக் குடிப்பா” என்று மென்மையாக உத்தரவிடுவார். அவர் குடித்துக் கொண்டிருக்கும் போதே “ஏண்டா ஜெயபால், கூரை ஒழுகுது, சரி பண்றேன்னு மூணு மாசமா சொல்றே, இன்னும் பண்லியே” என்பார்.

அவசரம் அவசரமாக காப்பியை விழுங்கிவிட்டு “ கோவிச்சுக்காதீங்கம்மா! இந்த ஞாயிற்றுக்கிழமை ஆள கூட்டிட்டு வர்றேன்” என்று நகருவார், ஜெயபால். ஆனால் அவர் இனிமேல் வரப்போவது  அடுத்த மாதம் வாடகை வாங்கும் போது தான் என்று எல்லாருக்குமே தெரியும். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் வாடிக்கையான விஷயம்.

அப்போது அம்புலிமாமாவில் வேதாளமும் விக்கிரமாதித்தனும்  தொடர்கதை மாதிரி மாதம் தவறாமல் வரும். (இன்றும் வருகிறது!).  தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலை வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "விக்கிரமா “ என்று பேச ஆரம்பிக்கும். (இன்று வரை இது தான் முதல் வரி!).


ஒரிஜினல் விக்கிரமாதித்தன் கதையில் போஜராஜனின் சிம்மாசனத்தின் 32 படிகளில் நின்றுகொண்டு வேதாளம் படிக்கொரு கதையாக மொத்தம் 32 கதை தான்  சொல்லும். ஆனால் அம்புலிமாவில், ஒவ்வொரு மாதமும் ஒரு புதுக்கதை சொல்லும்.  இந்த 50 வருடங்களில் சுமார் 500க்கு மேல் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. (இப்போது ‘நவீன விக்கிரமாதித்தன் கதைகள்’ என்ற பெயரில் வருகிறது).

 
வேதாளம் முருங்கை மரத்தின் மீது தான் வசிக்குமாம். முருங்கை மரம் மிக லேசான மரம். பெரிய காற்றடித்தால் கிளைகள் உடைந்து விழுந்து விடும். அப்படிப்பட்ட மரத்தில் குடியிருப்பதென்றால் வேதாளம் எப்படிப்பட்ட மெல்லிய உடலைக் கொண்டிருக்க வேண்டும்?

 
எங்கள் வீட்டு முற்றத்திலிருந்து வெளியில் போகும் நீர், ஒரு சின்ன சாக்கடை வழியாக சுமார் பத்தடி தூரத்தில் ஒரு குழியில் போய் விழும். மழைக்காலத்தில் அது நிரம்பி வழியும். வெயிற்காலத்தில் எவ்வளவு நீர் வந்தாலும் மறுநாளைக்குள் காய்ந்துவிடும். நாளடைவில் அதன் சுற்றளவு அதிகரித்துக்கொண்டே போனதால் குழி என்ற பெயர்  குட்டை என்று ஆனது. குட்டையின் எல்லாப் பக்கங்களிலும் முருங்கைச் செடிகள் தாமாகவே முளைக்கத் தொடங்கின. தண்ணீர்ப் பஞ்சம் இல்லாததால் வஞ்சனையின்றி உயரமாக வளரலாயின. வாரம் இரண்டு முறையாவது எங்கள் வீட்டு சமையலில் முருங்கைக்கீரை மணக்கும். வெண்ணெய் காய்ச்சும்போது முருங்கையின் பூக்களைப் பறித்து வந்து கொடுப்பதில் எனக்கும் என் அக்காவிற்கும் பலத்த போட்டி இருக்கும்.


வக்கீல் தெரு சந்தில் ரொம்ப நாள் வரை தெருவில் மின்விளக்கு போடவில்லை. அதனால் இரவில் குட்டையின் அருகில் நிழல் படிந்து கும்மிருட்டாக இருக்கும். அருகில் நடப்பதற்கே எனக்கு  பயமாக இருக்கும். முருங்கை மரத்தின் மீது வேதாளம் இருக்கும் என்பதால் ஏற்பட்ட பயம் தான் அது. “ஏம்மா, வேதாளம் என்பது உண்மையாக இருக்குமா?” என்றேன், அம்மாவிடம். “இல்லாமலா கதை எழுதுவார்கள்?” என்றார் அம்மா. மேற்கொண்டு தகவல் கிடைக்கவில்லை.

அன்று இரவு ஊர்க்காவலுக்காக வந்த கூர்க்காவிடம் கேட்டபோது அவரும் “ஆமாம் பையா! முருங்கை மரத்தின் மேல் தான் வேதாளம் இருக்கும். வெள்ளையாக ஒரு துணி போர்த்திய மாதிரி உயரத்தில் உட்கார்ந்திருக்கும் “ என்றார். “பாட்டியிடம் சொல்லி ஒரு டீ போட்டு தரச் சொல்லு” என்று திண்ணையில் உட்கார்ந்தார்.

எங்கள் வீட்டில் டீ என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் காப்பி கொடுத்தோம். குடித்தபடியே, “பையா, வேதாளம் ஒன்றும் செய்யாது. யாரையும் அடிக்காது. கொலை செய்யாது. ஆனால், படிக்கிற பையன்கள் இரவு நேரத்தில் தன்னை உற்றுப் பார்த்தால் அதற்கு கோபம் வந்துவிடும். உடனே அவர்களை நிறுத்தி வைத்து கேள்விகள் கேட்கும்” என்றார்.

நான் எப்போதுமே வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். யார் கேள்வி கேட்டாலும் முந்திக்கொண்டு பதில் சொல்லி பாராட்டு வாங்குவேன். அதே போல வேதாளத்திடமும் பாராட்டு பெற வேண்டுமென்று ஆசை எழுந்தது. ஆகையால், “என்ன மாதிரி கேள்வி கேட்கும்?” என்று கூர்க்காவிடம் கேட்டேன்.

“முருங்கை மரம் எந்த வீட்டுக்கு அருகில் இருக்கிறதோ, அந்த வீட்டு மாணவர்களின் புத்தகங்களை யெல்லாம் அவர்கள் தூங்கும் போது எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டு அவர்களுக்குத் தெரியாமலே திரும்ப வைத்துவிடும் வேதாளம் என்று சொல்வார்கள். அதனால், அவரவர்களுடைய பாடங்களிலிருந்து தான் கேள்வி கேட்கும்” என்றார் கூர்க்கா.

“நீங்கள் எப்போதாவது வேதாளத்தைப் பார்த்திருக்கிறீர்களா?”

“பையா, கூர்க்கா வேலையில் பத்து வருஷமாக இருக்கிறேன். நான் பார்க்காத வேதாளமா? ஆனால் நான் படிப்பை முடித்து பல வருஷங்கள் ஆகிவிட்டதே! எல்லாம் மறந்துபோய் விட்டது. அதனால் என்னை எதுவும் கேள்வி கேட்டதில்லை” என்றார்.

அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஆவல் மிகுதியாகி விட்டது. “அப்படியானால் வேறு ஏதாவது கேள்விகள் கேட்டிருக்கலாமே, ஏன் கேட்கவில்லை?” என்றேன்.  

“கேட்டதே! ஒரு நாள் கல்யாணப்பரிசு எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று கேட்டது. ஆற்காடு ஜோதி தியேட்டரில் என்று சொன்னேன்” என்றார் கூர்க்கா.
“அப்புறம்?”

“சிலநாள் கழித்து மீண்டும் என்னைப் பார்த்தது. தான் கல்யாணப்பரிசு படம் பார்த்ததாகவும் தங்கவேலு காமெடி தனக்கு மிகவும் பிடித்ததாகவும் சொன்னது”.

மேலும் மேலும் பிரமிப்பாக இருந்தது எனக்கு. “வேதாளத்தை எப்படி சினிமா தியேட்டருக்குள் விடுவார்கள்? அதற்கு டிக்கெட் உண்டா? அது எப்படி படம் பார்க்கும்-நின்று கொண்டா, உட்கார்ந்து கொண்டா?” என்று பல கேள்விகள் எழுந்தன எனக்குள்.

“வேதாளம்னு யாருக்குத் தெரியும் பையா? அது தானாகவே காற்றில் பறந்துபோய் தியேட்டரில் ஏதாவது சுவரில் ஒட்டிக்கொண்டு நிற்கும். அல்லது தன்னை ஒரு மனிதனாக மாற்றிக்கொண்டு காலியான நாற்காலியொன்றில் உட்காரும். படம் முடிந்ததும் மீண்டும் பழையபடி வேதாளமாக மாறிவிடும். தன்னுடைய முருங்கை மரத்தைக் கண்டுபிடித்து அதில் மீண்டும் ஏறிக்கொள்ளும்” என்றார் கூர்க்கா.

எனக்கு எப்படியும் இவர் மூலமாக வேதாளத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று தீவிரமான ஆசை உண்டானது. “கூர்க்காஜி, தயவு செய்து எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?” என்றேன். “எனக்கு வேதாளத்தைக் காட்டுவீர்களா?”

கூர்க்கா எழுந்தார். அவருக்கு நேரமாகிவிட்டது போலும். அவர் சுமார்  பதினைந்து தெருக்களுக்குக் காவல் போக வேண்டுமே! “பையா, மீதியை நாளைக்கு வைத்துக் கொள்வோமா?” என்றபடி கிளம்பினார்.
****
மறுநாள் இரவு கூர்க்கா வந்தார். அவர் வரும் வழியைப் பார்த்துக் கொண்டு நெடுநேரமாக நான் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். பாட்டியிடம் எப்படியாவது அவருக்கு ஒரு டீ தயார் செய்து வைத்துவிடும்படி சொல்லியிருந்தேன். எனவே கூர்க்கா வந்தவுடன் ஓடிப்போய் “வாங்க சார்” என்று டீ டம்ளரை நீட்டினேன். அவருக்கு ஆச்சரியம். “பையா, எனக்காக மெனக்கெட்டு டீ போட்டீர்களா? இனிமேல் காப்பியே கொடுக்கச் சொல், போதும். உங்கள் வீட்டில் காப்பி பஹூத் அச்சா” என்று ஒரே மூச்சில் குடித்தார்.

“கூர்க்காஜி, எனக்கு வேதாளத்தைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும்” என்று பணிவோடு சொன்னேன்.

கூர்க்கா, நீல நிறத்தில் முரட்டுத் துணியாலான மிலிட்டரி சட்டையும் அரை நிஜாரும் அணிந்திருப்பார். இடையில் கனமான பெல்ட் இருக்கும். அதிலிருந்து முக்கால் அடி நீளமுள்ள ஒரு தோல்பை தொங்கும். அதற்குள் ஒரு குறுவாள் இருக்கும். அதைப் பார்க்க வேண்டுமென்று பள்ளியில் எல்லாருக்கும் ஆசை.

எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரும் வில்லனும் நீளமான கத்தியால் சண்டை போடுவார்கள். கடைசியில் வில்லனின் கத்தி இரண்டாக உடைந்து விழும். அவ்வளவு தான் வில்லன் தப்பித்துக்கொண்டு ஓட முயற்சிப்பான்.  போவதற்குள் தன்னுடைய குறுவாளை எம்.ஜி.ஆரை நோக்கி வீசுவான். அது அவருடைய கையில் சர்ரென்று போய்ச்  செருகிக்கொள்ளும். ரத்தம் பீச்சீடும். வில்லன் தப்பி விடுவான். அதே நேரம் எம்.ஜி.ஆரைத் தேடிக்கொண்டு கதாநாயகி வருவார். குறுவாளைப் பிடுங்கி எடுப்பார். ரத்தப் பளபளப்புடன் இருந்த குறுவாளைத் தூக்கிவைத்துக்கொண்டு  சபதம் பேசுவார்.

எம்.ஜி.ஆர். என்றில்லை, ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் நடித்த சரித்திரப் படங்களிலும் இம்மாதிரி காட்சி வருவதுண்டு. ஆகவே குறுவாள் என்றாலே சிறுவர்களுக்கெல்லாம் ஒரு விசேஷ பக்தி உண்டு.  கூர்க்காவின் குறுவாளையும் அதே பக்தியோடு பார்த்தோம்.

ஆனால் ஒரு மாணவன் சொன்னான்: “கூர்க்காவின் சக்தியே அவருடைய குறுவாளில் தான் இருக்கிறது. அதனால் அவர்  எப்போதும் குறுவாளை வெளியில் எடுக்கவே மாட்டார். எடுத்தால் யாராவது ஒரு திருடனைக் குத்தி அவனது ரத்தம் அதில் பட்டாக வேண்டும். அப்படி திருடன் கிடைக்கவில்லை என்றால் அவரே தன் காலில் குறுவாளால் கீறி அதற்கு ரத்தம் காட்ட வேண்டுமாம். இல்லையென்றால் அவருடைய உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்” என்றான். அவனுக்கு யார் சொன்னார்கள் என்று கேட்கவில்லை. அவன் சொன்னதை நம்பினோம்.

அத்தகைய குறுவாளை இந்த கூர்க்கா திடீரென்று வெளியில் உருவி எடுத்தார் என்றால் எனக்கு எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆச்சரியமும் பயமும் ஒன்றாகக் கலந்த மன நிலையில் இருந்தேன். கூர்க்கா கேட்டார்: “என்ன பையா! உனக்கு வேதாளத்தைக் காட்ட வேண்டும், அவ்வளவு தானே?” என்று குறுவாளைத் தலைக்கு மேல் தூக்கினார். மூன்று முறை சுற்றினார். பிறகு மீண்டும் தோல்பையில் செருகினார். ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வதுபோல் இருந்தார். பிறகு என்னைப் பார்த்து “இப்போது ஏன் குறுவாளைத் தலைக்கு மேல் சுற்றினேன் தெரியுமா?” என்றார்.

“தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்கள்” என்றேன்.

“எல்லாம் உனக்காகத்  தான். மூன்று உலகங்களிலும் உள்ள என் முன்னோர்களை உதவி செய்யக் கூப்பிட்டேன். இதுவரை நான் அவர்களைக் கூப்பிட்டதே இல்லை. அதனால் அவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்குத் தகவல் வரும். அப்போது உன்னைக் கூப்பிடுவேன். நீ தூங்கிவிடுவாயா?’

“இல்லை, கூர்க்காஜி. உங்கள் விசிலுக்காக நான் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பேன். எப்படியாவது வேதாளத்தை எனக்குக் காட்டிவிடுங்கள்” என்றேன் அவரிடம்.

“நடு ராத்திரியில் நீ எப்படி எழுந்து வருவாய்? வீட்டில் அனுமதிப்பார்களா?”

“மாட்டார்கள் தான். ஆனால் உள்ளே புழுக்கமாக இருக்கிறது, திண்ணையில் படுத்துக் கொள்கிறேன் என்று சொன்னால் அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார். சாப்பாடு முடிந்தவுடன் நான் திண்ணைக்கு வந்துவிடுகிறேன். நீங்கள் விசில் கொடுத்தால் உடனே ஓடிவருவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னேன்.

“ரொம்ப நல்ல பையன் நீ” என்று தட்டிக் கொடுத்தார். “ஆனால் ஒன்று. வேதாளம் வெளுப்பாய் இருக்கும். நீ சிறுவன். பார்த்தவுடன் பயந்து அலறிவிட்டால் காரியம் கெட்டுப்போகும். வேதாளம் உடனே தன் நிறத்தைக் கறுப்பாக்கிக்கொண்டு விடும். நடு இரவில் கும்மிருட்டில் நீ எப்படி கறுப்பு வேதாளத்தைப் பார்க்கமுடியும்? அதனால் சொன்னேன்” என்றார்.

“சரி, வேதாளத்தைப் பார்க்கும்போது நீங்கள் சொன்னபடியே பேசாமல் இருப்பேன்” என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டு நடந்தார் கூர்க்கா.

நான் சாப்பிடுவதற்காக உள்ளே போனேன். அந்த மாதத்தின் டெஸ்ட் பேப்பர்களை ஒரு தடவை ‘ரிவைஸ்’ பண்ணிவிட முடிவு செய்தேன். வேதாளத்திடம் எப்படியும் நல்ல பெயர் வாங்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முடிவு செய்துகொண்டேன்.
(நாளை முடியும்).
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)

© Y.Chellappa

6 கருத்துகள்:

  1. (பெற்றோர்கள் உட்பட) பலருக்கும் பயந்து படிப்பவர்களும் உண்டு... ஹிஹி...

    அடுத்த பகிர்வு எப்போது....? ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  2. இன்றைய கனவில் வேதாளம் வந்தாலும் வரும் போலிருக்கிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. கூர்க்கா - குறு வாள் என் இள்மைக் காலத்திலும் இதே கதையைக் கேட்டிருக்கிறேன். யார் நெய்திருப்பார்கள் இந்தக் கதையை?

    பதிலளிநீக்கு
  4. ஒரு ஆர்வத்தில் இந்த பதிவை திறந்து முதல் பாகத்தை படித்து விட்டேன். இந்த இரவு நேரத்தில் மனைவியும் குழந்தைகளும் தூங்கப்போய் விட்டார்கள். அதனால் அடுத்த பாகத்தை காலையில் படிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இந்த பதிவைப் படித்தவுடன், நான் பள்ளியில் படிக்கும்போது "நூறாவது நாள்" படத்தை மாலைக்காட்சியாக பார்த்துவிட்டு வந்து, இரவு படுக்கப்போகும் முன் விபூதியெல்லாம் பூசிக்கொண்டு, விபூதி பாக்கெட்டை தலையணிக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்தது தான் நியாபகத்துக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒரு காலம்! பேய் பிசாசு என்றால் சும்மாவா? தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு