செவ்வாய், மே 07, 2013

அவனுக்கொரு பதில் (கவிதை)


 
நான் நானாக இருந்தபோது
நீ வந்தாய்
நீ தானே வந்தாய்?
 
நீயும் நானும்
நாமானபோது
என்னின் நானை
நான் தெரியாதவள்
உன்னின் நானை
நீ புரியாதவன்
 
உன்னிடம் எனக்குப் பிடித்ததில்
உன் மீசையும் ஒன்று
என்னிடம் பிடித்ததைச்
சொன்னதுண்டா
இன்னதென்று?
 
என்னில் பாதியும்
உன்னில் பாதியும்
இன்னொன்றானபின்,
 
‘அந்த’ இரவில் நான்
அள்ளிக்கொண்டதை
இந்தப் பகலில்
எப்படிக் கேட்கிறாய்?
 
காசு தேடலில் நீ
காலம் கழித்தாய்
கையில் மழலை என்
காலம் தின்றது
 
என்றாவது அவனுக்கு
இடுப்பு கழுவினாயா?
சீருடை திருத்தி
பொத்தான் தைத்தாயா?
 
எந்த மிஸ்சை
இவனுக்குப் பிடிக்கும்
எந்த மிஸ்க்கு
இவன் பிடிப்பான்
எந்த நண்பன்
இவனைக் கிள்ளினான்
கேட்டாயா?
 
நாளை என்ன தேர்வு,
தெரியுமா உனக்கு?
 
மாமனார் மாமியார்
மைத்துனர் நாத்தனார்
யார் பேசினாலும்
உறைக்குள் மூடிய கத்தியாய்
ஒளிவாய் நீ,
கேடயம் தாங்குவது
நானன்றோ!
 
எனக்கும் ஆசை தான்
என்னை மீட்டெடுக்க !
உனக்குள்ளிருந்து
விடுவிப்பாயா ஒருகணம்?
 
 -கவிஞர் இராய. செல்லப்பா
 

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

4 கருத்துகள்:

  1. அருமை...

    முடிவு கேள்வியில் மற்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! (பெண்கள் தான் கேள்வியில் வல்லவர்கள் ஆயிற்றே!)

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு