(கவிதையில்
ஒரு கதை-சற்றே நீளமானது!)
 |
படம்-நன்றி: இணையம் |
அது ஓர் காடு. ஆலமரத் தடி.
அவனோர் பக்தன். அவர்,குரு
நாதர்.
மானிடரில்லாக் கானகம்
தன்னில்
வானகம் வேண்டித்
தவம்புரிந்திருந்தனர்.
எந்த நிமிடம் எது செய்தாலும்
எண்ணும் எண்ணம் எதுவா னாலும்
அனுமதி கேட்டுக் குருவிடம்
நாடி
அப்புறம் செய்தல் பக்தனின்
பழக்கம்!
ஒருநாள்-
வாழ்வை வெறுத்து, இறையருள்
நோக்கித்
தானும் குருவும் தவம்செயும்
பாங்கில்
அவனுக் கேனோ விரக்தி வந்தது!
“குருவே, குருவே, இனிநான்
இந்தப்
போலிவாழ்வை ஒப்பவே மாட்டேன்.
காவியாடை மேனியில் இருந்தும்
காசாசைதான் நெஞ்சைத் துரத்தும்!
பொன்னும் மணியும் பட்டும்
பகட்டும்
எனக்கு மட்டும் இனிக்கா தா
என்ன?
ஆகவே,
துறவறம் நீங்கிட அனுமதி
வேண்டும்!
இல்லறம் துவங்கிட ஆசிகள்
வேண்டும்!
இனிய மனைவி, எல்லாப்
பொருள்வளம்
தம்மைப் பெற்றுத் தரணியில்
வாழ்வேன்
விடைகொடுங் கள்”என
விரும்பிக் கேட்டான்.
மோனத் தவத்தில்
மூழ்கி யிருந்தவர்
கண்களை விழித்தார், கனிவுடன்
பார்த்தார்.
“அன்பனே உன்றன் ஆசைகள்
எல்லாம்
நிறைவேறட்டும், சென்றுவா”
என்றார்.
சிரத்தால் வணங்கிச் சென்றான்
பக்தன்.
சிற்றூர் விட்டான். சிறிது
நடந்தான்.
பேரூர் சென்று
பெருந்தனக்காரரின்
மருமகன் ஆனான். மனைவியும்
தானும்
இன்பம் என்பதின் எல்லைகள்
தேடி
இரவைக் கழித்ததில் பகலும்
கழிந்தது.
பொருள்செய் திறனைப்
புரிந்துகொள்ளவே
காலமாயிற்று. கடன்கள்
பெருகின.
மாமன் விரட்ட, மணந்தவள்
நழுவ,
வேறிடம் தேடி வேரின்றி
அலைந்தான்.
காலம் கழிந்தது.
பூவும் தென்றலும் வசந்தமும்
மாறி,
இலையுதிர் காலம் திரும்பிய
பொழுதில்
அடவியைத் தேடி அவன்மீண்டும்
வந்தான்.
கவலை சூழ்ந்த மேனிய னாகி
வடிவம் குறுகி வாடிக்
கிடந்தான்!
கலங்கினான், கதறினான்,
கண்ணீர் சொரிந்தான்.
குருவின் தாள்களில் குமுறி
விழுந்தான்.
“குருவே, குருவே, இதுசரி
தானா?
துறவறம் துறந்தேன், இல்லறம்
ஏகினேன்,
காசும் பணமும் கைகளில்
புரளும்
என்று நடந்தேன், எழுந்தேன்,
ஓடினேன்.
ஆனால்,
மானுடம் என்பது மாயையின்
தொகுப்பா?
தன்குடி பிழைக்கத் தான்
உழைக்காமல்
அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பதே
யிவன்
உயரிய பிழைப்பாய் உழைக்கின் றானே!
மெய்என் பதுவோ மேனி மட்டுமே!
மெய்என்பதொன்றும் மேனியில்
இல்லையே!
உள்ளொன்று வைத்தே
பேசிடு கின்றான்!
வஞ்சனை யின்றி வாழ்ந்திடல்
அறியான்!
இந்த உலகமா எனக்குப்
பொருத்தம்?
இல்லை குருவே, இஃதன்று என் கனா!
எனக்கினி,
பணமும் வீண்டாம், பதவியும்
வேண்டாம்,
பத்தினி வேண்டாம், இல்லறம்
வேண்டாம்.
எந்த வொருபொருள் சத்திய மானதோ,
எந்த வொருபொருள் நித்திய மானதோ,
எந்த வொன்றுதான் முடிவின் முடிவிலும்
இல்லாது போகாத இயல்பு கொண்டதோ,
அந்தவொன் றையே நானினி
விழைவேன்.
அதனைப் பெற்றிட ஆசிகொ
டுங்கள்”
என்று பணிந்தான். “எழு” என்
றார், குரு.
“அன்ப னேநீ அறிஞன் ஆ கினாய்!
இத்துணை விரைந்தே என்னிடம்
வந்தாய்,
இறையருள் என்றே இதனைச்
சொல்வேன்!
நித்திய மானதும் சத்திய
மானதும்
வேண்டுமென் கின்றாய்! அப்படி
யொருபொருள்
நிச்சயம் உண்டு! நீயதைப்
பெறலாம்
அனுபவ மின்றேல் அறியவொண்
ணாது!
நீயே தேடு! நிதமும் தேடு!
ஊரெலாம் தேடு! உலகெலாம்
தேடு!
பக்குவ மாய்நீ பழுக்கும்
நேரம்
சத்தியம் என்பதைக் காண்பாய்,
உறுதி!
ஒருவேளை,
எந்த வழியிலும் கிட்டா
தாயின்,
ஆண்டுகள் பத்து ஆனபின் னாலே
என்வழி தேடி இங்கே வந்திடு!”
என்றார் குரு.இவன், பணிந்தான்.
சென்றான்.
புதுப்புதுப் பாதை,
புதுப்புதுப் பயணம்.
அனுபவம் சேர்ந்தது. அகமும்
சிலிர்த்தது.
தேடல் மட்டும் தீர்வதா
யில்லை!
“எந்த ஒருபொருள் சத்திய
மானது?
எந்த ஒருபொருள் நித்திய
மானது?”
என்ப தேயவன் கேள்வி யானது!
கானும் வானும் கடலும்
மலையும்
விடைதெரியாமல் விழித்துப்
பார்த்தன.
காலம் நகர்ந்தது, காலம்
ஓடிற்று!
கேள்வியின் விடையோ கிடைப்பதா
யில்லை.
ஒட்டி உலர்ந்தது பக்தனின்
மேனி.
குழிகள் கண்களாய் ஆயின.
கால்கள்
மெல்ல நடக்கவும் தளர்ந்து
போயின.
நொந்து போனவன் நாட்களை
எண்ணினான்.
பத்து ஆண்டுகள் பறந்தன
வென்று
மனது சொல்லிற்று.
"இத்தனை ஆண்டுகள் கிட்டாத
பதிலை
எத்தனை நாள்தாம் தேடிக்கொண்
டிருப்பேன்?
குருதேவ ரிடமே கூடிப்
பேசுவேன்”
என்றே துணிந்தான்.
புகுந்தான் கானகம்.
***
அடடா, என்ன மாற்றம்!
இவனும் குருவும் இருந்த இடமெலாம்
எங்கே போயின? எப்படி
மறைந்தன?
அடர்ந்த மரமும் படர்ந்த
கொடிகளும்
புலியும் மயிலும் பறவைக்
கணங்களும்
எங்கே போயின?
பச்சை மண்டிய பரந்த கானகம்
வெற்றிடமான விந்தைதான்
என்னே!
காட்டுத்தீயில் காடே
மாண்டதோ?
நெருப்புக் காற்று நீண்டு
பறந்து
இருந்ததை யெல்லாம் எடுத்து
விழுங்கிற்றோ?
“ஐய கோ, என் குருதேவ
ருக்காய்
உருகிவந் தேனே! உலகினில்
அழியாச்
சத்தியப் பொருளைத் தெரியவந்
தேனே!
சொல்லாப் பொருளுடன்
போனதெங்ஙனம்?”
என்று புலம்பினான்.
“எங்கே என்குரு? எங்கே
என்குரு?”
என்றே கதறினான்.
நடக்கவும் இயலாது நடுங்கிய
கால்கள்
ஏதோ ஒன்றில் இடறி வீழ்ந்தன.
அஃதோர் மண்டை யோடு!
“அப்படியானால் அவர்
அழிந்தாரா?
அகிலம் வெறுத்து அனைத்தையும்
துறந்து
ஆண்டவன் ஒன்றே வேண்டின ராகி
உண்டி மறந்து உடையும்
துறந்து
இந்த வனத்தில்
தவமிருந் தவர்க்கே
இந்த கதியா?
மரணம் என்பது இவர்க்குமா
உண்டு?
அனைத்தும் அழியினும் அழியாத
பொருளை,
சத்தியப் பொருளை, நித்தியப்
பொருளைக்
கேட்டுத் தெரிந்திடக்
கண்ணில் கண்டிட
ஓடோடி வந்தும் உயிரிழந் தாரே!
இனிஎன் செய்வேன்?
ஐயம் தெளியாத நெஞ்சுட னேயே
எத்தனை நாள் தான்
வாழ்ந்திடுவேன் நான்?”
-என்று புலம்பினான்.
இருண்டன கண்கள்.
தளர்ந்த கால்கள் தரையில் விழுந்தன.
மெல்ல எழுந்திடக் கைகளை
யூன்றினான்.
மேனி எதற்கும் ஒப்பினால்
தானே!
வாடிப் போன கையும் காலும்
வற்றிப் போன வயிறும் மனதும்,
அவனை
எழுந்து விடாமல் இழுத்துப்
பிடித்தன!
அடுத்த நொடியில் ஐயகோ, அந்த
பக்தனின் மேனியை மரணம்
தழுவிற்று!
எந்தப் பொருளை இத்தனை காலம்
தேடித் தேடித் திரிந்திருந் தானோ,
அந்தப் பொருளே அவனை நாடி
வந்து நிற்கையில் வாழ்வு
முடிந்ததே!
இனி,
“மரணம் ஒன்றுதான் மானுட
வாழ்வில்
சத்திய மானது, நித்திய மானது,
முடிவின் முடிவிலும் முடியா திருப்பது”
என்பதை அவனுக்கு
யார்
உரைப்பார்கள்?
(சென்னை வானொலியில் 19-4-1989இல் ஒலிபரப்பான கவிதை.)
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.
Ph. 044-67453273