வியாழன், பிப்ரவரி 13, 2014

சாந்தி நிலவ வேண்டும் ( சிறுகதை)

- இமயத்தலைவன் (இராய செல்லப்பா)

நல்ல வேளை, மழை வரவில்லை. விடியற்காலை இருட்டும் கவிந்து வந்த கருமேகங்களும் சேர்ந்துகொண்டதால் மெதுவாகத் தான் நடக்க முடிந்தது நாராயண சாஸ்திரியால். மார்கழி முடிந்து சில நாள் ஆகியும் சில்லென்ற பனிக்காற்று முதுகை ஊடுருவி உடம்பைச் சிலிர்க்கவைத்தது. பஸ் ஸ்டாண்டு இரண்டு மைல் தூரம். மழை மட்டும் வந்திருந்தால் ஐந்து மணி பஸ் தவறிப் போயிருக்கும்.

சாஸ்திரிக்கு வயது அறுபது. வேத அத்யயனம் செய்த பரம்பரை. தொழில்முறையில் வைதிகர். தகப்பனாரின் திருப்திக்காகச் சில வருடங்கள் ரிக்வேதம்  படித்தார். பின் சாமவேதத்தில் முக்கிய தேர்ச்சி பெற்றார்.  காசி, மைசூர், சிருங்கேரி என்று பல வித்வத்சபைகளில் பாராட்டுக்கள் குவிந்தன. ஆனாலும் பரம்பரைத் தொழிலான, புரோகிதத்தில் ஈடுபட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். வாலிபத்தில் சில தனியார்க் கம்பெனிகளில் பணியாற்றினார். முன் கோபமும் நேர்மையும் அவரை முன்னுக்கு வரவிடாமல் தடுத்தன. சராசரி மனித வாழ்க்கைக்கு வேண்டிய நெளிவுசுளிவுகள் கைவராமல் போயிற்று. வழி தெரியாமல் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்ட நிலையில் திருவானைக்காவலுக்கு அழைத்துக்கொண்டுபோய் ஓராண்டு தீவிர வேத பாடசாலை வகுப்பில் சேர்த்து, “இனிமேல் புரோகிதத்திற்குத் தான் நீ லாயக்கு” என்று தொழிலில் இறக்கிவிட்டார், தாய்மாமன்.
'கலைமகள்' - பிப்ரவரி  2014 இதழில் வெளியாகியுள்ள கதை

முப்பது வருடம் ஆகிவிட்டது. வேதம் தான் சோறு போடுகிறது. மூன்று வேளை இல்லாவிடினும் இரண்டு வேளையாவது. இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, காஞ்சீபுரம் என்று சுமார் நூறு வாடிக்கையான கிருகஸ்தர்கள். ஆனாலும் வரவை விடச் செலவு தான் மிஞ்சி நின்றது. ‘ஈஸ்வரோ ரட்சது’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். அந்த ஈஸ்வரன் தான் படியளக்கவேண்டும்.

“வாங்க சாமி, வணக்கம்” என்றார் கண்டக்டர் துரை. வாரம் ஒருமுறையாவது அந்த பஸ்சில் பயணிப்பதால் துரையுடன் நல்ல பழக்கம். “சாஸ்திரிகளே, நானும் இருக்கேன், நமஸ்காரம்” என்று உள்ளிருந்து வெங்கிட்டுவின் குரலும் கேட்டது.  சாஸ்திரியின் எடுபிடி. ஆனால் ‘அசிஸ்டண்ட்’ என்ற கௌரவப்பெயரால் தான் அழைப்பார் சாஸ்திரி. நாற்பது வயதாகியும் பிரம்மச்சாரி.

“ஆரணிக்கு ரெண்டு டிக்கட் குடுங்க” என்றான் வெங்கிட்டு, அவருக்கும் சேர்த்து. ஆரணியில் நாளை மறுநாள் ஒரு கல்யாணம். சொந்த உபாத்தியாயம். தை மாதம் முதல் முகூர்த்தம். பெரிய இடம். அந்த வரும்படியில் தான் கஸ்தூரிக்கு டிரஸ் எடுக்கவேண்டும். ஒரே பெண். இன்னும் சில நாளில் பிளஸ்டூ ரிசல்ட் வந்துவிடும். அவளை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும்.

மார்கழி மாதம் நல்ல காரியங்கள் யாரும் நடத்துவதில்லை. புரோகிதர்களுக்கு வருமானம் இல்லாத பீடை மாதம். கைவசம் இருந்த கடைசிப் பத்து ரூபாய் நோட்டும் செலவாகிவிட்டது.

வெங்கிட்டு, சாஸ்திரியின் அருகில் வந்து உட்கார்ந்தான். அவரின் முகவாட்டத்தை உணர்ந்தவனாக, “கவலைப்படாதீங்க, நாளைக்கு வரும்படி பலமாத் தான் இருக்கும். கஸ்தூரிய ஜேஜேன்னு காலேஜில சேர்த்துடலாம்” என்றான்.

“ஒன் வாய் முகூர்த்தம் பலிக்கணும்டா” என்றார் சாஸ்திரி. ”ஆனா உபாத்தியாயம் பண்ற எடத்துல, இவ்ளோ குடு, அவ்ளோ குடுன்னு கேக்கறதுக்கு மனசு வரல்லியேடா”.   

“பழகிக்கணும் சாஸ்திரிகளே! ஊசி போட்டா ஒரு ரேட்டு, ஆபரேஷன் பண்ணா ஒரு ரேட்டுன்னு டாக்டர் கேட்டு வாங்கிக்கிறதில்லயா? சலூனுக்குப் போனா ரேட்டு இவ்ளோன்னு பேப்பர்ல அடிச்சு மாட்டியிருக்கானில்ல? நாமளும் அப்டித் தான தொழில் பண்ணணும்? இதுல ஏன் கூச்சப்படணும்? நீங்களும் பத்து வருஷம் வேதம் படிச்சுத் தான வந்துருக்கீங்க?”

சாஸ்திரியின் முகம் இறுகியது. “நல்லது தான் சொல்றே. ஆனா வேதம்கறது வெறும் வார்த்தைகள் இல்ல. அது ஓங்காரம். சப்தம். ஒலகம் பொறக்கறதுக்கு முன்னாடி இருந்த சப்தம். அதுக்கு வெல இவ்ளோன்னு சொல்லலாமான்னு யோசிச்சுப் பாரு. தகப்பனாரோ பாட்டானாரோ செய்யாத காரியத்த நானா ஆரம்பிக்கலாமான்னும் யோசி. எனக்கென்னவோ சரியாப்படலே. அவா என்ன குடுக்கறாளோ அதத்தான் வாங்கிப்பேனே ஒழிய இன்ன காரியத்துக்கு இன்ன ரேட்டுன்னு பேச மாட்டேண்டா. இது சத்தியம். நீ நடுவுல கெடந்து மனசக் கொழப்பாதே” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு சன்னல் வழியாக வானத்தைப் பார்க்கலானார் சாஸ்திரி.

அவர் மனதில் கஸ்தூரியின் முகம் திரும்பத்திரும்ப நிழலாடிக்கொண்டே இருந்தது. அவளைப்போல பதவிசான குழந்தையைப் பார்க்க முடியாது. தன் வயதொத்த பெண் குழந்தைகளைப் போல் அவளுக்கு எந்த ஆசையும் வந்ததில்லை. குடும்பத்தின் நிலை உணர்ந்து தன் ஆசைகளுக்கு  அணைபோட்டுவிட்டாளோ? பள்ளிக்கூட யூனிஃஃபார்மைத் தவிர அவளிடம் இருந்தது இரண்டே செட்டு ஆடைகள் தாம். ஆனால் அதற்காக அவள் பெற்றோரிடம் கோபப்பட்டதில்லை. படிப்பில் கெட்டிக்காரி தான். எண்பதுக்குக் குறைந்து வாங்கியதில்லை. வீட்டு வேலையிலும் கெட்டி. அம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பாள்.

இந்த ஒரு தடவை தான் வாய் திறந்து கேட்டாள்: “காலேஜுக்குப் போகும் போது நல்ல டிரஸ் வேணும்ப்பா. கட்டாயம் மூணு செட் புதுசு வாங்கியாகணும். இல்லேன்னா முடியாது” என்று தயங்கித் தயங்கி அம்மாவை முன்னிலையாக வைத்துக்கொண்டு சொன்னாள். “முதல் டெர்ம் மாத்திரம் காலேஜ் ஃபீசுக்கு எப்படியாவது ஏற்பாடு செஞ்சுடுங்க. மேற்கொண்டு ஒங்களுக்குப் பாரமாயில்லாம கம்ப்யூட்டர் கிளாசுக்கு டியூஷன் எடுத்து சமாளிச்சிடுவேன்” என்று தன்னம்பிக்கையோடு சொன்னாள். இப்போதே கம்ப்யூட்டரில் அவளுக்குத் திறமை அதிகம் என்று பள்ளியில் பேச்சு. ஓவியம் நன்றாக வரைவதால் கிராஃபிக்ஸில் நிச்சயம் முன்னுக்கு வருவாள் என்று ஆசிரியர்கள் சொன்னார்கள்.

மனைவியின் முகத்தையும் நினைவு படுத்திக்கொண்டார். தன் கடமையைச் செய்வதைத் தவிர, தனக்கென்று எதுவும் எதிர்பார்த்திராத உத்தமி அவள். காதிலும் கழுத்திலும் குன்றிமணி நகையும் இல்லாத நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியில் வருவதே அபூர்வம். யாருடனும் வம்பு பேசுவதோ, யாரைப் பற்றியும் குற்றம்குறை சொல்வதோ அவளிடம் கண்டதில்லை.

‘எல்லாம் பகவான் அருள். எல்லாம் பெரியவர்கள் ஆசீர்வாதம்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். இந்தத் தை மாதத்தில் நாலைந்து கல்யாணங்கள் வந்தால் போதும், ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் இதுவரை கைவசம் இருப்பதோ நாளை மறுநாள் நடக்கவுள்ள ஒரே கல்யாணம் தான். நல்ல மனிதர்கள். எப்படியும் ‘இவ்வளவு’ கொடுப்பார்கள் என்று தனக்குள்ளேயே ஒரு தொகையைச் சொல்லிப்பார்த்துக்கொண்டார். உடனே  அவருக்கே சிரிப்பு வந்தது. சற்று நேரம் முன்பு தானே அவர்கள் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன் என்று வெங்கிட்டுவிடம் கூறினார்! ‘மனம் ஒரு குரங்கு. அதனிடம் வசப்படலாகாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’

ஆனாலும் மனம் திரும்பவும் கஸ்தூரியின் கல்லூரிச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதிலேயே முனைந்திருந்தது. தீர்க்கப்படாதிருந்த பழைய பாக்கிகள் சிலவும் ‘எங்களை மறந்துவிடாதேயும்’ என்று அடிக்கடி நினைவூட்டின. ஒரு வேளை வெங்கிட்டு சொல்வது தான் சரியோ? ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு ரேட் பேசிவிடுவது தான் கலியுக தர்மமோ?  

“என்ன சாஸ்திரிகளே! மனசு அலைபாயுதா?” என்றான் வெங்கிட்டு கேலியாக. “எல்லாம் நல்லபடியா முடியும். பொறுமையா இருங்கோ.” என்றவன், “ஒரு யோசனை சொல்லட்டுமா?” என்றான் மெல்லிய குரலில்.
என்ன என்பது போல் பார்த்தார் சாஸ்திரி.

“கல்யாணம் நாளை மறுநாள் தானே! இன்னிக்கே போய் ஆகவேண்டியது என்ன? அதனால நேரா கலவை போய் ஆசாரிய ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டுப் போகலாமே! அவா கிட்டே ஆலோசனை கேக்கலாமே!”

சாஸ்திரிக்குச் சட்டென்று உடலெங்கும் புத்துணர்ச்சி பிறந்த மாதிரி இருந்தது. “நன்னாச் சொன்னடா வெங்கிட்டு! அவர தரிசனம் பண்ணி நாளாச்சேன்னு நேத்துக் கூட நெனெச்சேன். சரி, வா, அப்படியே பண்ணலாம், மனசுக்கும் சாந்தி பொறக்கும்” என்று சந்தோஷமாக அவனைத் தட்டிக்கொடுத்தார். சங்கராச்சாரியாரின் தரிசனம் குழம்பியிருந்த தன் மனத்தைத் தெளிவாக்கும் என்று நம்பினார் அவர்.
******** 

சாஸ்திரியும் வெங்கிட்டுவும் கலவையை அடைந்தபோது சங்கர மடத்தில் கூட்டம் ஓய்ந்திருந்தது. முதியோர் இல்லத்தில் ஏழெட்டு வயோதிகப் பெண்மணிகள் நடமாடிக்கொண்டிருந்தனர். சிலர் குழுவாக அமர்ந்து காய்கறி நறுக்கிக்கொண்டும் சிலர் தண்ணீர்வாளியுடன் சமையல் கட்டிற்குள் நுழைந்தபடியும் இருந்தனர். ஒரு நடுத்தர வயதுக்காரர் சற்றுக் கவலையோடு இங்குமங்கும் அலைந்து  கொண்டிருந்தார். அவரை “ஏண்டாப்பா, பிரபாகரா! பொழச்சிடும்னு சொன்னாரா டாக்டர்?” என்று அருகில் நெருங்கிக் கேட்டவண்ணம் இருந்தார் தொண்டுகிழமான ஒரு பெண்மணி.

பிரபாகரன் தான் அந்த முதியோர் இல்லத்தின் மேலாளர். “இல்லை பாட்டி, டாக்டர் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டார். ராத்திரிக்கு மேல் தாங்காது” என்று சொல்லிக்கொண்டிருந்தபொழுதுதான் நாராயண சாஸ்திரியும் வெங்கிட்டுவும் அவர் பார்வையில் பட்டனர்.

“ஓ, ஆச்சார்ய ஸ்வாமிகளப் பாக்க வந்தேளா? ஒக்காருங்கோ. தீர்த்தம் சாப்படறேளா? இன்னிக்கினு பாத்து  திடீர் பிரமேயம் ஒண்ணு. அதனால ஸ்வாமிகள் காஞ்சீபுரத்துக்குப் போகவேண்டி வந்துட்டது. ரொம்ப தூரத்துலேர்ந்து வரேளோ? அவசரமாப் பாக்கணுமோ?”  என்று புன்சிரிப்போடு கேட்டார் பிரபாகர்.

சாஸ்திரி பவ்வியமாக “விஷயம் ஒண்ணுமில்ல, வெறுமனே மனச்சாந்திக்காகத் தான் தரிசனம் பண்ண வந்தேன். சம்சார சாகரமோன்னா, அலை அடிச்சிண்டே இருக்கு. கரையேத்திவிடணும்னு கேட்டுக்க வந்தேன். பிராப்தம் இல்லாமப் போய்ட்டுது” என்றார்.

“எல்லாம் நல்லபடி நடக்கும். இந்த மண்ண மிதிச்சிட்டாலே பிராரப்த கர்மம் பாதி கரைஞ்சிடும்னு மகாபெரியவா சொல்லியிருக்கா. அவரோட குருநாதரோட பிருந்தாவனம் இருக்கோல்லியோ? இங்க ஒரு ராத்திரி தங்கிட்டுக் கார்த்தல போங்கோ. எல்லாக் கவலையும் மறைஞ்சி போயிடும்” என்ற பிரபாகர், அவருடைய பதிலுக்குக் காத்திராமல், “டேய் மணி, இவாள ஏழாம் நம்பர் ரூம்ல தங்க வச்சிடு” என்று உத்தரவிட்டார். “அத்தோட காமாட்சி பாட்டிகிட்ட சொல்லி மடிசமையல் லிஸ்ட்டுல இன்னும் ரெண்டு பேர் ஜாஸ்தி பண்ணிடு” என்றார். சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் விரைந்தார்.   

சாஸ்திரிக்கு இக்கட்டான நிலை. மடத்து மேலாளரைப் பகைத்துக்கொள்ள முடியாது. வந்த காரியமும் முடியவில்லை. இராத்திரி தங்குவதால் ஒரு பயனும் இல்லை. கல்யாண வீட்டுக்குப் போயிருந்தால் மற்ற மனிதர்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும், வேறு காரியங்கள் வருமா என்றும் தகவல் சேகரித்திருக்கலாம். ‘எல்லாம் உன்னால் வந்த வினை’ என்று வெங்கிட்டுவை உஷ்ணமாகப் பார்த்தார். அவன் மௌனமாகத் தலை கவிழ்ந்தபடி ஏழாம் நபர் ரூமை நோக்கி நடந்தான்.

உறக்கம் வராமல் தவித்தார் சாஸ்திரி. கஸ்தூரியின் கல்லூரிச் செலவுக்கு எப்படியும் பத்தாயிரமாவது வேண்டும். உடைகளுக்கு ஒரு மூவாயிரம். மனம் அமைதிகொள்ள மறுத்தது. இரவின் மௌனத்தைக் கலைப்பதுபோல் எஃப்.எம். வானொலியில் எம்.எஸ்சின் இனியகுரலில் வந்தது ஒரு பாடல்: “சாந்தி நிலவ வேண்டும்”. அது தனக்காகத்தானோ?
***
விடியற்காலை. ஒரே களேபரமாயிருந்தது. ஆம்புலன்ஸ் வேனில் அனாதைச் சடலம் ஒன்று வந்திறங்கியது. இரண்டு நாள் முன்பு சாலை விபத்தில் அடிபட்ட முதியவரின் சடலம். ஆள், அட்ரஸ் இல்லை. பூணூல் அணிந்திருந்ததால் போலீஸ் மூலம் மடத்திற்குப் போன் செய்து உரிய முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்துவிடச்சொல்லி அனுமதிக்கடிதமும் அனுப்பியிருந்தார்கள், அடிக்கடி நடக்கும் சம்பவம் இது.

“கார்த்தால மொதல் வேலயா இந்த அனாதப் பொணத்த சம்ஸ்காரம் பண்ணியாகணும். இன்னிக்குன்னு பார்த்து எந்தப் புரோகிதரும் கெடைக்கமாட்டேங்கறா. போளூர் சாஸ்திரிதான் கைவசம் இருக்கார். ஆனால் ஒத்துக்க மாட்டேன்னுட்டார். தை மாசமாச்சே, அவாளுக்கு நாலு காசு சம்பாதிக்க இதானே சமயம்? அமங்கலக் காரியத்துக்கு யார் வருவா?” என்று பிரபாகர் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது நாராயண சாஸ்திரியின் காதில் விழுந்தது.

அவ்வளவு தான், விருட்டென்று எழுந்தார். அவருக்கு மகாஸ்வாமிகளின் உபதேசங்கள் என்றால் வேதவாக்கு. அதிலும் ‘அனாதைப் பிரேதத்திற்கு சம்ஸ்காரம் பண்ண உதவினால் நூறு அஸ்வமேத யாகம் பண்ணிய பலன் கிடைக்கும்’ என்று அவர் என்றோ சொல்லியிருந்த வார்த்தைகள் சாஸ்திரியின் செவியில் ரீங்காரமிட்டன. இன்று அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இதற்காகத்தான் வெங்கிட்டு மூலம் தான் வரவழைக்கப்பட்டேனோ?  ஓடிப்போய் பிரபாகர் முன் நின்றார்.

“மேனேஜர் சார்! மூணு தலமொறையா பூர்வம், அபரம் ரெண்டுமே பண்ணிவைக்கிற புரோகிதர் பரம்பரை நான். கவலையை விடுங்கோ. மத்த ஏற்பாடுகளப் பாருங்கோ. நான் ஸ்நானம் பண்ணிட்டு வந்துடறேன்” என்று பதில் பேசாமல் கிணற்றடிக்கு நடந்தார்.

“அப்பனே, நீ யாரோ, நான் யாரோ! உனக்குக் கொள்ளி வைக்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உன்னை என் சகோதரனாக நினைத்துக் கொள்கிறேன். உன் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். ‘மகாஸ்வாமிகளே, உங்களுக்குக் கோடி நமஸ்காரம். எல்லாக் கவலைகளையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு அமைதி கொடுங்கள்’ என்று வேண்டினார்.

அவன் ஏழையோ, பணக்காரனோ, பிள்ளை குட்டிகள் உடையவனோ, இல்லாதவனோ, நல்லவனோ கெட்டவனோ, ஒருவேளை கொலை,கொள்ளை செய்துவிட்டுத் தலைமறைவாக இருக்கும்போது அடிபட்டு இறந்தவனோ, யாருக்குத் தெரியும்? யாராயிருந்தாலும் மந்திரோக்தமாக இறுதிப்பயணம் போக உரிமையுண்டு என்று மகாபெரியவா சொல்லியிருக்காரே!  மந்திரங்களில் ஒரு குறைவுமின்றி அந்தப் பெயர் தெரியாத மனிதனை அவனுடைய கடைசிப் பயணத்திற்கு அனுப்பிவைத்தார் சாஸ்திரி. கட்டையோடு கட்டையாக அது வேக ஆரம்பித்தபோது தன் மனச்சலனங்களும் வெந்தழிந்து போவது தெரிந்தது. காரியம் முடிந்து ஸ்நானம் செய்துவிட்டு ஏழாம் நம்பர் ரூமுக்குத் திரும்பியவர் ”வெங்கிட்டு, இப்போ என் மனசு எவ்ளோ சாந்தமாக இருக்கு தெரியுமா?” என்றார்.

வெங்கிட்டுவின் குரலில் சுரத்தில்லை. அழுதுவிடுவான் போலிருந்தது. “என்ன இப்டிப் பண்ணிட்டேள் சாஸ்திரிகளே! இன்னிக்கு அமங்கலக் காரியம் பண்ணிட்டு நாளைக்குக் கல்யாண காரியத்துக்கு எப்டிப் போவேள்? சாஸ்திரம் அனுமதிக்குமா? யோசிச்சீரா?”

சுர்ரீரென்று உறைத்தது சாஸ்திரிக்கு. அடடா, என்ன காரியம் பண்ணிவிட்டோம்! மலை மாதிரி கல்யாணகாரியம் இருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அனாதைப்பிணத்திற்குக் கொள்ளி வைத்துவிட்டேனே!  பன்னிரண்டு நாள் தீட்டு வந்து விட்டதே!    

உடனடியாக நாளைய கல்யாண புரோகிதத்திற்கு வேறு சாஸ்திரியை ஏற்பாடு செய்தாகவேண்டுமே என்ற பெருங்கவலை அவரைச் சூழ்ந்துகொண்டது. “வெங்கிட்டு! என்ன மன்னிச்சிடுடா! நீ தான் ஒரு வழி பண்ணணும்” என்றார்.

“எப்படியாவது போளூர் சாஸ்திரியைப் பிடித்துக் கையோடு கூட்டிண்டு போ. எனக்கு வீட்ல அசௌகர்யம், அதனால வரமுடியலே, பதில் ஆள் ஏற்பாடு பண்ணியிருக்குன்னு அவா கிட்ட பவ்வியமா சொல்லு. என்ன பேசினாலும் பதில் பேசாதே. நான் இங்கயே இருந்து நாளைக்கு சஞ்சயனம் பண்ணி அஸ்தி கரைச்சுட்டு ஊருக்குப் போயிடறேன். நீ நேரா வந்துடு. சரியா?” என்று கலங்கிய குரலில் சொன்னார்.

பிரபாகருக்கு அளவில்லாத திருப்தி. “ரொம்ப நன்றி, சாஸ்திரிகளே! இன்னிக்கி நீங்க பண்ணினது உண்மையிலேயே பெரிய தியாகம்னு தான் சொல்லணும். முன்பின் தெரியாத ஒருத்தன சகோதரனா பாவிச்சுக் கொள்ளி வச்சீரே, வைதீகத்துல ஒரு அம்சமும் கொறையாதபடி நடத்திக்குடுத்தீரே, அந்தப் புண்ணியம் நாலு தலமொறைக்குத் தாங்கும். இது சத்தியம்” என்றபடி அவருடைய கையில் ஒரு நூறு ரூபாய்த் தாளை வைத்தார். “இது வழிச்செலவுக்காகத் தான். வைதீகத்துக்கு சம்பாவனை தர்றது மடத்துல வழக்கமில்லேன்னு உங்களுக்குத் தெரியாததா?” என்றார்.

அவர் நகர்ந்ததும் வெங்கிட்டு அருகில் வந்தான். “கஸ்தூரிய நெனச்சாத் தான் கவலயா யிருக்கு சாஸ்திரிகளே. காலேஜு ஃபீசுக்கும் டிரஸ் வாங்கறதுக்கும் என்ன பிளான் வச்சிருக்கீர்? எப்டி அவ மொகத்தில முழிக்கப்போறீர்? பத்தாயிரம் ரூபா வர்றத வேண்டாம்னுட்டு, நூறு ரூபாய்க்குச் சமூக சேவை பண்ணிட்டேளே ஸ்வாமி!” என்று ஆத்மார்த்தமாக வருந்தியபடி புறப்பட்டான். சாஸ்திரி ஏதும் பேசவில்லை. எதிர்ச் சுவற்றில் இருந்த  மகாஸ்வாமிகளின் படத்தில் கண்களை லயிக்க வைத்தார். மனம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கலானது. கஸ்தூரி எப்படியும் கல்லூரியில் சேர்ந்து விடுவாள் என்று அசரீரியாக மகாஸ்வாமிகள் வாக்குறுதி கொடுப்பது போல் இருந்தது.
****
பிரபல அரசியல் தலைவரின் வாரிசுக்கு ஐம்பத்தோராவது பிறந்தநாள். தலைவருக்கு வயதாகிவிட்டதால் தன் மகனை இளைய தலைவராக முன்னிறுத்திவிட்டு, தான் பின்னால் ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்தார். அவனைத் தீவிர அரசியலுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் ஆரவாரமாக அவனது ஐம்பத்தோராவது பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டுமென்று ரகசியமாக ஆணையிட்டார். தலைவர் சொல்லிவிட்டால் மறுபேச்சேது! இளைய தலைவருக்காக ஊரெங்கும் போஸ்டர்கள், வீதியெங்கும் தோரணங்கள், சந்துமுனையெங்கும் பொதுக்கூட்டங்கள் என்று களேபரப்படுத்திவிட்டார்கள் வட்டச் செயலாளர்கள். ஆளுக்கு ஐம்பத்தோரு கட்-அவுட்கள் வீதம் எழுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். ஆனாலும் தலைவருக்குத் திருப்தியில்லை. செயற்குழுவைக் கூட்டினார்.

“அவங்க ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தர்றாங்கய்யா! அத  முறியடிக்கற மாதிரி நாம ஏதாச்சும் செய்யணும்” என்றார் ஒருவர். “அதே சமயம் எல்லாச் சாதிக்காரங்களுக்கும் செய்யணுங்க” என்றார் பின்வரிசையிலிருந்து இன்னொருவர்.

“நான் சொல்லட்டுமா? ஒவ்வொரு தொகுதிலயும் சாதிக்கொருத்தர்னு பிளஸ்டூ முடித்த ஐம்பத்தோரு ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாமே மூன்றுவருடக் கல்லூரிக்கட்டணத்தைச் செலுத்திவிடுவோம்! தமிழ்ச் சமுதாயமே நம்மைத் தலைவணங்கும் என்பது உறுதி” என்றார் மூன்றாமவர்.

உற்றுப் பார்த்தார் தலைவர். “ஒனக்குக் கூட எப்டிய்யா உருப்படியான யோசனையெல்லாம் தோணுது?” என்று பலமாகச் சிரித்தார். தலைவர் சிரித்தார் என்றால் யோசனை ஏற்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

“உண்மையிலேயே ஏழையாக இருக்க வேண்டும். தவறு நேர்ந்துவிடக்கூடாது. சரியான மாணவர்களைத் தேர்ந்தெடுங்கள்.  ஒரே நாளில் லிஸ்ட் ரெடியாக வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் தலைவர்.

“எம் பொண்ணொட கிளாஸ்மேட்டு, கஸ்தூரின்னு பேரு.  அய்யர் பொண்ணு.  பிளஸ்டூ முடிச்சிருக்கு. எப்பவும் நல்ல மார்க்கு வாங்குமாம். காலேஜில சேரணும்னு துடியாத்துடிக்குது. ரொம்ப ஏழைக் குடும்பம். அப்பா புரோகிதர்னு கேள்வி. அதும் பேர மொதல்ல எழுதிக்குங்க” என்றார் இராணிப்பேட்டை தொகுதியின் செயலாளர்.
*****
© Y Chellappa


(இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள தமிழ்மணம் பட்டையில், மேல்நோக்கிய விரல் சின்னத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.)

11 கருத்துகள்:

  1. மகாஸ்வாமிகளின் உபதேசங்கள் அவருக்கு இருக்கும் நம்பிக்கையால், அடுத்த நாள் கல்யாண காரியம் என்பதையும் மறக்கடித்தாலும், சமயோசிதமாக மாற்று ஏற்பாடு (போளூர் சாஸ்திரி அவர்களை) செய்ததை விட "எப்படியும் கல்லூரியில் சேர்ந்து விடுவாள்" எனும் மகாஸ்வாமிகள் மூலம் நம்பிக்கை சிறப்பு...

    வாரிசுக்கு பிறந்தநாள் - தலைவர் - உருப்படியான யோசனை - முடித்தவிதத்தை என்னவென்று சொல்ல... அருமை... அருமை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமையைச் செய், பலனை எதிரபாராதே - என்ற கருத்தில்தான் எழுதினேன். (அப்போது ஒரு வாரிசு-தலைவர் தான் இருந்தார். கதை அச்சாகும்போது எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள் வந்துவிட்டார்கள்! )ஒவ்வொரு கட்சியும் இதுமாதிரி கல்விக்கு நன்கொடை வழங்கமுன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

      நீக்கு
  2. நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள கதை.

    பதிலளிநீக்கு
  3. கலவை போய் ஆசாரிய ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டுப் போகலாமே! அவா கிட்டே ஆலோசனை கேக்கலாமே!”

    கஸ்தூரி பெயரை முதல் பெயராக எழுதவைத்த திருவருள் திறம் வியக்கவைத்தது ..!...

    கலைமகள் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்- என்பது என் ஆழ்ந்த, பலமுறை நிரூபிக்கப்பட்ட, நம்பிக்கை!

      நீக்கு
  4. நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள கதை.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. அபர காரியம் செய்தால் மறுநாள் கல்யாணப் ப்ரோகிதம் செய்ய முடியாது என்பதை நினைத்துப் பார்க்காமலேயே சாஸ்த்ரிகள் செய்தது அபர காரியம் அல்ல. அபார காரியம்! மத்தியானம் புத்தகத்தில் பார்த்தது, இப்போது படித்து பதிலே சொல்லி விட்டேனே... அட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! மீண்டும் வருவீர்கள் அல்லவா?

      நீக்கு